Monday, November 24, 2014

இளையராஜாவின் சுயநலம்????????

எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 10 - "காதல் ஓவியம் கண்டேன்".

1977ல் வெளிவந்த கவிக்குயில் என்ற படத்துக்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.  பாடலைக்கேட்போம்.


இசைக்கோர்வை:
இளையராஜாவின் இசையின் வீச்சுக்கும் ஞானத்துக்கும் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு இந்தப்பாடல். அநாயசமாக இசையமைக்கப்பட்ட இந்தப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று.
ம்ம் என்ற ஹம்மிங்குடன் பாடல் துவங்க, எந்த இசையும், இல்லாமல் மிகவும் சாதாரணமாக 'காதல் ஓவியம்' என்று பெண்குரலில் ஆரம்பிக்கிறது. ஓவியத்தில்  “யம்” என்ற இடத்தில் தபேலா இணைந்து கொள்ள மற்ற எஃபக்ட்ஸ், டிரம்ஸ் சிம்பலும் சேர்ந்து கொள்ள, பாடல் காதுகளிலும் மனங்களிலும் நிறைந்து தேனை ஊற்றுகிறது.
இளையராஜா 80 களில் இசையமைத்த பாடல்களில் பேஸ் கிடாரை லீட் கிடார் போல பல இடங்களில் பயன்படுத்தியிருப்பார். மற்ற சமகால மற்றும் பின்னர் வந்த இசையமைப்பாளர்கள் போலன்றி, இசைக்கருவிகளை முடிவு செய்வது இசைநடையை முடிவு செய்வது, கருவிகளுக்கு நோட்ஸ் எழுதுவது என்று எல்லாவற்றையும் அவரே செய்வதால் அந்தப்பாடலின் முழு ஓனர்ஷிப் அவருக்குத்தான் என்று சொல்லலாம். அந்த லீட் போல் வரும் பேஸ் கிட்டார் இந்தப்பாடலில் அதிகமாக வருகிறது. எனக்குத் தெரிந்த அளவில் இதில்தான் முதன்முறையாக பேஸ் கிட்டார் லீட் மாதிரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தபேலாவின் முத்தாய்ப்போடு பல்லவி முடிய முதல் BGM ஆரம்பிக்கிறது. வீணை இசை போல் வயலின்களின் ஒரு குழு இசைக்க, வயலின்களின் இன்னொரு குழுமம் அதோடு உரையாட இல்லை இல்லை இசையாட ஆரம்பிக்க, பின்னனி கோரஸ் குரல்கள் இணைந்து கொண்டு உச்சம்போய் முடிய, முதல் சரணம் 'மாமரத்தோட்டத்து நிழலில்' என்று ஆரம்பிக்கிறது. எனக்குத் தெரிந்து இளையராஜா கோரஸ் குரல்கள் பயன்படுத்தியதும் இந்தப்பாடலில்தான் முதன் முறையாக என்று நினைக்கிறேன். பின்னர் அது அவரின் முக்கிய அடையாளமாக மாறிப்போனது.
2-ஆவது BGM-ல் வீணையும் வயலின்களும் விளையாட BGM-க்கு இளையராஜா எவ்வளவு ரசித்து உழைத்திருக்கிறார் எனப்புரியும். "கூந்தலில் வாசனை மலர்கள்" என்று 2-ஆவது சரணம் ஆரம்பிக்கிறது.
3-ஆவது BGM-ல் வீணையின் நாதமும் வயலின்களும் கோரஸும் இணைந்து ஒலித்து முடிய, மூன்றாவது சரணம் ,”மார்கழி மாதத்து பனியில்”, என்று ஆரம்பித்து பின்னர் பல்லவி வந்து பாடல் முடிகிறது
குரல்:
  1. Sujatha with Jesudas
இந்த அருமையான பாடலைப்பாட கொடுத்து வைத்தவர் சுஜாதா அவர்கள். ஜேசுதாசின் கச்சேரி மேடைகளில் பாடிய இந்தச்சிறுமியை இளையராஜா அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுஜாதாவுக்கு சுமார் 14 வயதிருக்கும் அப்போது அவர் பாடிய முதல் பாடல் இதுதான் என்றாலும் முதலில் வெளிவந்தது நாம் முன்னரே பார்த்த "காலைப்பனியில் ஆடும் மலர்கள்”, என்ற பாடல்தான். முதல் தடவை பாடியது போல் தெரியவில்லை. அழுத்தமான தெளிவான உச்சரிப்பு கீழ்ஸ்தாயி மற்றும் உச்சஸ்தாயிலும் இனிமையான குரல். ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் அணுக்கமும் நுணுக்கமும் கமஹங்களும் ஒரு தேர்ந்த பாடகியின் குரலாக ஒலிக்கிறது.ஜானகி போல் “ஃபீல்” இல்லையென்றாலும் பாடல் நல்ல திறமையான கர்னாடக இசைப்பாடகி பாடியது போல் ஒலிக்கிறது. காதல் என்ற வார்த்தையில் மட்டும் கொஞ்சமாக மலையாள வாடை அடித்தாலும் 2-ஆவது முறை கேட்கும்போது அதுவும் ஒரு அழகாகத்தான் ஒலிக்கிறது.   
இந்த இரண்டு பாடல்களும்  ஒரே ராகத்தில் அமைந்த நல்ல ஹிட் பாடல்கள் என்றாலும் ஏனோ தெரியவில்லை சுஜாதாவுக்கு பின்னர் பாடல்கள் கொடுக்கப்படவில்லை. AR.ரகுமான்தான் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து பல பாடல்களைக் கொடுத்தார். சூப்பர் சிங்கர் சீனியரிலும் நடுவராகப் பரிணமிக்கிறார் .
பாடல் வரிகள்:

காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மணச்சோலையின் காவியமே
உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
(காதல் ஓவியம்..)

மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே
பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
(காதல் ஓவியம்..)

கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன
பொன் மேனி சிலிர்ப்பதென்ன
(காதல் ஓவியம்..)

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன
ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நாணம் தடுப்பதென்ன
(காதல் ஓவியம்..)
பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரை பெரும் கவிஞர் என்று சொல்லமுடியாது. ஆனால் இசைக்கேற்ற வரிகளை அமைப்பதில் வல்லவர்.  கவிஞர் கண்ணதாசனின் காற்று அடித்திருக்குமல்லவா.இளையராஜாவுக்கு முதல் வாய்ப்பு அளித்தவர் என்பதாலோ என்னவோ அவரின் ஆரம்ப கட்டத்தில் அதிக பாடல்கள் எழுதும் வாய்ப்பு பஞ்சுவுக்கு அமைந்தது.

ஆனால் இந்தப்பாடலில் காதலை ஓவியமாக முதலில் உருவகித்தவர் இவர்தான். மூன்றாவது சரணத்தில் மோகவிரக்தியால் நாயகியின் தேகம் மார்கழிப்பனியிலும் கொதித்துக்கிடக்க, நாயகனின் பார்வை பட்டவுடன் குளிர்கிறதாம். ஆனால் அங்கு காமத்திற்குப் பதில் பாசம் பிறக்கிறது என்ற கற்பனை ஒரு வித்தியாசம்தான். பாசம் என்பது நீண்ட கால வாழ்க்கைக்கு  ஆதாரமல்லவா. பஞ்சு ஒரு மன்மதக்குஞ்சுதான்.
இளையராஜாவின் பல சிறப்பு வாய்ந்த பாடல்களில் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அதற்குரிய ஞானம் அவருக்கு இல்லையா? என்று கேட்டால் அதையும் ஒத்துக்கொள்ளமுடியாது. பல பாடல்களுக்கு முதல் வரிகள் சந்தங்களை அவரே எழுதியுள்ளதோடு, "இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்" போன்ற சில பாடல்களை அவரே எழுதியுள்ளார். வரிகளும் கவிதையும் சிறப்பாக அமைந்ததால் தான் இளையராஜா-வைரமுத்து காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக அமைந்தது. இளையராஜாவின் என்றென்றும் வாழும் “இளைய நிலா பொழிகிறது" போன்ற சில பாடல்கள் இசைக்கு மட்டுமல்லாமல் அதன் வரிகளுக்கும் சேர்த்துத்தான் அழியாப்புகழ் பெற்றன. ஆனால் இந்தப்பாடல்களில் வரிகள் சிறப்பா இசை சிறப்பா என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தே இருக்கின்றன.
