வேர்களைத்தேடி பகுதி: 7
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/search?updated-max=2018-02-22T08:00:00-08:00&max-results=7
In front of my old house |
புது வெள்ளம் போல புரண்டு வந்த நினைவுகளில் நீந்திய வண்ணம் தெருவுக்குள் நடந்தேன்.
அப்படியே நாட்டாமை வீடு, முத்துக் கழுவன்
வீடு, கருத்தையா தேவர், பூசாரி வீடு ஆகியவற்றைக் கடந்து
நடந்தேன். நான் வளர்ந்த ஆடி ஓடித்திரிந்த தெருக்கள் இப்போது மிகமிகச் சிறியதாக
இருந்தன. அந்த சந்தில் நுழைந்து நடந்ததும் அதன் மூலையில் என்
வீடு வந்தது. என் வீடு என்று இப்போது சொல்லக் கூடாது. அதைத்தான் விற்றுவிட்டு
சென்னை வந்து அங்கிருந்து நியூயார்க் வந்து வெகு தூரம் வந்துவிட்டோமே. வீட்டின் முன்னால் உள்ள கிரில்லை தட்டி "வீட்டிலே யாருங்க"
என்றேன்.
அந்த வீட்டின் முன்னால் நிற்கையில் அலை அலையாக என் நினைவுகள் வந்து மோதி
கண்கள் குளமாகின. என்னுடைய அப்பா சிறிது சிறிதாக சேமித்து, தான் குடியிருந்த வாடகை
வீட்டையே விலைக்கு வாங்கி, அதில் பலவித மாற்றங்கள் செய்து பலவருடங்கள்
வாழ்ந்த வீடு. தன்னுடன் வேலை பார்த்த தலைமை ஆசிரியர் புலவர் ப.தேவகுரு அவர்களுக்குத்தான்
அதனை விற்றார். அவர் தன்னுடைய மூத்த மகனான ராஜேந்திரனுக்காக அதை வாங்கினார்.
சிறிதாக வீட்டின் முன்னால் 'சுசிதியாகு' என்று எழுதியிருந்ததைக் காணோம். என் அம்மா பெயரான சுசிலா, அப்பா பெயரான தியாகராஜன் என்பதின் சுருக்கம்தான் அது. சென்னையில் வீடுகட்டின
போதும் அதே பெயரைத்தான் என் வீட்டிற்கு வைத்தேன். என்னுடைய நூல்நிலையத்திண்ணையை
இப்போது காணோம்.
ஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும்போது அங்கு குடி பெயர்ந்தோம் என
நினைக்கிறேன். அதன்பின் தேவதானப்பட்டியில் பத்தாவது வரை படித்தேன். மேல்
நிலைக்கல்விக்கு காந்திகிராமம் போனபின் அந்த வீடு எனக்கு விடுமுறைக் கால
வீடாகிவிட்டது. அமெரிக்கன் கல்லூரி 3 வருடம், முதுகலை சமூகப்பணி
-2 வருடம் முடித்து அப்படியே வேலைக்காக ஒரு வருடம் சிவகாசி, ஒரு வருடம் கிருஷ்ணகிரி
முடித்து சென்னைக்கு 1988ல் வந்து 2000-த்தில் நியூயார்க் வந்தாகி விட்டது.
இது ஒரு அக்ரஹாரம் போன்ற வீடு முன்னால் இருபுறமும் திண்ணைகள், உள்ளே ஒரு ஹால் அதன் பின் ஒரு சிறிய என்னுடைய படிப்பு அறை , அதன்பின் ரேடியோ
அறை என்று நாங்கள் அழைக்கும் என் அப்பா அம்மா படுக்கும் அறை அதன்பின் ஒரு
திறந்தவெளி முற்றம். அதை ஒட்டி ஒரு குளியலறை மற்றும் தனியாக கழிவறை, ஒரு நடை அதன் ஒரு பகுதியில்
புழக்கடைக்குச் செல்லும் கதவு அதன் பின்னால் சமையலறை என்று ஒரே நெட்டாக இருக்கும். யாரோ
ஐயருக்காக கட்டியிருப்பார்கள் போல இருக்கிறது .அதில் இந்த பரதேசி வாழ்ந்து வளர்ந்தது ஒரு ஆச்சரியம்தான். முஸ்லீம் வீட்டில் வளர்ந்து அதன்பின் அக்ரஹார வீடு.
