டிசம்பர் 2, 2012
நேற்று போட்ட டீல்படி டேனியல், காலை எட்டு மணிக்கெல்லாம்
வந்துவிட்டான். நானும் அதற்கு முன்பே விரதம் முறிக்கும் காலை உணவை (அதாங்க பிரேக் ஃபாஸ்ட்)
முடித்து காத்திருந்தேன். தன்னுடைய கருப்பு கலர் ஃபோர்டில், ஒரு கருப்பு கலர் டி ஷர்ட்
போட்டுக்கொண்டு , இந்த கருப்பு கலர் ஆளை (
நாந்தேன் )கூப்பிட வந்திருந்தான் . “ஓலா அமிகோ” என்று கைகுலுக்கி முன்பகுதியில் அமர்ந்தேன்.
“இன்று ஞாயிற்றுக்கிழமை டிராஃபிக் அவ்வளவாக இருக்காது” என்றபடி பறந்தான். வழியெங்கும்
மேம்பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சான் ஏஞ்சல் செல்வதாக திட்டம். “எவ்வளவு
நேரமாகும்” என்று கேட்டபோது அரை மணி நேரம் ஆகுமென்றான். “அப்படியென்றால் ஒரு மணி நேரம்
தானே?” என்று சிரித்தேன். அவன் சிரிக்காமல்,“ இன்று அப்படியாகாது” என்றான். வெளியே
லேசான குளிர் இருந்தது.
அந்தச்சமயத்தில்
வலதுபுறம் வரிசையாக மோட்டல்கள் வந்தன. அவனிடம் விசாரிப்பதற்கு முன், வழியில் ஒரு பெண்,
காரின் முன்பகுதியில் ஏறி நின்றுகொண்டு கையாட்டிக் கொண்டிருந்தாள். கொடுமை என்னவென்றால்,
வெறும் ஜட்டி பிரா மட்டுமே அணிந்திருந்தாள். அதிர்ந்து போனேன்? “அழகான மாடல் போன்றிருக்கும்
இவள் ஏன் இங்கு இப்படி அலங்கோலமாக நிற்கிறாள்?” என்று கேட்டேன். டானியல் சொன்னான்,
“இதுதான் பிக்கப் ஏரியா, இங்கு பிக்கப் செய்துவிட்டு, பக்கத்திலிருந்த மோட்டலுக்கு
செல்வார்கள்”. இந்தப்பகுதி மோட்டல்களில் நாள் கணக்கில் மட்டுமல்லாது மணிக்கணக்கிலும்
அறைகள் கிடைக்குமாம்.
ஏய்
ஏய் உங்க கற்பனைக்குதிரைகளை நிறுத்துங்க. டேனியலிடம் நான் போட்ட டீல் இதில்லை. இன்று
காலையில் மெக்ஸி டூரில் நான் ஏதும் புக்பண்ணவில்லையாதலால் டேனியலும் இன்று காலை ஃப்ரீயாய்
இருந்ததால், சில பார்க்கத்தவறிய இடங்களை அரைநாளில் பார்த்துவிடலாம் என்று அவனிடம் பேரம்பேசி
தனியாக அமர்த்திக்கொண்டேன். அதுதாங்க டீல். வேறொன்னுமில்லை என்னை நம்புங்க.
இந்த
புராதன தொழில் ,இவ்வளவு ஓபனாக நடக்கிறதே, என்று நினைத்த வண்ணம் டேனியலிடம், "அது
சரி இதெல்லாம் எய்ட்ஸ் ஃப்ரீயா அல்லது ஃப்ரீ எய்ட்ஸா? என்றேன், டேனியல் பலமாக சிரித்து
(அப்பாடா சிரித்துவிட்டான்), “எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றான். “ஏஞ்சல் பகுதின்னு
சொல்லிட்டு , இப்படி சாத்தான் பகுதிக்கு கூட்டிட்டு வரியேன்னு” கேட்டேன்.நல்லவேளை சாமி
நான் லுத்தரன், மார்மன் அல்ல என்று நினைத்தபடி, " கண் போன போக்கிலே கால்
போனாத்தான தப்புன்னிட்டு ,இன்று ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சுக்கு காரை விடு, முதலில் , கருமம்
, இந்தப்பாவத்தைஎல்லாம் தொலைக்க வேண்டும் " என்று சொன்னேன். இன்று நிறைய சர்ச்சுக்குப்
போகிறோம் என்றான். சோதனைக்கென்றே ஒவ்வொரு தெரு முனையிலும் ஓரிருவர் நின்றிருந்தனர் . விரைவாக கடந்து ,சான் ஏஞ்சல் என்ற கலோனியல் பகுதியில்
இருந்த பிரமாண்டமான சர்ச்சுக்கு சென்றோம்.
இங்குள்ள சர்ச்சுகள் எல்லாமே பெரிது மிகப்பெரிது.
