Thursday, March 20, 2014

முத்து காமிக்ஸ்:ஆதலினால் அதகளம் செய்வீர் !!!!!!!!!!


லார்கோவின் சாகசம்
          வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கியவர் என் தந்தை. ஆறாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி, வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அம்புலி மாமா, (வேதாளர்) கல்கண்டு,  கோகுலம் (பலே பாலு) மஞ்சரி ஆகிய பத்திரிக்கைகள் பழக்கமாயின.
          கொஞ்சம் முன்னேறி தமிழ்வாணன் அறிமுகமானார். துப்பறியும் சங்கர்லாலை மறக்கமுடியுமா? அதன்பின் முத்து காமிக்ஸ். தினமும் அப்பா கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்து, தேவதானப்பட்டி மாணிக்கம்பிள்ளை ஏஜென்டிடம் முதலிலேயே சொல்லி  வைத்தால்தான் கிடைக்கும். பின்னர் சுஜாதா வந்தார். அப்புறம் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, லாசாரா, அசோகமித்திரன், கி.ரா.,சுந்தர ராமசாமி,  வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா என்று வாசிப்பு பறந்து விரிந்தாலும் இன்று வரை சுவை குறையாமலிருப்பது சுஜாதாவும் முத்து காமிக்சும்தான். இரண்டுமே மறுவாசிப்பிலும் திகட்டாதவை.
Sujatha 
          அந்தச் சமயத்தில் ஆங்கிலப்படங்களே எனக்கு அறிமுகமாகாத போது, படித்த ஒவ்வொரு முத்து காமிக்சும் ஒரு முழு நீள ஆங்கிலப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும். லைட் ரீடிங்கில்  (Light Reading) காமிக்ஸுக்கு இணை எதுவுமில்லை. ஆங்கில காமிக்ஸில் என்னைக் கவர்ந்தவை எவர்கிரீன் "டின்டின்" காமிக்ஸ். அதன் பின்னர்தான் சூப்பர்மேன், பேட்மேன், ஆஸ்டிரிக்ஸ் எல்லாம். ஆனால் முத்து காமிக்ஸ்தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை  தூண்டியது.
          முத்து காமிக்ஸ், ன் காமிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே வெளியீட்டாளர். அதற்கு போட்டியாக வந்த பொன்னி மற்றும் ராணி காமிக்ஸ், தரத்தில் இதற்குப் பக்கத்தில் வரமுடியாது. இவைகளின் அச்சுத்தரம், சிறந்த மொழிபெயர்ப்பு, அட்டைப் படங்கள், மேலும் அச்சுப்பிழை ஒன்று கூட இல்லாத கவனமான  தயாரிப்பு என்பதால் முத்துகாமிக்சின் தரம் இணையற்றது. முல்லை தங்கராசன் பதிப்பாசிரியராக அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து சுவையான கதைகளை தேர்ந்தெடுப்பதில் தன் தந்தையையும் மிஞ்சிவிட்டார் தற்போதைய உரிமையாளர் விஜயன்.
Muthu Comics Office in Sivakasi
          2 வருடங்களுக்கு முன்னால், மதுரைக்குப் போயிருக்கும்போது, நண்பர் பிரபாவின் காரை எடுத்துக் கொண்டு, சிவகாசிக்குச் சென்று "பிரகாஷ் பப்ளிஷர்" நிறுவனத்தை நேரில் பார்த்து வந்தேன். இன்றும் வெளிநாடு வாழ் ரசிகர்கள் அங்கு வந்து செல்கின்றனர். புத்தக விலைக்கு பல மடங்கு அதிகமாக தபால் செலவு செய்து வரவழைத்துப் படிக்கிறோம். அதோடு முத்து காமிக்ஸின்  பழையனவற்றை பொக்கிமாகவே சேர்த்து வைப்பதோடு, அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.  
          ஆறாவது படிக்கும்போது, காமிக்ஸ் வாங்கக் காசில்லாத சூழ்நிலையில், வீட்டிலேயே என் தம்பி பெயரில் "பாஸ்கர் நூல் நிலையம்" என்று ஆரம்பித்தேன். என் அப்பாவை நச்சரித்து ஜாதிக்காய் பலகைகளை இணைத்து ஊமை ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்து ஒரு சிறு பீரோவைச் செய்து வாங்கினேன். (அவர் மரவேலை செய்யும் சத்தம் அவரை ஒன்றுமே செய்யாது . ஆனால் எங்கள் காதுகள் ஒரு வாரத்திற்கு  சரியாக கேட்காது.)   இதில் உறுப்பினர் ஆக விரும்புவர்கள், ஒரு முத்து காமிக்ஸ் புத்தகத்தை நன் கொடையாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ரூபாய் தர வேண்டும். அதன்பின் ஒரு காமிக்ஸை படிக்க 10 பைசா தரவேண்டும். இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி பல காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ந்தன. அவற்றை நானே பைன்டிங்கும் செய்துவிடுவேன். நிறைய நண்பர்கள் உறுப்பினராகி தந்த காமிக்ஸ் புத்தகங்களாலும், கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களாலும் நூல்நிலையம் நன்றாகவே வளர்ந்தது.
Johny Neero
          முத்து காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களை என்றைக்கும் மறக்க முடியாது.
 இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ மற்றும் அவரின் அழகிய உதவியாளர் ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, மாடஸ்டி பிளைசீ, ஏஜன்ட் காரிகன் இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். 

இவர்களின் ஆங்கில மூல நூல்களையும் பின்னர் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். தற்சமயம் என்னிடம் சுமார் 2000 காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன. 
          முத்து காமிக்சிலிருந்து தற்சமயம் மேகசின் வடிவத்தில் வண்ணத்தில் வெளியிடப்படும் முழுநீள கிராபிக் நாவல்களில் சமீபத்தில் வெளிவந்ததுதான் "லார்கோவின்ச் தோன்றும் "ஆதலினால் அதகளம் செய்வீர்". உரிமையாளர் விஜயன் வெறும்  பதிப்பாளர் மட்டுமல்ல, அவரே ஒரு காமிக்ஸ் ரசிகர். எனவே கதையை தேர்வு செய்வதிலும், சரியான தலைப்பை உருவாக்குவதிலும், அழகான அட்டைப்படத்தை வடிவமைப்பதிலும் அவருடைய உழைப்பு வெளிப்படும்.
          தீடீரென அடித்த அதிர்ஸ்ட்டத்தில் பெரும் பணக்காரனான லார்கோவின்ச், பர்மாவில் மாட்டிக்கொண்ட தன் நண்பனை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் கதை.
          பல எதிர்பாரா திருப்பங்களை உள்ளடக்கிய இந்நாவலின்  மூல ஆசிரியர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிலிப்பே ஃபிராங்க் (Phillipe Franc) அழகான புகைப்படங்கள் போன்ற ஓவியங்களை உருவாக்கியவர் ஜீன் வேன் ஹேம் (Jean Van Hamme)
          மேல்நாட்டு சாகசகங்களை தமிழில் படிக்கும்போது அதன் சுவை தனிச்சுவைதான், நிச்சயமாக ஒரு சிறந்த "ஆக்ஷ ன் திரில்லர்" பார்த்த உணர்வைத்தந்தது.

          முத்து, லயன் மற்றும் தற்போது வந்திருக்கும் சன்ஷைன் லைப்ரரி வெளியீடுகளை வாங்கிப்படித்து இன்புறுங்கள். உங்களை குழந்தைகளாய் மாற்றி குதூகலம் தரும் என்பது நிச்சயம்.

32 comments:

  1. படிக்கும் போது ஏற்படும் பரபரப்பான சுவாரஸ்யமும், சந்தோசமும் தனி...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. அட்டகாசமான பதிவு நண்பரே.


    கடந்த வாரம் நான் உங்கள் பிறந்த ஊர் வழியாக செல்ல நேரிட்டது.

    சோலை ஹால் தியேட்டரில் அப்போது அஜித் நடித்த வீரம் படம் ஓடிக்கொண்டு இருந்தது (சோலை ஹால் உங்களுக்கு நினைவிருக்கிறதா?).

    தொடர்ந்து காமிக்ஸ் பற்றியும் அடிக்கடி பதிவிடுங்கள்.

    சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.
      சோலைஹால் மிகவும் பழைய தியேட்டர் .
      இன்னும் இருப்பது ஆச்சரியம்தான்

      Delete
    2. சோலை ஹால் தற்போது ரெனொவேட் செய்யப்பட்டது என்று அந்த ஊர் நண்பர் சொல்லக் கேள்வி. ஆனால் இதுவரை அங்கே படம் பார்த்தது கிடையாது.

      அப்புறம் இன்னுமொரு விஷயம் - தற்போது லயன் காமிக்ஸ் அலுவலகம் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவன ஆபீஸ் அட்டகாசமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

      அடுத்தமுறை இந்தியா வரும்போது கண்டிப்பாக வருகை தரவும்.

