Friday, May 31, 2013

கொலையா ? தற்கொலையா ?

சுஜாதா எழுதிய "ஜோதி"


            கொஞ்சம் இடைவெளிக்குப்பின், புதுமை எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'ஜோதி' என்ற குறுநாவலை படித்தேன், முதல் முறையாக. இது எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை. ஏனெனில், என்னுடைய வீட்டு நூலகத்தில் அநேகமாக சுஜாதா எழுதிய எல்லாப் புத்தகங்களும் இருக்கின்றன. (டேய் சேகரூ, அத்தனை புத்தகங்களை வைத்து என்ன பூஜை செய்றியா, எல்லாருக்கும் படிக்கக்கொடு: மகேந்திரா, எனக்குக்கூட சும்மா வைத்திருப்பதற்கு வருத்தம்தான், யார் இப்பல்லாம் தமிழ் படிக்கிறாய்ங்க, அதுவும் இங்க நியூயார்க்கில்)
            'ஜோதி' தினமணிக்கதிரில் வெளிவந்தது. எந்த வருடம் என்று தெரியவில்லை இப்போது கிழக்கு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
எனக்குத் தெரிந்து சுஜாதாவின் எந்த புத்தகமும் போர் அடித்ததில்லை. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ, கேள்வி பதிலாகவோ எதுவாக இருந்தாலும், சுவாரஸ்யம் மட்டும்  குறைந்ததில்லை. என்னுடைய வாசிப்புப்பரிணாமத்தில், அம்புலி மாமா, வாண்டு மாமா, கோகுலம் பத்திரிகை (இப்போதும் வருகிறதா?) முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் ஆகியவற்றுக்குப்பிறகு வந்த சுஜாதா (70 களிலிருந்து) இன்றுவரை அதே இடத்தில் இருக்கிறார்.  அதன்பின், புதுமைப்பித்தன், சா.கந்தசாமி,அசோகமித்திரன்  லாசாரா ,இந்திரா  பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் , கி .ரா . சுந்தர ராமசாமி ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா என்று என் வாசிப்புத்தளங்கள் விரிந்தாலும்,  இன்றும் என்னை விடாதது சுஜாதாவும், காமிக்ஸ் புத்தகங்களும் மட்டும்தான்   .
இது சுமார்தான், சரக்கு தீர்ந்திருச்சு, சுஜாதாவுக்கு வயசாயிருச்சு என்று ஒருபய நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல முடியாத அளவுக்கு இறுதிவரை வாசிப்பு இன்பத்தைக் கொடுத்தவர், கொடுப்பவர் சுஜாதா.
அவருடைய திணிக்கப்படாத இயல்பான புதுமையும், நகைச்சுவை உணர்ச்சியும் எப்போதும் மேலோங்கி இருக்கும் கிண்டலும், அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக்கொடுத்தது. இருந்தாலும், தமிழ் கூறும் நல்லுலகம் அவரை இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும்.

அவரால் பாதிக்கப்படவில்லை என்று அவருக்குப்பின் வந்த எந்த எழுத்தாளரும் சொல்லமுடியாது. நிறையப்பேர் அதைப்போல் முயற்சி செய்து குப்பைகளாக எழுதிக்குமித்தனர். குறிப்பாக ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார் இவர்களைச் சொல்லலாம்.
சரி 'ஜோதிக்கு' வருவோம். மறுபடியும் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும், ஊகிக்க முடியாத முடிவுள்ள கதை இது. நான் கதைச்சுருக்கம் சொல்லப்போவதில்லை, ஏனென்றால் நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்பதற்காக.
முதல் அத்தியாயத்திலேயே ஒரு வாசிக்கத்தூண்டும் ஆர்வத்தைத் தூண்டியிருப்பார். "ஆம்புலன்ஸ் வந்தபோது அந்தப்பெண் இறந்து போயிருந்தாள்". இந்த ஒரு வரிதான் முதலாவது அத்தியாயம். கேள்விகளை எழுப்பவைக்கும் இந்த முதல் அத்தியாயம் மட்டுமின்றி, "என்னதான் நடந்தது ?" என்று இறுதியில் கேள்வியினை எழுப்பி, முடிவினை நமது ஊகத்திற்கே விட்டுவிட்டிருக்கிறார். இது அவருடைய தலையாய உத்தி.
இன்னொரு ஆச்சரியப்படும் சிறப்பம்சம் என்னவென்றால், சுஜாதாவின் எந்தப்புத்தகத்திலும், எந்த ஒரு இடத்திலும் அநாவசிய வசனிப்போ, வார்த்தைகளோ இருக்காது. ஒரு வார்த்தை கூட தேவைக்கு அதிகமாக இருக்காது. சிறுகதையை இழுத்து நாவலாக்குவதோ, தொடர்கதைகளில் அநாவசிய ஆச்சரியங்களை அள்ளித்தெளிப்பதோ அவருடைய படைப்புகளில் எப்பொழுதும் இருந்ததில்லை.
                அதோடு ஒரு நாவலின் மூலமாகவே, திணிக்கப்படாமல், மேதாவித்தனம் காட்டும் முயற்சியில்லாமல் பல உலக புத்தகங்களையோ, எழுத்தாளர்களையோ, விஷயங்களையோ அள்ளித்தெளித்திருப்பார்.  அவருடைய தனிப்பட்ட வாசிப்பு, பல தளங்களின் அறிவு ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவருடைய ஞாபகசக்தியும்  அபாரமானது. “ஜோதி”யிலும் இடையில் வெகு இயல்பாக ,நீட்ஷே, டெனிஸ் ராபின்சன், Sex and the single girl, கலீல் கிப்ரான் என்று தெளித்திருப்பார் .
கல்யாணமான புதிதில், சில சமயம் மாலைவேளையில் சுஜாதாவின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து கீழே வைக்கமுடியாமல் தொடர்ந்து நேரம் போவது தெரியாமல் படித்து 2 மணிக்கும் 3 மணிக்கும் தூங்கப்போக, என் மனைவிக்கு “சுஜாதா” மேல் ஆத்திரமும் பொறாமையும் வந்து என்னை பிலுபிலுவென்று பிடித்துவிட்டு, கோபித்துக்கொண்டு என் மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.
சுஜாதாங்கிறது பொம்பளையில்லை, ஆம்பளை எழுத்தாளர்னு அவளுக்கு புரிய வைத்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும்னு ஆயிருச்சு. ஆனால் இப்போது அவளும் சுஜாதாவின் ரசிகை.
சுஜாதா, நீங்க எங்கயும் போகலை, ஆத்மார்த்தமா உங்க புத்தகங்கள் மூலமா எப்போதும் எங்களோடுதான் இருக்கீங்க.



1 comment:

  1. i am a sujatha fan and am extremely happy to read your article. You have reflected most of my opinion about Sujatha, a thanks for the tribute. (pardon my English)

    ReplyDelete