Thursday, November 5, 2015

விக்டோரியா மகாராணியின் காதலன் ?????????


Her majesty, Mrs Brown

  நெட் பிலிக்சில் தோண்டி எடுத்த புதையல் போன்ற படம் இது. இது 1997ல் பிரிட்டன் மற்றும் உலகமெங்கும் வெளிவந்தது.

கதைக்களம் :
அரச குடும்பத்திருமணங்கள் காதலுக்காக நடப்பதில்லை. அரசியல் லாபங்களுக்காகவும்  இரு நாட்டின் ஒற்றுமைக்காகவும்  தான் பல திருமணங்கள் நடந்தன. விக்டோரியா மகாராணிக்கும் இளவரசன்  ஆல்பர்ட்டுக்கும் நடந்த திருமணமும் அப்படிப்பட்ட ஏற்பாட்டில் நடந்த திருமணம் என்றாலும், திருமணத்திற்குப்பின் இந்த இருவரும் மனமொத்து மகிழ்ச்சியுடன் ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்தனர். உலகின் பல அரச தம்பதிகளில் இவ்வளவு நெருக்கமாய் வாழ்ந்தவர்கள் அன்றுமில்லை, இன்றுமில்லை.
Price Albert
இந்த சமயத்தில் 1861ல் இளவரசன் ஆல்பர்ட் தனது 42 ஆவது வயதில் , டைஃபாய்ட் ஜுரத்தால் திடீரென்று இறந்துவிட, விக்டோரியாவால் அந்த இழப்பைத் தாங்கமுடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருட காலம் விக்டோரியா எந்த விழாவிலும் கலந்துகொள்ளவில்லை, வெளியில் தலைகாட்டவில்லை, தன்னுடைய சோக உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை.
Queen Victoria
இந்த சமயத்தில் மகாராணியின் அரண்மனையில் இருந்த பணியாளர்கள், எப்படியாவது மகாராணியின் மூடை மாற்ற ஸ்காட்லாந்திலிருந்து ஜான் பிரவுன் (John Brown)என்பவரை வரவழைத்தனர்.
ஜான்பிரவுன் வெகு சீக்கிரத்திலேயே விக்டோரியாவின் நம்பிக்கைக்கு உகந்த நண்பனாக மாற, விக்டோரியா தன்னுடைய துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறாள்.
ஜான்பிரவுன் மகாராணியின் மூடை மாற்றும் விதத்தில் ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரல் (Balmoral) எஸ்டேட்டுக்கு அழைத்து வந்து, அங்கு மகிழ்ச்சியுடன் நாட்களை கழிக்கிறார்கள்.
John Brown
ஆனால் மகாராணி தொடர்ந்து அரசாங்கத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பதால், பார்லிமென்ட்டில் அரச அதிகாரத்திற்கு எதிராக குரலெழுப்பி, இங்கிலாந்து முழுவதுமாக ஜனநாயக நாடாக ஆகவேண்டும் என பலர் குறிப்பாக ரிபப்ளிகன் பார்ட்டி பேச ஆரம்பித்தது. அதோடு மகாராணிக்கும் பிரவுனுக்கும் உள்ள நெருக்கத்தை தவறாக உருவகப்படுத்தி விக்டோரியாவை Mrs.பிரவுன் என்று அழைக்கும் அளவுக்கு மோசமாகப் போனது.
பிரவுனும் எந்த ஒரு அரசகுல வழக்கம், மரியாதை எதையும் பயன்படுத்தாமல் ராணியை பெண்ணே (Woman) என்று அழைப்பது, அரச குடும்பத்தினர் யாரையும் மதிக்காமல் இருப்பது, மற்ற வேலைக்காரர்களை அண்டவிடாமல் இருப்பது என்று பல காரியங்களைச் செய்தது எல்லோருக்கும் சந்தேகத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணியது.
இதனையெல்லாம் பார்த்த அப்போதைய பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி  (Benjamin Disraeli) ஜான் பிரவுன் மூலமே ராணியை திரும்பவும் பொது வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறார்.
ஜான் பிரவுன் அதனை ஒத்துக் கொண்டாரா? மகாராணி அதனை ஏற்றுக் கொண்டாராபின்னர் என்னதான் நடந்தது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்கம் வெளியீடு இந்தப்படத்திற்கு ஜெரமி பிராக் (Jeremy Brock)திரைக்கதை அமைக்க ஜான் மேடன் (John Madden) என்பவர் இயக்கியிருக்கிறார். BBC (British Broad casting corporation) Ecosse Films ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் BBCல் ஒளிபரப்பப்படுவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் மிராமேக்ஸ் (Miramax) இதனை வாங்கி உலகமெங்கும் வெளியிட 13 கோடி டாலர்கள் (USD) சம்பாதித்தது.

