Thursday, June 18, 2015

சுஜாதா எழுதிய "ஓரிரு எண்ணங்கள்"

 படித்ததில் பிடித்தது
'அம்பலம்' இணைய இதழ் மற்றும் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதிய பல கட்டுரைகளை இணைத்து விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட  புத்தகம் இது.
சுஜாதாவின் கதைகள் மட்டுமல்ல, அவருடைய கட்டுரைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதை இந்தப்புத்தகம் மீண்டும் நிரூபிக்கிறது.எவ்விதக் கருத்தையும், எளிதான முறையில் நகைச்சுவை பட தெரிவிப்பதில் அவருக்கு இணை அவரே.
அவர் சென்ற நாடுகள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், படித்த புத்தகங்கள், கவிதைகள், பார்த்த திரைப்படங்கள், சந்தித்த மனிதர்கள், பிரபலங்கள், திரைப்பட அனுபவங்கள், நாட்டு நடப்புகள், அரசியல் என்று கலந்து கட்டி மிகவும் வெளிப்படையாக பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பல இடங்களில் ஏராளமான செய்திகளை போகிற போக்கில் தெளித்துச் செல்கிறார். அவ்வளவும் அவருடைய சிறுகதைகள் போலவே  அவ்வளவு சுவை.
writer_sujatha.jpg
Sujatha
நான் ரசித்த பலவற்றில் சிலவற்றை புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன். இவை இப்புத்தகத்தை இதுவரை படிக்காதவர்களைப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
1.    அம்பலம் வாசகர்களில் பல்வேறு தரப்பினருக்கு புத்தாண்டில் வாழ்த்துக்கள் சொல்கிறார் பாருங்கள். அவற்றுள் சாம்பிளுக்கு சில.
a)    எம் எல் ஏக்களுக்கு: ஒரு முறையாவது தொகுதிக்குச் செல்ல.
b)    கார்ப்பரேஷன்காரர்களுக்கு: ஒரு நாளாவது தோண்டாமல் இருக்க.
c)    நடன மணிகளுக்கு: வயது அல்லது இடுப்பு நாற்பதுக்கு மேலாகிவிட்டால் நடனமாடாமல் இருக்க.
2.    தமிழின் முதல் சமூக நாடகம், காசி விசுவநாத முதலியார் எழுதிய "டம்பாச்சாரி விலாசம்".
3.    அரசு மாறுந்தோறும் அதிகாரிகள் மாற்றப்படுவதை சாடுகிறார்.
4.    பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுகளை குறிக்க "Year of Writing" இல்லை என்று கவலை கொள்கிறார்.
5.    ஈழத்துக்கவிதைகளை சிலாகிக்கிறார்.
6.    இலவசங்கள் ஒழிக்கப்படவேண்டும் என சிடுசிடுக்கிறார்.
7.    அவருடைய "கனவுத் தொழிற்சாலை" புத்தகத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டதை அதிசயிக்கிறார்.
8.    படித்த பல புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
9.    கமலஹாசனுடன் 'விக்ரம்' படத்திற்கு வேலை செய்தது பற்றி விளக்கமாக கதைக்கிறார்.
10. சினிமாக்காரர் கையில்  அவருடைய "காகிதச் சங்கிலிகள்" பட்ட பாட்டை விவரிக்கிறார்.
11. எது சஸ்பென்ஸ் என்று உதாரணங்களுடன் விஸ்தார விளக்கங்கள் கொடுக்கிறார்.
12. குவைத், நியூயார்க் என்று சென்ற இடங்களைப்பற்றி விளக்குகிறார்.
13. இறுதியில் ஸ்ரீரங்கத்தின் மொட்டைக் கோபுரம் முடிக்கப்பட்டதைக் குறித்து (?) வருத்தப்படுகிறார்.
14. டிஜிட்டல் சினிமா வந்து கலக்கப்போவதை தீர்க்கதரிசிக்கிறார்.
15. கமலஹாசனின் ஆளவந்தான் படத்தை விமர்சித்து  பாராட்டித்திட்டுகிறார்.
            இறுதி வரை இளமை குன்றாமல் இருந்த அவர் எழுத்துக்கு காரணம் அவர் தன்னை up-to-date - வைத்தது தான் காரணம். மிளிரும் கிண்ட லும், சுய பகடியும் இன்னொரு காரணம். படித்துத்தான் பாருங்களேன்.