வெளிவாசலில் இருந்து எட்டிப்பார்த்தால் சமையலறை தெரியும். அதன்பின் என் இன்ஜினியர்
மாமா சொல்லி வாசல் புறத்தை மாற்றி கதவை ஒரு ஓரத்தில் வைத்தார்கள். இவை தவிர
வெட்டவெளி முற்றத்தில் இருக்கும் ஏணியில் ஏறினால் ஒரு
மொட்டைமாடி . மாடியின்
பின்புறம் இன்னொரு பெரிய ரூம், அதன்பின்
பால்கனி. இந்த ரூமை அப்பாதான் கட்டினார். நான் என் மனைவி பிள்ளைகள் போகும்போது
அந்த ரூமைத்தான் பயன்படுத்துவோம்.
மொட்டை மாடி அல்லது பால்கனியிலிருந்து
பார்த்தால் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சீதளத் தென்றல் வீசும் ரம்மியமான இடம். கொடைக்கானல்
மலையினருகில் இருப்பதால் மாலை நேரம் மிகவும் அருமையாக இருக்கும்.
"யார் வேணும் உங்களுக்கு?" என்றான் வெளியே வந்த ஒரு பையன்.
நினைவுகளில் மூழ்கி நின்று கொண்டிருந்த என்னை உலுக்கினான் மினி சாம்.
"ராஜேந்திரன் இருக்காரா"
"அப்பா இல்லை, நீங்கள்
யார்?"
"என் பெயர் சேகர், தியாகு
வாத்தியாரின் மூத்த பையன். எங்களிடமிருந்துதான் தேவகுரு வாத்தியார் இந்த வீட்டை
வாங்கினார்"
“தெரியும் தெரியும் வாருங்கள், உள்ளே, அம்மா
அம்மா,தியாகு வாத்தியார் பையன் வந்திருக்கிறார்”.
“வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன், நீங்க எல்லாம் எப்படி
இருக்கீங்க, ராஜேந்திரன்
நல்லா இருக்காரா?”
“எல்லோரும் நல்லா இருக்கோம். நீங்க
சென்னையிலிருந்து வருகிறீர்களா?”
“இல்லை நான் இப்ப நியூயார்க்கில்
வசிக்கிறேன்”.
“அப்படியா அங்கு எப்ப போனீங்க?”.
“நான் 2000-த்திலேயே
அங்கு போயிட்டேன். பழைய ஞாபகத்தில் வீட்டைப்பார்க்க வந்தேன்”.
“தாராளமாக, உள்ளே வாங்க”.
ஒரு சில மாற்றங்கள் தவிர வீட்டில் பெரிய
வித்தியாசம் இல்லை. ஆனாலும் முற்றிலுமாக வேறுமாதிரி தெரிந்தது. ஷூவைக் கழற்றி விட்டு சமையலறை வரை சென்று
பார்த்தேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னுடைய நினைவுகளும் நிகழ்வுகளும்
ஒளிந்திருந்தன. வாழ்க்கை என்பதுதான் எப்படியெல்லாம் மாறிப்போகிறது. இன்னும் கொஞ்ச
வருடம் போனால் இந்த ஊரில் தெரிந்தவர் என்று ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
ராஜேந்திரன் பையனிடம் கேட்டேன், "தேவகுரு வாத்தியார் எப்படி இருக்கிறார்?".