நடிகர்கள்:

Image result for judi dench
Judy Dench
விக்டோரியாவாக நடித்தது நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஜூடி டென்ச்  (Judi Dench)இவர்தான் எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் BOSS ஆக வருவார். ஜான் பிரவுனாக நடித்தவர் பில்லி கானலி (Billy Connolly) இந்த இருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். குறிப்பாக ஜூடியின் நடிப்பு  மிகச்சிறந்த ஒன்று.

Billy Connolly

விருதுகள்: (Source: Wikipedia))

Dame Judi Dench
·         nominated, Academy Award (US) for Best Actress in a Leading Role
·         winner, BAFTA Award for Best Performance by an Actress in a Leading Role
·         winner, BAFTA Scotland Award for Best Actress in a Film
·         winner, Golden Globe Award for Best Performance by an Actress in a Motion Picture – Drama
·         nominated, Screen Actors' Guild (SAG) Award for Outstanding Performance by a Female Actor in a Leading Role

Billy Connolly
·         nominated, Screen Actors' Guild (SAG) Award for Outstanding Performance by a Male Actor in a Supporting Role
·         nominated, BAFTA Award for Best Performance by an Actor in a Leading Role
·         nominated, BAFTA Scotland Award for Best Actor in a Film

Others
·         winner, BAFTA Award for Best Costume Design, Deirdre Clancy
·         nominated, BAFTA Award for Best Film
·         nominated, Alexander Korda Award for Best British Film (also BAFTA)
·         nominated, Academy Award for Makeup, Lisa Westcott, Veronica Brebner and Beverley Binda

திரைப்பட விழாக்கள்:-
1997 Cannes Film Festival உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
விக்டோரியா மகாராணியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வரலாற்று ஆர்வலர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும். .


முற்றும்.

Monday, November 2, 2015

கங்கை  அமரனின் காதல் பாடல் !!!!!!!!!!!!!!!!!!!!!!
www.tamiltvcinema.com

எழுபதுகளில் இளையராஜா
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே. பாடல் எண் 27
1979ல் வெளிவந்த அகல்விளக்கு என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல் இது.

AgalVilakkufilm.png

பாடலின் சூழல்:
வேறென்ன காதல்தான், இந்தப்பாடலின் மூலம் மிக மென்மையா வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இசையமைப்பு:

