Monday, October 7, 2013

மெய்ன் பயணம் Part 4 : அந்த ஏசியை போடுங்கப்பா !!!!!!!!!!

                
மெயினில் உள்ள அழகிய துறைமுக நகரம் போர்ட்லன்ட். முதல் ஸ்டாப்,"விக்டோரியா மேன்ன்".
 ஹோட்டல் பிஸினெசில் கொடிகட்டிப் பறந்த, ரகில்ஸ் சில்வெஸ்டர் மோர்ஸ் (Ruggles Sylvester Morse 1814-1893) அவர்கள் இந்த வீட்டை தன்னுடைய கோடைகால வீடாக பயன்படுத்தினாராம். இதனை 1858ல் கட்ட ஆரம்பித்து 1860ல் பூர்த்தி செய்திருக்கிறார்.
        இத்தாலிய வில்லா ஸ்டைலில் கட்டப்பட்ட, இந்த மாளிகையின் ஆர்க்கிடெக்ட், கனெக்டிக்கட் மாநிலத்தைச்  சார்ந்த "ஹென்ரி ஆஸ்டின்" என்பவர். பேரரசி விக்டோரியா காலத்தில் கட்டப்பட்டதால் "விக்டோரியா மேன்சன்" என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 
விக்டோரியா காலத்து கட்டடக்கலையில் கட்டப்பட்டதாலும் அந்தப்பெயர்.
        இந்த வீட்டின் இண்டீரியர் மற்றும் ஃபர்னிச்சர்களை அன்றைய காலகட்டத்தில் மிகவும் பாப்புலராக இருந்த "குஸ்தாவே ஹெர்டர்" (Gustave Herter) என்பவர் செய்திருக்கிறார். நான்கு மாடிகள் கொண்ட இந்த வீட்டின் ஒவ்வொரு ரூமும் கலைநுணுக்கத்துடன் ஒவ்வொரு தீம் மற்றும் வெவ்வேறு வண்ணங்களால் வடிவமைக்கப்பட்டதோடு, கலைப்பொருட்களால் நிறைந்தும் இருந்தது. 
ஜன்னல்கள் எல்லாம் உயர்ந்த ஐரோப்பிய ஸ்டெயின் கிளாஸ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அடா அடா, இந்த அமெரிக்க கோடீஸ்வரர்கள் எப்படியெல்லாம் தம் வாழ்க்கையை ரசித்து ருசித்து, அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தபோது ஒரு பெருமூச்சைத்தவிர வேறென்ன நாம்விடமுடியும்.
        நேரம் 12 மணி ஆனதால் சாப்பிடக்கிளம்பினோம். மெயினில் "லாப்ஸ்டர்" சாப்பிடாமல் வந்துவிடாதீர்கள் என்று நண்பர்கள் சொன்னதால், டவுன் டவுனில் இருந்த "ஓல்ட் டேவர்ன்" என்ற ரெஸ்டாரன்டுக்குச் சென்றோம். என்னைவிட ஒல்லியாக இருந்த வெயிட்டர் மிதந்து வந்து, எத்தனைபேர் என்று கேட்டதும் 11 என்றேன். "எத்தனைபேர் ?", என்று திருப்பிக் கேட்டான். இலவன் என்று அழுத்திச் சொன்னதும் கலவரமடைந்து விட்டான்.
இவன் புதுசா, இல்லை இவ்வளவு பேரை மொத்தமாக பார்த்ததில்லையா? என்று வியந்தபடி உள்ளே எட்டிப்பார்த்தேன். அங்கே உள்ள பல மேசைகளில் இரண்டு அல்லது மூன்று பேராக உட்கார்ந்திருந்தனர்.
        எங்களுக்கு டேபிள் போடுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டான். சும்மா சொல்லக் கூடாது, உள்ளே இண்டீரியர் ஒரு டேவர்ன் (Tavern) போலவே இருந்தது. அதோடு அங்கிருந்த இரண்டு மிகப்பெரிய மீன்தொட்டிகள் மற்றும் அதிலிருந்த உயிரோடு இருந்த கோரல்கள் சொல்லவே வார்த்தை இல்லை.
        என்ன சாப்பிடுவது என்று நாங்கள் முடிவு செய்ய கன்ஃபியூசன் ஆகி, ஏற்கனவே டென்சனில் இருந்த வெயிட்டரை மேலும் குழப்பியடித்தோம். இந்தப்புழு பூச்சி, ஊர்வன, நீந்துவனவெல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் நான் சேஃபாக ஒரு வெஜ் பர்கரை ஆர்டர் பண்ணினேன். என்னை ஒரு ஜந்துவைபோல் பார்த்தான் வெயிட்டர். மதுரை முனியாண்டி விலாசில் இலை  போட்ட கையோடு, பெரிய தட்டில் கறி வகைகளை பரப்பி வைத்துகொண்டு வரும் அழுக்கு   வெயிட்டரிடம் வேணாம்  என்று பலதடவை நான் சொன்னபோது  அவன் பார்த்த அதே பார்வை .  நடப்பனவற்றில் வெள்ளாடும், பறப்பனவற்றில் கோழியும் தவிர அதுவும் வீட்டில் அல்லது தென்னிந்திய உணவகங்களில் மட்டும்தான் சாப்பிடுவேன். என் மனைவி கடல் உணவை விரும்பி சாப்பிடுவாள். எனவே எல்லோருடனும் சேர்ந்து லாப்ஸ்டரை ஆர்டர் செய்தாள்.