மிக அழகாக தங்க நிறத்தில் (தங்கம்தானோ?) அலங்கரிக்கப்பட்ட ஆல்டர் முன் முழங்காற்படியிட்டு
ஜெபித்து, மனசு லேசானபின் எழுந்து திரும்பினேன்.
சான் ஏஞ்சல்
மெக்சிகோ நகரின் அருகில் உள்ள சான் ஏஞ்சல் என்பது ஒரு காலத்தில் ஸ்பானிஷ் காலனி. ஹிஸ்பானிக்ஸ்
வருவதற்கு முன்னால் இது ஆஸ்டெக் மக்கள் வசித்த
டெனிட்லா
என்றழைக்கப்பட்ட ஒரு கிராமம். ஸ்பானிஷ் குடியேறிய பின்னர், 1617-ல் இங்கே எல் கார்மன்
என்ற கான்வென்ட் உருவானது . சுதந்திரத்திற்குப்
பின்னர் இந்த கான்வென்ட் ஒரு கோட்டையாக உருவெடுத்தது.
அமெரிக்கர்களோடு சண்டையும் இங்கேதான் நடந்தது.
இப்போது இது ஒரு மியூசியம்.
சான் ஏஞ்சல் பகுதி முழுவதும் பல பழைய வரலாற்றுச்
சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அனுமதி இலவசம். உள்ளே பல படங்கள்,
ஓவியங்கள், ராணுவ தளவாடங்கள், போர் வாள்கள், துப்பாக்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
போர்க்காலத்தில் பயன்படுத்திய பீரங்கிகள்,
பாதாள அறைகள், சுரங்கங்கள் ஆகியவை இருந்தன.
பாதாள அறைகளில் இருந்த மம்மிகளைப் பார்க்க, அன்று காவலிருந்த செக்யூரிட்டி மம்மிகள்
அனுமதிக்கவில்லை.
இந்தப் பகுதிகளில் எரிமலைகள் இருந்து வெடித்ததாம்.
அதிர்ச்சியுடன் எப்போது என்றபோது 2000 வருடங்களுக்கு முன் என்றனர். அப்பாடா தப்பித்தேன்
என்று நினைத்து, காருக்குத் திரும்பினோம்.
அங்கிருந்து
நேராக மெக்சிகோ சிட்டி டெளன் டவுனுக்கு சென்று பார்க் செய்துவிட்டு (எச்சரிக்கை :காரில்
ஏதும் வைக்கவேண்டாம்), சிறிது தூரம் தெருக்களை தாண்டி நடந்தவுடன் மாபெரும் சதுக்கம்
வந்தது. நடுவில் ஏராளமான வெற்று இடத்தின் நடுவில் மெக்சிகோவின் கொடி உயரமாய் பறக்க,
அதன் ஒரு பகுதியில் இருந்தது மெட்ரோபாலிடன் கதீட்ரல்.
இதுவே மெக்சிகோவின் பழமையானதும்
(கி.பி.1573) பெரிதானதும் ஆகும். இதுதான் மெக்சிகோவின் ரோமன் கத்தோலிக்க ஆர்ச் டயோசிஸின் தலைமையகமும்
ஆகும்.
ஸ்பெயினில் உள்ள காதிக் கதீட்ரல்களின் அடிப்படையில் ஸ்பானிஷ் ஆர்க்கிடெக்ட்
"கிளாடியோ டி ஆர்ஸ்னிகா" (Claudia de Arciniega) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
நான்கு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம்
பிரமாண்டமான தூண்களையும் சிலைகளையும் பல ஆல்டர்களையும் உடையது. இதில் உள்ள இரண்டு மணிக்கோபுரங்களில்
25 மணிகள் உள்ளன. பெல் டவருக்கு ஒரு வழிகாட்டி அழைத்துப்போக, ஸ்பைரல் படிக்கட்டுகளில்
ஏறி ஏறி ஏறி ஏறி தலை கிறுகிறுத்துப்போனது.
மெக்சிகோ டெளன் டவுனில் உள்ள பல கட்டிடங்களைப்
போலவே கத்தீட்ரலும் சிறிது சிறிதாக புதைந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு புதைகிறது என்பதைக்கண்டுபிடிக்க
பெல் டவரிலிருந்து ஒரு உருளையில் ஒரு உருக்குக் கம்பியை கட்டி வைத்திருந்தனர். அதன்
மறுபகுதியில் ஒரு துளை அமைக்கப்பட்டு கீழே
கீழே தரையில் புதைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு 5 செ.மீ புதைகிறதாம்.