அந்தக் கால கட்டத்தில் இளையராஜாவின் நவீன இசையமைப்புக்கு சாம்பிளாக நவீன இசைக்கருவிகளோடு இசையமைத்த பாடல் இது. ஆனாலும் இசைக்கருவிகள் பாடலுக்கும் மெட்டுக்கும் இனிமை சேர்க்கிறதே தவிர குரலுக்கும் மெலடிக்கும் இடைஞ்சலாக இல்லை. பின்வந்த காலத்தில் அது சற்றே மாறிப்போனது.
பாடலின் பல்லவியின் மெட்டின் அதே ஹம்மிங் ஆண்குரலில் தனியாக ஒழிக்க, பின்னர் ஆர்கனும் மற்ற இசைக்கருவிகளும் இசைத்து கட்டியம் கூறியபின், கம்பீர ஆண்குரலில் "ஏதோ நினைவுகள் கவுகள்" என்று பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி முழுதும் ஆண்குரலால் பாடப்பட்டு முடிப்பதற்கு சற்றுமுன், 'ஏதோ' என்ற வரியில் இணைந்து பெண்குரலில் பல்லவியின் அதே வரிகள் வருகின்றன.
இளையராஜாவின் BGMகளில் சற்றே நீண்ட இப்பாடலின் BGM இடையில் வருகிறது. கிடார், டிரம்ஸ், புல்லாங்குழல், வயலின் ஆகிய கருவிகளின் இசை பின்னிப்பிணைந்து ஒலித்து முடிய, முதல் சரணம் கணீர் எனும் பெண்குரலில் "மார்பினில் நானும்" என்று ஆரம்பிக்கிறது. முதல் சரணம் முழுவதும் பெண்குரலிலும் 2-ஆவது  சரணம் ஆண்குரலிலும் ஒலிக்கும் பாடல், இறுதியில் வரும் பல்லவியில் மட்டும் மாறி மாறி ஒலிக்க பாடல் முடிகிறது. 2-ஆவது BGM -ல் லீட் கிடாரும் பேஸ் கிடாரும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இசையைத் தருகின்றன. அதிகமாக கிடார் பயன்படுத்தப்பட்ட பாடல் இது என்று சொல்லலாம்.
பாடல் வரிகள்:
Gangai Amaran with Ilayaraja
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
(ஏதோ நினைவுகள்..)
பாடலை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். "ஏதோ நினைவுகள், கனவுகள் மனதிலே மலருதே", என்ற வரிகளில் “ காதல் பூ” நினைவிலும் கனவிலும் புறப்பட்டு மனதில் மலர்கிறது, அது காவேரி ஊற்றாகவும் காற்றோடு காற்றாகவும் பெருக்கெடுத்து தினமும் காண்பது", என்று சொல்லி அம்சமான காதலை வெளிப்படுத்துகிறார். கங்கை அமரனும் காதல் கல்யாணம் செய்தவர்தான் .காதலை உணர்ந்து ரசித்து , அனுபவித்து எழுதியிருக்கிறார் .பல்லவியில் முத்திரை பதிக்கும் வரிகள், சரணத்தில் சுமாராகவே வருகின்றன. முதல் சரணத்தில், " தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்" என்ற வரிகள் பெண் மனதின் விரகத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறது. பாடலாசிரியரும் இசை தெரிந்தவர் என்பதால் வரிகள் இசையோடும் மெட்டோடும் கச்சிதமாகப் பொருந்துகின்றன.
பாடலின் குரல்கள்:
Sp Sailaja.
இது KJ. யேசுதாஸ் SP.ஷைலஜா பாடியது. யேசுதாசைபற்றிச் சொல்லவே வேண்டாம். அந்தக் கானக்குரலில் குறிப்பாக இந்தக் காலக்கட்டத்தில் இளமை துள்ளி விளையாடுகிறது. மலையாளிகளுக்கே உரிய அந்த பேஸ் குரல் மிகவும் இனிமையாக ஒலிக்கிறது. அதோடு எந்த உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் ரம்மியமாக ஒலிக்கிறது.
S.P.ஷைலஜாவின் குரல் கணீரென்று ஒலிக்கும் குரல். குறிப்பாக உச்சஸ்தாயில் பளிச்சென்று ஒலிக்கக்கூடிய குரல். உச்சரிப்பும் சுத்தமாகவே இருக்கிறது. இசை, பாடல், நடனம், நடிப்பு என்று பலதுறைகளில் திறமையான இவர் ஏதோ காரணத்திற்காக முன்னேற முடியவில்லை. இவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை
1) சோலைக்குயிலே (பொண்ணு ஊருக்குப்புதுசு)
2) சின்னஞ்சிறு வயதில் (மீண்டும் கோகிலா)
3) மாமன் மச்சான்
மொத்தத்தில் எப்போது கேட்டாலும் சுகமாக இருக்கும் இந்தப்பாடல் நீண்ட நாள் நிலைக்கும்.