முற்றும்

Monday, June 15, 2015

சாலமன் பாப்பையா கொடுத்த சால்வை!!!!!!!!!!!!

"ரூத் அந்த சால்வை எங்க?"
"எந்த சால்வை"
"அதாம்மா ஐயா கொடுத்தது"
"எந்த ஐயா?"
"ஐயோ, சாலமன் பாப்பையா ஐயா கொடுத்தது",
" எப்ப கொடுத்தார்?"
"சரியாப் போச்சு போ உன்ட்ட கேக்கறது வேஸ்ட்"
            எங்கே அந்த சால்வை? எப்படி மறந்தேன். அன்றைய நாளை எப்போது நினைத்தாலும் ஒரு சந்தோஷமும் பெருமையும் நிழலாடும். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு, நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய, கல்யாண மாலையின் சிறப்புப் பட்டிமன்றம். நடுவராக என்னுடைய அமெரிக்கன் கல்லூரியின் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா. மேடையில் ஒரு புறம் ராஜா அணியில் நான், மறுபுறம் பாரதி பாஸ்கர் அணி. தமிழ்ச்சங்க தலைவிகள் கவிதா, உஷா, அமுதாவுடன், கல்யாண மாலை மோகன், மீரா நாகராஜன் ​​​​​புடைசூழ, சன் டிவி படப்பிடிப்பு நடக்க, சாலமன் பாப்பையா, "தம்பி இங்ஙன கிட்டக்க வாங்க"-ன்னு சொல்லி அந்த சால்வையைப் போர்த்திய போது அரங்கு நிறைந்த மக்களின் கரகோஷம் காதைப் பிளந்தது.

