Thursday, October 3, 2013

சாலமன் பாப்பையா செய்த சதி. பகுதி 1

American college- Main Hall 
       
  “ஏலே சேகரு ஆங்கில இலக்கியத்துக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்? அதுவும் அமெரிக்கன் கல்லூரியில்? எப்படிறா?
 “சொல்றேன் மகேந்திரா, அது ஒரு வேடிக்கைக் கதை.
வேடிக்கைதான் உன்னோட வாடிக்கையாச்சே, சொல்லு சொல்லு.
        எல்லாப்பெற்றோரும் ஆசைப்படுற மாதிரி, என் பெற்றோரும் என்னை உயர் படிப்பு படிக்க வைத்து ஆளாக்க ஆசைப்பட்டனர். எங்கப்பாவின் அடிக்குப்பயந்து, பத்தாவது வரை சுமாராக படிக்கவும் செய்தேன். அந்த ஆவலில் பிளஸ் 2 ஆங்கில மீடியம் படித்தால் நல்லதென்றெண்ணி, என்னை காந்திகிராமம், தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டனர். எங்கப்பாவின் நேரடி மிலிட்டரி ரூலிருந்து, எனக்கு அது விடுதலைபோல் தெரிந்ததால், என் எல்லா பொல்லா குணங்களும் அந்த இரண்டு வருடத்தில் வெளிப்பட்டது. நான் பிளஸ்டூவில் பாஸ் செய்தது ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.
        "பொல்லாக்குணமா? நீ ஒரு நோஞ்சான், அப்பாவின்னுல நெனச்சிட்டிருந்தேன்".
        "மகேந்திரா ஏற்கெனவே நான் எழுதிய "மோகினிப்பிசாசு" -வில் சொல்லியிருந்தேனே. மறந்து போச்சா? . இன்னும் நிறைய இருக்கு.    அத இன்னொரு நாளைக்கு சொல்றேன். இப்ப நீ கேட்ட கேள்விக்கு பதிலைப் பார்ப்போம்."
        "எலேய் நான் அமெரிக்கன் கல்லூரி ஆங்கில இலக்கியம் பற்றி கேட்டா, நீ எதுக்கு பிளஸ்டூ பத்தி சொல்ற, லூசாடா நீ"
        "அட மாய்க்கான் கொஞ்சம் பொறுமையா கேளு, நான் சொல்லிர்றேன்"
        "சரி சரி வெரசா சொல்லு, எனக்கு வேற ஜோலி இருக்கு."
        அந்தக் கேவலமான மார்க்கைப் பாத்ததும், எங்கப்பாவோட, இஞ்சினியரிங் கனவு தகர்ந்து போக, சரி பாலிடெக்னிக்ல போடுவோம்னு, கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக்ல அப்ளை செஞ்சோம், 80ல அது ஒன்னுதான் பிரைவேட். கவர்மென்ட்  பாலிடெக்னிக்கெல்லாம் இந்த மார்க்குக்கு அடிச்சுத்துரத்துருவான்.
        இதுக்கிடையில எதுக்கும் இருக்கட்டும்னுட்டு, எங்க சொந்தக்காரரை பிடித்து, கிறிஸ்தவ கோட்டாவில் பி.எஸ்.சி ஸ்பெஷல் மேத்தமேடிக்ஸ்ல  சேர்த்துவிட்டுட்டார் எங்கப்பா.
        என்ன பிஎஸ்ஸி மேத்ஸா, என்னடா இது புதுக்கதை ?
  அமெரிக்கன் கல்லூரியில நுழைஞ்ச  அந்த முதநாளை  என்னால என்னைக்கும் மறக்கமுடியாது. மரங்கள் சூழ்ந்த அழகான வளாகம். கம்பீரமான சிவப்புக்கட்டடங்கள், மதுரையிலே இப்படி ஒரு எடமா? ஏதோ வெளிநாட்டுக்குள்ள வந்த மாதிரி தெரிஞ்சுது.
  • STANDING TALL: A view of The American College main building Madurai. Photo: S. James
        மெயின் ஹாலில் ஓரியண்டேஷன் பிரமாண்டமாக நடந்தது. எல்லாம் பிரமிப்பா இருந்துச்சு. "வாஷ்பர்ன் ஹால்" தான் என்னோட ஹாஸ்டல். நான்வெஜ் ஹாஸ்டல் அது. வெள்ளிக்கிழமை தவிர தினமும் மட்டன்தான். அங்கே போடுற குஸ்கா ரொம்ப விசேஷம் .அன்னைக்கு பயலுக எக்ஸ்சர்சைஸ் செஞ்சுட்டுதான் சாப்பிட வருவாய்ங்க.மதிய சாப்பாட்டுக்கு ஹாஸ்டல் வந்து சேர்ந்த நான், திரும்பிப் போக வழியை விட்டுட்டு அலைஞ்சு திரிஞ்சு லேட்டாதான் போனேன்.