மீண்டும் வரும்  >>>>>>>>>>>>>>>>>>

Friday, October 30, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா?நட்பா ? பகுதி 2

Add caption

கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம் சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் சொன்ன தீர்ப்பு இது.
இருபுறத்தாரும் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும் வரையில் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது தீர்ப்புச் சொல்ல நிற்கும் போது தான் திண்டாட்டமாக இருக்கிறது. என்ன செய்வது ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு இருந்து தானே ஆகும்.  
            Man is a social animal   என்று சொல்வார்கள்.  உற்றார்  உறவினர் சுற்றம் நட்பு இவையெல்லாம்  வாழ்க்கையில் அவசியங்கள் தான். கூடி வாழ்ந்ததால் கோடி நன்மைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.
ஆனால் நம்ம  அனுபவம் அப்படியா இருக்கு? நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால்  நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும் போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட  பண உதவி வேணாம் , ஆறுதலா இரண்டு வார்த்தை? அதான் கண்ணுக்கு  எட்டின வரைக்கும் காணாமப்போயிட்டாங்களே.
நம்ம வீட்ல ஒரு நல்லது பொல்லாததுக்கு  கூப்பிட்டா நாம நெனைக்கிறது. “இவங்களை கூப்பிட்டுத்தான் ஆகனும், ஆனா வராட்டி நல்லதுன்னு நெனைச்சிருக்கீங்களா. ஏன்னா குறை சொல்றது சுற்றம்தான், கோபிக்கிறது சுற்றம்தான், பிரச்சனை பண்றது அவங்கதான். Invitationல பேரு இல்லை, நேர்ல வந்து கூப்பிடல, பந்தியில கவனிக்கல, வாங்கன்னு கூப்பிடல இப்படி எத்தனை பிரச்சினை பண்ணுவாங்க. ஆனா நட்பு, “டேய் நேரில வரமுடியல இன்விடேஷனும் அனுப்ப முடியல, கண்டிப்பா வந்துரு”. வந்து சொல்லாமயே எடுத்துப்போட்டு வேலை செய்றது நட்புதான்.
நாம வசதியாக இருக்கும்போது, நம்ம சுற்றம் சொல்வாங்க அவங்க எங்களுக்கு நெருங்கிய சொந்தம்னு, நாம கஷ்டத்துல இருக்கும்போது அவங்க தூரத்து உறவு ஆயிருவாங்க. 
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. இதுக்கு அர்த்தம், தப்புக்கண்டுபிடிச்சுக் கொண்டேயிருந்தா சுற்றமாக யாரையும் சேர்க்க முடியாதுன்னு. ஆனா நான் நினைக்கிறேன் அதோட அர்த்தம் ஒரே ஒரு நல்ல சுற்றத்தைக் கூட பாக்க முடியாதுன்னு.
பழைய கால புராணத்தில பாத்தோம்னா:
மகாபாரதக் கதையில,
துரியோதனன் கெட்டவன்தான். சகோதரத்துரோகம் செய்தவன்தான்.  ஆனா நட்புக்கு எப்பவுமே துரோகம் செஞ்சதில்லை. அதனாலதான் கர்ணன் அவனுடைய உற்றம் சுற்றத்தை விட்டுவிட்டு தன் நட்புக்காக உயிரைக் கொடுத்தான்.  ராமாயணக் கதையில, ராமனை அவனுடைய உறவும் சுற்றமும் கைவிட, அவனுக்கு நட்பாக இருந்த குகனும் சுக்ரீவனும் தான் உதவுறாங்க.
இயேசுநாதர் கூட தன்னை உண்மையாய் பின்பற்றவங்களை , நண்பர்கள் என்றுதான் அழைத்தார். 
நம்ம நெருங்கிய நட்பைத்தான், நாம சொந்தமாக நினைச்சு மாப்ளை மச்சின்னு கூப்பிடுறோம். சொல்லும்போது  ஞாபகம் வருது காலேஜ்ல படிக்கும்போது என் நண்பன் ஒருவன் என்னை மாப்ள மாப்ளன்னு கூப்பிடுவான். ஒரு நாள் சொன்னான், டேய் Alfy உன்னை நான் மாப்ளேன்னு கூப்பிட்டு பேசும் போது எவ்வளவு நெருக்கமா இருக்கு. நீயும் அதே மாதிரி இருக்க, நம்ம ராகவனை மாப்ளன்னு கூப்பிட்டதுக்கு அப்படிக் கூப்பிடாதன்னு சண்டை போடுறான் ஏன்னே தெரியலன்னான். மாப்பிள்ளை அது ஒண்ணுமில்ல, எனக்கு தங்கச்சி எதுவுமில்ல, அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு அதனாலதான்.  
ஒரு நல்ல அப்பாவை பிள்ளைக எப்படி சொல்வாங்க எங்கப்பா எனக்கு ஒரு friend மாதிரிடா, என் அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி மாதிரி, உண்மையான நெருக்கமான உறவைக்குறிக்க நட்பு என்றுதான் சொல்றோம்.
Add caption

இன்னிக்கும் எனக்கு ஏதாவது மனக்கஷ்டம்னா, என் நண்பர்கள் யாராவது ஒருவனுக்கு போனைப் போடுவேன். என்னடா மாப்ள எப்படி இருக்கன்னு கேட்பான் ஒண்ணுமில்லடா மச்சி, சும்மாதான் கூப்பிட்டேன். அட பரவாயில்லை சொல்லு உன் குரலே சரியில்லைடா.
- இந்த ரெண்டு வார்த்தை போடா வாடான்னு பேசிட்டு துயரத்தை இறக்கிவிட்டுட்டா மனசு கலகலன்னு ஆயிரும். ரெண்டு பழைய கதையை பேசி வாய்விட்டு சிரிச்சிட்டா, எல்லாத் துயரமும் மறந்துபோயிரும்ல.

கடைசியா ஒரு மூணு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.
1.    சுற்றம் எப்பொழுதும் நம்மிடம் எதிர்பார்க்கிறது, ஆனா நட்பு எப்பொழுதும் எதிலும் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.
2.    சுற்றம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். ஆனா நட்பு என்னைக்கும் மாறாதது.
3.    சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம்.
எனவே வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது என்றும் வாடாத நட்பூவே என் தீர்ப்பூ என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், நன்றி வணக்கம்.


முற்றும்.

Tuesday, October 27, 2015

வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?


         கடந்த  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய  ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம். சிறப்பாக   நடந்து முடிந்தது .அதில் அடியேன் பேசிய முன்னுரை இது.

மூச்சுக் கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கங்கள் பலப்பல

A

ஆனந்தம் விழாக்குழுவினர் குறிப்பாக கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.இங்கு கூடியிருக்கும், அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் வணக்கம். ஆனந்தம் நிகழ்ச்சியின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம்.

பட்டிமன்றத் தலைப்பு - வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது சுற்றமா? இல்லை நட்பா?.
நம்மூரில் திருமணத்திற்கு கொடுக்கும் பத்திரிகையில், ஒரு வரி இருக்கும். எனக்கு ரொம்பப்பிடித்த வரி அது. “சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் இருவீட்டார்”,  என்று போட்டிருப்பார்கள். அதுவும் முஸ்லீம் வீட்டு பாய் கல்யாணம்னா, நம்ம நட்பூஸ்  கூப்பிடாமயே கூட வந்துருவாங்க. ஓசி பிரியாணி கிடைக்கும்ல.
ஒரு திருமணம் அல்லது எந்த ஒரு மங்கள நிகழ்வும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டுமென்றால், ஒரு புறம் சுற்றம் இருக்க வேண்டும் மறுபுறம் நட்பு இருக்க வேண்டும். இந்த இரண்டும் சூழ்ந்திருந்தால் மகிழ்ச்சிதான். யோசித்துப் பாருங்க உங்க கல்யாணம் அப்படித்தானே நடந்தது.
ஆனா இந்த ஊர்ல அப்படியா நடக்குது, நாலு பேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. கல்யாணம்னாலும் அந்த நாலு பேர்தான் கருமாதினாலும் நாலுபேர்தான்.
என்னனு கேட்டா “பட்ஜெட் கழுதைன்னு”, சொல்றான் என் நண்பன். என்ன கழுதையான்னு கேட்டேன் ?. ஆமாடா பட்ஜெட் இடிக்குது, பட்ஜெட் கடிக்குது, பட்ஜெட் உதைக்குதுனு சொல்றான். நல்லவேளை பட்ஜெட் பொண்டாட்டி மாதிரின்னு சொல்லல ஏன்னா அதுக்கும் நல்லாவே பொருந்தும்.


