சிவகங்கைக்கு கிழக்கே சுமார் 16 கி,மீ தொலைவில் உள்ளது காளையார்
கோவில்.
பாடல் பெற்ற தலமாகிய இந்தக் கோவிலின் மூலவர் பெயர்
காளீஸ்வரர். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி
நாயனார், இவரை "காளை" என்று குறிப்பிட்டதால்,
இவர் காளையார் என்று அழைக்கப்பட, இந்தக் கோவில் "காளையார்
கோவில்" என்று வழங்கப்படுகிறது.
முன்னால், கம்பீரமாக நிற்கும்
ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம்
கொண்டது. கலை அழகுடன் மிக அழகாக இருந்தது. நடுவில் மண்டபம் கொண்ட ஒரு அழகான
தெப்பக்குளம் இருக்கிறது. இதன் பெயர் "ஆனைமடு" என்பது. இந்திரனின்
வெள்ளை யானையாகிய "ஐராவதம்" வந்து இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியது
என்ற ஐதீகத்தால் இந்தப்பெயர்.
இங்குள்ள மூன்று சந்நிதிகள் இறைவனின் காத்தல், பாதுகாத்தல்
மற்றும் முடித்தல் என்ற மூன்று செயல்களைக்குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மூலவருக்கு
காளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் என்ற
மூன்று பெயர்களும் சக்திக்கு ஸ்வர்ணாம்பிகை, செளந்தர
நாயகி மற்றும் மீனாட்சி என்ற மூன்று பெயர்களும் வழங்கப்படுகின்றன.
தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பும்
கோபுர அமைப்பும் உலகில் எங்கும் காண முடியாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த
இடம் ஒரு முக்கிய கோட்டையாகும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இங்குதான் ராஜா
முத்து வடுக நாதத் தேவர் உயிரிழந்தார். அதன்பின் மருதுபாண்டியர், ராணி வேலு
நாச்சியாருடன் தப்பி ஓட, ஆங்கிலேயப்
படைகள் இந்தக் கோவிலைக் கொள்ளையிட்டு 5000 பகோடாக்கள் (தங்கக்காசுகள்
)மதிப்புள்ள கோவில் நகைகளைக் கவர்ந்து கொண்டனர். எனவே இந்தக்
கோவில் சிலகாலம் மூடப்பட்டுக் கிடந்தது.
இது, பின்னர் தேவகோட்டை ஜமீன்தார்
அவர்களால் பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்த
தேவகோட்டை ஜமீந்தார் AL.AR.RM அருணாச்சலம் செட்டியார் சந்நியாசம் வாங்கி காளையார்கோவில் வேதாந்த மடத்திலேயே
தங்கிவிட்டார். பின்னர் அவர் "ஸ்ரீலஸ்ரீ ஜமின்தார் அருணாச்சல ஞான தேசிக ஸ்வாமிகள்" என்றழைக்கப்பட்டார். அவருடைய சமாதி அந்த
மண்டபத்தின் முன் இருக்கிறது. ஸ்ரீ
என்றால் திருமிகு என்று அர்த்தம் ஸ்ரீலஸ்ரீ என்றால் ஆயிரம் திருவுக்குச்சமானம்.
இது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்ததாயினும் அவர்களுடைய அனுமதியின்படி, “தேவகோட்டை
ஜமீந்தார் கட்டளை" என்று ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து
சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனை பரம்பரை பரம்பரையாக தேவகோட்டை
ஜமீந்தார்கள் நடத்தி வருகின்றனர். தற்போதைய ஜமீந்தார் AL.AR.RM சின்னவீரப்பன் செட்டியார் இந்தக் கட்டளையை கவனித்துவருகிறார்.
இந்தக் கோவிலில் தைப்பூச விழாவில்
நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதென்று சொன்னார்கள். ரதத்தையும்
பார்த்தபோதுதான், பள்ளியில் "காளையார் கோவில் ரதம்"
என்ற கோவிமணி சேகரன் எழுதிய சிறுகதையைப் படித்தது எனக்கு ஞாபகம் வந்தது. வைகாசியில் நடக்கும் தெப்பத்
திருவிழாவும் புகழ் பெற்றது. காரைக்குடியில் கோவில் பார்க்காத குறையும் நீங்கியது.
வனராஜூக்கு நன்றி சொல்லி, கோவிலின் முன் விற்ற
இளநீரை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். "என்ன வனா, மதுரைக்குத் திரும்புகிறோமா", என்று
கேட்டேன். "போகும் வழியில் இன்னுமொரு இடம் இருக்கிறது. அதனைப்
பார்த்துவிடலாம் என்றார். அது எந்த இடம் என்று கேட்டபோது, 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பேராலயம் இருக்கும் "இடைக்காட்டூர்"
என்றார். வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்.
