வருந்துகிறேன்
பல ஆண்டுகள் நீடித்த சண்டை முடிந்து
இப்போதுதான் இலங்கை மக்கள் மூச்சு விட ஆரம்பித்தனர்
.மக்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பும் சமயத்தில் இப்போது மீண்டும் ஒரு
கொடூரம் நடந்திருக்கிறது .அந்த மக்கள் என்ன
பாவம் செய்தார்கள் ? .தீவிரவாதமும் , வன்முறையும் எந்தப்பிரச்சனைக்கும் தீர்வாகாது .இந்த
மக்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது .ஆறுதல் சொல்வதற்கும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது
?இதனை வேடிக்கை பார்க்கும் இறைவனுக்கு இதனை எப்படி புரிய வைப்பது ?
படித்ததில்
பிடித்தது
கடவுச்
சீட்டு
வி.ஜீவகுமாரன்
நற்றிணை பதிப்பகம்.
வி.ஜீவகுமாரன் என்ற இந்தப்புதினத்தின்
எழுத்தாளர், டென்மார்க் வாழ் இலங்கைத்தமிழர். தன் சொந்த அனுபவத்தை எழுதியதைப்போல்,
புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப் பற்றியும் வீழ்பவர்களைப் பற்றியும் இந்தப்புத்தகத்தில்
எழுதியிருக்கிறார். இது அவரது சொந்த அனுபவம் என்றே நம்பத் தோன்றுகிறது. சிங்காரம் விருதுபெற்ற
இந்த நாவல் புலம் பெயர்ந்தவர்களைத் துரத்தும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று நினைப்பது போலத்தான் என்னைப்போன்ற
புலம் பெயர்ந்தவர்களுக்கு அமைகிறது. நான் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வந்திருப்பதால்
வந்த நோக்கம், நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளின் எதிர்காலம்
என்று சொல்லலாம். என்னைப் போன்று வந்தவர் யாராயிருந்தாலும் இதனைத்தான் சொல்வார்கள்.
ஆனால் யோசித்துப்பார்த்தால் பெற்றதைக்காட்டிலும் இழந்ததுதான் அதிகம். உறவு, நட்பு,
மொழி, கலாச்சாரம், அடையாளம் என்று இழந்துபோனது அதிகம்தான்.
ஆனால் பெரும்பாலான இலங்கைத்தமிழர் புலம் பெயர்ந்தது மேற்சொன்ன
காரணங்களுக்கில்லை. போரில் வீடிழந்து, உறவுகளை இழந்து, நிலம், உடமைகள், சொத்துக்களை
இழந்து, உயிர் பிழைத்து வாழ ஓடி வந்தவர்கள். எங்கெல்லாம் அடைக்கலம் கிடைக்குமா அங்கெல்லாம்
புலம்பெயர்ந்தார்கள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஃபிரான்ஸ், டென்மார்க்,
ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகமாக வந்தனர்.
வேறு சில காரணங்களுக்காவும்
இயக்கத்திலிருந்து தப்பிப் பிழைக்கவும் புலம் பெயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி வந்த ஒரு குடும்பத்தின் கதைதான் கடவுச் சீட்டு. வழக்கம்போல்
புல்லட் பாயிண்ட்டுகளில் என்னைக் கவர்ந்த, ஆச்சரியப்படுத்திய சங்கதிகளைப் பார்ப்போம்.
அதற்கு முன் கதைக்களத்தைப் பார்ப்போம்.
வேறு வேறு சாதிகளையும் சமூக அந்தஸ்துகளையும் கொண்ட யாழ் பல்கலைக்கழக
மாணவர்களான தமிழ் மற்றும் சுபா , குடும்பங்களைத் துறந்து திருமணம் செய்துகொண்டு ஏஜென்ட்டுகளின்
உதவியோடு நாட்டைவிட்டுக்கிளம்புகிறார்கள். அவர்கள் ஜெர்மனி வழியாக டென்மார்க் அடைந்து
படித்து முன்னேறி, பிள்ளைகள் பெற்று வாழும் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்கள்
நடந்து, அதனை அவர்கள் சமாளிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. மீதிக்கதையை புத்தகம்
வாங்கிப் படிக்க முயலுங்கள். நியூயார்க்கில் உள்ளவர்கள் என்னிடம் இரவல் வாங்கியும்
படிக்கலாம்.