         எப்படி மறந்தேன், எங்கே போனது அந்தச் சால்வை என மண்டையை உடைத்து யோசித்துக் கொண்டிருக்கும் போது என் மனைவி சொன்னாள், "போனாப் போகுது விடுங்க" என்று. அப்படி விடமுடியுமா அந்த சால்வையை?
"ஹலோ கவிதா நான் ஆல்பி பேசறேன்"
"யாரு"
"அதாங்க பரதேசி ஆல்ஃபி பேசறேன்"
"ஓ ஆல்ஃபி, ஹவ் ஆர் யூ உங்க பட்டிமன்றப் பேச்சு மிகவும் சிறப்பா இருந்துச்சு, தேங்க்ஸ் ஃபார் கம்மிங்".
"நீங்கள் கொடுத்த அரிய வாய்ப்புக்கு நன்றி கவிதா. பாப்பையா ஐயா கொடுத்த சால்வையை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் போலருக்கு, உங்களுக்கு தெரியுமா?
"ஓ அப்படியா எனக்குத் தெரியலயே, நீங்க எதுக்கும் அமுதாட்ட கேட்டுப்பாருங்க. அதோட வரும் மாதத்தில பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி இருக்கு, கண்டிப்பா வாங்க".
"சரி கவிதா வர முயற்சி பண்றேன்".
       கார்த்திக்கின் இசை நிகழ்ச்சியை விட முக்கியமாக ஐயா போர்த்திய சால்வையை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பில் 4 டிக்கட் ஆன்லைனில் வாங்கினேன். 1 டிக்கட் விலை $30.00.நியூஜெர்சியில் ஒரு பள்ளியின் மிகப்பெரிய ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோதியது. இது வேறு ஒரு பள்ளியின் பெரிய அரங்கம். பட்டி மன்றத்திற்கு வந்ததை விட அதிகக் கூட்டம் போல் தெரிந்தது. ஒரு சிறு பொறாமை வந்தது. இயலை விட இசைக்கு ரசிகர்கள் அதிகம்தானே. அற்புதமான அந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க முடிந்தாலும், அவ்வப்போது சால்வை ஞாபகத்துக்கு வந்தது. அமுதாவையும் ஆளைக் காணோம். அந்த இசை நிகழ்ச்சியைப்பற்றி அடியேன் எழுதிய பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
        இசை நிகழ்ச்சியின் இடைவெளியில் அமுதாவைக் கண்டுபிடித்தேன். பரபரவென்று இருந்தார். மேடை நிர்வாகம் அவர் கையில். அந்தப் பிஸியிலும் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்த அமுதா,"வாங்க வணக்கம், வந்ததற்கு நன்றி, கவிதா சொன்னார், உங்க சால்வையை எடுத்து வந்திருக்கிறேன். போவதற்குள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று சொன்ன போது என் முகமும் அகமும் மலர்ந்தது. அப்போதே கொடுத்தால் நலமாய் இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர்கள் இருந்த அவசரத்தில் தொந்தரவு பண்ணக் கூடாது என்று நினைத்து வந்துவிட்டேன்.
         இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவேற, வெளிவந்த மக்கள் வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடித்து மேடைக்கருகில் சென்றேன். மேடையில் இருந்த என்னை எப்படியோ பார்த்துவிட்ட அமுதா கையாட்டி மேலே வரச் சொன்னார். 100 டாலர் டிக்கட் வாங்கியவர்கள் மட்டும் கார்த்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள். அதற்காக மேடை வந்த சிலரும் அங்கு நின்றிருந்தார்கள். அதற்குள் அமுதா சால்வையுடன் வந்தார். கையில் கொடுத்தார். என்னவோ தெரியவில்லை பாப்பையா ஐயா போர்த்திய போதிருந்த மகிழ்ச்சியை விட அது மீண்டும் கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் மிகுதியாய்த் தெரிந்தது எனக்கே ஒரு ஆச்சரியம். “கார்த்திக்குடன் போட்டோ எடுக்க வேண்டுமா?”, என்று கேட்ட அமுதாவிடம், இல்லை நான் $30 டாலர் டிக்கட்தான் வாங்கியுள்ளேன்" என்றேன். “அது பரவாயில்லை”, என்று சொன்ன அமுதாவிடம் மறுத்து சால்வையுடன் வெளியே வந்தேன்.   
           வீட்டுக்கு வந்தவுடன் சால்வையைக் கையில் வாங்கிய என் மனைவி, "இந்த 5 டாலர் பெறுமான சால்வையை பெற மொத்த செலவு 250 டாலர். இதை வச்சு என்ன செய்யப் போறீங்க", என்றாள். அவளுக்கு இதனைப்பற்றி சொன்னாலும் புரியாதென்பதால் விட்டுவிட்டேன்.
        கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் பின்னால், இடது தோளில் சர்ஜரி செய்து இடது கை ஊஞ்சலில் தொங்கிக் கொண்டிருந்தது. என் மனைவி அதிகாலையில் எழுப்பிவிட்டாள். "இன்றைக்கு உங்கள் தெரப்பி ஆரம்பம்" என்றாள். எழுந்து ரெடியாகி, கைக்கட்டை மாட்டிக்கொண்டேன். மே மாதம் கத்தரி வெயிலில் இந்தியாவில் மக்கள் செத்துக் கொண்டிருக்க, நியூயார்க்கில் 'வசந்த காலம்' என்பதால் இன்னும் குளிர் போகவில்லை. குறிப்பாக காலையிலும் மாலையிலும் 50 களில் இருந்தது. மதியம் மட்டும் 65-70 டிகிரி போகிறது.
சர்ஜரி முடிந்து அவ்வளவு காலையில் குளிரும்போது எப்படி வெளியே போவது என்று திகைத்தேன். ஜாக்கெட்டையும் மாட்ட முடியாது. சட்டென ஞாபகம் வந்தது.
"ரூத் அந்த சால்வையை எடுத்துக் கொண்டு வா?"
"எந்த சால்வை?"
"அதாம்மா ஐயா கொடுத்தது?"
எந்த ஐயா?
"ஐயோ சாலமன் பாப்பையா ஐயா போத்தியது".
 சட்டென ஞாபகம் வந்து அவள் அதை எடுத்து வந்து போர்த்தி விட்டாள்
In front of my  house: Ready to go 

இப்பவும் அந்த சால்வையைப் போடும் போது அன்று  கேட்ட அதே கரகோஷம் மானசீகமாகக் காதில் கேட்டது.குளிருக்கும் இதமாய், கைக்கட்டையும் மறைக்கும் விதமாய் இருந்தது. கம்பீரமாய் வெளியே கிளம்பினேன். நன்றி ஐயா.  

