Monday, March 31, 2014

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் பேசிய உரை !!!!!!!!! .


தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நியூஜெர்சி  தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாணமாலை பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு “குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான்”, என்ற தலைப்பில் பேசிய முழு உரையை இங்கு தருகிறேன் .

குடும்ப வாழ்வு  சுவைப்பது அமெரிக்காவில்தான் !!!!!!!!!!!

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
           பட்டிமன்றத்தமிழும் பாப்பையா பழக்கம்
           வாங்க பழகலாம் - தமிழ் பேசி.

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்
கவிபாடும் - இது பழமொழி.
           புதுமொழி
பாப்பையா வீட்டுப் பசுமாடும்
பட்டிமன்றம் பேசும்.

1981-ல் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்த்துறைத்தலைவராக இருந்த ஐயா அவர்கள் அன்று எப்படி இருந்தார்களோ, 30 வருடங்களுக்குப்பின்னும் அப்படியே இருக்கிறார்.  கன்னித்தமிழ் பேசும் கதாநாயகன் அல்லவா. அதனால்தான் அப்படியே இளமை குன்றாமல் இருக்கிறார்.ஐயா வணக்கம்.
சின்னத்திரையில் சிலிர்த்தவர் இப்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார். எங்கள் ராஜா.
-எங்கள் குழுவுக்கு இன்று ராஜாவாக வந்திருக்கிறார், நன்றி.
-நான் உங்கள் மந்திரியாக வந்திருக்கிறேன்.
-குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான் என்று கலக்க வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு நன்றியோடு Green Card Application வாங்கி வந்திருக்கிறேன்.  வணக்கம்.

அன்றொரு நாள் முண்டாசு கட்டிவந்தான் பாரதி. இன்று சேலைகட்டி வந்திருக்கிறது  பாரதி கண்ட புதுமைப்பெண். எங்கள் கண்கண்ட பட்டாசுப் பேச்சாளர் பாரதி பாஸ்கர். அவர்களுக்கும் அவர்கள் குழுவுக்கும் வணக்கம்.ஐயா எதிர்க்கட்சியை மதிக்கும் கட்சி எங்கள் கட்சி.

பூலோக சொர்க்கமான 2 லட்சம் திருமணங்களை எட்டும் கல்யாண மாலையின் பிதாமகர் புன்னகை மன்னன் மோகன் அவர்களே, மீரா நாகராஜன் அவர்களே, நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் கவிதா, உஷா, அமுதா, அவர்களே அவையோரே பெரியோரே அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம்.

பேசி அமர்ந்திருக்கும் திரு.வரதராஜன் என்னுடைய நண்பர்.அம்மா கட்சிக்கு போனால் டாடா sumo கிடைக்கும் என்று நம்பி   போய் விட்டார் போல இருக்கிறது. நான் அம்மா என்று சொன்னது  பாரதி பாஸ்கர் அவர்களை. நண்பர் வரதராஜன் இந்தியாவிற்கு வராத ராஜன்.பதிநான்கு வருடங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 14 வருடங்கள் இங்கு வாழ்வதை ஏதோ வனவாசம் வந்ததுபோல் செல்கிறார். அது வனவாசமல்ல முற்றிலும் டாலர் பணவாசம் என்பது எனக்குத்தெரியும், அவருக்கும் தெரியும். ஆனால் மறைத்துப் பேசுகிறார்.

அவருடைய மனைவி இங்கு இருக்கிறார்கள், வந்திருக்கிறார்கள். மகன், மருமகன் என்று முழுக்குடும்பமும் இங்கே இருக்கிறது. மொத்தக்குடும்பமும் இங்கே இருக்கும்போது, குடும்ப வாழ்வு சுவைப்பது இந்தியாவில் என்கிறார். இவர் எந்தக்குடும்பத்தைப் பற்றி சொல்கிறார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது  ஐயா.

ஐயா, ஆண்களில் 2 வகை - மனைவிக்கு அடிமை ஒரு வகை, மனைவியை அடிமைமைப்படுத்துவர் இன்னொரு வகை.  நான் இதில் இரண்டாவது வகை. ஐயா, எனக்குத்திருமணமாகி முதல் பத்து வருடங்கள் இந்தியாவில்தான் இருந்தோம். அங்கே இருந்தபோது என்னைப்பற்றி முழுதும் அவளுக்குத்தெரியும். எனக்கு என்ன பிடிக்கும், எதை விரும்பிச்சாப்பிடுவேன்,எது பிடிக்காது, எதற்கு கோபம் வரும் என்று அனைத்தும் தெரியும். ஆனால் எனக்கு அவளைப்பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை. அப்போது ஆணாதிக்க சமுதாயத்தின்  மொத்த பிரதிநிதியாய் இருந்தேன்   ஐயா.

ஒரு நாள் என் மூத்த மகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது, கால்கள் வீங்கி கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். பாசமாக நான் வளர்த்ததால், மோசமாக வளர்ந்துவிட்டாள் போலிருக்கிறது. தான் குடித்துக்கொண்டிருந்த காஃபியில் சர்க்கரை பற்றவில்லை என்று என்னிடம் கெஞ்சினாள்.நானும் போனால்போகிறது, என்று வேண்டாவெறுப்புடன், அம்மாவுக்குத் தெரியாமல் சமையலறைக்கு சென்றேன். தலையே சுற்றிவிட்டது. எது எந்த இடத்தில் இருக்கிறது என்று மட்டுமல்ல, எது எந்தப் பொருளென்றும் தெரியவில்லை.


  ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தேன். வாயில் வைத்ததும் வாந்தி எடுத்துவிட்டாள். நான் மசக்கை வாந்தி என்று நினைத்தேன். 

அடுத்த கடைசி பகுதி வரும் திங்கள்கிழமை வெளி வரும்

4 comments:

  1. அதானே 'முன்னே பின்னே' சமையலறைக்கு போய் இருந்தால் தானே...

    சரியான இடத்தில் தான் தொடரும் போட்டுள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. .நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. ஆஹா.....

    ‘என் சமையலறையில் நீ உப்பா சர்க்கரையா?’ :))))

    சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு கலக்கிட்டீங்களா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.அடுத்த திங்கள்கிழமை தெரிந்துவிடும் வெங்கட்.
      .

      Delete