Monday, March 10, 2014

சிவகங்கை பயணம் பகுதி 1: விக்கு விநாயக்ராமின் விக்கு !!!!!!!!!!


              காரைக்குடி பயணத்தை நல்ல படியாக முடித்த மகிழ்ச்சியோடு, நேராக மதுரை கோணார் கடைக்குச் சென்று, மட்டன் தோசையை ஒரு பிடி பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று முழுவதும் திகட்டத்திகட்ட பல இடங்களை பார்த்த திருப்தியோடு, படுக்கைக்குச் சென்றேன்.     மருதுபாண்டியும், தொண்டைமானும், சேதுபதியும் மாறி மாறி நினைவில் வந்து போக, நாட்டைக் கொடுக்குமளவுக்கு இந்தக் "கதலி  நாச்சியார்" எவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டே உறங்கிப்போனேன்.
          அடுத்த நாள் காலையில் எட்டுமணிக்கு டான் என்று வந்து சேர்ந்தார் வனராஜ். நான் அமெரிக்கன் கல்லூரி “வாஷ்பர்ன் ஹாலில்" தங்கியிருக்கும்போது, வனா "வேலஸ் ஹாலின்" ஜெனரல் செக்ரட்டரி. எங்களுடைய கல்லூரி இசைக்குழுவில் SPB குரலில் பாடுபவர். இப்போது "மனிதம்" என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் சிறந்த சமூக சேவை செய்வதோடு, ஃபோர்டு நிறுவனத்தின் விருதைப்பெற்று, அசால்ட்டாக அடிக்கடி அமெரிக்கா வந்து செல்பவர். நியூயார்க் வந்தால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் வீட்டில் வந்து தங்குவார்.
vanaraj in Columbia University, New York
          அவருடைய மாருதி ஜென்னில், அவர் மனைவி முன்னால் அமர்ந்து கொள்ள, நானும் வனாவும் பின்னால் உட்கார்ந்து கொண்டோம். "ஓ அக்காவும் நம்மோடு வருகிறார்களா", என்று கேட்டபோது வனராஜ் சொன்னார்.
          “ஆல்ஃபி, உனக்குத்தான் தெரியுமே, இவள் மானாமதுரையில்தான் இன்னும் வேலை செய்கிறாள். டெய்லி பஸ்ஸில் போய்விடுவாள். நாம் அந்தப்பக்கம் போவதால் வந்து ஒட்டிக்கொண்டாள்", என்றார்.
          அப்போதுதான் ஞாபகம் வந்தது, வனராஜ் மானாமதுரை சி.எஸ்.ஐ பள்ளியின் ஹாஸ்டலில் வார்டனாக இருக்கும்போது, அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த அக்காவை கடினமான மனப்பயிற்சி செய்து காதல் கடிமணம் செய்து கொண்டார்.
வனராஜ் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பவர். பல பழைய காரியங்களை பேசிச்சிரித்துக் கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. வண்டி மானாமதுரை சென்றடைந்தது. டிரைவர் நடுத்தர வயதில் அமைதியானவர். அக்காவை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு, கிளம்பினோம்.
          மானமதுரையின் மண்பாண்டங்கள் மிகவும் புகழ் வாய்ந்தது என்றார் வனா. மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் மற்றும்  அரண்மனைகளைப் பார்க்க வந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மண்பானை சட்டிகளைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன் என்று மனதில் நினைத்தாலும், ஒன்றும் பேசாமல் அவருடன் சென்றேன்.

          அவர் அழைத்துச்சென்றது, செம்மண் பொருட்களை செய்துவிற்கும் கூட்டுறவுச் சங்கத்திற்கு. அங்கு போனபின்தான் தெரிந்தது, அது எவ்வளவு பாப்புலர் இடமென்று. சற்று நேரத்தில் ஒரு வெள்ளைக்காரக் கும்பல் வந்தது. பின் வடநாட்டார்.  
          அங்கு செய்யப்படும் டெரக்கோட்டா வகை அலங்கார சிற்பங்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவை முதல் பெரியவை வரை திடமாக இருந்தன. குறிப்பாக குதிரைகள் மிக அழகாக இருந்தன, வாங்கிக்கொண்டேன். அது தவிர பூச்செடிகள் வைக்கப்பயன்படும் சட்டிகள் வெவ்வேறு சைசில் இருந்தன.

