சீனாவில்
பரதேசி - பகுதி 3
இதன்
முதல் இரண்டு பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்
Feel Inn, Beijing. |
முகத்தில்
அடித்த குளிரையும் மீறி மூக்கில் ஒருவித ரசாயன நெடிபோல் ஒன்று ஏறியது. சில
நிமிடங்களிலேயே மூக்கு எரிவது போல் தெரிந்தது. அவசரமாக உள்ளே நுழைந்தால் அந்த
சீனப்பெண் கை இரண்டையும் தூக்கிக் கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தாள். முகம் கொள்ளா புன்னகையுடன் வரும் அவள், கிட்டத்தட்ட என்மேல்
விழுந்து, என் கைப் பையைப் பிடுங்கினாள். ஆஹா பையை நான் தரவில்லை. என் மனைவி வாங்கிக்
கொடுத்த ரோலக்ஸ் கடிகாரம் உள்ளே இருந்தது. விலையை மட்டும் கேட்காதீர்கள். ஆனால்
கர்நாடக முதல்வர் சீதாராமையா கட்டும்
வாட்சை விட விலை கம்மிதான்.
Hublot watch worth 70 Lakhs in Indian Rupees. |
அவளுடைய
உற்சாகம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுதான் வேறு ஏதோதோ சந்தேகங்களையும் கொடுத்தது. ஒரு வேளை நான்தான்
அங்கு வந்த முதல் கெஸ்ட்டோ என்றும் சந்தேகப்பட்டேன். ஆனால் பின்னர் தெரிந்தது,
அங்கே எல்லா ரூமும் நிரம்பிவிட்டது. நான்தான் கடைசியாக இருந்த ஒரு
ரூமுக்கு வந்த ஆள். ஒரு வேளை ஹோட்டல் நிரம்பிவிட்டது என்று சந்தோஷமாகக்கூட இருக்கலாம் .
"வெழ்கம் து ப்பீஜிஸ் ஐ ஆம் ஜோகன்னா" என்றாள்.
அவள் ஆங்கிலம் பேசியது அதைவிட ஆச்சரியமளிக்க, நல்லவேளை
தப்பித்தேன், பீஜிங்கில் 5 நாட்களை ஓட்டிவிடலாம் என்ற
நம்பிக்கை வந்தது. அந்த விடுதியை நடத்திவருவது ஒரு நடுவயதுப்பெண்ணும், அவர் மகளான இந்தப்பெண்ணும்தான் என்று தெரிந்துகொண்டேன். நிறத்திலும்
சரி குணத்திலும் சரி தங்கமான பெண்.மணத்தில் தான் கொஞ்சம் கோளாறு.ஆனால் அங்கே இருந்த
எல்லா சீனர்கள் மேலும் அதே வாடை அடித்தது .போகப்போக பழகிவிடும் என்று நினைத்தேன் .ம்ஹூம்
கடைசி வரை என்னால் அதை சகிக்க முடியவில்லை
.
With Johanna and her Mom |
உள்ளே
நுழைந்தவுடன் பார்த்த ஒரு அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஏர்போர்ட்டுக்கு 160 யுவான் என்று எழுதியிருந்தது. ஆஹா 360க்கு தப்பித்து 260
கொடுத்தாலும் அதுவும் அதிகம் ஆகிவிட்டது அப்போதுதான்
தெரிந்தது. ஜாக்கிரதை
மக்களே, திரும்பிப்போகும்போது நான் 80
யுவான் மட்டுமே கொடுத்தேன். சைனாவில் பேரம் என்பது மலைக்கும்
மடுவுக்கும் என நான் புரிந்து கொண்டேன்.
என்
சூட்கேஸ்களை அவள் தர தர வென்று இழுத்துக் கொண்டு முன்னால் போக அவள் பின்னால் ஆடு
போல் நடந்து சென்றேன். கிரவுண்ட் ஃப்ளோரில் மொத்தம் 2 வரிசையில் ரூம்கள் இருந்தன. சில ரூம்கள் மட்டுமே பாத்ரூம் அட்டாச்சுடு. மற்றவை வெறும் அறைகள் அல்லது டார்மிட்டரி என்று
சொல்லப்படும் பொது அறைகள். அவர்கள் குளிப்பதற்கும் மற்றவற்றுக்கும் வெளியே பொது கழிப்பறைகள் மற்றும் குறுகிய அறைகள் இருந்தன.
போகும்
வழியில் இடதுபுறமும் ஒரு பெரிய வாஷ் பேசின் இருந்தது. அதற்குள் தலையைவிட்டபடி ஒரு
பெண் இருந்தாள். அவளுடைய உடம்பு எங்கள் வழியை மறைக்க,
ஜோஹன்னா அவளுடைய முதுகில் தொட்டு என்னவோ சீனமொழியில் சொல்ல, அவள் நிமிர்ந்தாள். நீண்ட கூந்தலில் ஈரம் சொட்டச் சொட்ட தலை நிமிர்ந்து
கூந்தலை ஒதுக்கிக் கொண்டே புன்னகைத்தாள். ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் பார்த்த சீன் ஞாபகம் வந்தது.
தன் கூந்தலை கழுவிக்
கொண்டிருந்தாள்போல. முடிதவிர எல்லாம் மஞ்சள் நிறம், பற்கள்
உட்பட. அது போல பல மாணவிகள் அங்கே தங்கியிருக்கிறார்கள் என பின்னர் அறிந்தேன்
ரூமின்
உள்ளே நுழைந்தேன். மேலே ஒரு ஹீட்டர் நல்லவேளை வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது.ஒரு
சிறிய அறை ஒருவர் படுக்க ஒரு கட்டில், கட்டிலின் ஒரு புறம் ஒரு சிறிய சைட் டேபிள்,
அதன் மேல் ஒரு இரவு விளக்கு, எதிரே சுவரில் டிவி. உடைகளை மாட்டுவதற்கு ஒரு அலமாரி.
அவ்வளவுதான் ரூம். ஒரு சின்னப் பையன்( ?) தங்குவதற்கு அதுவே தாராளம். பெட்டிகளை ஓரமாக
வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பாத்ரூமில் ஒரு சின்ன வாஷ்பேசின்,
ஒரு டாய்லட் இருந்தது. ஆனால் குளிப்பதற்கு வசதி இல்லை.
அதைப்
பார்த்துவிட்டு ஐயையோ என் நிலைமையும், வழியில் பார்த்த பெண்போலத்தான் குளிக்கணுமோ என்று
பயந்து உடனே அவசரமாக வெளியே வந்து, "ஜோகன்னா பாத்ரூமில் குளிக்க வசதியில்லை”, என்று சொன்னேன். அவள் அங்கே தானே
இருந்தது என்று சொல்லி என் முதுகுப்புறத்தைப்பற்றி தள்ளிக் கொண்டே வந்தாள்,
விளையாட்டுப் பிள்ளை. உள்ளே வந்து பாத்ரூமில் நுழைந்து, “இதோ இருக்கிறதே”, என்றாள். அவள் காட்டிய வலப்புறத்தில் மேலே ஹீட்டர் போல
ஒரு வஸ்துவில் ,குழாய் போல ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. டாய்லட் சீட்டை
மூடிவிட்டு, “நீ உட்கார்ந்து கொண்டே குளிக்கலாம்",
என்றாள். அந்த சிறிய ரூமில் அதுவே இரண்டும் எனப்புரிந்து
கொண்டேன். குளிக்கும் போது டாய்லட் கவரை மறக்காமல் மூடச் சொன்னாள். இல்லாவிட்டால்
குளிக்கும் நீர் டாய்லட் உள்ளே போய் நிரம்பிவிடும் அபாயம் இருக்கிறது.
மணி
அப்போதே இரவு ஏழு மணியாகியிருந்தது. உள்ளே
உடைமாற்றி ஒரு குளியல் போட்டுவிட்டு
ரிஷப்ஷனை ஒட்டி இருந்த சிறிய ரெஸ்டாரண்டுக்கு வந்தேன். ரெஸ்டாரண்ட்
முழுவதும் ஏற்கனவே தங்கியவர்கள்
எடுத்துக்கொண்ட போட்டோக்கள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்தன.
மேலே
சைனாவின் காகித பலூன்கள் தொங்கிக் கொண்டிருந்தன. “ஹாய்” என்ற நட்புக்குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தால்,
வலது மூலையில் உள்ள உயரமான மேஜையில்
ஐரோப்பிய தேவதை ஒன்று எழுந்தருளியிருந்ததை
அப்போதுதான் பார்த்தேன்.
'இந்தியாவா?, என்று கேட்க, 'ஆம்
ஆம்' என்றேன்.பாம்பேயில்
ஒரு மாதம் தங்கியிருந்ததாகச் சொல்லி, நமஸ்தே
என்று கைகூப்பினாள். நானும் நமஸ்தே என்று
சொன்னேன்.
Feel Inn Restaurent |
அந்த
பரதேவதை ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருக்கும் ஸ்பானிய குயில். முதல் ஆறு மாதம்
வேலை செய்வது, மீதியுள்ள ஆறுமாதம் தனியாகவே உலகம் சுற்றுவது. வயது ஒரு 20
லிருந்து 25க்குள் இருக்கும். அதற்குள் ஒரு டஜன் நாடுகளைப் பார்த்துவிட்டாள்.
"ரெஸ்டாரண்ட் உணவு எப்படி ?" என்று கேட்டேன். “நாத் பேத்”, என்றாள். ஸ்பானியப் பெண் என்றாலும் ஆங்கிலம் நன்றாகவே பேசினாள். பீஜிங்
வந்து ஏற்கனவே 15 நாட்கள் ஆகிவிட்டனவாம். எனக்கு உதவி
செய்யமுடியுமா? என்று கேட்பதற்குள் குட்நைட் சொல்லிவிட்டு அவள்
சென்றுவிட,
ஜோகன்னாவின்
அம்மா வந்து மெனுகார்டைக் கொடுத்தாள். “எந்த இரவு உணவு நன்றாக இருக்கும்”, என்று
கேட்டு அவளுக்கு ஒன்றும் புரியாததால், " கிவ்மி சம்திங் டு டிரிங்
ஃபர்ஸ்ட்”, என்று வார்த்தையிலும்
சைகையிலும் சொன்னேன். சடுதியில் ஒரு உயரமான கிளாஸில் விஸ்கி வந்தது.
தொடரும்.
சீனாவைப்பற்றித்தானே எழுதுறிங்க.. அப்பறம் ஏன் சீத்தாராமையா ?
ReplyDeleteநமது புகைப்படத்தையும் இந்த புகைப்படத்தையும் வச்சுப்பார்த்தேன்...ஹீம் ...
அப்பப்ப நம்ம நாட்டு நடப்பையும் கொஞ்சம் தொட்டுக்கொள்ளனும்ல செல்வா
Deleteதொடர்கிறேன்.
ReplyDeleteஉங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
Deleteசீனப் பயணக்கட்டுரை அருமையாக செல்கிறது. லேனாவே தொட்டுவிட்டீர். வாழத்துக்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteஉங்களின் ஆதரவுக்கு நன்றி ஆரூர் பாஸ்கர்.
Deleteமுதலில் உல்லாசம்...! Enjoy...?
ReplyDeleteஉல்லாசமா, அட நீங்க வேற .
DeleteInteresting...
ReplyDeleteLooks, Chinese hospitality is not bad.
Chinese hospitality is good for several people , not for me though.
DeleteThanks Alien.
தொடர்கின்றேன் பாணம் சுவையோ)))
ReplyDeleteபானம் சுவையோ ?நல்ல கேள்வி ,ஆசைதான், விடை வரும் திங்கள்கிழமை தெரியும் .
Delete