Friday, October 23, 2015

புலம்பல்கள் ஓய்வதில்லை !!!!!!!!!!!!!!!!

Fall Foliage at its Peak in Upstate New York (visitadirondacks.com)
Fall in New York
நியூயார்க்கில் இலையுதிர் காலம் ஆரம்பித்துவிட்டது, குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கெட்டுகளையும், காதடைப்பான்களையும், கையுறைகளையும் தேடியெடுத்து தூசிதட்டி வைத்தாயிற்று. பரதேசியின் புலம்பல்கள் ஆரம்பம்.
இலையுதிர் காலம்
1.    ரூத் இந்த லைட் ஜாக்கெட்டை எங்க எடுத்து வச்சிருக்க? இடம் மாத்தி வைக்காதேன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது?
2.    லைட் ஜாக்கெட்டில் தானே என் காதடைப்பானை வச்சிருந்தேன்? எங்க போச்சு? ரூத் நீ எதும் எடுத்தியா?
3.    என்னடாது அவரசத்துக்கு வின்ட்டர் சாக்ஸ் எதையுமே காணல, ரூத் துவைக்கச் சொன்னேனே என்னாச்சு?
4.    என்னடாது இந்த தெர்மல் மறுபடியும் தொளதொளன்னு ஆயிப்போச்சு.போனதடவை மீடியம் தான வாங்கினேன். இனிமே ஸ்மால் சைஸ் வாங்கனுமோ, உடம்பு சின்னதாகப் போயிட்டே இருக்கே.
5.    இந்த ஜாக்கெட்டை விண்டருக்குள்ளே மாத்திரனும், கொஞ்சம் பழைய வாடை அடிக்குது.
6.    இந்த சிலுசிலு காத்து ஏன் இப்படிக் கொல்லுது?
7.    என்னடாது இப்பதானே அள்ளிப்போட்டோம்? இந்த இலைகள் இப்படி கொட்டோ கொட்டுனு கொட்டித் தொலையுதே.
8.    இந்த மரம்லா யாராவது வேணும்னு கேட்டோமா?
9.    இந்த பழுப்பு இலையை பெருக்கிப்பெருக்கியே அலுப்பு ஆயிப்போச்சே உடம்பு?
10. என் மனைவி, 2 பொண்ணுக மூணும் இதே சீஷனில் பிறந்து வச்சிருக்கு, பிறந்த நாளுக்கு எவ எவ என்னென்ன கேக்கப்போறாளோ ?.
-இந்தப்புலம்பல் இலையுதிர்காலத்தில் மட்டுமா? இல்லை நாலு சீசனிலும் நல்லாவே வந்துருது பரதேசிக்கு.
குளிக்கால புலம்பல்கள்:
Winter in New York
1.    என்னடாது இந்த வருஷம் குளிர் சீக்கிரமாவே வந்துருச்சு கொஞ்ச நாள் கழிச்சு வந்தாத்தான் என்ன?
2.    இந்தக்குளிர் காலம் இலையுதிர்காலத்துல பாதியை எடுத்துக்கிது, வசந்த காலத்திலயும் பாதியை எடுத்துக்குது, ரொம்ப அநியாயம்.
3.    அமெரிக்கால எத்தனை ஊரு நல்லா இருக்கு, ஒரு கலிபோர்னியா, ஒரு ஃப்ளோரிடா, ஒரு டெக்சாஸ்னு போகாம, இப்படி வந்து நியூயார்க்கில மாட்டிக்கிட்டு அவஸ்தைபடறேனே.
4.    இந்த ஷூவையெல்லாம் மாத்தனும், இந்தத்தடவை காசு போனா போறதுன்னு நல்ல பூட்ஸ் வாங்கனும்.
5.    திரும்ப விழுந்துவச்சு, இன்னொரு சர்ஜரியை உடம்பு தாங்கவே தாங்காது.
6.    சே குளிர் கூடப்பரவாயில்லை, ஸ்நோ ஏந்தான் கொட்டோ கொட்டுனு கொட்டுதோ.ஸ்நோ விழும்போது நல்லாதான் இருக்குது, ஆனா அடுத்த நாள் உறைஞ்சு போய் நொடியில வழுக்கிவிட்டு அடியில அடிபட்டுறுது சேச்சே
7.    ஸ்நோ தள்ள மெஷின் வாங்கனும், ஸ்நோ கரைக்கிற உப்பு வாங்கனும், ஐஸ் உடைக்கற ஷவுல் வாங்கனும்.
8.    இப்படி ஒரு நொம்பலப்புழப்பு பொழைக்கனுமா? பேசாம ஊர்லயே இருந்திருக்கலாம் போல.
9.    இந்தக் குளிர்காத்து அப்படியே எழும்பைத் துளைக்குதே, இயேசுவே கையெல்லாம் மரத்துப்போச்சே, கால்விரல் விரைச்சுப் போச்சே.
10. இந்த சூரியன் எதுக்குத்தான் டெய்லி  வர்றானோ ஒரு பிரயோஜனம் இல்லை.ஐயையோ எப்பதான் சம்மர் வருமோ?

