Monday, December 16, 2013

போர்ட்டரிக்கோ பயணம், பகுதி 7: கறுப்புப்பூனையும் கற்கோட்டையும் !!!!!!!!!!!!!

     அது கவர்னரின் மனைவி வளர்க்கும் பூனையாம் .” மிகவும் பெருமை கொண்டது, யாரையும் மதிக்காது, மிகுந்த கோபம் கொண்டது," என்று  அவள் சொன்னபடியே அது நிமிர்ந்து கழுத்தை உயர்த்தி டம்பமாக யாரையும் சட்டை செய்யாமல் சீறிக்கொண்டே ராஜ நடை  நடந்து கடந்தது. கவர்னர் வீட்டு பூனையல்லவா? நம்மூர் தலைவர்கள் பாதுகாப்புக்காக "பிளாக் கேட்"  வைத்துள்ளது போல, இங்கே நிஜமாகவே கறுப்பு  பூனையை  வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
        கோட்டைக்குள் உள்ள மற்ற பழைய கட்டிடங்கள் அரசாங்க அலுவலகங்களாக செயல்படுகின்றன. உயரமான கம்பி கேட்டுகளை விட்டு வெளியே வந்தால் பழைய சேன் வான்  நகரின் தெருக்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. 
வீடுகள் எல்லாம் நம்மூர் போல் செங்கற்களாலும், காரையாலும் கட்டப்பட்டவை. பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் போல இல்லை. நம்மூர் போலவே கலர்கலரான பெயின்ட்கள் அடிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை கடைகளாக மாற்றப்பட்டு இருந்தன. ஆனால் தெருக்கள் மிகவும் குறுகலானவை.

        அங்கே தற்செயலாக "ஆயுர்வேதிக்" என்ற கடையைப் பார்த்தோம். உள்ளே சென்றால் நம்மூர்ப் பொருட்கள் எல்லாம் இருந்தன. அரிசி, பருப்பு முதல் எண்ணெய் சோப் என சகலமும் இருந்தன. ஆனால் உரிமையாளரோ அல்லது கடையில் வேலை பார்ப்பவர்களோ நம்மவர்கள் இல்லை.
 மரவள்ளி சிப்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டேன். இன்னும் சில அடிகள் சென்றால், மற்றுமொரு இந்தியக் கடையில் சேலை கட்டிய பூனைக்கண் ஸ்பானிஷ் பெண் ஒருத்தி, கைகளைக் குவித்து “நமஸ்தே”, என்றாள். உள்ளே ஒரு குட்டி "பூம்புகார்" போல கலைப்பொருட்களால் நிரம்பியிருந்தது.சற்றுநேரத்தில் அதன் ஓனர் வந்தார். டெல்லிக்காரராம், நியூயார்க்கில் வாழ்ந்து சமாளிக்க முடியாமல் பல வருடங்களுக்கு முன் இங்கு வந்திருக்கிறார். விலை படுபயங்கரமாய் இருந்தது. ஒரு "மதராசியைப்" பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.

        நன்றி கூறிவிட்டு வெளியே வந்து சில தப்படிகள் நடந்தால் "தந்த்ரா " இண்டியன் ரெஸ்டாரன்ட் என்று இருந்ததைப் பார்த்தேன்.       செஃப் ரமேஷ் பிள்ளை என்று மூவர்ணத்தில் போட்டிருந்தது. தமிழ்ப்பெயர் போல தெரிந்தது.   நேற்று தேடியலைந்து "மும்பை"யில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது ஞாபகம் வர, இனிமேல் இப்படி இந்திய உணவுக்காக அலையக் கூடாது என்று எடுத்த சபதம் "தந்த்ரா" வைப் பார்த்ததும் கரைந்து போனது. மணி 11தான் ஆகிறது. இன்னொரு கோட்டையையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என நினைத்து மேலேறினோம். கடலோரத்தில் உயரே இருந்த பாறைகளின் பக்கத்தில் இருந்த ரோட்டோரத்தில் நடந்தால் பிரமாண்டமான கோட்டை வந்தது.

