Thank you Venkat |
வேர்களைத்தேடி
பகுதி –41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
சாப்பாட்டுக் கதைகளின் வரிசையில் அடுத்து
எனக்கு ஞாபகம் வருவது ஆப்பக்கடைகள். ஆச்சி இட்டலிக்கடை போலவே ஒன்றிரண்டு ஆப்பக்கடைகளும்
இருந்தன. இவை இருந்தவை என்னுடைய வீட்டிலிருந்து
வலதுபுறச்சந்தில் நுழைந்து வாணிகச்செட்டியார் (இங்குதான் எண்ணெய்ச் செக்காடும்) தெருவைக்
கடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் உருது பேசும் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர்.
சிலர் அவர்களை பட்டாணியர் என்பர். தேவதானப்பட்டியில் வாழும் தமிழ் முஸ்லீம்களை விட
இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். இவர்கள் நிறத்தால் மேலும் வெளுத்தவர்கள். அங்கேதான்
என் வகுப்புத் தோழனான சிராஜுதீன் வீடு இருந்தது. அவனைப் பார்க்க அங்கு போகும் போதெல்லாம்
காலையிலும் மாலையிலும் தெருவிலிருக்கும் ஆப்பக்கடைகளை பார்ப்பேன். தெருவில் உட்கார்ந்து,
தீமூட்டி தண்ணியாய் கரைத்த மாவில் ஆப்பம் சுடுவார்கள். களி மண்ணால் செய்த ஆப்பச்சட்டியைத்தான்
பயன்படுத்தவார்கள் . சூடான சட்டியில் தண்ணியான ஆப்ப மாவை ஊற்றி சட்டியைக் துணி சுற்றிய
கையில் பிடித்து மாவு சட்டியில் பரவும்படி மேலும் கீழும் அசைப்பார்கள். மாவு பரவியவுடன்
அடுப்பில் வைத்து அதன் மேல் ஒரு மூடியை வைத்துவிடுவார்கள். சில நொடிகளில் வெந்துவிடும்
ஆப்பத்தை ஒரு கூர்மையான ஸ்பூனை வைத்து ஒரு
ஓரமாக நோண்டினால் ஆப்பம் அப்படியே வந்துவிடும். இதில் ஆப்பத்தைத் திருப்பிப்போட மாட்டார்கள்.
வட்ட வடிவமாக சிறிது பொன்னிறமாக சுற்றிலும் மெலிதானதாகவும் நடுவில் கொஞ்சம் தடியாகவும்
ஆயிரம் சிறு துளைகளைக் கொண்டதாகவும் இருக்கும். சற்றே இனிப்பாக இருக்கும் ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால்
சொதி அல்லது சட்னி தருவார்கள். எனக்கு அப்போதிருந்தே இனிப்பு ஆகாதென்பதால், ஆப்பம் எனக்கு அவ்வளவு விருப்பமான உணவல்ல. சில சமயங்ககளில்
என் அம்மா வாங்கிவரச் சொல்வார்கள்.
மற்றொரு சாப்பாட்டுக்கடை
தேவிவிலாஸ் ஓட்டல். ஓட்டல் என்றால் சாப்பிடுமிடம் என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.
ஏனென்றால் தேவதானப்பட்டியில் சாப்பிடுமிடத்தை ஓட்டல் அல்லது கிளப் கடை என்று சொல்வார்கள்.
சென்னைக்கு வந்தபின்தான் ஓட்டல் என்றால் தங்குமிடம் எனவும் ரெஸ்ட்டாரண்ட் என்றால்தான்
சாப்பாட்டுக்கடை என்று தெரியவந்தது. தேவதானப்பட்டிக்கு பிழைப்புக்காக வந்த இரு மலையாள
நாயர் சகோதரர்கள் முதலில் டீக்கடை ஆரம்பித்து பின்னர் அதனையே சாப்பிடுமிடமாக விரிவு
செய்தார்கள். பின்னர் தனித்தனி கடைகளை அருகருகில் அமைத்துக் கொண்டனர். அருகில் என்றால்
ஒரு 10 அடி தள்ளி. அதில் ஒன்றின் பெயர்தான் தேவிவிலாஸ். சின்ன வயதிலிருந்து அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று எனக்கு ஆசை. எங்கப்பாவிடம்
அதனைச் சொன்னேன். அவரும் ஒரு நாள் மாலையில் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.