-முற்றும்.

Thursday, June 11, 2015

ரஷ்ய ஜார் மன்னனின் கொலையாளி !!!!!!!!!!!!!!!!!!!

The Assassin of theTsar
மேகங்கள்சூழ்ந்த மே மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் நெட் ஃபிலிக்சில் மேய்ந்ததில் கிடைத்த படம் இது. யூ டியூப்பிலும் இருப்பதை பின்னர் பார்த்தேன்.
ரஷ்யாவில் உள்ள ஒரு மனநிலை மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளி தான் தான் 1918-ல் ஜார் மன்னன் நிக்கலஸ் II-ஐ   கொன்றதாகக் கூறுகிறான். அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனே நிக்கலஸின் தாத்தாவான அலெக்சாண்டர் II-1891ல் கொலை செய்ததாகக் கூறுகிறான் என்பதால் இது ஒரு வேளை முன்பிறவி ஞாபகமாக இருக்குமோ என்று  சிலர் சந்தேகப்படுகிறார்கள். இது மனநிலைப்பிரச்சனை என்பதால் பல ஆண்டுகள் அங்கே இருக்கிறான். இதற்கிடையில் புதிதாக அங்கு ஒரு டாக்டர் வருகிறார். (Dr. ஸ்மிர்நவ்) அங்கு ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு சீனியர் டாக்டர், புதிய டாக்டருக்கு எல்லா நோயாளிகளைப் பற்றியும் சொல்லும்போது டிமோ (Timofyev) வைப்பற்றி சொல்லி விளக்குகிறார்.   

