கடுக்கு
மிட்டாயும் முதற்காதலும்
அன்று மாலை
மறுபடியும் போன் செய்தாள் என் மனைவி. ஒரு நாளைக்கு மூன்று முறை போன் செய்வது அவள் வழக்கம்.
காலையில் 9.30 மணிக்கு போன் செய்து, ஒழுங்காக நேரத்திற்கு ஆபிசுக்கு சென்றாயா?
1.30 மணிக்கு போன் செய்து சாப்பிட்டாச்சா? என்றும் மாலை 5 மணிக்கு போன் செய்து எப்போது
கிளம்புகிறாய்? என்றும் மூன்று தடவை வரும். அன்று நான்காவது தடவை வந்தது. "வரும்
வழியில் ஜாக்சன் ஹெய்ட்சில் கத்தரிக்காய் வாங்கி வந்தால், மொச்சைக்குழம்பு செய்கிறேன்,"
என்றாள். மொச்சைக்குழம்புன்னா எனக்கு உசுரு. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. சொன்னதும்
எச்சில் ஊறியது. என் மனைவி கல்யாணத்திற்குப்பின்னால் கற்றுக்கொண்டாள். நன்றாகவே
இருக்கும். ஆனாலும் என்னோட அம்மா வைப்பது அதை
விட நல்லா இருக்கும். ப்ளீஸ் அவள்ட்ட சொல்லிராதீங்க. உடனே கிளம்பி, ஜாக்சன்
ஹெய்ட்சின் "அப்னா பஜார்" வந்து சேர்ந்தேன். படேலுக்கு போட்டியாக, பஞ்சாப்
பையன் (சீக்கியன் அல்ல) இதனை ஆரம்பித்து, குறுகிய காலத்தில் நான்கு பிராஞ்ச் துவங்கி
வளர்ந்து விட்டான். எங்களுக்கு தேவையான, பொன்னி
அரிசி, ஆச்சி மசாலா, ருச்சி ஊறுகாய் என இங்கே சகலமும் கிடைக்கும்.
அன்றைய தினம்,
நல்ல பிஞ்சாக ரெண்டு பவுண்ட் “எக் பிளான்ட்” அதாங்க கத்தரிக்காய், (பிரிஞ்சால் என்றால்
யாருக்கும் தெரியாது) வாங்கிக்கொண்டு, வழக்கம் போல் ஸ்நாக்ஸ் பக்கம் போனேன். “அம்மா
கப்பக்கிழங்கு சிப்ஸ்” (இது வேற அம்மா), உடுப்பி சீடை, ஜானகி பட்டர் முறுக்கு,
பொறி உருண்டை மற்றும் கடலை மிட்டாயை எடுக்கும்போதுதான் அதைப் பார்த்தேன். கிட்டப்போய்
எடுத்துப்பார்த்தால், அதேதான், கடுக்கு மிட்டாயேதான். என்னைக் கட்டுப்படுத்த முடியாமல்
அவசர அவசரமாக பிரித்து, ஒரு வில்லையை எடுத்து, இரு விரல்களால் பிடித்து அப்படியே நாவில்
இட்டேன். அந்த இனிப்பான சாறு, என் தொண்டையை மட்டுமல்ல, என் இதயத்தையும் நனைக்க, என்
மனம் ரீபூட் ஆகி பின்னோக்கி விரைந்தது @@@@@@@@@@@@@@@.
நான் வளர்ந்த ஊராகிய தேவதானப்பட்டியில்
உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் காலம். இன்டர்வெல்
மணி அடிச்சதும் எட்டாப்பு வாத்தியார் (அவர்தாங்க
என் அப்பா) தன் மேஜையின் ஓரத்தில வச்ச இரும்புப்பத்துக்காசை
நாசூக்காக எடுத்துக்கிட்டு குருசாமி நாடார்
கடைக்கு ஓடினேன். (ஹீம் அந்தப்பத்துக்காசு தந்த பரவசம் இப்ப பத்தாயிரம் டாலரில்
கூட இல்லையேயேயே யே). புதிதாக போடப்பட்ட சவ்வு மிட்டாய்கள், கலர் கலராக மின்னி அழைச்சாலும்,
அதனைப்புறக்கணித்து, ஐந்து பைசாவுக்கு ஐந்து கடுக்கு மிட்டாய்களை, வாங்கி டவுசர் பாக்கெட்டில்
பத்திரப்படுத்திக்கொண்டேன். யாருக்கும் கொடுக்காமல் நானே சாப்பிடுவேன். மின்னலாய் ஓடி மிச்சமுள்ள
ஐந்து பைசாவுக்கு சேமியா ஐஸ் வாங்கி சப்பினேன். உடலெங்கும் ஜில்லிட்டது. உதடும் நாக்கும்
ரோஸ் கலரில் ஜொலித்தது. ஆக பத்து பைசாவும்
பத்து நிமிஷத்தில் காலி. ஆமாங்க,
பாஸ் அன்னிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கையில காசு தங்குறதில்லை . முழுவதையும்,
உடனே செலவு செஞ்சிட்டு முழிப்பதில் எனக்கிணை நானே.
