Friday, May 3, 2013

வசந்த காலம் : ஒரு டைவர்ஸ் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ஒரு வழியாக நீண்ட நெடிய குளிர்காலம் கொஞ்சம் முடிவுக்கு வர ஆரம்பித்துள்ளது. வசந்த காலம், குதூகலமாய் ஆனால் மிகமிக மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே மெல்லிய பச்சை தெரிகிறது. டூலிப்  மலர்கள் பூத்துள்ளது. இதுல விசேஷம் என்னன்னா, இங்க மரங்களில் முதல்ல இலை வருவதில்லை, முழுக்க முழுக்க பூக்கள்தான் பூக்கிறது. அது உதிர்ந்த பின்தான் இலை வருகிறது. மரங்கள் பூக்களை உதிர்த்து , அலர்ஜிகளை விதைக்கும்  காலம் இது. ஆடைக்குறைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டது .MTA பஸ் /டிரைன் டிரைவர் துவங்கி , NYPD போலிஸ் ஆபிசர்களும் , ஷார்ட்ஸ்  அணியும் நேரம்  இது .

இரவு  எட்டு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது .நல்ல பழ வகைகள் வரத்துவங்கியிருக்கின்றன. குறிப்பாக பெரி வகைகளான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, பிளாக்பெர்ரி, புளுபெரி. அட நம்ம வாழைப்பழம் கூட பெர்ரி வகையாங்கோ.
தலை நகர் வாஷிங்டன் நகரில் நடக்கும் "செர்ரி பிளாசம் " ( cherry Blossom ) திருவிழா உலகப்புகழ் வாய்ந்தது .

 1912-ல் ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் , நல்லிணக்க அடிப்படையில் சுமார் 2000 மரங்கள் பரிசாக அளிக்கப்பட்டன . 1935 முதல் இந்த திருவிழா நடைபெறுகிறது.நடுவில் Pearl Harbor-ரில் ஜப்பான், குண்டு போட்டதின் நிமித்தம் , எதிர்ப்பை காட்டும் வண்ணம் பல மரங்கள் பொது மக்களால் வெட்டப்பட்டன . அதோடு  விட்டார்களா ? நாகசாகி , ஹிரோஷிமாவில் அணு குண்டை போட்டதில் ஜப்பான்காரன் மேலும் குறுகிப் போய் விட்டான் .திருவிழாவும் 1941 முதல்  1947 வரை நிறுத்தப்பட்டது .ஆனல் அப்புறம் சமாதானமாகி , திரும்பவும் இன்று வரை நடந்து வருகிறது .1965-ல் ஜப்பான் மேலும் 3800 மரங்களை அளித்தது .சுமார் இரண்டு அல்லது மூன்று வாரமே இருக்கும் இந்த பூக்கள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆனால் "மழை விட்டாலும் தூவானம் விடவில்லை" என்பது  போல் இன்னும் குளிர் முற்றிலுமாக போகவில்லை. ஏப்ரல் முடிந்து, மே எட்டிப்பார்த்தும், ஜாக்கெட்டையும், ஸ்வெட்டரையும் இன்னும் கழற்ற முடியவில்லை. இன்னும் காலைப்பொழுதும், மாலைப்பொழுதும் நல்ல குளிர் இருக்கிறது. சென்னையில் டிசம்பர் மாதத்தை ,நியூயார்க் மே மாதம் நினைவூட்டுகிறது. குளிரைப்பார்த்தால் கோடை மிகச் சுருங்கி விடும் போல தெரிகிறது.
நெலமையைப் பாருங்க, சென்னையிலிருக்கும்போது கோடை சுருங்க ஆசைப்பட்டும், நியூயார்க்கில் கோடை குறைவதைப் பற்றி கவலைப்பட்டும், என்ன கொடுமை இது சரவணா? US  கேலண்டர் படி, மார்ச் மாதம் 20 ஆம்  தேதி, வசந்த காலம்  ஆரம்பம்னு சொல்லுது. அதுசரி இத முன்கூட்டியே இயற்கை அன்னைக்கு சொன்னார்களா?. ஒங்கபாட்டுக்கு காலன்டரில் போட்டால்  போதுமா?
 ஷாப்பிங்  மால்களில் குளிர்கால ஆடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, வசந்த மற்றும் கோடை கால ஆடைகள் மட்டுமே உள்ளன. எங்கள் வீட்டுத்தோட்டக்காரர் ஜான் வந்து இலைக் குப்பைகளை அள்ளிப்பெருக்கி, ரோஜாச்செடிகளை வெட்டித்திருத்தி, புல்வெளிக்கு மருந்துபோட்டு, ஒரு  $300 டாலருக்கு பில் கொடுத்துள்ளார். என்ன செய்து என்ன ஆக, முதல்ல களைதான்  வருது. என் மனைவி, பின்னால் உள்ள "கிச்சன் கார்டனில்" காய்கறிகள் போடுவதற்கு ஆயத்தமாகிறாள். அத்தி மரமும் , பெர்சிமன் மரமும் லேசாக துளிர் விட , புதினா பரவி மணம் வீசுகிறது. பிள்ளைகள் "வெகேஷன்" எங்கே போகலாம்? என்று கேட்கிறார்கள். எப்படி சமாளிக்கப்போரேனோ?. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்.

