Monday, November 10, 2014

நடிகர் திலகத்துடன் இளையராஜா !!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாட்டு 8  - அந்தப்புரத்தில் ஒரு மகாராணி.
1977ல் வெளிவந்த தீபம் என்ற படத்தில் வந்த அழகான பாடல் இது. சிவாஜியுடன் இளையராஜா இணைந்த முதல் படம் இது.
நடிகர் திலகம் நடித்த ஒரு சில படங்களுக்குத்தான் இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதன்பின் கதா நாயகன் தவிர சில கேரக்டர் ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்போது நடிகர் திலகத்தின் இறங்கு முகம். ஆனால் இளையராஜாவுக்கு அது ஏறுமுகம்.பாடலைக் கேளுங்கள் முதலில்.


இசைக்கோர்வை:
 வயலின்கள் சரசரவென இசைக்க ஆரம்பிக்க கீபோர்டு இசை குறுக்கிட, லேட்டாக வந்த புல்லாங்குழல் அதனுடன் இழைய, அதற்கு வயலின்கள் பதில் பேச, இரண்டும் சுகமாக ஒன்றுக்கொன்று பேசி கொஞ்சத் துவங்க, பின்னர் வீணை /கிதார் அதற்கு அணை போட கம்பீரமான குரலில் "அந்தப்புரத்தில் ஒரு மகாராணி" என்று சிவாஜி இல்லை இல்லை TMS குரலில் ஆரம்பிக்கிறது பாடல்.  “காமன் திருச்சபைக்கு” காதலி வழிகேட்டதை காதலன் சொல்லி முடிக்க, கிடார் வந்து சிற்றிசை வாசித்து முடித்தவுடன், "சாமந்தி பூக்கள் மலர்ந்தன" என்று ஜானகி அனுபல்லவியை ஆரம்பிக்க தபேலா இணைந்து சுறுசுறுப்பான நடையில் தாளம் இசை கூட்டுகிறது .ஆண்குரலும் பெண்குரலும் மாறி மாறி ஒலிக்க அனுபல்லவி முடிந்து பல்லவி பெண்குரலில் ஒலித்து, மூன்றாவது வரியில் “அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்”, என்று அவளின்  வெட்கத்தை வெளியிட  முதல் BGM ஆரம்பிக்கிறது.
வயலின்கள், கீபோர்டு, புல்லாங்குழல் ஆகியவற்றின் சங்கமங்கள் முடிந்து "சங்கு வண்ண கழுத்துக்கு" என்று சரணம் ஆரம்பிக்கும் போது, உருட்டலுடன் தபேலா சேர்ந்து கொள்கிறது. "குங்குமத்தின் இதழில்" இன்னொரு உருட்டலுடன் தபேலா நடை மாறி, சரணம் முடிய பல்லவி மீண்டும் வருகிறது.
இம்முறை பெண்குரல் முதலில் வர ஆண்குரல் பதில் சொல்ல 2-ஆவது BGM வருகிறது. பூபாள இசை போல் ஆரம்பித்து புல்லாங்குழல் இசை வந்து, பின்னர் வீணையின் நாதம் வந்து பின்னர் வயலின்கள் "ஆராரிரோ" என்ற பாடலின் முடிவில் வரும் ராகத்தை வாசிக்க, 2-ஆவது சரணம், "முத்துச்சிப்பி திறந்தது" என்று ஆரம் பிக்கிறது. ஆண்குரலும் பெண்குரலும் மாறி மாறிப் பாட - "அங்கே தென்பொதிகை" - என்ற வரியில் இரு குரல்களும் இணைந்து ஒருவரையொருவர் தாலாட்ட தபேலாவின் முத்தாய்ப்புடன் முடிகிறது பாடல்.
குரல்கள்:
  1. TMS
கண்ணை மூடிக்கேட்டாலும் சிவாஜி கணேசன் பாடுவதைப் போலவே ஒலிக்கிறது T.M செளந்தரராஜனின் குரல். கிட்டப்பா சின்னப்பா, உடையப்பா, தியாகராஜ பாகவதர் T.R.மகாலிங்கம் போன்ற ஹைபிட்ச் நாடகக்குரல்களின் வரிசையில் அதன் கடைசி வாரிசுக்குரலாக வந்து மறைந்தது TMS-ன் குரல். எட்டுக்கட்டையில் எந்த சிரமமோ பிசிறோ இல்லாத கம்பீரக்குரல் TMS-ன் குரல். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு இன்னும் பெருமை.
மேடை நாடகங்களில் மைக் இல்லாமல் பாடியதால்  மக்களுக்கு கேட்க வேண்டும் என்பதால் ஹைபிட்ச்சில் பாடினார்கள். ஆனால் பின்னர் வந்த பல மெலோடியஸ் மெல்லிசைப் பாடல்களிலும் அவர் குரல் இனிமையாகவே ஒலித்தது. TMS -ல் எனக்குப்பிடித்தது பாவமும் உச்சரிப்பும் தான்.  
TMS-க்கு ஜோடியாக வருவது நம் ஜானகியின் குரல். TMS குரலோடு இணைந்தும் இழைந்தும், குழைந்தும் வரும் ஜானகியின் குரல், இந்தப்பாடலில் மிகவும் இனிமையாக ஒலிக்கிறது. குரலில் அன்பு, காதல், வெட்கம் மயக்கம், என்று அனைத்தும் குழைத்த கலவையாக ஒலிக்கிறது. மேலும் ஒரு திருமணமான பரவசத்தில் இருக்கும் சிறு பெண்ணின் குரலாக அமைந்துள்ளது ஜானகியின் குரல். தன் குரல் மூலம் நடிப்பதில் ஜானகிக்கு இணை யாருமில்லை.
பாடல் வரிகள்:

அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

  1. கவிஞர் புலமைப்பித்தன்
பாடலை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்ஜியாருக்கு பல பாடல்களை எழுதிப்புகழ் பெற்றவர் இவர். பழைய பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களில் எதுகை மோனைகள் தூக்கலாக இருப்பதோடு கவிதைத்தனம் நிறைந்திருக்கும்.  சில சமயம் எதுகை மோனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதிகம் அர்த்தமில்லாத சம்பந்தமில்லாத அல்லது பொருந்தாத வார்த்தைகளும் விழுந்துவிடும்.
இந்தப்பாடலில் துள்ளிக்குதிக்கும் அளவுக்கு வரிகள் இல்லாவிட்டாலும், ராகத்திற்கு பாந்தமாக உட்காருகிறது பாடல்வரிகள். அளவு மீறாத விரசமும் பாடலில் ஒளிந்து இருக்கிறது.
ராகம்:
ராகதேவன் இளையராஜாவின் இந்தப்பாடல் 'மாயா மாளவ கெளளை' என்னும் ராகத்தில் சுகமாக அமைந்த பாடல்.  இளையராஜா இந்த ராகத்தை பல பாடல்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.
அதில் சில பாடல்களை கீழே தருகிறேன்.   
அந்தி வரும் நேரம் - முந்தானை முடிச்சு
பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோவில் கிழக்காலே
பூங்கதவே தாழ்திறவாய் - நிழல்கள்

மதுர மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊர் பாட்டுக்காரன்.

14 comments:

  1. அருமை..அருமை.. நண்பர் alfy அவர்களே.. அந்த இசையும்/பாடல் வரிகளின் இனிமையும் உங்கள் எழுத்தில் இன்னும் சுவை பெறுகிறது..

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி --> அவன் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நட்புக்கும் சுட்டிக்காட்டிய தப்புக்கும் நன்றி நண்பா .

      Delete
  2. ஆல்பி சார்

    நல்ல பாடல் . ஆனால் எம்.எஸ்.வி . யின் இசைச் சாயல் தெளிவாகத் தெரியும் . இளையராஜா பாடல் என்று சட்டென சொல்ல முடியாது . நீங்கள் வர்ணித்த விதம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. சார்லஸ் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .வருகைக்கு நன்றி

      Delete
  3. Very nice song.TMS sing little nit loud.i think SPB is right choice .

    ReplyDelete
    Replies
    1. சிவாஜிக்கு TMS என்பது அப்போது எழுதப்படாத விதியாய் இருந்தது.
      Dr. சிவா படத்தில் யேசுதாஸ் சிவாஜிக்காக பாடிய "மலரே குறிஞ்சி மலரே" பாடலில் சிவாஜி வாயை அசைக்கமாட்டார் .ஒரு வேளை மக்கள் ஏற்றுகொள்வார்களா என்ற அச்சம் இருந்திருக்கலாம் .
      வருகைக்கு நன்றி ராஜதுரை அருள்ராஜா .

      Delete
  4. நண்பர் ஆல்பி,

    இளையராஜாவுக்கு சீனியர்களான சங்கர் கணேஷ் எம் ஜி ஆரின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்த பிறகும் கூட சிவாஜி படத்திற்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் இசை அமைக்க வந்த அடுத்த ஆண்டே (77) இளையராஜாவுக்கு சிவாஜியின் தீபம் பட வாய்ப்பு கிடைத்தது அவருக்கு வணிக அளவில் மிகப் பெரிய அந்தஸ்தை அளித்தது. தீபம் படத்திற்குப் பிறகே பல தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள் என முரளி ஸ்ரீனிவாஸ் என்பவர் (தமிழ்த் திரைப்படங்களைப் பற்றித் துல்லியமாகத் தகவல்கள் சொல்பவர்) குறிப்பிடுகிறார். அது உண்மையே. நீங்கள் கூறியது போல சிவாஜிக்கு இறங்கு முகம் இளையராஜாவுக்கு ஏறு முகம் அப்போது. சிவாஜி கூட இந்த காலகட்டத்தில் தனக்குப் பிடித்த பாடலாக செந்தூரப்பூவே பாடலைக் குறிப்பிடுவது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவின் வளர்ச்சிக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுத்ததற்கு நன்றி காரிகன் .

      Delete
  5. டி எம் எஸ்ஸின் குரலுக்கு சிவாஜியின் வாயசைப்பு மிகக் கச்சிதமாகப் பொருந்தும். பார்ப்பவர்களுக்கு சிவாஜி தானே பாடுவது போலத் தோன்றும்.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  6. Write about ilayaraja's BGMs..........

    ReplyDelete
    Replies
    1. Yes, I am writing about them in all the articles.I will write more about them.
      Thanks for your suggestion Vijayakumar.

      Delete
  7. அருமையான பாடலும் இசையும் இன்னும் மறக்கமுடியாத படம்! பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம்.

      Delete