இளையராஜா தன் பாடல்களில் இசை மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சுயநலம் மட்டுமல்ல பெரிய முட்டாள்தனம். பாடலின் காட்சியமைப்பு தான் அவர் கையில் இல்லை. அதனால் அவரின் பல பாடல்கள் திரையில்  அபத்தமாக காட்சியளித்தன. ஆனால் வரிகள் அவரால் கட்டுப்படுத்த அல்லது மாற்றியமைக்க முடிந்தவை தானே.
திரைக்காட்சி அமைப்பை மீறி பல பாடல்கள் பெரிய வெற்றிபெற்று நிலைத்து இருக்கின்றன. குறிப்பாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்று சொன்னார்கள். நான் ரசித்து இந்தத் தொடரில் இதுவரை எழுதிய பாடல்களின் திரைப்படங்களில் ஒன்றைக்கூட நான் பார்த்ததில்லை.
பாடலின் ராகம்:
நெஞ்சை உருக்குகின்ற இந்தப்பாடலின் ராகம் "ஹமிர் கல்யாணி" என்பதாகும். ஹமிர் கல்யாணியில் இளையராஜா இசையமைத்த சில பாடல்களை கீழே தருகிறேன்.
காலைப்பனியில் ஆடும் மலர்கள் - காயத்ரி
பாட்டாலே புத்திசொன்னார் - கரகாட்டக்காரன்.

கைவீணையை ஏந்தும் கலைவாணியே - வியட்நாம்  காலனி.

இசை  தொடரும்.
அடுத்த வாரம்  " ஒரு காதல் தேவதை "

27 comments:

  1. ஆல்பி,

    நல்ல பதிவு.

    ---இளையராஜா தன் பாடல்களில் இசை மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சுயநலம் மட்டுமல்ல பெரிய முட்டாள்தனம். ----

    நண்பரே, உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நெற்றிப் பொட்டில் அடிக்கும் கருத்து. இளையராஜாவின் ரசிகனான உங்களுக்கே இது தெளிவாகத் தெரிவது ஒரு ஆச்சர்யமான உண்மை.

    அடுத்த பதிவு என்று ஒரு காதல் தேவதை பாடலைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் வரும் பாடல் அது. மிக அருமையான பாடல். நிறைய ராஜா ரசிகர்களே இந்தப் பாடலை இப்போது நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். உங்களின் இசை ரசனை உண்மையில் வெறும் உதட்டளவில் இல்லை என்பது தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் காரிகனுன்னு நன்றி.
      நான் இளையராஜாவின் இசைக்குத்தான் ரசிகனே தவிர , இளையராஜா என்ற நபரை எனக்கு பிடிக்காது .

      Delete
    2. நான் இளையராஜாவின் இசைக்கும் ரசிகன்..இளையராஜா என்ற நபரை எனக்கு பிடிக்கும்..

      ஆனால் பல சமயங்களில் ஒரு மேடை பேச்சோ, பேட்டியோ அந்த உயரத்துக்கு ஆனா தெளிவு இல்லாத மாதிரி தெரிகிறது..
      வித்வ கர்வம் இருக்கலாம்.. ஆனால் சில சமயம் அது ஆணவமாகவோ, தான் என்கிற அங்கதை ஆகவோ தோற்றம் மாறுவது போல தெரிகிறது...
      "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்று எழுதி பாடியவர், அவருக்கு இது தெரியாமல் இருக்காது என நம்புவோம்...