Dr. ஸ்மிர்நவ் டிமோவைப்பற்றி முழுவதுமாக அறிய முயலும்போது, டாக்டருக்கு டிமோ கொன்ற ஜார் நிக்கலஸ் II தான்தான் என்று தோன்றுகிறது. பின்னர் இருவரும் சந்தித்து உரையாட உரையாட அந்தக் கொலையைப் பற்றி உலகமே அறியாத பல விஷயங்கள் ஃப்ளாஸ்பேக்கில் காண்பிக்கப்படுகிறது.
இது ஒரு "சைக்காலஜிக்கல் திரில்லர்" என்று சொல்லலாம். வரலாற்று உண்மைச்சம்பவங்களை இணைத்து வழங்கிய படத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் அறிவதற்கு முன் கொலை செய்யப்பட்ட இந்த இரண்டு பேரரசர்களைப்பற்றி சிறு குறிப்புகளைப் பார்ப்போம்.
பேரரசர் அலெக்சாண்டர் II
Emperor Alexander II
1.    ஜார் மன்னன் பேரரசர் அலெக்சாண்டர் II கி.பி.1818ல் மாஸ்கோவில் பிறந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் 1855ல் பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
2.    ரஷ்யாவின் பேரரசர் தவிர, 'போலந்தின் அரசர்' (King of Poland) பின்லாந்தின் இளவரசர்( The Grand Prince of Finland) ஆகிய பதவிகளையும் வகித்தார்.
3.    ரஷ்யாவில் வெற்றிகரமாக பல சீர்திருத்தங்களை வடிவமைத்த பெருமை இவருக்குண்டு.
4.    கி.பி.1861ல் செர்பியர்களை விடுதலை செய்ததால் 'அலெக்சாண்டர் தி லிபரேட்டர்' என்று அழைக்கப்பட்டார்.
5.    மேலும், நீதித்துறையில், நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது, சிறு நகரங்கள் கிராமங்களை மக்களே நிர்வகிப்பது, தூக்குத்தண்டனை ஒழிப்பு போன்ற பல சீர்திருத்தங்களை செய்தார்.
6.    ராணுவத்தை நவீனப்படுத்தி, ஒரே நிர்வாகத்தின் கீழ்  கொண்டுவந்தார்.
7.    உயர் குல பிரபுக்களின் பல சலுகைகளை நீக்கினார். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்.
8.    அலாஸ்காவை அமெரிக்காவுக்கு $7.2 மில்லியனுக்கு விற்றவர் இவரே. இது நடந்தது 1867ல். பல தனியார் கம்பெனிகள், நாடெங்கிலும் இரயில் தடங்கள், இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்தல் போன்றவற்றை செய்து ரஷ்யாவை முன்னேற்றப்பாதையில் நடத்தினார்.
9.    பல்கேரியாவை ஆட்டமன் பேரரசின் அடக்கு முறையிலிருந்து காப்பாற்றி சுதந்திரம் கொடுத்தார். எனவே இன்னும் பல்கேரிய மக்களால் போற்றப்படுகிறார்.
10. அவர் உயிர் மீது தாக்குதல் நடந்த பல முறை தப்பித்த அலெக்சாண்டர், கான்ஸ்டிட்டியூசனல் மொனார்க்கியாக ரஷ்யாவை மாற்றுவதற்கு இரண்டு நாள்கள் இருக்கையில், ஒரு புரட்சி அமைப்பின் மூலம் கொல்லப்பட்டார். இல்லாவிட்டால் இன்றுவரை ஜார் மன்னரின் பரம்பரை அங்கு ஆட்சியில் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.   
பேரரசர் நிக்கலஸ் II
Emperor Nicholas II
1.    பேரரசர் நிக்கலஸ் II, கி.பி.1868ல் பிறந்தார். கொல்லப்பட்ட அலெக்சாண்டர் II வின் பேரன். ஆனால் நடுவில் வந்த இவரின் தந்தை, “கான்ஸ்டிடியூசனல் மொனார்க்கி” (பிரிட்டனில் உள்ளபடி) என்ற அலெக்சாண்டர் II -வின் முயற்சியை நிராகரித்து மீண்டும் சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வந்து, புரட்சியை இரும்புக்கரம்  கொண்டு  அடக்கினார். ஆனால் சிறிய வயதில் இறந்து போனதால், நிக்கலஸ் II ஆட்சிப் பொறுப்பேற்றார். இவர் தன் தந்தையின் முறையைப் பின்பற்றி சில தவறான முடிவுகள் எடுத்ததால் இவரே ரஷ்யாவின் கடைசி பேரரசர் என்ற நிலையில் “போல்சோவிக்” களுக்கு ஆட்சியைப்பறிகொடுத்தது மட்டுமன்றி அவர்கள் கையில் சிறைப்படுத்தப்பட்டு 1918ல் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார்.
2.    ஆட்சிக்கு வந்தபின் ஜப்பானுக்கு எதிரான போரில் கடுந்தோல்வியை சந்தித்தது ரஷ்யா. இவருடைய தவறான முடிவின் மூலம் ஜெர்மனி மீது போர் தொடுத்து, முதலாம் உலகப்போர் தொடங்கி, அதில் ரஷ்யா தோற்றதோடு 3.3 மில்லியன் ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
3.    டென்மார்க், கிரீஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே, பிரஷ்யா, ஆகிய அனைத்து அரசு குடும்பத்தினரும் இவருக்கு உறவினர்தான். இங்கிலாந்தின் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் பார்ப்பதற்கு அச்சு அசல் இவரைப் போலவேதான் இருப்பாராம். இருந்தாலும் 1917ல் நடந்த போல்ஷேவிக் புரட்சியில் மாட்டிக்கொண்ட இவருக்கு இங்கிலாந்தும் சரி, நேசநாடான ஃபிரான்சும் சரி அடைக்கலம் கொடுக்க மறுத்தன.
Emperor Nicholas II Family
4.    சிறை பிடிக்கப்பட்ட இவரது குடும்பம் முதலில் அரண்மையிலேயே வைக்கப்பட்டது. பின்னர் வசதிகள் முற்றிலுமாக குறைக்கபட்டு டோபோல்ஸ்க் என்ற இடத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அதைவிட சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டு ஜூலை 1918ல் இரண்டாவது நிக்கலஸ், அவர் மனைவி அலெக்சான்ரா, பட்டத்து இளவரசன் அலெக்சி, நான்கு மகள்கள், ஓல்கா, டாட்டியானா, மரியா, அனஸ்டாசியா ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு அவர்களை விட்டு நீங்க மாட்டோம் என்று இருந்த குடும்ப மருத்தவர், அரசரின் உதவியாளர், அரசியின் வேலைக்காரி, குடும்ப சமையல்காரர் ஆகியோரும் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.   
5. ரஷ்ய ஆர்தொடக்ஸ் சர்ச் இவரை 1981ல் புனிதராக அங்கீகரித்தது.
இப்போது படத்துக்கு வருவோம்.
டாக்டராக நடித்தவரும் பேரரசர் இரண்டாம் நிக்கலஸாக நடித்தவரும் ஒருவரே. "ஓலெக் யான்கோவ்ஸ்கி (Oleg Yankovsky) என்ற அவர் திறம்பட நடித்துள்ளார்.
Oleg Yankovsky as Tsar Nicholas
மனநோயாளியும், பேரரசரைக் கொல்பவரும் ஒருவரே. பெயர் மால்கம் மெக்டோவல் (Malcdm Mcdowell) இவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அலெக்சாண்டர் போரோடைன்ஸ்கி, கேரன் ஷக்ஜரோவ் ஆகிய இருவரும் திரைக்கதை அமைக்க, இயக்கியவர் கேரன் ஷக்ன ஜரோவ் (Kaven Shakhnazarov) விளாடிஸ்லவ் ஷட் மற்றும் ஜான் ஆல்ட்மன் இசையமைத்திருக்கிறார்கள்.
USSR -ரின் மோஸ்ஃபிலிம் இதனைத் தயாரித்து 1991ல் ரஷ்யாவிலும் 1993ல் லண்டனிலும் வெளியிட்டார்கள்.  ரஷ்ய மொழியில் எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டது.  
ரஷ்ய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் பார்த்து மகிழலாம்.

