கவிஞர்
கண்ணதாசனின் "அரங்கமும் அந்தரங்கமும்"
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில்
என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில்
என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போகிறது என்ற நினைப்புதான் இருந்தது,
இப்புத்தகத்தை நான் வாங்கும்போது.
ஆனால் இது முற்றிலுமாக வேறு. கண்ணதாசன் இப்படி ஒன்றை
எழுதினாரா? என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் எழுதிய, "சேரமான் காதலி", அர்த்தமுள்ள
இந்து மதம் போன்ற பல புத்தகங்களை நான் படித்துள்ளேன்.
அவற்றில் பல என் நூலகத்திலும் இருக்கிறது.
நான் நினைத்ததுபோலவே இது அவரின் சொந்த அந்தரங்கங்களை
அல்ல அவர் நாளும் கூடிப்பேசி பழகிய பலரின் அந்தரங்கங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
1978ல் ராணி பத்திரிகையில் தொடராக வந்தபோது மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு போற்றிய ஒரு மாபெரும் கவிஞன், தன்னுடைய சொந்த
குடும்பவாழ்க்கையில் நொந்த மனிதராகவும், தன் இளம்பிராயத்து காதலை என்றும் மறக்க முடியாது
கோப்பையில் வெந்த மனிதராகவும் இருந்த ஒரு சில
சம்பவங்களைத் தவிர, மற்ற அனைத்தும் கூட இருந்தவர்களின் ஏடாகூடல்கள்.
அநேக இடங்களில் தான் கற்றுத்தேர்ந்த, அனுபவத்தில்
உணர்ந்த வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளை தத்துவங்களாக உதிர்க்கும் கவிஞர், அப்பொழுதே
புரையோடிப்போன சமூகத்தின் அவல நிலைகளுக்கான காரணங்களை அலசுகிறார்.
தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையில் (Public
Life) முகமூடி அணியாத நபர்கள் மிகச்சிலர்தான். அவர்களில் கண்ணதாசன் மிக முக்கியமானவர்.
தயக்கம், மூடநம்பிக்கை, போலி கெளரவம், பயம், முகஸ்துதி செய்தல் என்ற எதுவும் இல்லாமல்,
திறந்த புத்தகமாக இருப்பது சாதாரண மனிதர்களுக்கே
கடினம். அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர் அப்படி இருக்கிறார், இருந்தார் என்றால்
அது ஆச்சரியமூட்டும் உண்மை.
இந்தப்புத்தகத்தில் ,அன்றைய நாளில் இருந்து மறைந்த,
இப்பொழுது இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற சிலரின் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார்
கவிஞர்.
தன சுய நலத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும்
தாங்கள் மனைவிகளை பிறர் படுக்கைக்கு பலி கொடுத்தவர்கள், கணவன் வேறு ஒருவரைத் தேடியதால்,
தானும் சோரம் போன மனைவிகள், பம்பாயில் நடக்கும் கீ எக்ஸ்சேஞ்சில் சகஜமாக
பங்குகொள்ளும் நம் தமிழ்நாட்டு பிரமுகர்கள், என்று பலரின் முகமூடிகளை உரித்துக்காட்டுகிறார்.
ஒன்றைக் கண்டிப்பாக சொல்லவேண்டும், இவை எல்லாம் இருந்தாலும்,
இது ஒரு கிசுகிசு அல்லது ஒரு மஞ்சள் புத்தகத்தை படிப்பது போல் அல்லாமல்,
ஒரு தேர்ந்த மர்ம நாவலைப்படிக்கும் உணர்வைத்தான் எனக்குத்தந்தது .
ஒரு உயர்ந்த போலிஸ் அதிகாரி, சாதாரண வக்கீலாக இருந்து
அரசாங்க தலைமை வக்கீலாக உயர்ந்த ஒருவர், தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு பாராளுமன்ற
உறுப்பினர், ஒரு தேர்ந்த அரசியல்வாதி, ஒரு சமூக சேவகி, நடிகராக இருந்து தலைவராய்
உயர்ந்த ஒருவர் ஆகியோரைப் பற்றித்தான் இதில் அதிகம் இருக்கிறது.
ஆவி or ஜூவியில் இப்படி ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டு
பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தப்பட்டது ஞாபகம் வருகிறது.
இவர்களெல்லாம் யார் என்று அறிய உங்கள் மனம் துடிக்கிறதா?
புத்தகத்தை வாங்கிப்படித்துப் பாருங்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லையா.
என்னைக் கேளுங்கள்.
நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டிய புத்தகம் தான் போலும், அறியத் தந்தமைக்கு நன்றிகள் !
ReplyDeleteஇன்னும் வரும் , தொடர்ந்து படியுங்கள் ,பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்,நன்றி
Delete