Washburn Hall 
        அப்போது பிரின்சிபால் பி.டி.செல்லப்பா, ஒரு பந்தாவும் இல்லாமல் ஒரு லேடிஸ் சைக்கிள்ளதான் வருவார்.
Principal PT Chellappa 
 கணக்குத்துறைக்கு தலைவர்  அப்போது பர்சாரா இருந்த குணராஜ், அவர் பின்னால பிரின்ஸ்பல் ஆனாரு.கிளாஸ்ல போய் உட்கார்ந்தா, ஆல்ஃபிரட்டுன்னு பெயர் ஆரம்பிக்கிறதனால முதல் நம்பர் நான்தான். என் கம்ப்யூட்டர் நம்பர் 81MAT01.பெயர் நல்லாத்தெரிந்து கொள்றதுக்காக, நம்பர் படி உட்கார வச்சதில நான்தான்  முதல் பெஞ்சில் முத ஆள். எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுக்க. மிரண்டுபோன பூனை மாதிரி உட்கார்ந்திருந்தேன்.( ஆமா இல்லாட்டியும் இவர் பெரிய புலி?) குணராஜ், கிளாஸில் இருந்த ரெண்டு போர்டில் மாஞ்சு  மாஞ்சு  நம்பர்களை எழுதி முடித்தபின், அந்த போர்டு மேலேபோய் எழுதாத போர்டு கீழே வரும். போர்டு மேலேயும் கீழேயும் மாறி மாறிப்போக எனக்குத்  தலைசுத்தி மயக்கமே வந்துறும் போல இருந்துச்சு. பிளஸ்டூவில் படிக்காம ஒரு ரெண்டு வருஷம் லீவு விட்டதால கணக்குல எல்லாத்தையும் மாத்தீட்டாய்ங்க போல பயபுள்ளைகன்னு, நினைச்சு கண்ணுல தண்ணி தண்ணியா வந்துச்சு.
        எம்பேர் முதப்பேருங்கறதால, எல்லாப்பேராசிரியரும் எம்பேரையே சொல்லி விளங்கிருச்சான்னு கேட்டு உயிரை எடுத்தாங்க. முழியைப்பாத்தா தெரியல, விட வேண்டியதுதானே, சும்மா கடுப்பேத்திக்கிட்டு. ஒரு பத்து நாள் இப்படி அவஸ்தைல ஓடுச்சு. கணக்கு வாத்தியார் மகனுக்கு இந்தக்கதியான்னு யோசிச்சுப் பார்த்தேன். 81MAT01 கொஞ்சம் ஸ்பெல்லிங் மாறி 81MAD01ன்னு ஆயிப்போச்சு.
        இருக்கிற பாடத்துல கணக்குதான் கொஞ்சம் சுமாரா வரும்னு நெனைச்சேன். கெமிஸ்ட்ரியை  நெனைச்சாலே வயித்தில அமிலம் சுரக்கும். ஃபிசிக்ஸ், நம்ம ஃபிசிக்குக்கு அது ஒத்துவரலை. ஜுவாலஜி   ஒரு  மிருக இம்சை. பாட்டனியும் நமக்கு மேயப்பிடிக்கல.. மிச்சம் இருக்கிறது தமிழும் இங்கிலிஸிம்தான். தமிழில்தான் நமக்கு ஆர்வமாச்சே, நம்ம கவிதைகளை நண்பர்கள் பாராட்டுறாய்ங்களே, ஆறாவது படிக்கும் போதே கையெழுத்துப்பிரதி நடத்தினோமே, தமிழில் உச்சபச்ச மதிப்பெண்கள் எடுத்தோமே, என்றெல்லாம் நினைத்து கணக்கோடு பிணக்கு கொண்டு தமிழ் இலக்கியம் படிக்கலாம் என்று கொள்கை முடிவு எடுத்தேன். அப்போது ஹாஸ்டலில் தமிழ் இலக்கியத்தில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த செளபாவிடம் சென்று யோசனை கேட்டேன். இந்த செளபா  என்ற செளந்திரபாண்டிதான் பின்னர் ஆனந்த விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் செலக்ட் ஆகி “சீவலப்பேரி பாண்டி” தொடர் எழுதி புகழ்பெற்றார். கேட்டதும் மகிழ்ச்சியுடன் அப்போது தமிழ்த்துறை தலைவராக இருந்த சாலமன் பாப்பையாவிடம் கூப்பிட்டுச் சென்றார்.