      Delete
    3. நிச்சயமாக வருவேன் . தகவலுக்கு நன்றி கிங் விஸ்வா.

      Delete
  3. சந்தோஷமாக இருந்தது, "பாஸ்கர் நூல் நிலையம்" பற்றி கேள்விப்பட்டு. நானும் முயன்றிருக்கிறேன், ஒரு நூல் நிலையம் அமைக்க, என் சிறு வயதில். தோற்றது தான் மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி .Its not too late even now.

      Delete
    2. அது நல்ல ஐடியா! கட்டாயம் யோசிக்கிறேன்!

      Delete
  4. முத்தான முத்து காமிக்ஸ் ...நெஞ்சம் மறப்பதில்லை .....

    ReplyDelete
    Replies
    1. அது நினைவை இழக்கவில்லை F Xavier.

      Delete
  5. Alfy,
    சிறுவயதில் நானும் எனது சகோதரனும் எங்கள் வீட்டிலேயே ஒரு காமிக்ஸ் லைப்ரரி ஆரம்பித்து, பலர் வந்து காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கி சென்று அதில் பல திரும்பாமலே போய்விட்ட துயர அனுபவம் உண்டு. உங்களுக்கு அவ்வாறு நடக்காதது குறித்து மகிழ்ச்சியே. ரிப் கிர்பியின் ரோஜா மாளிகை ரகசியம், கிஸ்கோ வின் குகையில் ஒரு பெண், காரிகனின் மரணவலை போன்ற அலாதியான காமிக்ஸ் கண்மணிகள் அப்போது தொலைந்து போனவைதான். திரும்ப வரவேயில்லை.

    முத்து காமிக்ஸின் தரம் குறித்த உங்கள் பார்வை மிக உண்மையானது. முத்துக் காமிக்ஸின் அருகிலேயே வரமுடியாதவைகள் ராணி, பொன்னி, வாசு போன்ற காமிக்ஸ் புத்தகங்கள். மாலைமதி, இந்திரஜால் காமிக்ஸ் அதிரடியான மொழிபெயர்ப்புடன் இருக்கும். பதிவுக்கு நன்றி பழைய காமிக்ஸ் நினைவுகளை மீட்டெடுத்தற்காக.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புனை பெயரிலேயே அது தெரிகிறதே .நன்றி காரிகன்.

      Delete
  6. Replies
    1. சத்தியமாக உண்மைங்க.

      Delete
  7. ஹெலோ சார்..

    நானும் அதே தேவதானப்பட்டி. அதே மாணிக்கம் பிள்ளை. அதே முத்து, லயன் காமிக்ஸ் ரசிகன்.

    மிக்க சந்தோசம்.. ஞாபகபடுத்திய பழைய நினைவுகளுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துக்குமரன், உங்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசை.
      email me at alfred_rajsek@yahoo.com

      Delete
  8. பகிர்வுக்கு நன்றி சார். எடிட்டருக்கு புக்ஸ் அன்பளிப்பாக வழங்கியது தாங்கள் தானோ?

    ReplyDelete
    Replies
    1. அன்பு, உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் விஜயனுக்கு நான் எதுவும் புத்தகங்கள் கொடுக்கவில்லை . அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் .

      Delete
    2. பதிலுக்கு நன்றி.
      தங்களின் பயணக் கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளும் அருமை.

      Delete
  9. சிறப்பான பகிர்வு... சிறு வயதில் நானும் இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களை படித்து ரசித்திருக்கிறேன். சில புத்தகங்களை வாங்கவும் செய்தேன். ஆனால் இப்போது படிக்க முடியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.இன்னொரு முறை முயற்சி பண்ணுங்கள்
      , உங்களுக்குப்பிடிக்கும் .

      Delete
  10. இரும்புக்கை மாயாவி, மஞ்சள் பூ மரமம், மறக்க முடியாதவை - அப்படியே VISUALISE பண்ணவைத்தவை. நெஞ்சம் மறப்பதில்லை - சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோது ஒரு கட்டு காமிக்ஸ் வாங்கினேன்

    ReplyDelete
  11. ஹா ! எனக்கும் டின்டின் ரொம்ப பிடிக்கும்!
    பிள்ளைப்பருவம்!!!!:))))))))

    ReplyDelete
  12. சிந்துபாத்தையும், மந்திரவாதி மான்றேகரையும் மறக்க முடியுமா? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே....

    ReplyDelete
    Replies
    1. இந்த நாள் அன்று போல் இல்லையே நண்பனே அது ஏன் ஏன் நண்பனே .

      Delete