Thursday, April 18, 2019

கிழக்கு வங்காளத்தில் நடந்த கிளர்ச்சி !!!!!!!!!



பார்த்ததில் பிடித்தது.
சிட்டகாங்
Image result for Chittagong movie

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய நாடெங்கிலும் பலவிதமான கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றுள் சில அமைப்பு சார்ந்தவை பல தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சிகள். அப்படி நடந்த பல போராட்டங்கள் பலருக்கும் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவின் வாஞ்சி நாதனையும், திருப்பூர் குமரனையும் வட இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல் சிட்டகாங் என்னுமிடத்தில் நடந்த மாபெரும் எதிர்ப்பு நிகழ்ச்சிதான் இந்த திரைப்படம். நெட் பிலிக்சில் இருப்பதால் எனக்குப் பார்க்க கிடைத்தது. அந்த சிட்டகாங் எனும் ஊர் இப்போது பங்களாதேசத்தில் இருக்கிறது.
2012ல் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. படத்தின் நிகழ்வைப் பற்றியும் எனக்கு முன்னால் தெரியாது.
இது 1930ல் கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சி அல்லது போர் என்று கூட சொல்லலாம்.
Image result for Surya sen of Chittagong

ஒரு பள்ளிக் கூட ஆசிரியரான சூரியா சென் என்பவரின் தலைமையில் 50 பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய கிளர்ச்சி இது. சிட்டகாங் நகரின் ஒரு இரவில் இவர்கள் போய் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி அதிலிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து ஒரு சிறு ராணுவம் போல் செயல்படுகிறார்கள். கைப்பற்றியதோடு அங்கே இந்திய தேசியக் கொடியை ஏற்றி விடுதலையைக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த மெஷின் துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்கில் இல்லை. அடுத்த நாளே கல்கத்தாவிலிருந்து பெரும் படை வந்தது. எனவே இவர்கள் தப்பியோடி காட்டுக்குச் சென்று அரணமைத்தார்கள்.
உயரமான இடத்தில் இருந்ததால் முன்னேறி வந்த முதலாவது படைப் பிரிவை அவர்கள் துவம்சம் செய்ய முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த படைகள் வரவர தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் தங்கள் மாணவர் படையைக் கலைத்துவிட்டுப் பிரிந்து சென்று தலைமறைவாகினர். ஆனால் 14 வயதான ஜின்கு என்பவன் பிடிபடுகிறான். ஆனால் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்டாலும் அவன் மற்றவர்களை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியில் பிடிபட்ட சிலரோடு அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறான்.
Related image
Add caption
23 வயதில் வெளியே வந்தாலும் திரும்பவும் புரட்சியில் ஈடுபடுகிறான். மாணவர்களின் எழுச்சி அவர்களை வழி நடத்திய ஆசிரியர் ஆகியோர் இணைந்து செய்த இந்தப் புரட்சி ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தது. இப்படி பல அடிகள் அங்குமிங்கும் எங்கும் பட்டதால்தான் இறுதியில் சுதந்திரம் தர சம்மதித்தார்கள். எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை தெரியாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்தவர் பேடபிரட்டா பெயன் (Bedabrata Pain) என்பவர். இவரோடு கூட இருந்து கதையை எழுதியவர் ஷோனாலி போஸ். சூரியா சென்னாக மிகைபடுத்தாத நடிப்பை வெளிப்படுத்தியவர் மனோஜ் பாஜ்பயி.
Image result for manoj bajpai
Manoj Bajpayee 
2012ல் வெளிவந்த இந்தப்படம் ஒரே சமயத்தில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் எடுக்கப்பட்டது. ஒரு பீரியட் படத்திற்குத் தேவையான இசையை அமைத்தவர்கள் சங்கர் ஈஷன் லாய். இதில் சங்கர் என்பவர் நமக்கெல்லாம் நன்கு தெரிந்தவரான சங்கர் மகாதேவன்தான்.
அருமையான ஒளிப்பதிவைக் கொடுத்தவர் எரிக் ஜிம்மர் மேன் என்பவர்.
உலகத்திலேயே மிகச்சிறிய வயதில் புரட்சி செய்த ஜின்கு (14 வயது) வாக நடித்த பையன் சுபோத் ராய் என்பவன்.
திரையிடப்பட்டு நன்கு வரவேற்கப்பட்ட இந்தப்படம் பல திரைப்பட விருதுகளை அள்ளியது. அறுபதாவது தேசிய திரைப்பட விழாவில் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது பேடபிரட்டா பெயினுக்குக் கிடைத்தது. மேலும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது பிரசூன் ஜோசிக்கும் கிடைத்தது.
ரூபாய் 45 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறை அறிய ஆவலுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்

4 comments:

  1. One of the best movies I have seen in recent times! Chittagong is very touching movie, thank for the recommendation Alfy!

    ReplyDelete
  2. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete