Thursday, March 10, 2016

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே !!!!!!!!

படித்ததில் பிடித்தது


நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு.

புதுக்கோட்டையில் நடந்த பதிவர் சந்திப்பில்தான், முத்துநிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன். ஆனால் முன்னரே அவரைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன் ஆனால் படிக்கும் வாய்ப்பு இந்தப் புத்தகத்தின் மூலம்தான் வாய்த்தது.
முத்துநிலவன் அவர்களுக்கு பல கோணங்கள் உண்டு. எழுச்சிப் கவிஞர், தலைமை ஆசிரியர் , பேச்சாளர், பதிவர் என்பதெல்லாம் தாண்டி, அவர் ஒரு ஆசிரியர் அதுவும் தமிழாசிரியர் என்பதுதான் என்னை மிகவும் கவர்ந்த அம்சம்.
கவிஞர் முத்துநிலவன் 
இந்தப்புத்தகம் முழுவதும் தமிழாசிரியரின் எண்ண ஓட்டங்கள், தமிழின் மேலுள்ள பற்று, ஆங்கில மோகத்தின் மேலுள்ள வெறுப்பு, பள்ளிக் கல்வியின் பிற்போக்குத் தனத்தின் மேலுள்ள கசப்பு, ஆதங்கம், மாணவர்களின் எதிர்காலத்தைக் குறித்த கவலை என்று உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் காணப்படுகின்றன. ஆங்காங்கே வெளிப்படும் அவர் நகைச்சுவை உணர்ச்சி ரசிக்க வைத்தன.
புத்தகத்தைப் படிக்கும்போது அதே உணர்வு, என்னையும் தொற்றிக் கொள்வது வெகு இயல்பாகவே நடந்தது. ஒரு ஆசிரியக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் இருவழித் தாத்தாக்கள், பாட்டி, அம்மா, அப்பா, தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தைகள், மாமாக்கள் மர்றும் என் மனைவி முதற்கொண்டு என் குடும்பத்தில் ஏராளமான ஆசிரியர்கள் உண்டு. இதில் என் அப்பா விசேஷமானவர். அவருக்கு மாணவனாகவும் இருந்த என் அனுபவத்தின் மூலம் முத்துநிலவன் என்ற ஆசிரியரிடம் என் அப்பாவின் உழைப்பு, சிந்தனை மற்றும் முற்போக்கு எண்ணங்களை அப்படியே பார்க்க முடிந்தது.
with Muthu Nilavan and Prabakar at Pudukottai 

   அந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களை வழக்கம்போல் புல்லட்பாய்ண்ட்டில் தருகிறேன்.
1.    "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே" என்ற தலைப்பிலேயே அவர் தன் எண்ணத்தை அருமையாக வெளிப்படுத்தி யோசிக்க வைத்துவிடுகிறார்.
2.    "என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்" என்று சொல்லி இன்றும் பீடத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் மெக்காலே கல்வியைச்சாடி, அது கிளிப்பிள்ளைகளின் கல்வி அதனால் அறிவு வளர சாத்தியமேயில்லை  என்கிறார்.
3.    மேலும் IPS, IAS, ITI, AIMS ஆகியவற்றில் படித்தவர் கூட மெக்காலேவின்  செல்லப்பிள்ளைகள் என்று சொல்லுகிறார்.
4.    ஆசிரியர் உமா மகேஸ்வரியைக் கொன்றது ஒரு மாணவன் மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கிறார் (Partners in crime)
5.    ஆசிரியர் சங்கங்களின் கடமை வெறும் ஊதிய உயர்வுக்கு போராடுவது மட்டுமல்ல என்று இவர் சொல்வது எத்தனை பெரிய உண்மை. அவர்களுடைய தலையாய நோக்கம் நல்ல கல்விக்காகவும் போராடுவதாக அல்லவா இருக்க வேண்டும்.
6.    நம்பள்ளிகள், "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாடலை ஒப்பிக்காமல் விளையாடப்போன மாணவனுக்கு தண்டனை தரும் பள்ளிகளாகவே இருக்கின்றன.
7.    நாளை பள்ளி விடுமுறை என்றால் மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் கூச்சல் கூட ஒருவகையில் கல்விமுறை மீதான அவர்களின் விமர்சனம்தானே.
8.    Progress card என்பது படிப்புக்கு மட்டுமே இருப்பதன்றி மற்ற திறமைகள், விளையாட்டு போன்றவற்றையும் மதிப்பிடுவதாக இருக்க வேண்டும் என்கிறார்.
9.    தொலைக்காட்சியின்  ரியாலிட்டி ஷோக்களில், 5 வயதுக் குழந்தை காமரசம் சொட்டும் பாடலை முக்கி முனகிப்பாடுவதை ரசிக்கும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்துவிட்டோம்.
10.  சுவையாக இருக்க வேண்டிய கல்வி சுமையாக மாறிப்போனதைப் பத்தி யாராவது சிந்தித்திருக்கிறோமா?
11.  வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி மருந்தாகவும், வாழ்க்கையைக் கெடுக்கும் படங்கள் விருந்தாகவும் இருப்பதற்கு காரணமென்ன?
12.  விருதுகளை விண்ணப்பித்து வாங்கலாமா? எப்போதும் மெளனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருதா?  
13.  மனிதரைப் படித்தால்தானே மனிதன் ஆக முடியும், பன்முகத்திறமையை வளர்க்காது பள்ளி கல்லூரி வாழ்க்கைகள் முடிந்துவிடும் அவலத்தை சுட்டிக் காட்டுகிறார்.
14.  தமிழ் உச்சரிப்பு, எழுத்துப் பிழைகளைத்தவிர்க்க எளிய உபாயங்களைச் சொல்லுகிறார். இலக்கணம் ஒரு பெருஞ்சுமையாகவே இருக்கின்றன என்கிறார்.
15.  பெயர் எழுத்துகளை அப்படியேதான் எழுதவேண்டும், மாற்றி எழுதவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
16.  விடைத்தாள்கள் திருத்தும்முறை கணினி முறையில் வர வேண்டும் என்கிறார்.
17.  அரிச்சந்திரன் கண்ணகி கதைகள், கற்புடைமை, சாதி,குலம் என்பவை பிற்போக்குத்தனம் என்று சாடுகிறார்.
18.  பாடத்திட்டத்தில் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கல்வியை சுமையானது என்பதை மாற்றி சுவையானதாக ஆக்கலாம் என்கிறார்.
19.  தமிழ் வழிக்கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார்.
20.  தமிழில் ஏன் பலர் தோல்வியடைகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

இவர்களைபோலுள்ள ஆசிரியர்கள் பாடத்திட்டக்குழுவிலோ, பாடங்களை எழுதும் குழுவிலோ இல்லாதது கல்வித்துறைக்கே துரதிர்ஷ்டம் என்று சொல்லுவேன். மாணவர், ஆசிரியர் மட்டுமல்ல அதிகாரிகளும், அமைச்சர்களும் படிக்க வேண்டிய நூல் இது.முற்றும் 
முற்றும் .


18 comments:

  1. நல்ல கருத்துகள். இன்று கல்வியில் இந்தியா புலிவாலையை பிடித்த கதைதான்.
    அவரிடம் தொலைபேசியில் ஓருமுறை பேசியிருக்கிறேன். இயல்பாக பழகினார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான புலியாக இருந்தாலும் பரவாயில்லை இது காகிதப்புலி கவிஞரே .

      Delete
  2. இந்நூல் பற்றிய கருத்துகளின் பகிர்வை பல தளங்களிலும் படிக்கிறேன். இந்நூல் ஒன்றை கைக்கொள்ளும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரைகளை வலைப்பக்கத்திலேயே படிக்கலாம் நண்பரே. (
      நூலேதான் வேண்டுமெனில் எனதுவலையில் விவரங்கள் கிடைக்கும்)

      Delete
    2. நூலேதான் வேண்டும். பார்க்கிறேன்.

      Delete
    3. அவசியம் படியுங்கள் ஸ்ரீராம் , வருகைக்கு நன்றி .

      Delete
  3. புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.மேலோங்கிய சிந்தனைகளின் வெளிப்பாடே இந்நூல் என்று கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. மேலோங்கிய சிந்தனைகளின் வெளிப்பாடே இந்நூல்,சரியாகச்சொன்னீர்கள் முரளிதரன்.ஏது இன்னைக்கு மூங்கில் காற்று இந்தப்பக்கம் அடிக்கிறது.

      Delete
  4. அன்பின் நண்பர்க்கு வணக்கம். உங்கள் தளத்தில் “பின்பற்றுவோர்” பெட்டியில் இணைய முடியவில்லையே என்ன சிக்கல்? கொஞ்சம் கவனித்துச் சரிசெய்ய வேண்டுகிறேன். இப்படி இன்ப அதிர்ச்சி தருவீர்கள் என்று நினைக்கவில்லை. தங்களின் நுட்பமான கவனிப்புக்கும், அதை அப்படியே வெளியிடும் அழகிய நடைக்கும், அடிப்படையில் உங்கள் அன்பிற்கும் என் நன்றி வணக்கம். கல்வியில் மாற்றம் வரவேண்டும். இல்லையேல் அரசியல் மாற்றத்தின் பயன்கள் சமூகத்திற்குக் கிடைக்காதல்லவா? அதுதான் என் நூலின் சுருக்கம். நன்றாக அறிமுகப்படுத்திய தங்கள் அன்பிற்கு மீண்டும் மீண்டும் நன்றி. குறைவாகத் தான் எழுதுகிறீர்கள், ஆனால் நிறைவாக இருக்கிறது. த.ம.3

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு வந்து பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தது தாங்கள்தான் ஐயா .நன்றி
      உங்கள் சிந்தனைகள் அனைத்தும் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது .

      Delete
  5. அய்யா..தொடுத்து மாலையாக்கியிருக்கிறிர்கள்..அத்தனை வாசம்..
    அவர் கருத்துகளில் ஒருபோதும் குறையிருக்கமுடியாது.
    ஒரு நல்ல சிந்தனையாளர் ,நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் என அறிமுகப்படுத்தப்படும் போது ..கொஞ்சம் கவலைப்படுவதுண்டு நான்.
    ஆனால் அவர் சிந்தனைக்கேற்ற உயரத்தை அடையவில்லை இன்னும் என்பதும் உண்மை.
    அந்த உயரம் அவருக்கு வசப்படும்..

    உங்கள் பார்வைக்கும்,பதிவுக்கும் பாராட்டுகள்...நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்தானே செல்வா , நன்றி

      Delete
  6. Replies
    1. புத்தகத்தின் அருமை அப்படி, தனபாலன்.

      Delete
  7. நல்ல தலைப்பு.. உங்கள் வாசிப்பின் தன்மை உங்கள் சிறந்த தொகுப்பில் தெரிகிறது. ஐயா முத்துநிலவன் பற்றி செய்திகளுக்கும் நன்றி..

    ReplyDelete
  8. Points are perfect. Must be implemented.

    ReplyDelete
    Replies
    1. Yes you are correct but who will bell the cat? is the million dollar question, Thanks for coming Alien.

      Delete