Thursday, October 31, 2013

ராயல் அஃபயர் (A Royal Affair)

        2012ல் வெளியாகி பாராட்டுகளைக்குவித்த இந்த டேனிஸ் மொழிப்படம் ஒரு வரலாற்றுச்சித்திரம் (Historical Drama). போடில் ஸ்டீன்சென் (Bodil Steensen) எழுதிய பிரின்சஸ் ஆஃப் பிளடெட் (Princess of blodet ) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
King Christian VII
        





















 18-ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட ஏழாவது கிறிஸ்டியன் (King Christian VII) சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவன். நாட்டை ஆள அடுத்த வாரிசு வேண்டுமே என்று நினைத்த டேனிஷ் அரசவை, அப்போது இங்கிலாந்தை ஆண்ட அரசர், ஜார்ஜ் III அவர்களின் தங்கை, இளவரசி கேரலின் மெட்டில்டாவுக்கு மணம் முடித்து வைத்தது. வந்த ஒரு சில நாட்களில், தன் கணவனின் குரங்கு சேட்டைகளைப் பார்த்து நொந்துபோகிறாள் அரசி. இவ்வாறிருக்க நாட்டின் தேவைப்படியும் சட்டப்படியும் ஒரே  ஒரு முறை அவர்கள் படுக்கையில் இணைய, அரசி கர்ப்பமடைகிறாள்.
caroline matilda of wales
        