      Delete
    3. கடவுளிடம் நேரடித்தொடர்பு உள்ள ஆன்மீக ஞானி போல் காட்டிக்கொள்ளும் இளையராஜா அவர் ரசிகர்களிடம் என்றுமே சுமுகமாக நடந்து கொள்வதில்லை .
      உதாரணம் சமீபத்தில் அவர் டொரோண்டோவிலும் நியூ ஜெர்சியிலும் நடந்துகொண்டது . நிறையப்பேர் எழுந்து சென்றுவிட்டார்கள் . இன்னொன்று அவருடைய காலம் முடிந்து விட்டது என்பதை இதுவரை ஒத்துக்கொள்ளாதது.

      Delete
    4. உண்மையே.. ரசிகர்களை விசில் அடிக்க கூடாது.. என்று சொல்லி இரண்டு மூன்று concert'ல் கேட்டேன்... அது எதற்கு என்று தெரியவில்லை.. தெரிந்தால் சொல்லவும்..
      விசில் அடித்த அடிமட்ட ரசிகர்கள் தான் அவரின் வளர்ச்சிக்கு காரணம்..

      Delete
    5. பக்திப்பாடல்களுக்கு விசில் அடிக்க வேண்டாம் , கை தட்டவேண்டாம் என்றால் சரி குத்துப்பாடல்களுக்கும் கூடாது என்றால் ரசிகர்கள் மகிழ்ச்சியை எப்படித்தான் வெளிப்படுத்துவது?

      Delete
  2. >>>ஏனோ தெரியவில்லை சுஜாதாவுக்கு பின்னர் பாடல்கள் கொடுக்கப்படவில்லை.<<<<
    'paadalgaL' illai. aanal 'paadal' koduthar. 'Oru Iniya Manadhu' from Johnny was by Sujatha.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் .

      Delete
  3. நீங்கள் சொல்வது போல் பல பாடல்கள், வரிகளும் இசைகளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தே இருக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வரிகளும் நன்றாக இருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கின்றன
      நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. "இளையராஜா தன் பாடல்களில் இசை மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்திருந்தால் அது சுயநலம் மட்டுமல்ல பெரிய முட்டாள்தனம்"..
    மிகச் சரியே..
    நானும் இளையராஜா அவர்களின் தீவிரமான ரசிகனே..
    ஆனால் சில மேடைகளில் அவர் -- பாடல் வரிகள் ஒன்றும் இல்லை, இசையே பாடலுக்கு முக்கியம், ஜீவன், அப்படி இப்படி -- என்று சொல்லும் போது ஒத்து கொள்ள முடியவில்லை.. அவருக்கும் வைரமுத்து அவர்களும் உள்ள பிணக்கு காரணமாக அப்படி சொல்லிகிறாரா என்று தெரியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் .அப்படி சொல்வதின்
      மூலம் அவர் எல்லாக்கவிஞர்களையும் அவமானப்படுத்துகிறார்.அவர் பாடல்களில் சில குப்பைகளும் உண்டு .

      Delete
  5. அருமையான பாடல்.. மிக நன்றி..

    ReplyDelete
  6. "ஒரு காதல் தேவதை பாடல் " -- அவரின் பல பாடல்கள் திரையில் அபத்தமாக காட்சியளித்தன.. ஒரு உதாரணம்.. not that bad..ஆனால் டான்ஸ் மற்றும் ஹீரோயின் expression not that Great for such a nice Song/Music...

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் நான் வீடியோவைப்பார்ப்பதில்லை.பாடலை மட்டும்தான் கேட்பேன்

      Delete
  7. அருமையான பாடல் பதிவு. அதிலும் பல நுணுக்கங்களை மிகவும் தெளிவாக ஆராய்ந்து எழிதியிருக்கின்றீர்கள். நிச்சயமாக நீங்கள் ஒரு இசை விற்பன்னர்தான்.

    பல பாடல்கள் திரையில் காட்சிப்படுத்தியிருப்பது பாட்டிர்கும் காட்சிக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்...எனவே பாடல்களை செவிக்கு மட்டுமே அற்பணித்துக் கண்ணிற்குகொடுக்காமல் இருந்தால் ரசிக்கலாம்தான்...

    நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. இசை விற்பன்னர் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.நான் என்றுமே இசை
      ரசிகன்தான் .
      தங்கள் அன்புக்கு நன்றி துளசிதரன் .

      Delete
  8. தங்கள் வருகைக்கு நன்றி தனிமரம்

    ReplyDelete
  9. "மோகவிரக்தியால்"??

    மோகவிரகத்தால் என்று இருக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் வைத்துக்கொள்ளலாம் தோழி .

      Delete
  10. ஆல்பி சார்

    அருமையான பாடல் . கவித்துவமான விளக்கம் . இளையராஜா என்ற மனிதர் எப்படிப்பட்டவர் என்பது ரசிகனுக்கு தேவையில்லாத ஒன்று . அவர் இசையில் மட்டுமே விற்பன்னர். மேடைப் பேச்சில் , கவிதையில் கரை கண்டவர் இல்லை. அது நமக்கு முக்கியமும் இல்லை . அவரது இசைச் சாதனைக்கு நமது வணக்கமும், வந்தனமும் இருக்கட்டும் !

    இன்னொன்று ....வைரமுத்து எழுதாததால் அவர் இசை மங்கிவிடவே இல்லை. வாலியின் வரிகளில் பொலிவோடுதான் இருந்தன. பிறை சூடன் , முத்துலிங்கம் , மு. மேத்தா போன்ற மற்ற நல்ல கவிஞர்களின் பாடல்களும் அவர் இசையில் பிரபலமடைந்திருக்கின்றன. இசை மட்டுமே பேசப்படவேண்டும் என நினைத்திருந்தால் எல்லா பாடல்களையும் அவர் ஒருவரே எழுதி இருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. "இளையராஜா என்ற மனிதர் எப்படிப்பட்டவர் என்பது ரசிகனுக்கு தேவையில்லாத ஒன்று:. நீங்கள் சொல்வது மிகச் சரியே...அவர் இசையை தொடர்ந்து ரசிப்போம் சார்லஸ்.தயவு செய்து ஆல்ஃபி. என்றே கூப்பிடுங்கள். சார் வேண்டாம்

      Delete
  11. நல்லதொரு பதிவு நண்பரே வாழ்த்துகள்.

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி கில்லர்ஜீ.

      Delete
  12. நல்ல பதிவு ஆல்பி

    இசையில் ராஜா என்றும் ராஜா தான்! அவரது இசையாலே அவர் எங்களிடம் வந்து சேர்ந்தார்.தனிப்பட்ட ராஜாவை பற்றி நமக்கு கவலை இல்லை.

    //பாடல் வரிகளை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இவரை பெரும் கவிஞர் என்று சொல்லமுடியாது. //
    அப்படி அல்ல "பொன் எழில் பூத்தது புது வானில் " என்ற ஒரு பாடல் போதாதா ? அவரை சிறந்த பாடலாசிரியர் என்று சொல்ல !

    சினிமாவுக்கு பாட்டெழுத கவிஞர்கள் தேவையில்லை.பாடலாசிரிகளே போதும்!

    கண்ணதாசனை கவிஞர் என்பதை விட பாடலாசிரியர் என்று சொலல்வதே பொருத்தம் ..இல்லையா ஆல்பி .

    இளையராஜா என்பதால் சொல்கிறேன் .[ எல்லா இசைஞருக்கும் இது பொருந்து ]..ராஜாவின் பாடல்கள் பெரும்பாலும் ரசிக்கப்பட்டது அவரது இசையாலே...பாடலாசிரியர்கள் எழுதுவதை எல்லாம் ஒரு இசையமைப்பாளன் திருத்திக் கொண்டிருக்க முடியுமா

    மெரும்பாலான ரசிகர்கள் இசைக்குத் தான் அடிமை ஆகுறார்கள்.அதனால் தான் வைரமுத்து விலகிய பின்னும் ராஜா உச்சத்திற்கே போனார்.

    Thank you.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி விமல் .சினிமாவில் பாடல் எழுதுபவர்களை பாடலாசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
      உங்களின் மற்ற கருத்துக்களிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை .

      Delete