          அதுமுடித்து இன்னொரு இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்குதான் கடம் செய்கிறார்கள். மானாமதுரை கடம் என்பது உலகத்திலேயே நம்பர் ஒன்னாம். ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறது. நம்ம விக்கு விநாயக்ராம்  கடம் வாசித்துத்தான் உலகப்புகழ் அடைந்தார். 
விக்கு விநாயக்ராம்
கிராம்மி  அவார்ட் கூட வாங்கியிருக்கிறார்.அவர் தலையைப்பார்த்தா விக்கு வைக்கிற மாதிரி தெரியலயே ன் அவர் பெயர் “விக்கு விநாயக்ராம் ” என்று வந்ததுன்னு கலிபோர்னியா விசு கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. அவரும் அவர் மகன்களும் அங்குதான் கடம் வாங்குகிறார்களாம். மானாமதுரையின் செம்மண்ணுக்கு இப்படி ஒரு பெருஞ்சிறப்பு இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. மண்பானையில் எப்படி இப்படி கிண்கிணி நாதம் எழுகிறது என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அவர்களைக் கேட்டவுடன் தான் விஷயமே புரிந்தது. நல்ல ஜாதி களிமண்ணில்  (இதுலயும் ஜாதியா?) சிறிது வெங்கலம் அல்லது தாமிரம் (Copper) மற்றும் சிறிதளவு இரும்பும் கலந்து தயார் பண்ணுகிறார்கள். மற்ற சில இடங்களிலும் இது தயாரிக்கப் பட்டாலும் உலகத்திலேயே சிறந்த நாதம் வருவது மானாமதுரை கடத்தில் தானாம். அதிகப்பேர் பயன்படுத்தாதலால் இதனை தயாரிக்கும் குடும்பங்களின் வாரிசுகள் வேறு வேறுவேலைக்குச் சென்றுவிடுவதால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தத் தொழில் அப்படியே அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.
          அடுத்து சிவகங்கைதான், ஆனா சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்றார் வனா. திரும்பவும் சி.எஸ்.ஐ வளாகத்தின் உள்ளே சென்று வனாவின் மனைவியின் சகோதரி வீட்டிற்குச் சென்றோம். (இந்த அக்காக்கள் தொல்லை தாங்க முடியலப்பா) அவர்களும் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்கள்.
          "பள்ளி நாளில் அவர்களை எதற்கு தொந்தரவு செய்தீர்கள்," என்று வனாவைக் கேட்டேன்.
                      அவர் வீட்டில் சாப்பாடு சுவை நன்றாகவே இருந்தது. ஆட்டுக்கறியை மிகவும்  சின்ன சின்னதாக நறுக்கி, முருங்கை மற்றும் கத்தரிக்காய் போட்டு குருமா வைத்திருந்தார்கள். மணமாக நன்றாக இருந்ததால் ஒரு பிடி பிடித்துவிட்டு, நன்றி சொல்லிக் கிளம்பினோம்.
          போகும் வழியில் வனாவின் மனிதம் அலுவலகத்திற்குச் சென்று அங்கு வேலை செய்யும் சமூகப் பணியாளர்களுடன் சிறிது கலந்துரையாடல் செய்து சமூகப் பணியில் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். வனராஜ் ஒரு சில வேலைகளை முடித்துக் கொண்டு வந்தார்.
          கார் நேராக சிவகங்கை செல்லும் சாலையில் விரைந்தது. சிவகங்கை மறவர் சீமைக்குச்  செல்வதை நினைத்து என் தேகம் சிலிர்த்தது.

தொடரும் 


11 comments:

 1. இந்தத் தொழில் மட்டுமா...? பல தொழில்கள் மறைந்தே விட்டன... ம்...

  கடினமான மனப்பயிற்சி என்பது படத்தில் புரிகிறது... ஹா... ஹா... வனராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல்லார் அவர்களே .

   Delete
 2. அண்ணே, அருமையான கலைய பத்தின்ன இடுகையின் மத்தியில் "விசுக்கு பதில் இல்ல சொல்லி" ஏறி மேல போற ஆத்தா என் மேல வந்து இரு ஆத்தான்னு" செஞ்சி புட்டிங்களே. அது சரி, தலையில விக் இல்ல, ஒரு வேல அடிக்கடி விக்கல் வர பார்ட்டியா இருக்குமோ?

  ReplyDelete
  Replies
  1. தம்பி விசு , நீ சொல்ற மாதிரி இருந்தா விக்கல் விநாயக்ராம் அப்படின்னுதான வந்திருக்கும் ?

   Delete
 3. //ஆட்டுக்கறியை மிகவும் சின்ன சின்னதாக நறுக்கி, முருங்கை மற்றும் கத்தரிக்காய் போட்டு குருமா வைத்திருந்தார்கள்.//

  இது மதுரை ரெசிப்பி என நினைக்கிறேன் சின்ன வயதில் நான் விரும்பி சாப்பிடுவேன் இது இடியாப்பம,சப்பாத்தி, ஆப்பம் போன்றவைகளுடன் சாப்பிடும் போது மிக சுவையாக இருக்கும். ஆனா இதே ரெசிப்பியை ஆட்டுக்கறி இல்லாமல் 2 நாட்களுக்கு முன்பு செய்தேன்.. ஆட்டுக்கறியை வீட்டிற்கு கொண்டு வந்தால் எங்க வூட்டும்மா என் தோலை உரிச்சுவிடுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. அக்காவுக்கு தெரியாம இந்தப்பக்கம் வாங்க.
   என் வீட்டம்மா இப்பவும் நான் சொல்றதை கேட்கிறாங்க , உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, ஜமாய்ச்சிரலாம்.

   Delete
 4. அட அட அட ஒரு மீன் சட்டி வாங்காமல் வந்துட்டீங்களே அண்ணாச்சி. நீங்க மண் பானை கடைக்கு போவது தெரிஞ்சிருந்தால் சொல்லியிருப்பேன். நம்ம மீன் சட்டி கொஞ்சம் பழசா போச்சுங்க...

  ReplyDelete
  Replies
  1. அட போம்மா தங்கச்சி , முன்னாலேயே சொல்லி இருந்தா , வாங்கிட்டு வந்திருப்பேன்ல .இப்ப சட்டியும் போச்சு., குழம்பும் போச்சு

   Delete
 5. //(இந்த அக்காக்கள் தொல்லை தாங்க முடியலப்பா) அவர்களும் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்கள்.// டீச்சரான நான் இதை வன்மையா கண்டிக்கிறேன்.
  சும்மா கலாய்ச்சேன் சார்.
  கடத்தில் இவ்ளோ மேட்டர் இருக்கா?!
  //தே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருந்த அக்காவை கடினமான மனப்பயிற்சி செய்து காதல் கடிமணம் செய்து கொண்டார். // செம கவுன்ட்டர் !!

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ இங்க ஆசிரியை கூட்டணி இருப்பது தெரியாம போச்சே .

   Delete
 6. சிறப்பாய் தொடங்கி இருக்கிறது சிவகங்கை சீமை பயணம்......

  தொடர்ந்து பயணிப்போம்.....

  ReplyDelete