ஒரு நீண்ட கால நண்பனுக்கு போன் செய்தேன். அவன் சொன்னான், “மன்னிச்சுக்கடா உனக்கு உள்ளத்தில் இடம் இருக்கு. ஆனா என் இல்லத்துல இடமில்லை”.என்னாச்சு”,னு கேட்டேன். “மனைவி வந்தாச்சு, சுற்றமும் நட்பும், நொந்தாச்சு”,னு சொன்னான். அது சரிதான் மனைவி வந்ததும் முதல்ல கட்பண்றது அதத்தானே. “என்னடா Arranged Marriageல தான் இந்தப்பிரச்சனை. நீ காதல் கல்யாணம்தானே. அவள் உன் தோழிதானேன்னு”, சொன்னேன். “ ஆமாடா  அதையேன் கேட்கிற , கல்யாணத்துக்கு முன் தோழிதான் .ஆனா இப்ப காளி ஆயிட்டா”ன்னு சொன்னான். அதோடு காதல் கல்யானம்னாலே தோல்விதானேனு சொன்னான் .அதாவது காதல் பண்ணிட்டு கல்யாணம்  நடக்கலை னாலும் தோல்வி, நடந்தாலும் தோல்விதாணு சொன்னான். எனக்கு அதைப்பத்தி அவ்வளவா தெரியாது.நான் அர்ரெஞ்சிடு மேரேஜ்.
நம்மூர்ல ஒரு நம்பிக்கை உண்டு, காக்கா கத்துனா உறவுக்காரங்க வருவாங்கன்னு, ஒரு பையன் அவங்கப்பாவை  கேட்டானாம், “ஏப்பா காக்கா கத்துனா உறவுக் காரங்க நிசமா வருவாங்களா”,ன்னுஅப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்காரங்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா?” “அதுவா உங்க அம்மா கத்துனா போயிருவாங்க”.
தூர இருந்த சேர உறவுன்னு சொல்வாங்க அது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பொருந்தும்னு சொல்றாங்க.
இப்படி உறவும் நட்பும் இப்ப பிரச்சினையா இருக்கு.
ஆனா நம்ம தலைப்பு, வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா? நட்பா? வாங்க உங்களோடு சேர்ந்து நானும் கேட்க ஆவலாயிருக்கிறேன்.
தீர்ப்போட திரும்பி வருவேன், வணக்கம்.


தீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை  வெளி வரும்

Friday, October 23, 2015

புலம்பல்கள் ஓய்வதில்லை !!!!!!!!!!!!!!!!

