Thursday, August 3, 2017

பாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை ! பகுதி 2

Image result for super singers

                         
FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை பகுதி 2

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/07/1.html

      இந்த திரைப்பட இசையால பிழைக்கிறவங்க ரொம்ப அதிகம்.பலபேருக்கு கச்சேரிகள் மூலந்தான் வருமானம். அதோட தமிழர்கள் உலகம் பூரா பரவி இருக்கிறதனால , இவங்க ரொம்ப சுலபமா உலகம் முழுதும் சுத்தி வராங்க. சமீபத்திய ஒரு பேட்டியில உஷா உதுப் சொல்லியிருந்தாங்க, அவங்களுக்கு ஒரு பாட்டு புதிசாக்கிடைச்சாப் போதும் குறைஞ்சபட்சம் முப்பது கச்சேரி புக் ஆகுமாம். அது மட்டுமல்ல. இதுல இசையமைப்பாளர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள், பாடகர்களைத் தவிர்த்து, அதே மாதிரி குரலில்  பாடும் கலைஞர்கள் அவர்கள் இசைக் குழுவோடு நாடெங்கிலும் ஏன் உலகமெங்கிலும் கச்சேரிகளை நடத்தியும் பிழைக்கிறாங்க. இப்படி திரைப்பட இசை பலபேருக்கு வாழ்க்கையைக் கொடுக்குது.   அதோட பாட்டுப்போட்டி நடக்காத டிவிசேனல்களும் இல்லை. இது அந்தந்த சேனல்களை பாப்புலர் ஆக்கிறது. விஜய் டிவியின் “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியின் வெற்றி பிரமிக்கத் தக்கது. அந்தந்த பாடகர்களை நாம் நம்ம வீட்டுப் பிள்ளைகள் போலக் கருதி எல்லா நாடுகளிலும் வரவேற்று மகிழ்கிறோம். அவங்க திறமையும் ஆச்சரியமளிக்குது.
Image result for kannadasan
Kannadasan
             இசையமைப்பாளர், பாடகர்கள் வரிசையில் அடுத்தபடியாக வருவது பாடலாசிரியர்கள், இவர்கள் எல்லோரையும் புலவர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்ல முடியாது. நல்ல கற்பனை வளமிக்கவர்கள் இதுல ஈஸியா பாடலை எழுதமுடியும். சிலர் சந்தத்துக்கும் எழுதுவாங்க, பலர் சொந்தத்துக்கும் எழுதுவாங்க. இப்ப இதுலயும் பெரிய போட்டி இருக்கிறதால, கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றவங்க இனிமேல் இத்துறையில் வரமுடியாது. ஏன்னா ஆயிரம் பாட்டை பத்து பேரு பகிருவதற்கும் நூறு பேர் பகிறுவதற்கும் வித்தியாசம் இருக்கில்ல,  அதான் காரணம்.
Image result for Actor MGR


                      திரைப்படப் பாடல்களைப்பற்றி சும்மா சொல்லக் கூடாதுங்க. திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற கருணாநிதி, எம்ஜியார், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்றவங்க நாட்டையே ஆளும் சக்தியாக மாறிப்போனாங்க. குறிப்பா எம்ஜியாரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது, அவரது நல்லா  திட்டமிடப்பட்ட கொள்கைப் பாடல்கள் தான்.
          பாமர மக்களுக்கு, எல்லாவிதத்திலும் சிறந்த, ஒழுக்கமுள்ள மாவீரன் அப்படிங்கற  இமேஜ் அதிலும் “ஏழைகளின் தலைவன்” ங்கற சூப்பர் ஹீரோ எல்லாச் சமயத்திலும் தேவைப்பட்டுச்சு. அந்த இடத்தை எம்ஜியார் பிடிக்க அவரது பாடல்கள்தான் உதவிச்சு. அதே போல இப்ப இருக்கிற ரஜினிகாந்துக்கும் அதுவே உதவுச்சு. இந்த சூப்பர் ஹீரோ இமேஜை மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதால் தான் சிவாஜி, கமல் போன்ற சிறந்த நடிகர்கள் அந்த இடத்தைப் பிடிக்க முடியலை.
Image result for actor rajinikanth