இதற்கிடையில், அரசனை குணப்படுத்தவும், அரசிக்கு உதவவும் ஸ்ட்ருவன்சீ  (Johann Friedrich Struensee) என்ற மருத்துவர் அரசு மருத்துவராக (Royal Physician) நியமிக்கப்படுகிறார். சிவப்புச் சிந்தனையில் வளர்ந்திருந்த அந்த மருத்துவருக்கு  நாட்டின் நிலைமையையும், அரச குடும்பத்து அவலங்களையும் தெரிந்துகொள்ள வெகு நாட்கள் தேவையிருக்கவில்லை. அரசரின் பெயரில் ஆட்சி நடத்துவது அரசவைப் பிரபுக்கள்தான் (Royal Court) என்றும் தெரிந்துவிடுகிறது.
        அரசரின் உற்ற தோழனாக ஆகிற மருத்துவர் சில சீர்திருத்தங்களை செய்ய அரசனை பயன்படுத்துகிறார். தனிமையில் வாடி நொந்துகொண்டிருந்த அரசிக்கு மருத்துவரிடம் காதல் பிறந்து, கள்ளத் தொடர்பு ஆரம்பிக்கிறது.
        அரசனின் உதவியால் முழு அரசவையைக் கலைத்துவிட்டு, அரசனின் பெயரில் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிய மருத்துவர், பல சீர்திருத்தங்களை அரசியின் ஆலோசனையோடு நடைமுறைப்படுத்துகிறார். இதற்கிடையில், அவர்களின் கள்ளத் தொடர்பு அரசல் புரசலாக வெளியே தெரிய, விழித்துக் கொண்ட பிரபுக்கள் ஒன்று சேர்ந்து, அதைச்சாக்காக வைத்து மருத்துவருக்கு மரண தண்டனை கொடுத்து அரசியை நாடு கடத்துகின்றனர். சீர்திருத்தங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் சுரண்டலில் ஈடுபடுகின்றனர்.
        மருத்துவருக்கும் அரசிக்கும் பிறந்த 2ஆவது பெண் குழந்தையும் முதலில் பிறந்த ஆண் குழந்தையும் அவரிடமிருந்து பிரிக்கப்படுகிறது.
        அரசி தன்னுடைய சூழ்நிலையையும், எதனால் இந்தத் தொடர்பு ஏற்பட்டது என்பதனையும் விளக்கி எழுதி, சிறிது வயதுக்கு வந்த பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.
Frederick V1 of Denmark
        அரசியின் மூத்தமகன் அதனை முற்றிலும் புரிந்து கொண்டு, அப்பாவான அரசரை தன் வசப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைத்திருத்த முயல்கிறான். அத்தோடு திரைப்படம் முடிகிறது. தன் பதினாறாவது வயதில் முடிசூட்டிக் கொண்ட அவன் ஃபிரடெரிக் VI   என்ற பெயரில் நீண்ட அரசாட்சி செய்து, ஸ்ட்ருவன்சி கொண்டுவந்த அனைத்து சீர்திருத்தங்களையும் மீண்டும் கொண்டுவந்ததோடு, மேலும் பலவற்றைச் செய்து அழியாப்புகழ்பெற்றான் என்பது வரலாறு.
        நிக்கோலஜ் ஆர்செல் (Nikolaj Arsel) இயக்கிய இந்தப்படத்தில் மேட்ஸ் மிக்கேல்சென் (Mads Mikkelsen) ஸ்ட்ருவன்சியாகவும், அலிசியா விக்கன்டர் (Alicia Vikander) கேரலினாவாகவும், மிக்கல் ஃபோல்ஸ்கார்ட் (Mikkel Folsgaerd) கிறிஸ்டிய னாகவும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.  இம்மூவரும், அப்படியே அந்தக் காலக்கட்ட சூழ்நிலையை தம்முடைய இயல்பான நடிப்பினால் கண்முன் கொண்டு வருகின்றனர். திரைக்கதை அமைக்க பத்து வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தப்படம் ஜென்ட்ரோப்பா (Zentropa) என்ற புகழ்வாய்ந்த தயாரிப்பாளரின் முயற்சியில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் செக் குடியரசின் கூட்டுத் தயாரிப்பில் 46 மில்லியன் டேனிஷ் குரோனர் செலவில் எடுக்கப்பட்டது.
        இங்கிலாந்து விமர்சகர் மார்க் கெர்மோட் (Mark Kermode) அவர்களால் 2012-ன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட இப்படம் பல விருதுகளை குவித்தது.
1.  பெர்லின் திரைப்படவிழாவில் மிக்கேல் ஃபோல்ஸ்கார்ட் (கிறிஸ்டியன் VII ஆக நடித்தவர்) சிறப்பு நடிப்புக்கான சில்வர் பேர் (Silver Bear) பெற்றார்.
2.  நிக்கோலஜ் அதே விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றார்.
3.  2012 டால்லஸ் ஃபோர்ட் வெர்த் -திரைப்பட விமர்சகங்களின் கூட்டமைப்பின் "சிறந்த வெளிநாட்டு மொழிப்பட" விருது.
4.  2012 ஃபீனிக்ஷ் திரைப்பட விமர்சகர்களின் கூட்டமைப்பில் "சிறந்த காஸ்ட்டியூம் டிசைன்" விருது.
5.  சிறந்த ஆடையமைப்புக்காக மானன் ரஸ்மியூசன் விருது (Manon Rasmussen) பெற்றார்.
6.  2012 -வாஷிங்டன் டி.சி - சிறந்த வெளிநாட்டு மொழிப்படம்
7.  2013 -ஆஸ்கார் அவார்டு - நாமினேட்டட்
8.  2013 -கோல்டன் குளோப் அவார்ட் - நாமினேட்டட்.

        -- திரைப்பட ரசிகர்கள் கண்டிப்பாய் பார்த்து மகிழ வேண்டிய படம்.

இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்...

 இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.

3 comments:

  1. பார்க்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டி விட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. பார்த்து மகிழுங்கள், தனபாலன்.

      Delete
  2. படித்தேன், ரசித்தேன்,சொர்க்கம்
    நம் மனதிலேயே இருக்கிறது .
    இந்த நன்னாளில் இருளை நீக்கும் ஒளியாக இறைவன், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்கட்டும்.

    ReplyDelete