தேவரு வாத்தியார்
(தேவகுரு) "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்று தமிழ்ப்பாடம் ஆரம்பிக்கும்போது,
நைசாக பாக்கெட்டுக்குள் கையைவிட்டு, ஒரு கடுக்கு மிட்டாயை எடுத்து உதடைத்துடைப்பது
போல வாய்ல போட்டுக்கிட்டேன். கன்னத்தில ஒதுக்கினா காட்டிக்கொடுத்துரும்னுட்டு நாக்கிலேயே
வச்சிக்கிட்டேன். தமிழும் இனித்தது.
“சேகரு அந்த ரெண்டாவது பத்தியை உரக்கப்படி”
என்று தேவரு வாத்தியார் ஆணையிட , படக்குனு நான் எழ, லொடெக்குனு கடுக்கு மிட்டாய் வாயிலிருந்து
தவறிவிழ, லபக்குனு இஸ்மாயில் அதைஎடுத்து ஊதி தன்வாயில் போட்டுக்கிட்டான். அடப்பாவி
என்று அவனை முறைச்சபடி தப்புத்தப்பாய் வாசிச்சதில்
, தேவரு வாத்தியாருக்கு கெட்ட கோபம் வந்துருச்சு . வாத்தியார் மகன்ற சலுகையை, எங்கம்மாவிடம் தவிர (1ஆம்
வகுப்பு C ஆசிரியை) வேறு யாரும் எனக்கு தந்துவிடாதபடி என் அப்பா கவனமாக பார்த்துக்கொண்டார்.
கண்ணில் வந்த நீருக்கு காரணம் தேடியதில், வாத்தியார் திட்டியதைவிட, கடுக்கு மிட்டாய்
நஷ்டம் ஆனதே காரணம்.
வகுப்பு
முடிஞ்சவுடன், இஸ்மாயிலை முறைச்சு கணக்கு பாடம் காண்பிக்கமாட்டேன் என்று பயமுறுத்தினேன்.
அவன் பிறகு, ஒரு புதிய கடுக்கு மிட்டாயும், 10 தீப்பெட்டி படமும் கொடுத்தபின்
தான், என் கோவம் அடங்கியது. கடுக்கு மிட்டாய் மட்டும் காக்கா கடி கூட யாருக்கும்
கொடுக்க மாட்டேன்.
அஞ்சு மிட்டாயும், சாயிந்தரத்துக்குள்ளே தீந்துபோய், வாங்கப்போற கடுக்குமிட்டாய் கனவோடு படுத்தெழுந்து, கணக்கு வீட்டுப்பாடம் செய்ய மறந்துட்டு,அடுத்த நாள் அடி வாங்குனது நெனச்சா இன்னும் வலிக்குது.
அஞ்சு மிட்டாயும், சாயிந்தரத்துக்குள்ளே தீந்துபோய், வாங்கப்போற கடுக்குமிட்டாய் கனவோடு படுத்தெழுந்து, கணக்கு வீட்டுப்பாடம் செய்ய மறந்துட்டு,அடுத்த நாள் அடி வாங்குனது நெனச்சா இன்னும் வலிக்குது.
ஒருமுறை மகேந்திரன்,
“ரெண்டு கடுக்குமிட்டாய் கொடுத்தா பாப்பார பொன் வண்டு (சிகப்புக்கலர்) பிடிச்சுத்தர்றேன்,”னு
சொல்லிட்டு ஏமாத்திட்டதால அவன்கூட காய்விட்டு, ஆறு மாசம் கழிச்சுத்தான் பேசுனேன்.
இப்படியிருக்கும்போதுதான்,
ஸ்கூல் பியூன் ஒரு நாள் தமிழ்ப்பாடம் நடந்திட்டிருக்கும்போது ஒரு பொண்ணை கூப்பிட்டு
வந்தான். பொண்ணு பாப்பார பொன்வண்டு மாறியே இருந்துச்சு. வகுப்பே வெளிச்சமாயிருச்சு.
அவ கண்ணு துரு துறுன்னு அலைய , முடி கரு கருன்னு உளைய, பாவாடை மொரு மொறுன்னு வளைய,
பசங்க எல்லோருக்கும் விறு விறுன்னு ஆயிப்போச்சு. சும்மா ஆளை அசத்துற அழகு.மாயத்தேவர்
மக ராஜலெச்சுமின்னு சொன்னாய்ங்க. முக்குலத்து
தமிழச்சிக்கு ஆரியவண்ணம் எப்படி வந்துச்சுன்னு ஒரே ஆச்சரியமாய் இருந்துச்சு ?. ஏழாப்புல எங்கூட படிச்ச, லதா, ரமீஜா, அம்ஜத்து,
சாந்தி ஆகியோரைவிட ராஜலெச்சுமி அழகா இருந்ததால எல்லாப்பயலுகளும் அவளையே முறைச்சு
முறைச்சு பார்த்தாய்ங்க.அட நானுந்தேன். அவளைப்பாத்துக்கிட்டே இருக்கணும்போல இருந்துச்சு.