Fall Foliage at its Peak in Upstate New York (visitadirondacks.com)
Fall in New York
நியூயார்க்கில் இலையுதிர் காலம் ஆரம்பித்துவிட்டது, குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கெட்டுகளையும், காதடைப்பான்களையும், கையுறைகளையும் தேடியெடுத்து தூசிதட்டி வைத்தாயிற்று. பரதேசியின் புலம்பல்கள் ஆரம்பம்.
இலையுதிர் காலம்
1.    ரூத் இந்த லைட் ஜாக்கெட்டை எங்க எடுத்து வச்சிருக்க? இடம் மாத்தி வைக்காதேன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது?
2.    லைட் ஜாக்கெட்டில் தானே என் காதடைப்பானை வச்சிருந்தேன்? எங்க போச்சு? ரூத் நீ எதும் எடுத்தியா?
3.    என்னடாது அவரசத்துக்கு வின்ட்டர் சாக்ஸ் எதையுமே காணல, ரூத் துவைக்கச் சொன்னேனே என்னாச்சு?
4.    என்னடாது இந்த தெர்மல் மறுபடியும் தொளதொளன்னு ஆயிப்போச்சு.போனதடவை மீடியம் தான வாங்கினேன். இனிமே ஸ்மால் சைஸ் வாங்கனுமோ, உடம்பு சின்னதாகப் போயிட்டே இருக்கே.
5.    இந்த ஜாக்கெட்டை விண்டருக்குள்ளே மாத்திரனும், கொஞ்சம் பழைய வாடை அடிக்குது.
6.    இந்த சிலுசிலு காத்து ஏன் இப்படிக் கொல்லுது?
7.    என்னடாது இப்பதானே அள்ளிப்போட்டோம்? இந்த இலைகள் இப்படி கொட்டோ கொட்டுனு கொட்டித் தொலையுதே.
8.    இந்த மரம்லா யாராவது வேணும்னு கேட்டோமா?
9.    இந்த பழுப்பு இலையை பெருக்கிப்பெருக்கியே அலுப்பு ஆயிப்போச்சே உடம்பு?
10. என் மனைவி, 2 பொண்ணுக மூணும் இதே சீஷனில் பிறந்து வச்சிருக்கு, பிறந்த நாளுக்கு எவ எவ என்னென்ன கேக்கப்போறாளோ ?.
-இந்தப்புலம்பல் இலையுதிர்காலத்தில் மட்டுமா? இல்லை நாலு சீசனிலும் நல்லாவே வந்துருது பரதேசிக்கு.
குளிக்கால புலம்பல்கள்:
Winter in New York
1.    என்னடாது இந்த வருஷம் குளிர் சீக்கிரமாவே வந்துருச்சு கொஞ்ச நாள் கழிச்சு வந்தாத்தான் என்ன?
2.    இந்தக்குளிர் காலம் இலையுதிர்காலத்துல பாதியை எடுத்துக்கிது, வசந்த காலத்திலயும் பாதியை எடுத்துக்குது, ரொம்ப அநியாயம்.
3.    அமெரிக்கால எத்தனை ஊரு நல்லா இருக்கு, ஒரு கலிபோர்னியா, ஒரு ஃப்ளோரிடா, ஒரு டெக்சாஸ்னு போகாம, இப்படி வந்து நியூயார்க்கில மாட்டிக்கிட்டு அவஸ்தைபடறேனே.
4.    இந்த ஷூவையெல்லாம் மாத்தனும், இந்தத்தடவை காசு போனா போறதுன்னு நல்ல பூட்ஸ் வாங்கனும்.
5.    திரும்ப விழுந்துவச்சு, இன்னொரு சர்ஜரியை உடம்பு தாங்கவே தாங்காது.
6.    சே குளிர் கூடப்பரவாயில்லை, ஸ்நோ ஏந்தான் கொட்டோ கொட்டுனு கொட்டுதோ.ஸ்நோ விழும்போது நல்லாதான் இருக்குது, ஆனா அடுத்த நாள் உறைஞ்சு போய் நொடியில வழுக்கிவிட்டு அடியில அடிபட்டுறுது சேச்சே
7.    ஸ்நோ தள்ள மெஷின் வாங்கனும், ஸ்நோ கரைக்கிற உப்பு வாங்கனும், ஐஸ் உடைக்கற ஷவுல் வாங்கனும்.
8.    இப்படி ஒரு நொம்பலப்புழப்பு பொழைக்கனுமா? பேசாம ஊர்லயே இருந்திருக்கலாம் போல.
9.    இந்தக் குளிர்காத்து அப்படியே எழும்பைத் துளைக்குதே, இயேசுவே கையெல்லாம் மரத்துப்போச்சே, கால்விரல் விரைச்சுப் போச்சே.
10. இந்த சூரியன் எதுக்குத்தான் டெய்லி  வர்றானோ ஒரு பிரயோஜனம் இல்லை.ஐயையோ எப்பதான் சம்மர் வருமோ?