முற்றும்

Monday, June 8, 2015

வாட்ஸ்அப்பில் விஜயகாந்த் !!!!!!!!!!!!!!!!!


வாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3



விஜயகாந்த் பதில்கள்:
ஆசிரியர்: ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்?
விஜயகாந்த்: ஆரஞ்சுபழக் கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிள்பழக் கலர் ஆப்பிள் இல்ல.
********************************************************
ஆசிரியர்: இயேசு, கிருஷ்ணா, காந்தி, புத்தர் இவர்களுக்கு உள்ள பொதுவான அம்சம் என்ன?
விஜயகாந்த்: எல்லாருமே கவர்ன்மென்ட் ஹாலிடேய்ஸ்ல பிறந்தவங்க.
*******************************************************************
ஆசிரியர்: காந்தி ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விஜயகாந்த்: காந்தி ஒரு மாமனிதர் ஆனால் ஜெயந்தியைப்பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது.
****************************************************************
ஆசிரியர்: கிரிக்கெட் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விஜய்காந்த்: மழை காரணமாக கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

******************************************************
Watch WhatsApp status messages of Vijayakanth


விஜயகாந்த்: என்னோட மொபைல் பில் எவ்வளவு?
கால்சென்ட்டர் பெண்  : சார் 123-க்கு டயல் பண்ணா உங்களோட கரண்ட் பில் ஸ்டேட்டஸ் தெரியும்.
விஜயகாந்த்: ஸ்டுப்பிட், மொபைல் பில்லைப் பத்திக் கேட்டா கரண்ட் பில்லைப்பத்தி சொல்றியே.
**************************************************************************
விஜயகாந்த் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வந்து மனைவியிடம் கேட்டார்.
விஜயகாந்த்: என்னைப் பாத்தா ஃபாரினர் மாதிரியா தெரியுது?
மனைவி: இல்லையே.
விஜய்காந்த்: பின்ன ஏன் லண்டன்ல ஒரு லேடி என்னை ஃபாரினரானு கேட்டுச்சு.
*****************************************************
விஜயகாந்தும் மனைவியும் காஃபி ஷாப்புக்கு போனார்கள். விஜயகாந்த் மனைவிக்கு சூடான காபி வாங்கிக் கொடுத்து சீக்கிரம் குடிக்கச் சொல்லி சொன்னாராம்.
மனைவி: ஏன் இப்படி அவசரப்படுத்துறீங்க?
விஜய்காந்த்: ஹாட் காஃபி $5, கோல்டு காஃபி $10 ன்னு போட்டுருக்கு