அவ மனப்பாடம் செஞ்சு ஒப்பிக்கும்போது, அவ மூக்கு விடைச்சு விடைச்சு, மூடுரப்போ, அவ
மூக்குத்தி மின்னும் பாருங்க. அம்புட்டு அழகாயிருக்கும். சிலசமயம், அவ கண்ணு நவாப்பழம்
மாதிரி அந்த மூக்குத்தியை விட ஜொலிக்கும். கூடவே அவ பெரியப்பா மகன் முத்துப்பாண்டியும்
வந்து சேர்ந்தான்.இந்த முத்துப்பாண்டியை முதநாளே எனக்குப்பிடிக்கல. ஆனா ராஜலச்சுமி
கூட பேசறதுக்காக, அவனை என் "நேரு அணி"யில் சேர்த்துக்கிட்டேன். பொம்பளைப்பிள்ளைகளுக்கு
ஏந்தான் தனி அணி போடுறார் இந்த தமிழ் வாத்தியார்னு கோவம் கோவமா வந்துச்சு.
நல்லாப்படிச்சதனால,
ராஜியை "ஜான்சி ராணி அணி"க்கு தலைவியாப்
போட்டதும் போட்டாங்க, நேருவுக்கும் ஜான்சி ராணிக்கும் மோதல் ஆரம்பிச்சது. அவ அணி ஒருநாள்
கூடுதல் மார்க் எடுத்ததற்கு நான் பரவால்லைன்னு சொன்னேன். அதுக்கு என் அணி பசங்க, என்னை
உண்டு இல்லைன்னு பண்ணிட்டாய்ங்க. அடுத்தவாட்டி முத மார்க் எடுக்க நான், கூட நேரம் ஒதுக்கி
படிச்சு கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாயிருச்சு. அன்னிக்கு அவ முகமே நல்லால்லே. எனக்கும்
பாவமா போயிருச்சு. ஒரு நாள் தடுமம் பிடிச்சதாலே, கடுக்கு மிட்டாயை மட்டும் வாங்கிட்டு
ஐஸ் தின்னாம வகுப்புக்கு வந்தா, அங்க என் ராஜலட்சுமி
ஒட்கார்ந்து கணக்குப் போட்டுக்கிட்டிருந்தா. நானும் தயங்கி உள்ளே போய் உட்கார , என் மனசு சொல்லுச்சு அவளுக்கு ஒரு கடுக்கு மிட்டாயை
தரச்சொல்லி. யாருக்கும் தராத கடுக்கு முட்டாய அவளுக்கு தர நினைச்சது ஏன்னு தெரியல.தயங்கி தயங்கி கையில் எடுத்து வச்ச மிட்டாய்,
பயத்துல வந்த வேர்வையில ஈரமாயி கையெல்லாம் பிசுபிசுன்னு ஆயிருச்சு. ஆனா கொடுக்க தைரியம்
வல்ல.அப்பதான் சேகர்னு ஒரு குரல் கேட்டுச்சு.
அடுத்த பகுதி வரும் வியாழனன்று
சுவாரஸ்யமாக செல்கிறது... தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஆக பத்து பைசாவும் பத்து நிமிஷத்தில் காலி. ஆமாங்க, பாஸ் அன்னிலிருந்து இன்னைக்கு வரைக்கும் கையில காசு தங்குறதில்லை . முழுவதையும், உடனே செலவு செஞ்சிட்டு முழிப்பதில் எனக்கிணை நானே. ////////
ReplyDeletesir im also u r Team.
Welcome to the club.
Deleteகடுக்கு மிட்டாய்..... போலவே உங்கள் பகிர்வும் இனிக்கிறது....
ReplyDeleteதொடர்கிறேன்.
நன்றி வெங்கட் நாகராஜ்.
Deleteகாதல் கசக்குதையா... கடுக்கு மிட்டாய் இனிக்கு தையா!!!
ReplyDeleteநன்றி Ranga.கடுக்கு மிட்டாய் இனித்ததா கசந்ததா என்று பார்க்க
ReplyDeleteமீண்டும் வருக அடுத்த வியாழன்.
attagaasam
ReplyDeleteThank you Vish.
ReplyDeleteகடுக்கு மிட்டாயிலே இவ்வளவு கதை இருக்கா ?அன்னைக்கு தைரியம் வரலே சரி ,எப்போ வந்தது ?
ReplyDelete+4
ஆஹா கடுக்கு மிட்டாய் காதல்
ReplyDeleteவெகு சுவாரஸ்யம்
அதுவும் சட்டென ஃப்ளாஷ் பேக் போனவிதம்
வெகு சுவாரஸ்யம்
இந்த நினைப்பில் மொச்சையை
மறந்துவிடுவீர்களோ என கொஞ்சம்
பதட்டத்துடன் தொடர்கிறேன்...