முன் கடைக்கு முன்னால் பெரிய கீற்றுக் கொட்டகை, கடந்து சென்றால் ஒரு மூலையில் டீ, காப்பி
விற்கும் இடம். அதன் நேர் எதிரே உரிமையாளர் உட்காரும் கல்லா மேசை. அதனைத்தாண்டி உள்ளேபோனால்
பழைய சதுர மார்பிள் மேசைகள் போட்டு சுற்றிலும் ஸ்டூல்கள் இருக்கும். அங்கே நடுநாயகமாக
இருந்த கண்ணாடிக் கதவுகள் இருந்த அலமாரியில் பூரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அதனருகில் வடை, போண்டா, இனிப்புருண்டைகள் இருக்கும்.
என் அப்பா உள்ளே நுழையும்போது நாயர்
எழுந்து நின்று வரவேற்றார், அதோடு கடையில் இருந்த வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, சாப்பிட்டுக்
கொண்டிருந்த பலரும் சற்றே எழுந்து என் அப்பாவை வரவேற்றனர். என் அப்பாவுக்கு எல்லோரும்
கொடுத்த மரியாதை எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஊர் முழுவதும் அப்பா மேல் ஒரு
மரியாதை இருந்தது. சிறந்த ஆசிரியர் என்பதால் மட்டுமல்ல தன் ஆசிரியப்பணியை வெறும் கடமையாக
எண்ணாது தன் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சொல்லிக் கொடுப்பவர் என்பதால்
அந்த மரியாதை.
என்
அப்பாவிடம், "எனக்கு பூரி வேண்டும்" என்றேன்.வேண்டாம் அதனை காலையில் சுட்டிருப்பார்கள்,
தோசை சாப்பிடலாம் என்று சொல்லி 2 ஸ்பெஷல் தோசை ஆர்டர் செய்தார். காரமான கெட்டிச்சட்னி,
சாம்பார் சகிதம் தோசை நன்றாகவே இருந்தது.
Courtesy Swasthi |
தோசை சுவையாக
இருந்தாலும் என் கண் என்னவோ உருண்டையாக உப்பிய நிலையில் வைக்கப்பட்டிருந்த பூரி மேலேயே
இருந்தது. ஏனென்றால் இட்டலி தோசை வீட்டில் கிடைக்கும். பூரி பொங்கல்தான் வெளியே கிடைக்கும்
என்பதால். அதன்பின்னர் நான் ஒன்பது, பத்தாவது படிக்கும்போது தேர்வுகள் வரும் தினங்களில்
என்னை ஊக்கப்படுத்துவதற்காக தினமும் 1 ரூபாய் அப்பா தருவார். அதனை எடுத்துக்கொண்டு
தேவிவிலாஸ் சென்று பூரி கேட்டேன். என்னுடைய நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. உப்பிய
பூரியில் நடுவில் ஓட்டை போட்டு உள்ளே சூடான பூரிக்கிழங்கை வைத்துக் கொடுத்தனர்.
இதில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் உருளைக்கிழங்கு விலை
மலிவாக இருக்கும்போது மசாலாவில் கிழங்கு அதிகமாகவும், வெங்காயம் கம்மியாகவும் இருக்கும்.
வெங்காயம் விலை குறையும்போது வெங்காயம் அதிகமாகவும் கிழங்கு குறைவாக இருக்கும். வெங்காயம்
அதிகமாகவும், கிழங்கு குறைவாக இருக்கும்போதும் என்னைப் பொறுத்தவரையில் சுவை கூடுதலாக
இருக்கும்.