வசந்த காலம்:
Spring in New York
1.    வசந்த காலம் வந்துருச்சா? போச்சு போ, இப்ப என் மனைவி ஆரம்பிச்சுருவா, புல் வாங்கனும் பூச்செடி வாங்கனும்னு.
2.    ஹோம் டிப்போ கார்டில போன வருஷம் வாங்கினதையே இன்னும் கட்டிமுடிக்கல, அதுக்குள்ள அடுத்த சீசன் வந்துரிச்சே.
3.    ஐயோ ஐயோ இந்த உரம் என்ன விலை விக்குது.
4.    இனிமே ஜானுக்கு புல்வெட்டி கூலி வேறவரும். எதுக்கு வளர்க்கனும் எதுக்கு வெட்டனும் இதெல்லாம் தேவையா?
5.    ஐயையோ தண்ணியை மறந்துட்டேனே, தோட்டத்துக்கு தண்ணி 2 நேரம் விடனும், தண்ணிக்கு காசு நான்ல கட்டனும்.
6.    இந்தப் பூவெல்லாம் உதிர்ந்து உதிர்ந்து காத்தோட கலந்து மூக்குல புகுறது, சேச்சே, இதெல்லாம் எதுக்குத்தான் பூக்குதோ.
7.    என்னபா, இது புல்லுக்கும் காய்கறிக்கும் தானே விதை போட்டோம், இந்தக்களை ஏன் காடு மாதிரி வளருது. அதுக்கு யார் விதைபோட்டா?
8.    ஐயையோ, இந்தக் காய்கறிகளை யாருக்கு முதல்ல கொடுக்கிறது, யாருக்கு ரெண்டாவது கொடுக்கறதுன்னு இப்ப பிரச்சனை ஆரம்பிக்கும்.
9.    குளிர் காலமே தேவல போலருக்கு.
கோடை காலம்:
Summer in New York
1.    உஸ் அப்பா என்ன வெயில் என்ன வெயில்,
2.    இந்த ஹால்ல இருக்கிற AC பத்த மாட்டேங்குது. வேற மாத்தனும்.
3.    என் மனைவி வேற சென்ட்ரல் AC இல்லேன்னா அட்லீஸ்ட் ஸ்பிலிட் AC போடுங்கிரா. இதுலதான் எங்க ரெண்டுப் பேருக்கு ஸ்பிலிட் வருது.
4.    பசங்க ரூம்ல AC போட்டுட்டு கதவைத் திறந்து விட்றாங்க, பில் யார் கட்டறது.
5.    சேசே என்ன இது கசகசன்னு வேர்த்து வடியுது. இந்தச் சூரியன் ஏந்தான் நம்பளைப் போட்டு கொல்லுறானோ.
6.    இந்த வருஷம் வெக்கேஷனுக்கு எங்க போறதுன்னு என் மனைவி உயிரெடுக்கிறா, ஒரு பத்தாயிரம் டாலர் பழுத்துறும் போல இருக்கு.
7.    இந்த மிச்சப் பதார்த்தங்களை எல்லாம் ஃபிரிட்ஜ்ல வையின்னு சொன்னா கேக்கமாட்டேங்குறா. இப்பப்பாரு எல்லாம் கெட்டுப்போச்சு.
மகேந்திரன்:
ஏலேய் பரதேசி போதும்டா சாமி நிறுத்து ன் புலம்பல. ஒன் வாயில நல்ல வார்த்தையே வராதா? எப்பப்பாரு புலம்பிக்கிட்டு.  
பரதேசி: ஆண்டவா என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே எனக்கு வேற ஒரு நல்ல நண்பன் கிடைக்கக் கூடாதா? மகேந்திரன் போல ஒருத்தன் தான் கிடைக்கணுமா, ஏசுவே.
மகேந்திரன்: சரியான லூசுப்பய, ஏங்க யாருங்க இங்க வந்து இதப்படிக்கிறது, போய் வேற வேல இருந்தா பாப்பீங்களா?

முற்றும்


ஒரு முக்கிய அறிவிப்பு:
வருகின்ற  அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது. என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.
தலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா ?நட்பா ?
இடம் : PS 131 அபிகைல் ஆடம்  பள்ளி
170-45 84th அவன்யூ
ஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432

நேரம் : மாலை ஆறு மணி

8 comments:

 1. Every year we start this kind of complaining for every season.
  It is nicely depicted with suitable TAMIL words
  Vazhga Valamudan.
  Advance greetings for the successful pattimanram with Anantham members.

  ReplyDelete
 2. புலம்பெயர்வாழ்வில் புலம்பல் படலம் ஒரு தொடர்கதை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தொடர்கதைதான் நன்றி தனிமரம் .

   Delete
 3. எப்படித்தான் உங்க வீட்டு ராசத்திக்களெல்லாம் இந்த புலம்பலை கேட்டு உங்கள் கூட இருக்கிறார்களோ?

  ReplyDelete
  Replies
  1. மனசுக்குள் புலம்புவது வெளியே கேட்காதே நண்பா .

   Delete