Monday, October 14, 2013

மெய்ன் பயணம் Part 5 : நடுக்கும் நீரும், இருட்டுக்குகையும் !!!!!!!!

             

போர்ட்லேண்ட் துறைமுகம் தாண்டி, அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சென்று வேகமெடுத்தது படகு. தண்ணீரைக் கிழித்துக் கொண்டு படகு சென்றபோது, 
பல பெரும் கப்பல்கள், சிறு சிறு தீவுகள், ஒரு பழைய கோட்டை இருந்த பெருந்தீவு, பெரிய, சிறிய கலங்கரை விளக்கங்கள் ஆகியவை சூழ்ந்து இருந்தன.
 பெரும் பணக்காரர்களுக்குச் சொந்தமான படோடோப தனித்தீவுகளையும், அவர்களுக்குச் சொந்தமான யாட் (Yacht) என்று அழைக்கப்படும் சொகுசுப் படகுகளையும் பார்த்து வியந்த வண்ணம் சென்றோம்.

 அப்போது மெதுவாக சூரியன் மறையத் தொடங்கியது. சூரியன் மறைந்தும் மறையாமலும், நீரிலும் வானிலும்  நிகழ்த்திய ரசவாத வர்ண ஜாலங்கள் கண்களுக்கு அருங்காட்சியாக இருந்து. முடிந்தளவுக்கு படங்களை க்ளிக்கினேன்.
        மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத் தொடங்க, எங்கள் படகு மாலை 9 மணிக்கு கரைக்குத்திரும்பியது. ஏன் மாலைன்னு  சொன்னேன்னா, 9 மணிக்கும் நல்ல வெளிச்சமிருந்தது. 


பார்க்கிங்கிலிருந்து கார்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அகஸ்டாவுக்குத்திரும்பினோம். குக்கரில் 'வார்ம்' மோடில் பொன்னி அரிசி சூடாக இருந்தது. மனைவி செய்து கொண்டு வந்திருந்த கத்தரிக்காய் புளிக்குழம்பை சூடு பண்ணி, சூடாக மணிமணியாக இருந்த பொன்னி சாதத்தில் ஊற்றி, அதன் அரோமாவை அனுபவித்தபடி கையில் பிசைந்து, ஒரு கவளத்தை வாயில் இட்டேன். கொஞ்சம்  கெட்டில் குக்குடு  உருளை சிப்சை  ஓரத்தில் கொண்டு வந்து வைத்தாள் என் மகள். ஆஹா ஆஹா அந்தக்கத்தரிக்காய் என் தோட்டத்தில் விளைந்தது. "நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய்" என்று முனுமுனுத்துக்கொண்டே படுக்கைக்கு  சென்றேன்.
        அடுத்தநாள் சனிக்கிழமை சிறிது விரைவாகக்கிளம்பினோம். அக்கேடியா நேஷனல் பார்க்,( Acadia national Park) அங்கிருந்து நான்கு மணி நேரம் பயணம். அக்கேடியாவா அக்கோடியாவா என்று நினைக்கும்   அளவுக்கு  தூரமாய்  இருந்தது.  நல்ல அடர்ந்த   காட்டுக்குள் பாம்பு போல வழுக்கிச் சென்றது நெடுஞ்சாலை.
        எல்லோரும் முறைத்தாலும் பரவாயில்லை என்று நடுவில் ரோட்டோர ஃபிளி மார்க்கெட்டில் (Flea Market) கொஞ்சம் மேய்ந்துவிட்டு தொடர்ந்தோம். நடுவில் ஒரு “பிட்சரியா” வில் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குத்தான் சென்று சேர்ந்தோம். அக்காடியா நேஷனல் பார்க் மலையில் இருந்தது. முதல் ஸ்டாப் “சாண்ட் பீச்” (Sand Beach). பெரியவர்களுக்குத் துணையாக(?) நான் மேலேயே  தங்கிவிட, மற்ற அனைவரும் உடை மாற்றிக்கொண்டு, கீழே பாதாளத்தில் இருந்த பீச்சுக்கு இறங்கினர். பாதிப்பேர் போன வேகத்தில், எறிந்த பந்து போல் திரும்பி வந்தனர். “A”  காட்சிகளை பார்த்து அதிர்ந்து விட்டனரா? என்று நினைத்தேன். 
  பிறகுதான் அங்கே உள்ள தகவல் பலகையில் படிக்கும் போது தெரிந்தது. அந்த பீச் தண்ணீர், நல்ல   கோடை காலத்தில் வெளியே 100 டிகிரி இருக்கும்போது கூட, 50 டிகிரி தான் இருக்குமாம்.ஏனென்றால் பக்கத்தில் இருந்த துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி, கடல் நீர்   சூடாவதைத்தடுக்கிறதாம். நல்லவேளை நான்   போகலை. அப்ப குளிர் காலத்தில்? என்று யோசித்த போது, இந்த இடம் கோடைகாலத்தில் மட்டும்தான் திறந்திருக்கும் என்று சொன்னார்கள்.
        நம் மீதி ஆட்கள் குளிர்நீரில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது, பெஞ்சி பின்னி மட்டும் உள்ளே சென்று நடுங்கிக் கொண்டே நீந்தினர். மற்ற அனைவரும் கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அடுத்து தண்டர்ஹோல்( Thunder Hole)  என்ற பகுதிக்குச் சென்றோம். மலையிலிருந்து கீழிறங்கி கடல் மட்டத்தில் பார்த்தபோது. ஓயாது  அடித்த அலைகளால், பாறையில் நீண்ட பிளவு பட்டு, ஒரு பெரிய இருட்டு குகை இருக்கிறது. பெரிய அலைகள் வரும்போதெல்லாம், பிளவில் விரைவாக செல்லும் நீர், வேகமாக அந்த ஓட்டையில் மோதித்திரும்பும்போது, இடி இடித்ததுபோல் ஒரு சத்தம் கேட்கிறது. 
Thunder hole
அதை எவனோ கண்டுபிடித்து "தண்டர் ஹோல்" என்று பெயரும் வைத்துவிட்டான். பொருத்தமான பெயர்தான்.

http://www.youtube.com/watch?v=lph_sbPXO7M

        அதனை முடித்துவிட்டு “ஜோர்டன் பாண்ட்” (Jordan Pond) என்ற பெரிய குளக்கரையில் அமைந்த ஒரு ரெஸ்டாரண்டுக்கு போனோம். 

அது 1870-ல் வருடம் ஜோர்டன் குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பித்த புதிதில் அவரால் கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பண்டம் “பாப்பாவெர்” ( Popover) என்பது.
 வேறு எங்கும் கிடைக்காத ஒன்று என்று ஓவராக பில்டப் வேறு கொடுத்தார்கள். ஆர்டர் செய்து சிலநிமிடங்களில் வந்தது. சாப்பிட்டுப் பார்த்தால் இது நம்மூர் சுசியப்பம். அதே டேஸ்டில் இருந்தது. என்ன தொட்டுச்சாப்பிட சிரப்பொன்று கொடுத்தார்கள். அம்புடுத்தேன்.
        அதன் பின்னர் திரும்பவும் லாங் டிரைவ் என்பதால் உடனே கிளம்பி 10 மணிவாக்கில் ரூமுக்குத்திரும்பி ஓய்வெடுத்தோம்.
        அடுத்தநாள் ஞாயிறன்று காலை கிளம்பி சரியான வழியைப்பிடித்து டிரைவ் செய்தோம். நடுவில் “ஸ்ருஷ்ச்பர்ரி” என்ற இடத்தில் இருந்த “பாலிவுட் கிரில்” என்ற உணவகத்தில் லஞ்சை முடித்தோம்.
 அதன்  பின் கடுமையான டிராஃபிக்கில் மாட்டியதால், மதியம் 2 மணிக்கு வந்து சேர  வேண்டியது,  இரவு  எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம். சும்மாவா கனெக்டிக்கட், மாசசூசட்ஸ், நியூஹாம்ஷயர் என்ற  மூன்று மாநிலங்கள் தாண்டியல்லவா மெயின் சென்று வந்தோம். காடுமலை சுற்றியலைந்தாலும், நம் வீட்டிற்கு வந்து சேரும்போது ஒரு சுகமான நிம்மதி  வருமே  Home Sweet  Home.

மெய்ன்  பயணம் முற்றியது

விரைவில் வருகிறது போர்ட்டரிக்கோ  பயணம்.

4 comments:

  1. உலகம் சுற்றும் வாலிபனின் பயணக் பதிவுகள் மூலம் பல இடம் சென்ற அனுபவங்கள் கிடைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்.
      வரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . வாங்க பழகலாம் . விவரங்களுக்கு சொடுக்கவும் www.njtamilsangam.net .

      Delete
  2. அழகிய படங்களுடன் பயணம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,திண்டுக்கல் தனபாலன்.

      Delete