நிறைய விளம்பரங்களும் வர ஆரம்பித்துவிட்டது. "டைவர்ஸ் சேல்" அதில் ஒன்று. விவாகரத்தை கூவிக்கூவி விக்கிறாய்ங்க. $200 டாலருக்கு எல்லாத்தையும் முடிச்சுருவாய்ங்கலாம். மனைவியோ அல்லது கணவனோ யாருக்கு வேணுமோ எதிர்பார்ட்டி வராமயே வாங்கிரலாமாம். வசந்தகாலத்தில் இப்படி ஒரு கேடு காலமா?.

ஒன்னு மட்டும் எனக்கு புரியலை, பலபேரை டேட்டிங் செஞ்சு, சிலபேரோடு "லிவ்விங் டுகெதர்" பண்ணி, ஓரிருவருக்கு குழந்தைகள் பெற்று, ஒருவழியா நாற்பது வயசிலே கல்யாணம் பண்ணலாம்னு முடிவு செஞ்சு, கல்யாணம் முடிந்தவுடன், ஒரே வருஷத்தில் விவாகரத்து பண்ணீராய்ங்க. என்ன இது அநியாயம், ஒரே பொண்டாட்டியோடு குடித்தனம் நடத்தற  நாங்கல்லாம் என்ன கேனப்பயல்களா?. ஆச்சு  வர ஜூலை வந்தா 201 வருஷம் முடிஞ்சு போச்சு. (சாரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக் 21 என்று திருத்தி வாசிக்கவும்)
குழந்தைன்னு சொன்ன உடனே ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருது. ஒரு மனைவி வேலை விஷயமா ஊருக்குப்போன புருஷனுக்கு ஈமெயில் அனுப்பினாளாம், "நீ ஒன்னும் கவலைப்படாதே, ஒன்னோட பிள்ளைகளும், என்னோட பிள்ளைகளும், நம்மோட பிள்ளைகளோட நல்லா வெளையாடிட்டு இருக்காங்க,  பத்தாக்குறைக்கு என்னோட எக்ஸ் பாய்ஃபிரண்டு வந்து அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான். அதனால நீ மெதுவா உன் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்தாபோதும் " என்று. உண்மையிலேயே  அதான் இங்க கதி .
இதுல இன்னொரு விளம்பரம் கூட பார்த்தேன். "Who  is my Daddy?" என்று. அது வேறொன்னுமில்ல, குழந்தையோட அப்பா யாருன்னு சந்தேகம் வந்தா, இங்க போய் DNA டெஸ்ட் பண்ணி கண்டுபிடிச்சுரலாம்.

பல குழந்தைகளை, பல பேரிடம் பெற்றுக் கொள்ளலாம். அது ரொம்ப ஈஸி, ஆனால் நீதான் தந்தை என்று நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குழந்தைக்கும், அம்மாவுக்கும், நீ ஜீவனாம்சம் மாதா மாதம் தர வேண்டும். இல்லேன்னா மவனே ஜெயில் தான். அதுக்குத்தான் DNA டெஸ்ட்.
பலபெண்கள் பொழப்பு இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு. அடா அடா அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கூப்பிட்டு வரும்போது, பாரதியார் பாட்டுத்தான் ஞாபகம் வரும்.
வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
சாம்பல் நிறமொரு குட்டி
கரும் சாந்து நிறமொரு குட்டி 
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
இதற்கிடையில், இங்குள்ள லோக்கல் கிளப்பில், என் மனைவி பேசுவதற்கு ஏற்பாடாகி என்னையும் அழைத்தாள். கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டை ஒட்டி, தாலி கட்டும் வழக்கத்தையும், தாலியை அணிந்து மகிழ்வதையும், அதனை மதிப்பதும் கணவனை மதிப்பதும் ஒன்றே (?) என்றும் சொல்லி, ஆண்டாண்டு காலமாய் வரும்  இந்த தாலி கட்டும் பழக்கத்தையும் சொல்லி அசத்தினாள். ஓரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கும் மிகுந்த பெருமையாய் இருந்தது.
அவளைப் பாராட்டிக் கொண்டே, பெருமிதத்தோடே வீடு வந்து சேர்ந்தோம். உடைகளை மாற்றிய என் மனைவி "சே என்னா கனம்  கனக்குதுன்னு சொல்லி", தாலியைக் கழற்றி மேஜையில் போட்டாள். திடுக்குன்னு போச்சு. ஒரு வாட்டி நல்ல பார்த்துக்கிட்டேன் , அடுத்து கிறிஸ்மஸ் சமயத்தில் தான் வெளியே வரும் .
அட பரவாயில்லை விடுங்க, ஆடைமாற்றியவள் ஆளை மாற்றவில்லை, தாலியைக் கழற்றியவள் இன்னும் இந்தக் கூலியை மாற்றவில்லை. அதுவரைக்கும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம். என்ன மூணு தடவைன்னு கேட்குறீங்களா அதான் மூணு முடிச்சு போட்டிருக்கேனே. 

5 comments:

 1. //எப்படி சமாளிக்கப்போரேனோ?. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்.//

  ஓ! அடடா ... பாவம் தான்.

  //ஜூலை வந்தா 201 வருஷம் முடிஞ்சு போச்சு.//

  21-க்கு இப்படி சொன்னா 40-க்கு என்ன சொல்ல ...?

  ReplyDelete
  Replies
  1. தருமி ஐயாவுக்கு , word verification -ஐ ரிமூவ் பண்ணியாகிவிட்டது .

   தங்கள் ஆதரவுக்கு நன்றி .

   Delete
 2. சிம்பிள், 400 வருஷம்

  ReplyDelete
 3. வசந்தகாலம் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete