சேமியா ஐஸுக்குப் பதிலாக கல்கண்டு வாங்கின பரதேசி !!!!
வேர்களைத்தேடி பகுதி: 9
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_5.html
எல்லோரும்
கண்களை மூடியிருக்க, நான் பக்கத்தில் உள்ள
பையனின் சிலேட்டில் என் இரு கால்களையும் வைத்து ஒரு குதி குதிக்க, சிலேட் உள்ளே சுக்கலானது. இப்படி தினமும் ஓரிறு சிலேட்கள்
உடைய,ஒரு நாள் கண்களை மூடாமல் என் அம்மா என்னைக் கண்டுபிடித்து என் காதைப்
பிடித்து தலையில் கொட்டு வைக்க எனக்கு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும்
தீப்பறந்தது. கண்டிக்கவேண்டிய இடங்களில் கண்டித்தும் தண்டிக்க வேண்டிய இடங்களில்
தண்டித்தும் என் அம்மா எனக்கும் சிறந்த ஆசிரியராகவும்
இருந்தார்கள் .எந்த இடத்திலும் தன் மகன் என்ற சலுகையை கொடுக்கவும் இல்லை .என் எதிர்பார்ப்புகளை
சட்டை செய்யவும் இல்லை .பள்ளியென்றால் தான் ஆசிரியர் மட்டுமே என்பதை நானும் புரிந்துகொள்ளும்படி
செய்தார்கள் .செல்லத்திற்கும் அனுமதியில்லை கள்ளத்திற்கும் ஆதரவில்லை .இப்படித்தான்
என் பள்ளிப்படிப்பு ஆரம்பித்தது.
சுசிலா டீச்சர்
வகுப்பில் சேர்வதற்கு எப்போதும் கூட்டம் அள்ளும்.அந்தக்காலத்திலேயே என் அம்மா வகுப்பில்
அறுபது பேருக்கும் மேலாக ஒரே கூட்டமாய் இருந்தாலும்
, ஒவ்வொரு பிள்ளையையும் தன் சொந்தப் பிள்ளை
போலவே கவனித்து சொல்லிக்கொடுப்பார்கள்.தினமும் என் அம்மா வகுப்பு பிள்ளைகள் பள்ளி ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்
.அதன்பின் என் அம்மா கிளம்பும்போது , "டீச்சர் வர்றாங்களாம்" என்று சத்தம்
போட்டுக்கொண்டு முன்னாலும் பின்னாலும் நடக்க தினமும் எங்கம்மா பள்ளி செல்வது ஒரு ஊர்வலம்
போலவே நடக்கும் .ஏதோ காரணங்களுக்காக விடுப்பு எடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல்
எங்கள் வீட்டிலேயே குவிந்து விடுவார்கள்
.அதன்பின் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குள்
போதும் போதுமென ஆகிவிடும் .அது தவிர
ஒன்றாம் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு போக விரும்பாமல் அங்கேயே இருக்க அடம்பிடித்து
அழுத பிள்ளைகளையும் நான் பார்த்திருக்கிறேன் . என் அம்மா தன் உயிரைக்கொடுத்து சத்தமாக
பாடம் நடத்துவது இன்னும் என் காதில் ஒலிக்கிறது .இங்கே நியூயார்க்கில் சில காலம் என்
தம்பி வீட்டில் இருந்து இப்போது சென்னையில் இருக்கிறார்கள் .மீண்டும் அவர்களை இங்கே
வரவழைக்க முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்
இரண்டாவது வகுப்பு முத்து டீச்சர் மூன்றாவது வகுப்பு குட்டை ஜேம்ஸ்
வாத்தியார், ஐந்தாவது ரஹீம் வாத்தியார், ஆறாவது ஜொஹரா டீச்சர், ஏழாவது புலவர் தேவகுரு
வாத்தியார், எட்டாவது என் அப்பா தியாகு வாத்தியார் இப்படி
என் எட்டாவது வகுப்பு வரை இந்தப்பள்ளிதான்.
குண்டு,
கிட்டிப்புல், டயர் வண்டி, பனம்பழம் வண்டி, தீப்பட்டிப் படம் சேகரித்தல்,
புளிய விதை சேகரித்தல், பல்லாங்குழி, சொட்டாங்கல், பம்பரம், கரையுமா கரையாதா, கி கிளித்தாண்டு, நொண்டி, ஒழிந்து விளையாடுதல், பொன்வண்டு,
பட்டுப்பூச்சி, கரும்புப் பந்தயம், என நான் விளையாடாத
விளையாட்டுக்களே இல்லை. இதுல எல்லா விளையாட்டிலேயும் அடியேன் கில்லாடிதான். நான்
ஒண்ணாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி மனோகரும், ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது என் தம்பி பாஸ்கரும் பிறந்த பின் என்மேல் உள்ள
அழுத்தம் இன்னும் கூடியது. உன் தம்பிகள்
உன்னைப் பார்த்து கெட்டுப் போகக்கூடாதுன்னு சொல்லி சொல்லி நான் வாங்கிய அடிகள் கணக்கிலில்லாதது.
எட்டாவது
படிக்கும்போது என் அப்பாவே ஆசிரியராய் இருந்ததால் இன்னும் அழுத்தம் அதிகம்.
நான்
ஆறாவது படிக்கும்போது என் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்து,
என் அப்பா என்னை நூலகத்திற்கு அழைத்துச் சென்று என் வயதுக்கு
மெம்பர் ஆக முடியாதலால் அவர் ஆகி இரண்டு கார்டுகளைப் பெற்று எனக்குக் கொடுத்தார்
அப்போது நூலகராக இருந்த மணி புன்னகையுடன் என்னை வரவேற்று புத்தகங்களை அறிமுகம்
செய்தார். வாண்டு மாமாவில் துவங்கி, அம்புலி மாமாவில்
வளர்ந்து பின்னர் தமிழ்வாணன், சுஜாதா என்று பரிணாம
வளர்ச்சியடைந்தது என் வாசிப்புப்பழக்கம். அதன்பின் கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன்,
ஜெயகாந்தன், லா.சாராமாமிர்தம், சா.கந்தசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு
நிவேதிதா, ஜெயமோகன் என்று என் வாசிப்புத்தளம் விரிவடைந்ததற்கும் இங்குதான் விதை
விழுந்தது. அங்கு கோகுலம் மற்றும் அம்புலிமாமா படிப்பதற்காக மணிக்கணக்காக
காத்துக்கிடந்ததும் ஞாபகம் இருக்கிறது. என்னைப்போல் பலரும் அதற்கு காத்திருந்ததால்
நூலகரிடம் சொல்லிவிட்டுத்தான் உட்காருவோம். அதன்பின்பு எங்கப்பாவிடம் அப்போது
படித்த முத்து ரெங்கன் அறிமுகமானார். அவர் முத்து ரெங்கன் பேங்கர்ஸ் அடகுக்கடை
ஓனரின் மகன். “கோகுலம் நாங்கள் வாங்குகிறோம். நான் படித்தவுடன் நீவாங்கிப்
படிக்கலாம்”, என்று சொன்னதால், கோகுலம் வெளியாகும் அன்றே முத்துரெங்கன்
வீட்டுக்குப்போய் விடுவேன். பல சமயங்களில் தான் படிக்காவிட்டாலும் “பரவாயில்லை
சேகர் நீ படித்துவிட்டுக்கொடு” என்று கொடுத்ததை மறக்கவே முடியாது. தன் முயற்சியில்
சற்றும் மனதளராத விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், நீதிக்கதைகள், அரச கதைகள் என்று
அம்புலிமாமாவின் அழகிய கலர்ப் படங்களுடன் இருக்கும் கதைகள், கோகுலத்தில் பலே
பாலுவின் சேட்டைகள் நிரம்பிய படக்கதைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக பங்களாதேஷ்
உருவான சமயத்தில் வந்த கதைகள் திரில்லர் ரகம். அதன் பின் எங்கெங்கு தேடியும்
பலேபாலு கதைகள் கிடைக்கவேயில்லை. ஆங்கிலத்தில் டின்டினுக்கு இணையானவை வாண்டுமாமா
எழுதிய பலே பாலு கதைகள் என்று சொல்லுவேன்.
பின்னர்
கல்கண்டு அறிமுகமாகியது. அதில் வரும் ஏராளமான துணுக்குகள் மற்றும் சங்கர்லால்
கதைகளுக்காக அதனை வாங்கினேன்.
அந்தக்
காலக்கட்டத்தில்தான் முத்து காமிக்ஸ் எனக்கு அறிமுகமாகியது. இரும்புக்கை மாயாவி,
ஜானி நீரோ ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், ரிப் கிர்பி, வேதாளர்.
மாடஸ்டி பிளைசி என்று பல ஆதர்ஷ நாயக நாயகியர் அழுத்தமாக தடம் பதித்தனர்.
தேன்மிட்டாய் |
இந்து
நடுநிலைப்பள்ளியில் படிக்கும் வரை நடுவில் இடைவேளை வரும்போது என் அப்பா
வகுப்புக்கு வெளியே வந்து நின்றால், ஒரு இரும்பு ஐந்து பைசாவை வைப்பார். அதை
எடுத்துக் கொண்டு வெளியே வந்து ஒரு சேமியா ஐஸ் அல்லது ஜவ்வு மிட்டாய் (ஒன்று ஒரு
காசுதான்) ஒன்று, தேன்மிட்டாய் 2 என்று வாங்கிச் சாப்பிட்டு முழுவதையும்
செலவழித்துவிட்டுத்தான் உள்ளே வருவேன். கோட்டையன் கோவிலில் போய் தண்ணீர்
குடிப்போம். அது இப்போது தூர்ந்து கிடக்கிறது.
இதற்கிடையே
நான் ஆறாவது வந்தபோது என் தினசரி பாக்கெட் மணி இரும்பு 5 பைசாவிலிருந்து இரும்பு 10
பைசாவாக உயர்ந்தது. எனவே சேமியா ஐஸ் அல்லது ஜவ்வுமிட்டாய்கள் என்பது போய், இரண்டும்
வாங்கிச் சாப்பிட முடிந்தது. இப்போது கல்கண்டு வேற வாங்க விரும்பியதால் சேமிக்க
ஆரம்பித்தேன். அது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியாது. சேமியா ஐஸ்சை
தியாகம் செய்து கல்கண்டு வாங்குவேன். 35
காசுகள் தான் கல்கண்டின் விலை அப்போது. அப்புறம் நான் எட்டாவது படிக்கும்போது விலை
65 காசுகள் ஆகியதால்
எங்கப்பாவிடம் தயங்கி தயங்கி ஒரு நாள் கேட்டேன் தினமும் சேமிப்பது சிரமம் என்பதால்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தினமும் கொடுக்கும் காசுகளை மொத்தமாக ஒரே நாளில்
கொடுத்துவிடுங்கள் என்றேன். எங்கப்பாவும் சம்மதம் தெரிவித்ததோடு 50 பைசாவுக்குப்
பதிலாக 1 ரூபாயாக கொடுத்தார். அப்போதிருந்த என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
தொடர்ந்து
கல்கண்டு வாங்கி, அதில் வரும் தொடர் கதைகளை பிரித்தெடுத்து ஒன்று சேர்த்து தைத்து
வைப்பேன். இந்தக் கதைகளை பத்திரப்படுத்து வதற்காக பைண்டிங் செய்து பழகினேன்.
மாதமொரு
முறை வரும் முத்து காமிக்ஸ் வாங்குவதற்கும் அதிலிருந்தே சேமிப்பேன். மெயின்
ரோட்டில் இருக்கும் மாணிக்கம்பிள்ளை புக் ஸ்டாலில் முதலிலேயே சொல்லி வைத்தாலும்
சிலசமயம் யாராவது என்னை முந்தி விடுவார்கள். பிறகு அவரிடம் சண்டைபோடுவேன்.
பலசமயங்களில் கடைவாசலில் முன்னமே உட்கார்ந்து, பார்சல் வந்தவுடன் சுடச்சுட முதல்
காப்பியை வாங்கிக் கொண்டு ஓடுவேன். அப்போதுதான் புத்தகங்களை சேர்ப்பதற்கும் புதிய
முத்து காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதற்கும் ஒரு ஐடியா தோன்றியது.
- தொடரும்.
இனிய நினைவுகள். குச்சி ஐஸ் நினைவுகள் என்னையும் நினைக்கத் தூண்டின! முது காமிக்ஸ் நிறைய வைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன்னாள் யாருக்கோ கொடுத்து விட்டார்கள். வருத்தமாக இருந்தது! பழைய நினைவுகளுக்காக ஒரு புது மு.கா நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன்!
ReplyDeleteஇரு முறை மதுரை வந்திருக்கும்போது சிவகாசியில் உள்ள முத்து காமிக்ஸ் நிறுவனத்திற்கு சென்று விஜயனிடம் அளவளாவிவிட்டு புத்தகங்களை வாங்கி வந்தேன் ,என்னிடம் சுமார் 200 காமிக்ஸ்கள் உள்ளன ,நன்றி ஸ்ரீராம் .
Deleteஎனது சிறுவயது நினைவுகள் ஞாபகம் வந்தது...
ReplyDeleteநினைத்தாலே இனிக்கும் நினைவுகள் திண்டுக்கல்லார் அவர்களே
Deleteஎப்படி தான் இவ்வளவு விஷயத்தையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களோ? You are a human Hard Disk.
ReplyDeleteஇது ஒரு அசாதாரணம் இல்லை ஆலென் எல்லோருக்கும் நினைவிருக்கும் நிகழ்வுகள்தான் , நன்றி
Deleteஒவ்வொரு பதிவும் அருமை. பள்ளி நாட்களில் குச்சி ஐஸ், நாவல் பழம், நெல்லிக்காய், எல்லாம் எல்லோர் நினைவிலும் நிற்கும் தின்பண்டங்கள்.
ReplyDeleteநன்றி முத்துச்சாமி .
Delete