கதீட்ரலில்
இரண்டு பெரிய ஆல்டர்களும் 16 சிறிய சேப்பல்களும் உள்ளன. ஒவ்வொரு சிறிய ஆல்டரும் ஒவ்வொரு
புனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை
என்பதால் உள்ளே நடந்த வழிபாட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அங்கிருந்த 18 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட
மிகப்பெரிய இரண்டு ஆர்கன்கள் சிறப்பு வாய்ந்தவை. கிரிப்ட் என்று சொல்லப்படுகிற, பாதாள
அறையில் பல முந்தைய ஆர்ச் பிஷப்புகள் புதைக்கப்பட்டிருந்தனர்.
1962
ஆம் ஆண்டு ஏற்பட்ட தீயில் பெரும் பகுதி அழிந்து பின்னர் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது
என்று சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சுவடும் தெரியவில்லை.
ஸ்பெயின் படையை வழிநடத்திவந்த ஹெர்னன் கார்டஸ், ஆஸ்டெக்
பேரரசை முற்றிலுமாக முறியடித்ததின் ஞாபகமாக, அவர்களுடைய போர்க்கடவுளின் ஆலயமான டெம்ப்லோ
மேயரை (Templo Mayor) அழித்து, அதே கற்களை
பயன்படுத்தி அதன்மேலேயே கட்டப்பட்டது தான் இந்த கதீட்ரல். அடப்பாவிகளா வெற்றிச்சின்னமாக
, அமைதிச் சின்னமான ஆலயத்தையா கட்டுவது ?நல்லவேளை ஆஸ்டெக் மக்களில் இன்று கர சேவகர்கள்
இல்லை. தப்பித்தது மெக்சிகோ சிட்டி.
டெம்ப்லோ மேயரின் சில பகுதிகளை அப்படியே விட்டு
வைத்துள்ளனர். அது கதீட்ரலுக்கு பின்புறத்தில் இருக்கிறது. அதன் பல நிலைகளையும் சென்று
பார்த்தேன்.
கதீட்ரலுக்கு
அருகில் உள்ள வெட்ட வெளியில், புராதன உடையணிந்த ஒரு ஆஸ்டெக் பழங்குடி ஆள் ஒருவர் ஒருவித
டிரம்மை தொடர்ந்து அடித்து ஒலியெழுப்ப,
இன்னொருவர் சாமியாடி, வரிசையாக வந்தவர்களுக்கு
தலையில் இறகுக்குவியலை வைத்து மந்திரித்தார். “போகிறாயா?” என்று டேனியல் கேட்க, “ஐயா
ஆள விடு, ஏற்கனேவே காலையில் இருந்து மந்திருச்சி விட்ட மாதிரித்தான் இருக்கேன்” என்று
சொல்லி நகர்ந்தேன்.
ஆலயத்தின் அருகில் பலர் பெட்டி போன்ற ஒன்றை
வைத்துக்கொண்டு, ஒரு விசையைச் சுற்ற அதில் இசைப்பாடல் வந்தது. இனிமையாக இருந்தது. அவர்கள்
கிட்டே போனால் இசையை நிறுத்திவிட்டு காசு கேட்டனர். காசு கொடுக்க இசை தொடர்ந்தது. நான்
சுற்றலாமா? என்று டேனியல் மூலம் கேட்டபோது அவன் மறுத்துவிட்டான். (அவனோ பிச்சைக்காரன்
,நானோ பரதேசி)
கதீட்ரலின்
அருகிலேயே மற்றொருபுறம் "நேஷனல் பாலஸ்" இருந்தது. அங்குதான் பிரசிடன்ட் ஆபிஸ்
மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அங்குள்ள ஒரு மியூசியத்தில் மிகவும் பிரசித்தி
பெற்ற மெக்சிகோ ஓவியரான Diego Rivera வின், ஓவியங்கள் நிறைய இருக்கின்றனவாம். அன்று அனுமதியில்லை.
அதனை
முடித்து, அங்கிருந்து சப்பல்டெபக் கோட்டைக்குச்
சென்றோம். (Chapultepec Castle). இங்குதான் பேரரசர் மேக்சிமிலியன் தங்கியிருந்தாராம்.
மேக்சிமிலியன் வெளியிட்ட சில நாணயங்கள் என்னிடத்தில் உண்டு. மேக்சிமிலியன் கதை மனதை
உருக்கும் ஒரு சோகக்கதை.
இன்னும்
வரும் …….
//ஒரு வருடத்திற்கு 5 செ.மீ புதைகிறதாம்..
ReplyDeleteடெசிமல் புள்ளி ஏதும் விட்டுப் போச்சா? ஒரு வருடத்திற்கு 5 செ.மீ / 2 இஞ்ச் என்றால் ரொம்ப அதிகமா தெரியுதேன்னு கேட்டேன்.
word verification பார்த்தே யாரும் பின்னூட்டமிடவில்லையோ? அது எடுங்க .. உங்க அட்மின் சொன்னா கேட்கலையா ...நீங்களே பழகிக்கிங்க!
ReplyDeleteI will try sir.
ReplyDelete