1.
ஜெர்மனியில் வந்திறங்கிய இலங்கை மக்களை
வழிநடத்திய ஏஜென்ட், அங்கு விமானம் இறங்கியதும் தங்கள் கடவுச்சீட்டுகளை கிழித்துப்போடச்
சொல்கிறான். இதுதான் புத்தகத்தின் தலைப்பு, கடவுச்சீட்டு என்பது பாஸ்போர்ட் என்பதன்
தமிழாக்கம். ஒவ்வொருவராக கழிவறைக்குச் சென்று அப்படிச் செய்யும்போது அவர்களின் சொந்த
அடையாளத்துக்கான சான்றை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள் என்று கதை ஆரம்பிக்கிறது.
2.
ஈழநாடு பத்திரிக்கை தேர்தலை எப்படி மாற்றியமைத்தது
என்பது ஆச்சரியப்படவைக்கிறது.
3.
யாழ்ப்பாணம் பஸ்ஸ்டாண்டு, 97000 புத்தகங்கள்
கொண்ட யாழ்ப்பாண நூலகம் அத்தனையும் சண்டையில் எரிந்து சாம்பலாகின்றன.
4.
வீரகேசரி என்ற பத்திரிகை “யாழ்ப்பாணம்
எரிகிறது” என்று தலைப்பிட்டு அதனை வெளியிடுகிறது.
5.
ஸ்கேண்டிநேவிய நாடுகள் என்று சொல்லப்படும்,
டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகள், அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்கு அதிகப்பணமும்
உதவியும் செய்கின்றன என்பதால் பல இலங்கைத் தமிழர்கள் இந்த நாடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.
6.
ஜெர்மனியின் அகதிமுகாமில் இருந்து இவர்கள் இரவில்
தப்பித்து அகழியில் ஏறிக்கடந்து, வேலியினைத் தாண்டி வெளியேறுகிறார்கள்.
7.
அங்கிருந்து திருட்டு வழியாக டென்மார்க்
செல்வதற்கு 10 பேர் கொண்ட இரு குழுவாகப் பிரிந்து, ஒரு குழு பன்றி வண்டியிலும், இன்னொரு
குழு பெட்ரோல் டேங்கிலும் ஏற்றப்படுகின்றனர்.
8.
இதில் இலங்கைத்தமிழர் தவிர லெபனாவிலிருந்து
வரும் அகதிகளும் அடங்குவர்.
9.
பன்றி வண்டியில் ஏற்றப்பட்டவர், வண்டியின்
நடுவில் இருந்த ஒரு கூண்டில் குத்தவைத்து உட்கார வைக்கப்பட, சுற்றிலும் பன்றிகள் சூழ்ந்து
அவர்களை மறைந்தன. கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு பன்றிகள் மட்டுமே தெரியும். என்ன
இது வேடிக்கை பாருங்கள். பன்றிகள் வெளியே சுதந்திரமாக இருக்க, மனிதர்கள் கூண்டுக்குள்.
ஆனால் அவற்றின் மூத்திரம் மற்றும் கழிவு நாற்றம் தாங்கமுடியாமல் உள்ளே இருந்த பெரும்பாலானோர்
வாந்தியும் மயக்கமும் வந்து பெரிய அவஸ்த்தைக்குள்ளாகினராம்.
10.