********************************************************************



ஜெராக்ஸ் காப்பி எடுத்தவுடன் விஜயகாந்த் என்ன செய்வார்?
ஒரிஜினலோட காப்பியை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கான்னு சரி பார்ப்பார்.
**********************************************************************
யாரோ: சிக்கன் முதல்லவருமா முட்டை முதலா வருமா?
விஜய்காந்த்: எதை முதல்ல ஆர்டர் செய்யறியோ அதாண்டா முதல்ல வரும்.
*******************************************************************



விஜய்காந்த் SB அக்கவுண்ட் ஓபன் பண்ண பேங்குப் போனாராம். அந்த அப்ளிகேஷனைப் பார்த்துட்டு உடனே கிளம்பி டெல்லி போனாராம் ஏன் தெரியுமா? அப்ளிகேஷன்ல "Fill up in Capital"-னு போட்டிருஞ்சாம்.










Thursday, June 4, 2015

அல்லக்கையும் நொள்ளக்கையும் !!!!!!!!!!!!!!!!!

Ouch!!!!!!!!

ஒரு கையில் கட்டுடன் அங்குமிங்கும் அலையும் போது முடிந்த அளவுக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு பல இடத்தில் செய்த நகைச்சுவை(?) சமாளிப்புகள் கீழே. உடைந்துபோன கையோடு சில இடங்களில் மூக்கும் உடைந்தது தனிக்கதை.
வீட்டுக்கு பார்க்க வந்த ரங்கா : என்னாச்சு?
நான்: பொற்கைப்பாண்டியன் தெரியுமில்ல , இது ஒற்கைப்பாண்டியன் !!!!!!!!!!
*********************************************************************************
ஆலயத்தில் பேசச் சொன்ன போது:
ஒரு கை ஓசை எழுப்பாது, ஆனால் ஒரு வாய் ஓசை எழுப்பும் என்பதால் பாஸ்டர் என்னைப் பேசக் கூப்பிட்டுள்ளார்.
சேப்பல் சர்வீசில் முதல் தடவை:
எனக்கு இன்று ஒரு கைதான் இருக்கிறது, ஆனால் வழக்கத்திற்கு மாறாக உதவி செய்ய பல கைகள் வந்திருக்கின்றன. (உடை மாற்ற மனைவியும் காரை ஓட்ட மகளும் வந்திருந்தனர்.)
***************************************************
சேப்பல் சர்வீசில் 2-ஆவது வாரம்:
எனக்கு ஒரு கை இன்று வேலை செய்யாமல் இருக்கலாம், ஆனால் ஆண்டவனுக்கு நன்றி எனக்கு இன்னொரு கை நன்றாக வேலை செய்கிறது.
**************************************************
சேப்பல் சர்வீசில் 3-ஆவது வாரம்:
இன்றும் ஒரு கையில் கட்டு இருக்கிறது. ஆனால் ஆண்டவனுக்கு நன்றி அது என்னுடைய இடது கைதான். நல்ல வேளை அது என் வலது கையில்லை.
******************************************
ஒரு தமிழர் கூட்டத்தில் :
என் மனைவியை எப்போதும் என் வலதுகை என்றுதான் இதுகாறும்  நினைத்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது அவள் என் இடது கை என்று.
*************************************************************
கவிஞர் சிவபாலன் கொடுத்த விருந்தில்:
சிவா உங்கள் விருந்தை 'ஒரு கை' பார்க்க வந்திருக்கிறேன்.
***************************************************
நண்பரின் மனைவி:  ஏன் கையில் கட்டு?
நான்: 23 வருடத்துக்கு முன்னால் எனக்கு கால் கட்டுப் போட்டார்கள், 23 நாட்களுக்கு முன்னால் எனக்கு கைக்கட்டுப் போட்டிருக்கிறார்கள்.
என் மனைவி: இவருக்கு ஒரு வாய்க்கட்டும் போட்டால் நலமாயிருக்கும்.
நான்: பேசாமலிரு, கைக்கட்டு நிரந்தமில்லை, கால்கட்டை இதுவரை நிரந்தரம் என்றுதான் நினைத்திருக்கிறேன்.
என் மனைவி: !!!!!!!!!!!!!!!!!!!!!!
*************************************************************
தெருவில்: என்னாச்சு கைக்கு?
நான்: மனைவியுடன் சின்ன தகறாறு.
தெருவில்: ஓ கேர்ல் ஃபிரண்ட் இருக்கிற பிரச்சனையா?
நான்: இல்லை இல்லை கேர்ல் ஃபிரண்ட் இல்லாத பிரச்சனை.
*****************************************************************
தெருவில் கண்ணாடி விற்பவர்: Handle her carefully next time.
நான்: Sure sure, I just realized I am fragile.
******************************************************************
தெருவில் : தலையில் கட்டுப்போட்டவர் - கெட் வெல் சூன்
நான்: யு டூ.
**********************************************************************
ஆலயத்தில் ஒருவர்: என்னங்க நல்ல அடிபட்டிருக்கு போல இருக்கு.
நான்: நல்ல அடியா இல்லைங்க கெட்ட அடி
***************************************************************
தெருவில்: You had a good Fall?
நான்: No No I had a bad Fall.
*********************************************************
நண்பர்: அடுத்த தடவை பேசித்தீர்த்துக்கங்க.
நான்: பேசித்தான் தீர்த்தோம், நான் வாயாலும் அவள் கையாலும்.
**************************************************