இரண்டாம் கடைசிப்பகுதி  அடுத்த  வாரம்  வியாழக்கிழமை.


பின் குறிப்பு :
நண்பர்களே வரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும்  இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . அருகில் வசிப்பவர்கள் வாருங்கள். நேரில் சந்திக்கலாம் .  விவரங்களுக்கு  சொடுக்கவும்   www.njtamilsangam.net .

27 comments:

  1. விரைவில் (சன் டிவி-யில் ) எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உடனே படித்து பின்னோட்டம் இட்ட தனபாலுக்கு என் நன்றிகள் என்றும் உரித்தாகுக .
      ( பட்டிமன்றத்துக்கு ரெடி)

      Delete
  2. ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே....அந்த இனிய நாட்கள்

    பட்டி மன்ற பேச்சில் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ இப்பவே கண்ணைக்கட்டுதே ,எங்கிட்டு பட்டையை கிளப்புறது

      Delete
  3. அண்ணே, நான் B.com படிச்சதுக்கும் ஒரு காரணம் உண்டு. அதை சொன்னா வெட்க கேடு, நான் சொல்லாகட்டி மான கேடு. அருமையான கட்டுரை. சாலமன் பாப்பையா அப்படி என்னாதான் செய்தாரு? இரண்டாம் பாகத்தை உடனே போடவும்.

    ReplyDelete
    Replies
    1. வர்ற விசாலாக்கிழமை போட்டுருதேன்.

      Delete
  4. என்ன அண்ணே, எப்பபாரு "வைதேகி காத்திருந்தால்" ராதா ரவி கேரக்ட்டர் போல... விசாலகிழமை....விசாலகிழமை.. சொல்லுரிங்கோ. தடபுடன்னு எழுதி தள்ளுங்கன்னே..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அது வெள்ளிக்கிழமை ராமசாமி இது விசாலக்கிழமை கருப்பசாமி .

      Delete
    3. எப்படி அண்ணே.. என்ன பொடி வைச்சி பேசினாலும் கச்சிதமா பதில் தரிங்க. இதை ஒரே குட்டையில் ஊறின மட்டை என்பதா? இல்ல பாம்பின் கால் பாம்பறியும் என்பதா?

      Delete
  5. எப்படி அண்ணே.. என்ன பொடி வைச்சி பேசினாலும் கச்சிதமா பதில் தரிங்க. இதை ஒரே குட்டையில் ஊறின மட்டை என்பதா? இல்ல பாம்பின் கால் பாம்பறியும் என்பதா?

    ReplyDelete
    Replies
    1. அறிந்தது அறியாதது , தெரிந்தது தெரியாதது அனைத்தும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. அவசரப்படாதே தம்பி ,அறிந்தது அறியாதது , தெரிந்தது தெரியாதது அனைத்தும் யாம் அறியோம் பராபரனே.

      Delete
  6. அடுத்த பகுதி! காண ஆவல்! விரைவில் (தொலைக்காட்சி மூலம்) உங்களைக் காண்பேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவர் , அவர்களே .

      Delete
  7. சன்னில் ஜொலிக்க வாழ்த்து.

    அந்த வாஷ்பர்ன் ஹால் படம் இதுவ்ரை பார்க்காத கோணம். நல்லா இருக்கு. எஙக் இருந்துன்னே தெரியலை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தருமி அவர்களே .

      Delete
  8. திரு. ஆல்ப்ரெட் பரதேசி அவர்களே...இதுதான் முதல்முறை உங்கள் ப்ளாக் படிப்பது ....80 களில் என் பழைய நினைவுகளை அப்படியே பதிவு செய்து உள்ளீர்கள் . ஒரே வித்தியாசம்,,நான் திருச்சி ஜோசெப் கல்லூரி ...நீங்கள் மதுரை...இப்போது உங்களை போலவே பரதேசியாய் இங்கிலாந்தில் ....என் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றும் வார்த்தை " பரதேசி "....மிக தெளிவாக சொன்னீர்கள் ....தொடர்பில் இருப்போம்..தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை ......வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. bringing back good old american college days..

    ReplyDelete
  10. வாழ்த்துகள் நண்பரே..உங்களின் எழுத்து நடை சுவாரஸ்யமாகவும் , நக்கலாகவும் உள்ளது...அதை அப்படியே பாலோ செய்து பட்டிமன்றத்தில் பேசுங்கள்..புதிதாக எதையும் முயற்சி செய்யாதீர்கள்...பதட்டப்படாமல்,பொறுமையாகவும் ரசிக்கும்படியும் பேசுங்கள்...மற்றதை ..சன்னில் பார்த்துவிட்டு சொல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்தி முருகேசன்.தங்கள் ஆலோசனையை
      பின்பற்றுவேன்.

      Delete
  11. தெரிந்த கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா நீண்ட நாளாக எதிர்பார்த்த வசிஷ்டர் , நன்றி பிரபா .

      Delete
  12. இனிய நினைவுகள்.....

    பட்டி மன்றத்தில் பேசும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.... விரைவில் சன் டி.வி. யில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete