இலங்கையில்
பரதேசி -21
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2017/08/blog-post_21.html
கரும்புலிகள் |
1998 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி அதிகாலை, விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூன்று கரும்புலிகள்
ஒரு பெரிய டிரக்கை ராஜ வீதி வழியாக ஓட்டிக் கொண்டு வந்தனர். அந்த மூவரும்
கரும்புலிகளின் உட்பிரிவான தற்கொலைப்படையினர். அந்த டிரக்கில் 300
முதல் 400 கிலோ அளவுள்ள
வெடிமருந்துகள் நிரம்பியிருந்தன. ராஜவீதியைக் கடந்து வந்த டிரக் காலை சரியாக 6:10 மணிக்கு வேகமாக வந்து தலதா மாளிகை யின் நுழைவாயிலை
உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
பொதுவாக
இந்தக் கோவில்களுக்கும் விடுமுறை நாட்களில் தான் கூட்டம் அதிகமாயிருக்கும். அன்றைய
நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமைதான், ஆனால் தாக்குதல் நடந்தது காலை 6 மணிக்கு என்பதால் இந்த அளவோடு ஆட்சேதம் அதிகமில்லை.
இல்லையென்றால் அங்கு நிச்சயமாக பெருத்த உயிர்சேதம் நடந்திருக்கும்.
விடுதலைப்புலிகள் பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்ப்பதற்குக்கூட அதிகாலையில்
தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
உள்ளே
நுழைந்த டிரக் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மொத்தம் 16 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்து போனார்கள். அதிலே
தற்கொலைப்படையைச் சேர்ந்த 3 கரும்புலிகளும் அடங்குவர். இதிலே ஒரு 2வயது குழந்தையும் இறந்து போனதாகப் படிக்கும்போது மனது கனத்தது.
அந்தப்பச்சிளம் குழந்தை முளை விடும்போதே அழிந்து போனது ஏன்?
அது என்ன பாவம் செய்தது?.
கிட்டத்தட்ட
25 பேருக்கு மேல் படுகாயம் அடைந்தார்கள். அதிலே நான்கு
பெண்கள்,
ஒரு புத்தத் துறவி, ஒரு போலீஸ்காரர் ஆகியோரும் அடங்குவர்.
இன்னொரு துயரம் என்னவென்றால் P.W.விதாநகே என்னும் ஜியாலஜி பேராசிரியர் இந்த தாக்குதலைக்
கேட்டவுடனே ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போயிருக்கிறார்.
இந்த சக்தி
வாய்ந்த தாக்குதலின் தாக்கம் 5 கி.மீ சுற்றளவுக்கு இருந்ததாம். பல கட்டிடங்களின் கண்ணாடி
சுவர்கள்,
ஜன்னல்கள் உடைந்து சிதறியதால் அந்த ஏரியாவே அதிர்ந்து
போனதாம். நாநூறு கிலோ வெடிமருந்து என்றால் சும்மாவா?
இந்தத்
தாக்குதல் புனித பற்கோவிலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மேற்கூரையும்
முகப்பும் சேதமடைந்தன. ஆனால் கோவிலின் உள்வளாகமோ புனிதப்பல் இருக்கும் பீட அறையோ
எந்தப் பாதிப்புமடையவில்லை. 'மஹாவஹல் கடா' என்றழைக்கப்பட்ட பெரிய நுழைவாயில் முற்றிலும் தகர்ந்து
போனது. பத்திரிப்புவா, கண்டி அரசர்களின் அரண்மனை, மூன் ஸ்டோன் என்ற ரத்தினக்கல்,
ராணிகளின் குளியலிடம், ஆலய நூலகம், சில முக்கிய கற்சிலைகள் ஆகியவை சேதமடைந்தன. பக்கத்தில்
இருந்த குயின்ஸ் ஹோட்டல் மற்றும் புனிதபவுல் ஆலயமும் பாதிக்கப்பட்டன. மூன்ஸ்டேன் மட்டும் 43 சில்லுகளாக உடைந்து போனதாம்.
The Infant who died. |
தாக்குதல்
நடந்ததுமே அது இந்துக்களுக்கு எதிரான கலகமாக உருவெடுத்தது. புத்த மதத்தைச் சேர்ந்த
ஏராளமான மக்கள் கோவிலைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். திடீரென்று அதில்
சிலர் கிளம்பி பக்கத்தில் இருந்த "ஹிண்டு கல்ச்சுரல் சென்ட்டரில்" இந்த
மூன்று வாகனங்களுக்கு தீ வைத்தனர். தமிழ் மக்களும் தாக்கப்பட்டனர். போலீஸ்
கண்ணீர்ப் புகைக்குண்டுகளைச் சுட்டு கூட்டத்தை விலக்கினார். ஆனால் நல்லவேளையாக அந்தக்
கலவரம் பெரிதாகப் பரவவில்லை. அதற்கு முழு முதற்காரணம் அப்போது அதிபராக இருந்த
திருமதி. சந்திரிகா குமாரதுங்கே. அவர்கள் கொடுத்த வேண்டுகோளை அடுத்து மக்கள் அமைதி
காத்தனர். கலவரங்கள் பரவி யாழ்ப்பாணம் தேர்தலை
தடுத்து நிறுத்துவதுதான் விடுதைப்புலிகளின் நோக்கம் என்பதாகச்சொல்கிறார்கள் .
தாக்குதல்
நடந்த அடுத்த நாளே விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக
அறிவிக்கப்பட்டது. அவர்களை ஜனநாயக வழிக்குள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்ததால்
அதுவரை தடைசெய்யவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. இந்தத் தடையோடு
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை அல்லது சமசரத்துக்கும் முடிவு கட்டப்பட்டது.
Chandrika Kumaratunga |
பாதுகாப்புக்குறைபாடுகளுக்குப்
பொறுப்பேற்று, இலங்கையின் ராணுவ மந்திரி அனுருத்தா ரத்வாத்தே தன் பதவியை ராஜினாமா
செய்தார்.
இந்தக் கலவரங்களின்
மத்தியிலும் யாழ்ப்பாண தேர்தல் திட்டமிட்டபடி நடந்தது. மக்கள் பெருந்திரளாய் வந்து
வாக்களித்தனர்.
இலங்கையின்
சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் கொழும்புவிற்கு மாற்றப்பட்டது. இளவரசர் சார்லஸ்
முதற்கொண்டு எல்லா வெளிநாட்டு விருந்தினரும் வந்திருந்தனர். அதே மாதம் 28ஆம் தேதிதான் ராஜீவ் கொலையை ஒட்டி மெட்ராஸ் ஹைகோர்ட்
பிரபாகரன் மற்றும் 25 பேருக்கு பிடி வாரண்ட் கொடுத்தது.
அக்டோபர் 2003ல் கண்டி உயர் நீதிமன்ற திட்டத்தில் மூன்று புலிகளுக்கு
மரணதண்டனையும், இன்னும் இருவருக்கு 680 வருட கடுங்காவல் தண்டனையும்,
மற்றும் ஒருவருக்கு 490 வருட தண்டணையும் கொடுத்தது. வெளியே
விடக்கூடாது என்று நினைத்து விட்டனர்
போலும்.
பல
புத்தமதத் தலைவர்கள், இந்து மதத் தலைவர்கள், கொழும்புவின் கிறித்தவ ஆர்ச் பிஷப்,
இலங்கை இஸ்லாமிக் செண்ட்டர், உலக அமைப்புகளான, ஆம்னெஸ்டி இன்ட்டர்நெஷனல், யுனெஸ்கோ மற்றும் ஐநா சபைகளும் தங்கள் கண்டணத்தைத் தெரிவித்தனர்.
இடிபாடுகளை
அகற்றிவிட்டு பிப்ரவரி 10ஆம் தேதி கோவில் மீண்டும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது.
ஆனால் கோவில் முற்றிலுமாக புனரமைக்கப்பட ஒன்றரை வருடங்கள் ஆனதாம். அதிபர்
சந்திரிகா குமாரதுங்கே அவர்களே இந்த
புனரமைப்புக்குழுவின் தலைவராக செயல்பட்டு தன நேரடிப் பார்வையில் சீக்கிரமாக செய்து
முடித்தனர். அரசு கொடுத்த 20 லட்சம் இலங்கை ரூபாய்கள் தவிர பொதுமக்கள் 1 கோடிக்கு மேல் வசூல் செய்து கொடுத்தார்களாம்.
ஏற்கனவே
இருந்த சிற்பங்கள், மூன்ஸ்டோன் முதற்கொண்டு எல்லாவற்றையும் திரும்பவும்
செய்துவிட்டார்கள். நான் செல்லும் போது தாக்கப்பட்ட எந்த அடையாளமும் கொஞ்சம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில்
சில நன்மைகளும் நடந்தன அவை என்னவென்று அடுத்த வாரத்தில் பார்ப்போம்.
-
தொடரும்.
No comments:
Post a Comment