        சிவப்புக்கலரில் லாப்ஸ்டரும் வந்து சேர்ந்தது. நண்டை விட பலமடங்கு பெரியது ஓட்டை உடைத்து உள்ளிருக்கும் சதையை உறிஞ்சி அவர்கள் சாப்பிட்டது “உவ்வே” ரகம். என் மனைவியும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, நடுவில் பாத்ரூம் சென்றாள். போய் ரொம்ப நேரமாயிற்றே என்று நானும் எழுந்து சென்று பார்த்தால், கண்களில் நீர் நிரம்பி, டயர்டாக வெளியே வந்தாள். லாப்ஸ்டர் பிடிக்கவில்லையாம். பச்சையாக இருந்ததாம். எல்லாவற்றையும் வாந்தி எடுத்துவிட்டு, "யாரிடமும் சொல்லாதே" என்றாள். ஆனாலும் ஊகித்துவிட்ட பின்னி, கிண்டல் செய்ய ஆரம்பித்தான். என்னவென்றால் மற்ற இருவரும் கர்ப்பவதிகள், அவர்கள் ஏதோ மாத்திரை உட்கொண்டு வாந்தியைத் தவிர்த்து விட்டனர். ஆனால் ரூத் வாந்தியெடுத்ததால் சிரித்தனர். 15 வருடங்களுக்கு முன்பே முதலிரண்டு பெண் குழந்தைகளுக்குப்பின், ஐயையோ விட்டால் பெண் பிள்ளைகளாய் பெற்றுத்தள்ளிவிடுவாள் என்பதால் அப்போதே "கத்தம் கத்தம் ஹோகயா".
        எங்களது அடுத்த புரோகிராம் "கேஸ்கோ பே  சன்செட் குரூஸ்” மாலை 6 மணிக்குத்தான் என்பதால் உண்ட மயக்கத்தில் இருந்த அனைவரையும் ஒரு பெரிய பார்க்கில் தள்ளினேன். ரெடியாக கொண்டுவந்திருந்த விரிப்புகளை விரித்து, "சாய்ந்து சாய்ந்து மிக ஓய்ந்து ஓய்ந்து அடடா" என்று மட்டையாக, நான் என்னுடைய 'ஆண்டிக் ' வேட்டையைத் துவங்கினேன். என்ன வாங்கினேன், எது வாங்கினேன் என்று நான் சொல்லப் போவதில்லை. தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் ஈமெயில் அனுப்பவும் படங்களை அனுப்புகிறேன். அல்லது வீட்டுக்கு வாருங்கள் காண்பிக்கிறேன். சில அரிய பொருட்கள் இருக்கிறது.
        மாலை 6 மணிக்கு பகல் 3 மணி வெயில் போல கொளுத்தியது. எனவே குரூஸ் கிளம்ப இன்னும் நேரமாகும் என்று சொன்னார்கள். ஒருவழியாக 6.45 க்கு ஆட்களை நுழையவிட்டு 7 மணிக்கு போட் கிளம்பியது. படகு என்றாலும் ஒரு 200 பேர்  உட்காரக்கூடிய அளவு பெரியதாய் 3 நிலைகள் கொண்டது.  வழக்கம்போல் காப்டன் வந்து "சேப்ஃடி  இன்ஸ்ரக்ஷன்" கொடுத்து, முடிந்த அளவுக்கு பயமுறுத்தினார். நாங்கள் மேல் டெக்கில் திறந்தவெளியில் உட்கார்ந்திருந்தோம். க்ரூ மெம்பர்களில் ஒரு பெண் வந்து விளக்க ஆரம்பித்தாள். கடலின் உள்ளே சிறிது சிறிதாக படகு நகர, உச்சி வெயில் மண்டையைப்பிளக்க கீழே சென்றுவிடலாம் என நினைக்கும்போது மரியா (அதான் பாஸ் அந்த டூர் கைடு), "கேப்டன் சொல்லிட்டார், இதோ ஏசியை ஆன் செய்கிறேன்" என்று சொல்லி காற்றில் கையை வீசினாள். ஒன்றும் புரியவில்லை. ஆனால் சில நொடிகளில் எங்கிருந்தோ வந்த குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று எங்கள் முகத்தை தழுவ சூப்பராக இருந்தது. ஓஹோ இதைத்தான் மரியா சொன்னாளோ என்று அப்போதுதான் விளங்கியது.

கடைசிப்பகுதி  அடுத்த  வாரம்  திங்கள்கிழமை.

பின் குறிப்பு :
நண்பர்களே வரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும்  இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . அருகில் வசிப்பவர்கள் வாங்க பழகலாம் . விவரங்களுக்கு சொடுக்கவும்   www.njtamilsangam.net .


3 comments:

  1. இலவன் என்று அழுத்திச் சொன்னதும் கலவரமடைந்து விட்டானா? ஒருவேளை செவென்-இலவன் பணியாளர்கள் என்று நினைத்தி இருப்பானோ? அண்ணி வாந்தி என்றவுடன் மனதில் ஒரு இன்பம். ஆனால் அடுத்த வரியிலேயே அதை போட்டு உடைதீர்கள். எனது, பெண் பிள்ளைகளை வரிசையாக பெற்று தள்ளுவாள? அண்ணே, ஆஸ்திக்கு தான் பையன். ஆசைக்கு தான் பெண். அருமையான எழுத்து. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் விஷயத்தில் ஆசைக்கு மட்டுமல்ல "ஆஸ்தி"க்கும் பெண்தான் .ஆனால் ரெண்டே ஜாஸ்தி அதுக்கப்பால "நாஸ்தி" .
      நன்றி விசு , தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் .

      Delete
    2. "ஆஸ்தி" ,"ஜாஸ்தி" "நாஸ்தி" . வடிவா "முஸ்பாத்தி"யா கதைக்கிறீங்க அண்ணே...

      Delete