பெட்ரோல் டாங்க் டிரக்கில் இருந்த மூன்று
பெரிய டங்குகளில் ஒன்றில் பத்துக்கு மேற்பட்டோர் ஒரு ஏணி மூலமாக இறக்கப்பட்டு பின்னர்
ஏணியை உருவி விட்டு மேற்பாகம் அடைக்கப்பட்டதாம். ஆனால் எப்படியோ மற்ற டேங்கர்களிலிருந்து
தழும்பி உள்ளே வந்த பெட்ரோல் நெடியில் அடைக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறி வெளியே எவ்வளவு
சத்தம் போட்டும் தட்டியும் கேட்காமல் அவ்வளவு பேரும் இறந்துவிடுகின்றனர். என்ன ஒரு
கொடுமை. இதற்கு பன்றிக்கூண்டே தேவலாம்.
11.
அகதிகளால் உள்ளே நுழையும் நபர்கள் கோபன்
ஹேகனிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள 'சான்கெலம்' என்னும் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டு,
ஒவ்வொரு வியாழனும், கைச்செலவுக்கு பாக்கெட் மணி, சிகரெட் பாக்கெட் மற்றும் ஒயிட் பியர்
வழங்கப்படுமாம்.
12.
அதன்பின்னர் நகர்புறவீடு கொடுக்கப்பட்டு,
டேனிஷ் மொழி பயில வேண்டுமாம்.
13.
இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் மத்தியிலும்
சாதிப்பாகுபாடுகள் இருப்பது துக்கம் தருகிறது.
14.
அங்கேயும் இயக்கத்தினரின் மிரட்டல்கள்,
நன்கு படித்து முடித்தும் நிறத்துவேஷத்தால் வேலை கிடைக்காத நிலைமை எனப்பல தடங்கல்கள்.
15.
அதன் பின்னர் பிள்ளைகள் டீனேஜ் பருவத்தில் சிக்கிக் கொண்டு மாறுபட்ட கலாச்சாரத்தில் அமிழ்ந்து
போன கதையும் வருகிறது.
மீதத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.
இலங்கைத் தமிழர் பயன்படுத்தும் தமிழ்
மற்றும் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. கீழே சில உதாரணங்கள்.
டவுன் - ரவுண்
ஸ்டாண்ட் – ஸ்ராண்ட்
ஏஜென்ட் - ஏஜென்ற்
கேம்ப்பஸ் - கம்ப்பஸ்
டியூலிப் - ரியூலிப்
டாய்லட் - ரொய்லற்
டாக்டர் - டாக்குத்தர்
ஆஃபிஸ் - ஒவ்விஸ்
லிஸ்ட் - லிஸ்ற்
பெட்ரோல் = பெற்றோல்
ஜெர்மனி - ஜேர்மனி
சிட்டிசன் - சிற்றிசன்
டிரவுசர் - ரவுசர்
ஆண்ட்டி - அன்றி
டேங்க் - ராங்க்
டீச்சர் - ரீச்சர்
டம்ளர் - ரம்ளர்
சிமெண்ட் - சீமெந்து
தமிழ் வார்த்தைகள்:
அண்ணன் - அண்ணை
பாட்டி - அம்மம்மா
சோதனை - சோதினை
துப்பாக்கி - துவக்கு
ஜன்னல் – யன்னல்
முற்றும்
புத்தகம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteநல்ல விமர்சனம். இப்போதான் இந்த லிங்க் பார்த்து வந்தேன். புத்தகம் படிக்கும் ஆவல் அதிகமாகுது. நான் முத்துலிங்கம் (கனடா) அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்திருக்கிறேன் (இதே சப்ஜெக்ட்.. ஆனால் இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகப் புறப்பட்டு கனடா சேரும்வரையிலான பயணம்).
ReplyDeleteஅவங்களோட அனுபவங்கள் நம்மை உறையவைக்கும். (அப்படியாப்பட்ட ஒருவரை ப்ரான்ஸில் ஒரு பூங்காவில் சந்தித்தேன்.... அவர் அரசு உதவி பெற்றுக்கொண்டு, சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கிறார். அவர் கையில் கல்கண்டு இதழ் படித்துக்கொண்டிருந்ததனால் நானே அவரை நோக்கிச் சென்று பேச்சுக்கொடுத்தேன்)