கேஸ்டில்லோ சேன் ஃபெலிப்பே  டெல் மோரோ (Castillo San Felipe del Morro)
        இந்த அழகான கற்கோட்டை ரோட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. முழுவதும் வெட்டவெளி. கீழ்ப்புறத்தில் இருந்தது “ஷட்டில்” ஒன்று வரும் என்றார்கள். என் மனைவி காத்திருக்கலாம் என்றாள். நேரமில்லை நடந்துவிடுவோம் என்று சொல்லி, கிட்டத்தட்ட மூவரையும் இழுக்காத குறையாக அழைத்துச்சென்றேன்.

 நல்ல பெஞ்ச் போட்டிருந்த ஒரு சிறிய அழகிய சேப்பலில் மூன்று பேரும் போய் உட்கார்ந்து கொண்டு, "நீ போய்ப் பார்த்துவிட்டு வா" என்று அனுப்பி விட்டார்கள். உள்ளே போகுமுன் ஒரு ஜில்லிட்ட AC ரூமில் குறும்படம் பார்த்தேன்.
        ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு கடல் வழியாக வந்த வியாபாரக் கப்பல்களுக்கும், போர்க்கப்பல்களுக்கும் சேன் வான் தான் முதல் ஸ்டாப். இப்புதிய உலகத்திலிருந்து தங்கமும் வெள்ளியும் தாராளமாக ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதால், பல நாடுகளுக்கு இத்துறைமுகத்தின்  மேல் ஒரு கண் இருந்தது. இப்படி கரீபியன் கடலில் முக்யத்துவம் வாய்ந்த இந்த கடற்பகுதியினை பாதுகாப்பதற்கு கட்டப்பட்ட பல கோட்டைகளுள் "சேன் ஃபெலிப்பே டெல் மோரா"மிகவும் முக்கியமான ஒன்று.        இன்றும் கம்பீரமாகவும், உறுதியாகவும் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கோட்டை பல போர்களை சந்தித்த கோட்டையாகும்.