சேஸ் பாங்கில் :
Teller: what happened to your hand?
Me: I was trying to break the ice using my shoulder; in turn the ice broke my shoulder.
Teller: Oh this is what called “ Icebreaking” ?
****************************************************
கைக்கட்டை டாக்டர் கழற்றும்போது
என் மனைவியிடம்: உஷ் அப்பாடா ஒரு வழியாக கைக்கட்டை கழட்டியாச்சு, இந்த கால்கட்டைத்தான் எப்படி கழட்டுறதுன்னு தெரியல?
மனைவி: இத்தனை நாள் நான் உங்க இடதுகைன்னு சொன்னீங்கல்ல, வலது கையாவும் கொஞ்ச நாள் இருக்க ஆசை சம்மதமா ?, அப்புறம் கால்கட்டைப் பத்தி யோசிக்கலாம்.
**********************************************************************
தெருவில் ஒருவர்: What are you trying to smuggle in your sling?
நான்: only pain
அவர்: There is no pain, no gain.
தெரபிஸ்ட் : தொடர்ந்து இந்த பயிற்சியெல்லாம் செய்யுங்க , நீங்க சீக்கிரமா நார்மல் ஆயிறலாம் .
நான் : அப்ப அடுத்த வருஷம் ஒலிம்பிக்ஸ் போயிருவேனா ?
****************************************************************
நான்: என் அல்லைக்கையை   கூப்பிடுங்க 
நண்பர்: அது யாரு உங்க அல்லக்கை ?
நான்: அதாங்க என் மனைவி
மனைவி:( காதில் விழுந்துவிட்டதால்) ஒரு கை நொள்ளக்கையா இருக்கும்போதே இவ்வளவு பேச்சா?
நான்: கோவிச்சுக்காதே நான் என்னா தப்பாவா சொல்லிட்டேன் , அல்லக்கைனா  அருகில் இருக்கும் கைன்னு அர்த்தம் , அது நீதானே
மனைவி : இந்த வாய் மட்டும் உனக்கு இல்லன்னா ?
*******************************************************************

Add caption

நீதி:
அடேயப்பா இடது கை வேலை செய்யலன்னா, இவ்வளவு காரியம் செய்ய முடியாதா? நான் ஒன்னே ஒண்ணுதான் செய்ய முடியாதுன்னு நெனைச்சேன்.
- முற்றும்.