Friday, May 10, 2013

ஆஹா, வடை போச்சே !!!!!!!!!

Jackson Heights, Queens

     என்னுடைய சால்ட்பெப்பர் சிகையில் சால்ட் அதிகமானதாலும், பின்பகுதியில் குடுமிபோடுமளவுக்கு முடி வளர்ந்ததாலும் (முன் பகுதியிலும் இப்படியே வளர்ந்தால் நல்லாயிருக்கும், ஹீம்வயசுதான் ஏறுதுன்னு  பார்த்தால், இந்த நெத்தியும் ஏறிக்கொண்டே போகுது ) ஜாக்சன் ஹெய்ட்ஸீக்கு போக முடிவெடுத்தேன்.
      பத்து வருடங்களுக்கு முன் அந்த சலூனை தேர்ந்தெடுத்தது ஞாபகம் வந்தது. முதன் முதலில் போன போது, இந்தியப்பகுதி என்று சொன்னதால், இந்திய சலூனைத்தேடி, இல்லாததால் கட்டண அடிப்படையில் மூன்பிரதர்ஸ்-ஐ தேர்ந்தெடுத்தேன். அன்றும் இன்றும் இங்கே முடிவெட்டுவதற்கு $ 8 டாலர் மட்டுமே. கட்டு(டிங்)படி எப்படி ஆவுதுன்னு தெரியலை . டை அடிப்பதற்கு $10 டாலர், டிப்ஸ் 2 டாலர், ஆகமொத்தம் $ 20 டாலரில் தலைக்கு மேல் வேலை முடிந்துவிடும். சுறு சுருவென்று உள்ளே செல்லும் நான், கருகரு வென்று வெளியே வந்துவிடுவேன். இங்கே பார்ட்னர்களாக இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் சுத்தமாக முடியில்லை. முடியேயில்லாத இவர்கள் முடி வெட்டினால் நன்றாகயிருக்குமா? என்ற பெருத்த சந்தேகம் வந்தது .மூன் பிரதர்ஸ் என்பது காரணப்பெயராக இருக்குமோ என்றும் சந்தேகித்தேன்.  பாகிஸ்தான்காரர்கள் என்றவுடன் நான் இந்தியன் என்பதால், சிகை வெட்டுவதற்கு பதில் சிரம் வெட்டிவிடுவார்களோ  என்ற பயமும் இருந்தது. அந்தி  சாயும் வேளையில் ,இந்தியும் தெரியாததால் மந்திபோல் முழித்துக் கொண்டு ஒரு ஓரத்தில்  குந்தி இருந்த போது, ஸ்டைலாக ஒருவன் உள்ளே நுழைந்தான். மூத்த மூன் சகோதரரின் மூத்த மகன் என்று அறிந்து மகிழ்ந்து நீ நீ நீதான், எனக்கு வெட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது. அவன் வெட்டியது பிடித்துப்போக, இதோ இன்றுவரை காசியஃப்தான் என் ஆஸ்தான முடிவெட்டி.  என் தற்போதைய  பாலிசி என்னன்னா ? முடி வெட்டவேண்டும் , ஆனா வெட்டினது போல தெரியக்கூடாது . (ஏன்னா இது என் பணம்) மாணவ காலங்களில் என் பழைய பாலிசி என்னன்னா ? முடி வெட்டவே கூடாது , ஆனா வெட்டினது போல தெரியவேண்டும்.( அது என் அப்பா பணம்).

                அங்கு இன்னும் பல இளைஞர்கள் இருந்தாலும்,  அதிகப்பேர்  காசியஃப்பை நாடியது, அவன் ஹேர்ஸ்டைல் போல நமக்கும் வந்துவிடாதா என்ற, நப்பாசைதான் என்று நினைக்கிறேன். அது பங்க்கும் இல்லை, ஸ்பைக்கும் இல்லாத ஒருவித புதுஸ்டைல். என்னென்னவோ ஸ்டைல் ட்ரை பண்ணி முடியாது  , நம் கோரை முடிக்கு இந்த அகோர ஸ்டைலைத்தவிர வேறென்றும் செட்டாகாது என்று மனசைத் தேற்றிக் கொண்டேன்.
     மதுரையில் படிக்கும்போது , என் தோழிக்கு பிடிக்கும் என்பதால் , "டிஸ்கோ" ஸ்டைல் வெட்டி , குளித்தபின் ,முடி முள்ளம்பன்றி மாதிரி நிற்க , கர்சீப்பை தலையில் கட்டிக்கொண்டு நான்கு வெவ்வேறு சலூன் கடைகளுக்கு  சென்று , ஹீட்டர் போட்டும் , முடி அடங்கவில்லையாதலால் ,மீண்டும் தேவர் சிலை பக்கத்தில் உள்ள ஸ்டூடெண்ட்ஸ் சலூனில் போய் ஒட்ட  வெட்டினேன் .  ஆமா அன்று முடியும் காலி , பணம் இருந்த மடியும் காலி.