        இதன் சிறப்பம்சம் 'கரிட்டாஸ்' (Garitas) என்று சொல்லக்கூடிய "காவல் கோபுரங்கள் ஆகும்." கோட்டையின் ஒவ்வொரு மூலைகளிலும் சிறியதாக வட்டவடிவில் இருக்கும் இந்த காவல் கோபுரங்களில் சிப்பாய்கள் நின்று கொண்டு இரவும் பகலும் கண்காணிப்பார்கள். துப்பாக்கி வைத்துச்சுட துவாரங்களும் இதில் உண்டு. ஆனால் எதிரிகள் இவர்களை சுடமுடியாது. இதன் சிறப்புத்தன்மையால், 'கரிட்டாஸ்' போர்ட்டோரிக்கோவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது. தீவிர கண்காணிப்பால் கடற் கொள்ளைக்காரர்கள் கூட நெருங்க முடியவில்லை.
Garita at paseo del morro old san juan
ஆங்கிலேயப் படையெடுப்பு
        பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, முதன்முதலாக ஆங்கிலேயர்களால்தான்  தாக்கப்பட்டது. இப்படி ஒரு செல்வம் கொழிக்கும்  பூமி இருப்பதை கேள்விப்பட்டால் ஆங்கிலேயன் சும்மா இருப்பானா?
Sir Francis Drake
 ஆனால் கி.பி.1595-ல் சர் ஃபிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) என்பவரின் தலைமையில் வந்த போர்க்கப்பல்கள், டெல் மோரோ கோட்டையின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றன.
Lord George Clifford
        அவர்கள் மீண்டும் கி.பி.1598ல் அப்போதைய கம்பர்லேண்ட் ஏர்ல், ஜார்ஜ் கிளிஃபோர்டு (Earl of cumber land Lord George Clifford) அவர்கள் தலைமையில் வந்து ஒரு வழியாக எதிர்ப்பை சமாளித்து கரையில் இறங்கி கோட்டையை முற்றுகை இட்டனர். டெல் மோரோ கோட்டை இந்த முற்றுகையை பல மாதங்கள் சமாளித்தது. இதற்கிடையில் ஆங்கிலேயப் படையினர் பலர் நோய் வாய்ப்பட்டு இறக்கத்துவங்க, வேறு வழியின்றி ஜார்ஜ் முற்றுகையைக் கைவிட்டு தாய்நாடு திரும்பினர்.
டச்சுப்படையெடுப்பு
File:Combate de San Juan 1625, Eugenio Caxés.jpg
Seventeenth-century Spanish painting commemorating Enrico's defeat at San Juan de Puerto Rico
        பின்னர் கி.பி.1625-ல் கேப்டன் பல்டுய்னோ என்ரிக்கோ (Captain Balduino Enrico) தலைமையில் டச்சுப்படைகள் வந்து சேர்ந்தன. டெல் மோரோவை அசைக்க முடியவில்லை. பின்ன சும்மாவா, இதன் சுவர்கள் 18 அடி அகலம், உயரம் கடல் மட்டத்திலிருந்து 140 அடியாகும்.
        டச்சுக் கப்பல்களை நோக்கி டெல் மோராவின் ஸ்பானிய பீரங்கிகள் நெருப்பை உமிழ, தரை வழி ஏறி வந்த டச்சுப்படைகளை சேன் வானின் மக்கள் படை துவம்சம் செய்ததில் அறுபது டச்சு வீரர்கள் அங்கேயே மரணமடைந்தனர். ஸ்பானிய படையை வழிநடத்திய கேப்டன் வான் டி அமிஸ்குட்டா (Juan de Amezquita)வுக்கும் டச்சு கேப்டன் என்ரிக்கோவுக்கும் நேரடியாக நடந்த வாள் சண்டையில்,  அமிஸ்குட்டாவின் வாள்முனை என்ரிக்கோவின் கழுத்தைப் பதம் பார்த்தது. அதோடு மக்கள் படை டச்சுக்கப்பல்களுக்கும் சென்று அங்கிருந்த எல்லோரையும் கொன்றோ சிறைபிடித்தோ, டச்சுத்தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தனர். ஆத்திரம் கொண்ட  என்ரிக்கோ வழியில் இருந்த ஃபோர்ட்டோலிசாவை தீக்கிரையாக்கினான். கோபம் கொண்ட அமிஸ்குட்டா தன் அனைத்துப் படைகளையும் திரட்டி என்ரிக்கோவை ஓட ஓட விரட்ட டச்சுப்படையெடுப்பு அத்தோடு முடிந்தது. அவர்கள் மீண்டும் வரவேயில்லை. ஆனால் ஆங்கிலேயர் மீண்டும் வந்தார்கள் .


பயணம் தொடரும் @@@@@@@@@@@@@@@

7 comments:

  1. படங்களும் பதிவும் அருமை எளிமையான விளக்கத்துடன் மிக பயனுள்ள தமிழில் எங்கும் படித்திராத தகவல்கள், பகிர்விற்கு நன்றி 7 பாராட்டுக்கபடங்களும் பதிவும் அருமை எளிமையான விளக்கத்துடன் மிக பயனுள்ள தமிழில் எங்கும் படித்திராத தகவல்கள், பகிர்விற்கு நன்றி 7 பாராட்டுக்கள் tha.ma 3

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்
      உங்கள் வாழ்த்துக்கள்தான் எனக்கு கிடைக்கும் உற்சாக டானிக்.

      Delete
  2. அழகான படங்களுடன் வரலாற்று தகவல்களுக்கு நன்றி... பயணத்தை தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. அழகான படங்கள். அருமையான கட்டுரை.

    தெரிந்திராத விஷயங்களை படித்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  5. படங்களுடன் சரித்திரத் தகவல்களை
    பகிர்ந்தவிதம் வெகு சுவாரஸ்யம்

    மிகக் குறிப்பாக கோட்டையை
    மிக தூரத்தில் இருந்து எடுத்த படமும்
    அருகாமையில் எடுத்த அந்த கோட்டைக் கூண்டும்

    தொடர்கிறேன்

    ReplyDelete