காரை நிறுத்திவிட்டு,
சிறிது தூரம் நடந்தால், வருகிறது இடைக்காட்டூர்
"புனித இருதய நாதர் ஆலயம்". உலகமெங்கிலும் பல கத்தோலிக்க ஆலயங்களைப்
பார்த்திருந்தாலும், இந்த கத்தீட்ரல் மிக வித்தியாசமான
வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு தேசத்திலிருந்து வந்த
பாதிரியார் ஃபெர்டினாண்ட் செலி S.J.(Father Ferdinand Celle.S.J) அவர்களால் 1894-ல் கட்டப்பட்டது. இது காதிக் (Gothic) கட்டடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு
நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் பேராலயத்தின் (Reims Cathedral) அதே வடிவத்தில் கட்டப்பட்டதாகும். இது தேவதைகளால் கட்டப்பட்டது என்ற
நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் 153 ஏஞ்சல்
வடிவங்களை இங்கு அமைத்திருக்கிறாராம்.
இதில் 200 வகையான செங்கல்கள், ஓடுகள், டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டெயின் கிளாஸ் என்று சொல்லப்படுகிற வண்ணக்கண்ணாடிகளால் அமைந்த பெரும்
ஜன்னல்களும், அவற்றில் வரையப்பட்டிருந்த வெவ்வேறு பைபிள் நிகழ்வுகளும் பிரமிப்பை
ஊட்டின. முக்கியமாக அதன் கண்கவர் வண்ணங்கள், சூரிய ஒளியில் தகதகத்தன. உள்ளே ஸ்டக்கோ (stucco)
வால் செய்யப்பட்ட புனிதர்கள் மற்றும் ஏஞ்சல்கள் வண்ணமயமாக
இருந்தன. குறிப்பாக இயேசு நாதரின் புனித இருதயத்தை சூழ்ந்திருக்கும் அவரின் தந்தை
ஜோசப், தாய் மரியாள் சூழ்ந்த
இந்தப் புனித குடும்பத்தின் உருவங்கள் தங்க நிற கில்ட்டால் வண்னம் தீட்டப்பட்டு,
ஃபிரென்ச் நாட்டின் கலை நுணுக்கத்திற்கு சாட்சி பகர்ந்தன.
ராமநாதபுர வரலாற்றில் இந்த ஆலயம்
முக்கிய பங்கு வகிக்கிறது. கிழவன் சேதுபதியின் மருமகனான,
நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டையத்தேவனை, பாதிரியார் ஜான் டி பிரிட்டோ (St. John de Britto) கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற, கிழவன் சேதுபதி பாதிரியாருக்கு மரணதண்டனை
விதிக்கிறான். இந்த நிகழ்ச்சி ஸ்டெயின் கண்ணாடியில்
சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.
பின்னர் போப் ஆண்டவர் அவர்களால்
உயிர்த்தியாகம் செய்த பாதிரியார் ஜான்
பிரிட்டோவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் பலிபீடம் (Altar)
மிக அழகாக வடிவமைக்கப்பட்டு,கிறிஸ்துவத்தின்
மையக் கருப்பொருளான தந்தையாகிய இறைவன், மைந்தனாகிய
இறைவன்,
தூய ஆவியானவரான இறைவன் ஆகிய மூவரும் ஒருவரே என்பதை விளக்கும்
வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பளிச்சிடும் தங்க வண்ணத்தில் சுற்றிலும்
ஏஞ்சல்கள் தகதகத்தன.
இப்படி ஒரு மூலையில் இப்படி ஒரு
பேராலயம் கட்டப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தமிழ்நாடு தன்னுடைய
உயர்வான செறிவான நீண்ட வரலாற்றில் எத்தனை எத்தனை நுணுக்கங்களையும்,
ரகசியங்களையும், அதிசயங்களையும்
புதைத்து வைத்திருக்கிறது என்பதை நினைத்து அசந்து போனேன்.
புன்சிரிப்பு மாறாத வனராஜிக்கு நன்றி சொல்லி, மதுரை வந்து
சேர்ந்தோம். இந்ததடவை என் மதுரைப் பயணம் மறக்க முடியாத
நிகழ்வுகளையும், நினைவுகளையும் கொடுத்தது.
சிவகங்கை
பயணம் முற்றியது .
விரைவில்
எதிர்பாருங்கள் "துருக்கி பயணம்".
பின்குறிப்பு:
குறுகிய காலத்தில் பெருகிய மனதோடு 50,000 ஹிட்கள்
பெற உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் என்
உள்ளங்கனிந்த நன்றிகள்.
50000 ஹிட்சை தாண்டியதற்கு வாழ்த்துக்கள். படங்களும் பயண விவரங்களும் அருமை. முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.
ReplyDeleteநன்றி முரளிதரன் .
Deleteஅழகான வர்ணனை + அருமையான படங்களுடன் தகவல்கள்... அற்புதமான கோயில் + பேராலயம்... பலமுறை சென்றதுண்டு... ஹிட் - மென்மேலும் பெருகவும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteசிவாலயம், தேவாலயம் இரண்டுமே மிக அருமை. சிவகங்கை சில முறை சென்றிருந்தாலும் இவ்விடங்கள் சென்றதில்லை. உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியதோடு சரி.......
ReplyDeleteஉங்கள் பதிவு மூலம் இவ்விடங்களைப் பார்த்த உணர்வு. நேரிலும் பார்க்கும் எண்ணம்.
த.ம +1
நன்றி வெங்கட் நாகராஜ்.
Delete