வசந்த காலம்:
Spring in New York
1.    வசந்த காலம் வந்துருச்சா? போச்சு போ, இப்ப என் மனைவி ஆரம்பிச்சுருவா, புல் வாங்கனும் பூச்செடி வாங்கனும்னு.
2.    ஹோம் டிப்போ கார்டில போன வருஷம் வாங்கினதையே இன்னும் கட்டிமுடிக்கல, அதுக்குள்ள அடுத்த சீசன் வந்துரிச்சே.
3.    ஐயோ ஐயோ இந்த உரம் என்ன விலை விக்குது.
4.    இனிமே ஜானுக்கு புல்வெட்டி கூலி வேறவரும். எதுக்கு வளர்க்கனும் எதுக்கு வெட்டனும் இதெல்லாம் தேவையா?
5.    ஐயையோ தண்ணியை மறந்துட்டேனே, தோட்டத்துக்கு தண்ணி 2 நேரம் விடனும், தண்ணிக்கு காசு நான்ல கட்டனும்.
6.    இந்தப் பூவெல்லாம் உதிர்ந்து உதிர்ந்து காத்தோட கலந்து மூக்குல புகுறது, சேச்சே, இதெல்லாம் எதுக்குத்தான் பூக்குதோ.
7.    என்னபா, இது புல்லுக்கும் காய்கறிக்கும் தானே விதை போட்டோம், இந்தக்களை ஏன் காடு மாதிரி வளருது. அதுக்கு யார் விதைபோட்டா?
8.    ஐயையோ, இந்தக் காய்கறிகளை யாருக்கு முதல்ல கொடுக்கிறது, யாருக்கு ரெண்டாவது கொடுக்கறதுன்னு இப்ப பிரச்சனை ஆரம்பிக்கும்.
9.    குளிர் காலமே தேவல போலருக்கு.
கோடை காலம்:
Summer in New York
1.    உஸ் அப்பா என்ன வெயில் என்ன வெயில்,
2.    இந்த ஹால்ல இருக்கிற AC பத்த மாட்டேங்குது. வேற மாத்தனும்.
3.    என் மனைவி வேற சென்ட்ரல் AC இல்லேன்னா அட்லீஸ்ட் ஸ்பிலிட் AC போடுங்கிரா. இதுலதான் எங்க ரெண்டுப் பேருக்கு ஸ்பிலிட் வருது.
4.    பசங்க ரூம்ல AC போட்டுட்டு கதவைத் திறந்து விட்றாங்க, பில் யார் கட்டறது.
5.    சேசே என்ன இது கசகசன்னு வேர்த்து வடியுது. இந்தச் சூரியன் ஏந்தான் நம்பளைப் போட்டு கொல்லுறானோ.
6.    இந்த வருஷம் வெக்கேஷனுக்கு எங்க போறதுன்னு என் மனைவி உயிரெடுக்கிறா, ஒரு பத்தாயிரம் டாலர் பழுத்துறும் போல இருக்கு.
7.    இந்த மிச்சப் பதார்த்தங்களை எல்லாம் ஃபிரிட்ஜ்ல வையின்னு சொன்னா கேக்கமாட்டேங்குறா. இப்பப்பாரு எல்லாம் கெட்டுப்போச்சு.
மகேந்திரன்:
ஏலேய் பரதேசி போதும்டா சாமி நிறுத்து ன் புலம்பல. ஒன் வாயில நல்ல வார்த்தையே வராதா? எப்பப்பாரு புலம்பிக்கிட்டு.  
பரதேசி: ஆண்டவா என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே எனக்கு வேற ஒரு நல்ல நண்பன் கிடைக்கக் கூடாதா? மகேந்திரன் போல ஒருத்தன் தான் கிடைக்கணுமா, ஏசுவே.
மகேந்திரன்: சரியான லூசுப்பய, ஏங்க யாருங்க இங்க வந்து இதப்படிக்கிறது, போய் வேற வேல இருந்தா பாப்பீங்களா?

முற்றும்


ஒரு முக்கிய அறிவிப்பு:
வருகின்ற  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது. என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432

நேரம் : மாலை ஆறு மணி