Thursday, May 2, 2013

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன் ஐயர்


பதினேழு வயது பிரபாகரன் என்ற துடிப்பு மிகுந்த இளைஞன் எப்படி விடுதலைப்போராட்டத்தில் இணைந்து, ஒரு மிகப் பெரிய இயக்கத்தின் தலைவனாக வளர்ந்தான் என்று அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE), தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகிய இயக்கங்கள், பிறந்த மற்றும்  வளர்ந்த கதை, ஆகியவை எந்தவித மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

எழுதிய ஆசிரியர் கணேசன் ஐயர், எப்படியெல்லாம் இயக்கத்திற்காக உழைத்தார், அவரோடு கூட இருந்தவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு எப்படியெல்லாம் தியாகங்கள் செய்தனர் என்று அறியும்போது உணர்ச்சி மேலிடுகிறது.

அதே சமயத்தில், எப்படி, அரசியல் விழிப்புணர்வோ, வழிகாட்டுதலோ இல்லாமல், வெறும் ராணுவக் கட்டமைப்பில் விடுதலையைப்பெற்றுவிடலாம் என தவறான வழியில் சென்ற போராளிகள் அழிந்து மாய்ந்த அவலத்தை நினைக்கும்போது வெறுமைதான் மிஞ்சுகிறது.

இதிலே தங்கள்  வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து  வந்த தோழர்களை ,அற்ப காரணங்களுக்காக , கொன்று குவித்தது இன்னொரு பெரும் தவறு .

மக்களோடு இணைந்து மக்கள் அமைப்பாக, மக்கள் மத்தியில், செல்வாக்கோடு, மக்கள் தரும் உதவியில் வளரும் இயக்கமே விடுதலையைப் பெற்றுத்தர இயலும் என்ற வரலாற்று உண்மையை முன்னரே கற்றுக்கொண்டாலும், தன் கையாலாகாத காரணத்தால் வெறுத்து ஒதுங்கிய பலரில் ஆசிரியரும் ஒருவர்.

அழிந்து போன கனவுகளோடும், உணர்வுகளோடும் இலட்சக்கணக்கான உயிர்களுமல்லவா அழிந்துவிட்டன. ஒரு முழு தலைமுறையல்லவா அழிந்துபோனது. யாரைக் குற்றம் சொல்லி என்ன செய்ய.

No comments:

Post a Comment