            முதலில்  விடலைப் பையனாகப் பார்த்த, காசியஃப்பும் இப்போது பெரியவனாகி, தன்  உடன் வேலை பார்த்த, பெண்கள்  பகுதியின் பியூட்டீசியனை, மூன்களை எதிர்த்துக்கொண்டு கல்யாணம் முடித்து, இப்போது இரண்டு மகன்களுக்கு தகப்பன். இது எப்படி நடந்தது என்றே எனக்குப் புரியவில்லை. மூத்த மூன் சகோ எப்பொழுதும் அந்தப்பெண்ணை சீண்டிக்கொண்டும், கிள்ளிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் இருப்பார். மகன் எதிரிலே எல்லாம் நடந்தாலும், காசியஃப் அதனை கண்டு கொண்டதாகவே காண்பிக்க மாட்டான்.
            ஒருமுறை நான் முடி வெட்டிக்கொண்டிருந்த போது ,மூமூ, அவளைச்சீண்டி, வலுக்கட்டாயமாகக் கன்னத்தில் முத்தமிட்டதை, (சரியாக தெரியவில்லை, கன்னமா?  உதடா?) நான் பார்க்க முயன்றபோது, காசியஃப் என் தலையை திரும்பமுடியாமல் இறுக்கி, கழுத்தில் கத்தியை வைத்தான்.  இது எல்லாவற்றையும் மீறி, காசியஃப் அந்தப் பெண்ணை நிக்காவும் செய்தது எனக்கு பக்கா  அதிர்ச்சி. 
      நேரம்  ஓடிக்கொண்டிருந்தது. காசியஃப்பை இன்னும் காணோம், பஞ்சாப்பைச் சேர்ந்த (இது பாகிஸ்தானின் பஞ்சாப்) அஸ்ரப் அலி வந்து என்னைக் கேட்டான், "கட்டிங்கா கலரா?" என்று. ஐயாசாமி ஆளைவிடு என்று நினைத்துக்கொண்டு, “காசியஃப் வரட்டும்” என்றேன்.
    அவன் என்னவோ பஞ்சாபி கலந்த உருதுவில் சொன்னது எனக்குப்புரியவில்லை. யாரிடம் போனாலும், இவனிடம் போகமாட்டேன்.  ஒருமுறை காசியப் இல்லாமல், ஒரு பரீட்சார்த்த முறையாக இவனிடம் செல்ல, நான் என்ன சொல்லியும் புரியாமல் , கதற கதற ,கிட்டத்தட்ட மொட்டை அடித்ததோடு, ஒரு அட்டைக் கறுப்பு சாயத்தை தேய்த்துவிட, கழுவி முடித்தால், எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது, கறுப்புச்சாயத்திலேயே பலவகை உண்டு என்று. அது ஆப்பிரிக்கர்களுக்கு போடும் கருப்பாம். நீ ட்ரைனிங் எடுக்க என் தலைதானா கிடைச்சுது .
     சிறிது நேரத்தில் காசியஃப் பரபரப்புடன் வந்து சேர்ந்தான். பார்த்தால் அடையாளமே தெரியாது, முழு சூட் அணிந்து தலையை படிய வாரியிருந்தான். என்னடா என்று கேட்டால், அவன் இப்போது மேன்ஹாட்டனில் உள்ள ஒரு “ஹெல்த் கேர்” கம்பெனியில் “குவாலிட்டி அனலிஸ்ட்டாக” பணிபுரிவதாய்ச் சொன்னான். இதிலே எனக்கொன்னும் ஆச்சரியம் இல்லை .நம்ம தேசி ஆளுங்க , ஈரைப் பேணாக்கி ,பேணை பெருமாளாக்கிருவாய்ங்க.   பக்கத்தில் உள்ள கம்ப்- யூட்டர் 
 நிறுவனத்தில்( Computech Computers Inc) டிரைனிங் எடுத்து, அவர்களே வேலை வங்கிக் கொடுத்ததாகச் சொன்னான். கம்ப்யூடெக்கில் சிலரை எனக்குத் தெரியுமென்பதால், யார் மூலம் என்று  கேட்டபோது ஆனந்த் காமிநேனி என்றான். என் கம்பெனியும் இதனை செய்திருக்க முடியுமாதலால், ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டேன். "பலமுறை உங்களிடம் பேசிப்பார்த்தேன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை" என்றான். (எலேய் சேகரு, யார்லே உனக்கு இனிமேல் முடி வெட்டுவாய்ங்கே ?) வழக்கம்போல், ஆந்திராக்காரன் முந்திக்கொள்ள, “அடடா, வடை
போச்சே” என்று எழுந்தேன்.

12 comments:

  1. அந்தி சாயும் வேளையில் ,இந்தியும் தெரியாததால் மந்திபோல் முழித்துக் கொண்டு ஒரு ஓரத்தில் குந்தி இருந்த போது/////

    ஹா,ஹா அண்ணா சிரிப்ப நிறுத்த முடியல

    ReplyDelete
    Replies
    1. வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் , தம்பி ஆனந்த் , நல்லா சிரிங்க, நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க

      Delete
  2. Anna please remove word verification

    ReplyDelete
  3. Never knew of your salt pepper hair until you shared it now. Hearty laugh on what Kashyap did to your hair. Missed opportunity = Missed vadai!

    ReplyDelete
  4. //அன்றும் இன்றும் இங்கே முடிவெட்டுவதற்கு $ 8 டாலர் மட்டுமே. //

    விலையேற்றமே இல்லியா ...?!

    ReplyDelete
    Replies
    1. நம்புங்கள், அதே கட்டணம்தான் இப்போதும்

      Delete
  5. காசு மிச்சம் தான்.நண்பர்களின் செலவும் குறைச்சலோ?

    ReplyDelete
    Replies
    1. காசு மிச்சமா ? . காசு போச்சேதானு புலம்புறேன் .

      Delete
  6. Good One Alfy. I vividly remember the day you had the disco hairdo at Odeon and your relentless efforts in redoing it. Good old Washburn days. Syed

    ReplyDelete
    Replies
    1. Dear Syed,
      I tried to remember the name of the salon. Could not get it.Vow what a memory, you still have the same memory power after three decades. Thanks Syed.

      Delete