                             திரைப்படப்பாடல்கள் நம்ம தமிழர் வாழ்வில் ஒன்றியிருக்கிறது எப்படின்னா, பாடல்கள் எப்போதும் நம்மை  உற்சாகப்படுத்துது, களிப்பூட்டுது. சில நிமிடங்கள் நம்முடைய சொந்த, நொந்த, வெந்த வாழ்க்கையிலிருந்து  மாறுதலைக் கொடுக்குது. நம்ம எல்லா உணர்ச்சிகளுக்கும் வடிகாலா  இருக்கு. “நாஸ்டால்ஜிக் மொமென்ட்” என்று சொல்வார்களே அதேதான்.
          எந்தக் காலகட்டத்தில் நாம வளர்ந்தமோ, அந்தக்கால கட்டத்தின் இசை நம்ம மனசில பச்சக்கென ஆசனம் போட்டு அமர்ந்துக்கிட்டு நகர்வதேயில்லை. அதனாலதான் 70 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு எம்.எஸ்.வியும், 40 வயசுக்கு மேற்பட்டவங்களுக்கு இளையராஜாவும் அதற்கு அடுத்தபடியாக இருப்பவங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானும் இசையின் ஆதர்ஷ நாயகர்களாக தெரிகிறார்கள். எல்லாப் பாடல்களையும் கேட்டு மகிழ்பவர்கள் என்னைப் போன்ற ஒருசிலர் தான்.
Image result for ms viswanathan
MSV
          ஆனால் இந்த மூவருமே அந்தந்த காலகட்டத்தில் கோலோச்சியவர்கள் என்பதில் சந்தேகமில்லை . எம்.எஸ்.வி போட்ட "நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா", "மலர்ந்தும் மலராத பாதிமலர் போல", "அன்புள்ள மான்விழியே", “உன்னை ஒன்று கேட்பேன்”, "தூக்கமும் கண்களை தழுவட்டுமே" என்ற பல பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.
          அது போல இளையராஜாவின் இசையில், "பனிவிழும் மலர்வனம்", "இளையநிலா பொழிகிறதே", "பொத்திவச்ச மல்லிகை மொட்டு", "சின்னத்தாயவள்", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", "கண்ணே கலைமானே",  "என் இனிய பொன் நிலாவே" ,     "பனிவிழும் இரவு" என்று நூற்றுக் கணக்கில் சொல்லிக் கொண்டு போகலாம்.
        இதுல சில பாட்டுகளைக் கேட்கும் போது சில பேர்களும், சில நிகழ்வுகளும், சில இடங்களும் ஞாபகம் வந்து அப்படியே ஸ்தம்பிக்க வச்சிரும். சில சமயங்களில் அந்த நபர்களை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கமும், நல்லவேளை தப்பிச்சோம்னு சில சமயங்களிலும் தோனும். மற்ற இசையமைப்பாளர்களுக்கு  திறமைகள் இருந்தும் இவர்களுடைய பெரிய ஆளுமையில் அமிழ்ந்து போனவங்க என்று சொல்லலாம். அதோட மற்றவர்களை டிரென்ட் செட்டர்கள் என்று சொல்லமுடியாது.
          இப்போது புதிதாக ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார். அவருடைய இசை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் பெயர் சந்தோஷ் நாராயணன் .அவர் டிரெண்ட்  செட்டரா இல்லையா என்பதை சில நாட்கள் கழித்துத்தான் சொல்லமுடியும்.
          தியேட்டரை விட்டு ஓடவைத்த பாடல்களும் இருக்கின்றன. தியேட்டரிலும் வெளியிலும் ஆடவைத்த பாடல்களும் இருக்கின்றன. நம்மையெல்லாம் பாட வைத்த  பாடல்களும் இருக்கின்றன. தியேட்டரைத் தவிர வீடுகளில் இப்போது படங்கள் பார்க்கும் போது, நேரம் கருதியோ இல்லை போர் அடிச்சோ, நம்மில் பலர் பாடல்களைத் தள்ளி விடுகிறோம். அதனால பல பாடல்களை நாம கேட்கும் வாய்ப்பும் வரதில்லை. அதையும் மீறி சில பாடல்கள் ஹிட் ஆகுதுன்னா அதுக்குக் காரணம் பாடல்களின் தரம் என்றுதான் சொல்லனும். அதோடு இப்ப நிறைய FM ரேடியோ ஸ்டேஷனும் வந்து பாடல்களை பிரபலப்படுத்துது. இப்பல்லாம் படங்களைப் பார்க்கும் போது நடுவில பாடல்கள் வருவது எரிச்சலைத் தான் தருது. தேவையான இடங்களில் திறமையாக பாடல்களைத் தரவேண்டுமே தவிர பாடல்களைத் திணித்தால் இதுதான் நடக்கும். வருங்காலங்களில் பாடல்களே இல்லாத படங்கள் வரும்போது என்ன ஆகும்னு தெரியல. அதனால்தான் தனிப்பாடல்கள்,  ஆல்பங்கள் வரணும்னு  நான் நினைக்கிறன் .
                   நம்ம திரைப்படப்பாட்டுக்கள்தான் எத்தனை வகை,. ராகத்தின் அடிப்படையில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள், செமி கிளாசிக்கல் என்று சொல்லப்படும் வகை, ராகங்களின் சாயலில் அமைஞ்ச மெல்லிசைப் பாடல்கள், கிராமத்து தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல்கள், குத்துப்பாடல்கள் மற்றும் கானாப் பாடல்கள் இதுல என்னைக் கேட்டா மெல்லிசைப் பாடல்கள் கொஞ்சம் அதிக நாள் நிலைச்சிருக்கும்னு தோணுது.
          சில சமயங்களில் பல பாடல்கள் ஏற்கனவே கேட்ட மாதிரியோ, இல்ல வேறு சில பாடல்களின் சாயலிலோ இருக்குது. எங்க அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில் கூட நாங்க பல்லவியில ஆரம்பிச்சு சரணத்தில வேறு ஒரு பாடலை இணைச்சுப் பாடி திரும்ப அதே பல்லவியில வந்து சேர்ந்திருவோம். உதாரணத்திற்கு சொல்லனும்னா "தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி" "சங்கீத மேகம் தேன்  சிந்தும் நேரம்". ஆகிய இரண்டு பாடல்களைச் சொல்லலாம். இது போலப் பல பாடல்களைச் சொல்ல முடியும். இதைப்பத்தி நினைக்கும் போது ஒரு பாட்டு ஞாபகம் வருது. "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்" என்பது ஒன்று. இன்னொரு பாட்டு இளையராஜா எழுதி பாடினது.
          பாடல்கள் நூறு கோடி
          எதுவும் புதிதில்லை
          ராகங்கள் கோடி கோடி
          அதுவும் புதிதில்லை.
உண்மைதானே மக்களே . இன்னும் ஒரு அரை நூற்றாண்டாவது திரைப்பாடல்கள் நம் இல்லத்தையும் உள்ளத்தையும் ஆக்கிரமிக்கும்  என்பதில் சந்தேகமில்லை .
முற்றும்

                  

7 comments:

  1. பாடல்களே என் வாழ்நாள் முழுவதும்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்வே பாடல்களா , பாடல்களே வாழ்வா திண்டுக்கல்லாரே ?

      Delete
  2. திரைப்படப் பாடல்களும் மனித வாழ்வும் பிரிக்க முடியாது . தமிழர் மட்டுமல்ல எனக்குத் தெரிந்த வரை எல்லா மொழியினரின் வாழ்விலும் அப்படித்தான்

    ReplyDelete
    Replies
    1. எல்லா இந்திய மொழிகளிலும் அப்படித்தானா ? நான் தமிழர் மட்டும்தான் அப்படியென்று நினைத்தேன் , நன்றி அபய அருணா.

      Delete
  3. மனித வாழ்வும் பாடல்களே என்பதில் சந்தேகமில்லை. "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்" நகர்வதேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் மசாலாக்கள் இருந்தால் தானே ருசிக்கும் , அது பொய்யாகவே இருந்தாலும் , கவிதைக்கு பொய் அழகுதானே மதன்மணி.

      Delete
  4. பாடல்கள் தானே வாழ்க்கை!

    ReplyDelete