எப்பொழுதும் பூரி சாப்பிட்டதால்
நான் போனால், "வா சேகர்" என்று வரவேற்று நான் சொல்லாமலேயே பூரி மசாலாவை கொண்டு
வந்துவிடுவார்கள். ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக பொங்கல் கேட்டேன் அதுவும் சுவையாகவே
இருந்தது. சட்னியும் சாம்பாரையும் இணைத்து வடையுடன் சாப்பிட்டேன் வீட்டில் வந்து சொன்னபோது,
அப்பா சொன்னார். "இனிமேல் பொங்கல் சாப்பிடாதே" என்று. ஏனென்று கேட்டதற்கு
முந்தின நாள் சாதம் மிஞ்சிவிட்டால் அதில்தான் அடுத்தநாள் பொங்கலோ அல்லது லெமன் சாதம்,
புளி சாதம் என்று செய்துவிடுவார்கள். எனவே அதைச் சாப்பிடக் கூடாது" என்று சொன்னார்.
அதிலிருந்து பூரி மட்டும்தான் சாப்பிடுவேன். தேர்வுக்காலங்களில் மட்டும் என் அப்பாவிடமிருந்து
கிடைக்கும் சலுகை என்பதால், தேர்வு சமயங்களில் வரும் பதட்டத்தை வெகுவாக நீக்கினேன்.
ஆஹா பூரி கிடைக்குமே என்ற எண்ணம்.
இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது,
அது என்னுடைய அப்பாவின் இன்னொரு டெக்னீக்காகத்தான் தெரிகிறது. அதனால் அவர் எதிர் பார்த்த பலனும் கிடைத்தது என்றே நினைக்கிறேன். தேவிவிலாஸ்
கடையின் பூரி மற்றும் மசாலாவின் சுவை என் நாவில் மட்டுமல்ல மனதிலும் நிலைத்து நிற்கிறது.
அதற்கு அருகில் எங்கள் பேரூராட்சித் தலைவராக பலவருடம் இருந்த தி.மு.கவைச் சேர்ந்த D.K.ராஜேந்திரன் அவர்கள் அலுவலகம் இருக்கும். அதனருகில் இன்னொரு கடை இருந்தது. முஸ்லீம்
நடத்திய அந்தக் கடையில் பரோட்டா நன்றாக இருக்கும். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்
சாப்பாட்டுப் பதிவுகள் எப்போதுமே சுவை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteஶ்ரீதேவி விலாஸ் ஹோட்டலின் முன்பகுதியில் கண்ணாடி ஸ்டால் இருக்கும் அதில் மிக்சரை பொட்டம் போட்டு ஒரு பெரிய தட்டில் அடுக்கி வைத்திருப்பார்கள்.என்னையும் அப்பா அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.பெருமாள் என்ற பெயருடைய டீ மாஸ்டரிடம் டீ போடச் சொல்லிவிட்டு ஹோட்டலின் உள்ளே சென்று அமர்ந்து மிக்சர் பொட்டலத்தை கொண்டுவரச் சொல்லி பிரித்து சாப்பிட மொறுமொறுவென்று காரசாரமாக சுவையாக இருக்கும் மிக்சரை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது டீ சூடாக வரும் .அப்பா எனக்கு வரும் டீயை நன்கு ஆத்தித்தரச் சொல்வார்.இரண்டும் அங்கு சூப்பராக இருக்கும்.நம் வீட்டுக்கு யாராவது கெஸ்ட் காலையில் வந்து விட்டால் தேவிவிலாஸ் ஹோட்டல் சென்று தோசை வாங்கிவரச் சொல்வார். சாம்பார் வாங்கிவர எவர்சில்லர் தூக்குவாளி கொண்டு போக வேண்டும் தோசையை வாழையிலையில் வைத்து தேங்காய் கெட்டிச் சட்டினி வைத்து.அதற்கு கீழ் நியூஸ் பேப்பரை வைத்து நீளவாக்கில் சுற்றித் தருவார்கள்.அந்த வாசனை மிக அருமையாக இருக்கும்.சில வேளைகளில் நானும் தம்பியும் சென்று ஏழு ரூபாய் கொடுத்து பூரி கிழங்கு சாப்பிட்டிருக்கிறோம்.
ReplyDeleteஉங்கள் அனுபவம் என் அனுபவத்தை விட நன்றாகவே இருக்கிறது .
Deleteஅருமை... ரசித்து சுவைத்தேன்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteபூரி கிழங்கு ஜோரு..
ReplyDeleteநன்றி முத்துச்சாமி.
Delete