“ஓ தாத்தா நல்லா இருக்கார். ஆனால் பாட்டி
இறந்ததுல இருந்து தனியா இருக்கிறதால கொஞ்சம் ஞாபக மறதியா இருக்கிறார். அதோட
சித்தப்பா இளங்கோவன் இறந்துபோனதால அந்தக் கவலை வேற”.
இளங்கோவன் இறந்துவிட்டாரா அடடா ஐயம் சாரி, ஐயாவைப் பார்க்க
முடியுமா?”
“தாராளமாக வாங்க போகலாம்”.
இந்த வீட்டின் நினைவுகளை சொல்வதற்குமுன்
தமிழ் ஐயாவைப் பார்த்து விட்டு வந்து விடலாம்
.
அவனுடைய அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்தோம். மினி சாமையும் அழைத்துக்
கொண்டு தெருவில் நடந்தேன்.
அதனை தெரு என்று சொல்லமுடியாது, குறுகிய சந்து என்று சொல்லலாம். ஆனால் இப்போது மிகக்குறுகியதாய்
தெரிந்தது. முழுதும் சிமிண்ட் போட்டு பூசப்பட்டிருந்தது. அப்படியே நுழைந்து
சின்னக்குப்பண்ணன், பெரிய குப்பண்ணன் வீட்டைத் தாண்டி
செக்காச் செட்டியார் தெருவுக்குள் நுழைந்தோம். அங்கே தெருவின் இறுதியில் ஒரு
மிகப்பெரிய செக்கு ஒன்று இருக்கும்.
கடலை எண்ணெய் நல்ல எண்ணெய் ஆட்டுவார்கள்.
முந்தியெல்லாம் போனால் சுடச்சுட புண்ணாக்கு தருவார்கள். எண்ணெய் எடுத்து முடிந்த
சக்கைதான் புண்ணாக்கு, மாடுகள் ஆடுகளுக்கு மிகவும்
பிடிக்கும் உணவு. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
குறிப்பாக எள்ளுப்புண்ணாக்கும் அச்சு வெல்லமும்
இணைந்தால் அற்புதமாக இருக்கும்.
புலவர் தேவகுரு ஆசிரியர் பிலிட் தமிழ்
இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றவர். என்னுடைய அப்பாவுடன் இணைந்து பலவருடங்கள்
இந்து நடுநிலைப்பள்ளியில் பணியாற்றியவர். இறுதியில் தலைமை ஆசிரியராக
இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மேல் ஆர்வம் எனக்கு ஏற்கனவே
இருந்தாலும் தமிழின் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுத்தந்தவர். ஏழாம் வகுப்பினை
அவரிடம்தான் பயின்றேன். கணக்கு பாடத்திற்கு மட்டும் என்னுடைய
தந்தை வருவார்.
புலவர் தேவகுரு நான் படிக்கும்போதே
"மானங்காத்த மன்னர்கள்" என்ற ஓரங்க நாடகங்கள் புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அது
மாணவர்களால் பலமுறை மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அது போல அவர் எழுதிய பல
சமூக நாடகங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் சமயத்தில் அரங்கேறியிருக்கின்றன.
வடுகப்பட்டியில் நடந்த சிறுவர் தினவிழாவில்
அவருடைய நாடகத்தை நாங்கள் நடித்தோம். அது மிகவும் பாராட்டப்பட்டது. குறிப்பாக
நண்பர்கள் கண்ணனும் சிராஜுதீன் மிகச்சிறப்பாக நடித்து பரிசு பெற்றார்கள். நானும் நடித்தேன். சிறப்பாக என்று சொல்ல முடியாவிட்டாலும்
சொதப்பவில்லை என்று நினைக்கிறேன். இப்போது நினைத்தால் அதனை இன்னும் கொஞ்சம்
சிறப்பாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நினைத்து என்ன செய்வது
.நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இன்னும் சிறப்பாக
செய்திருக்கலாம் என்றுதான் எப்போதும் தோன்றுகிறது
.நடந்து போனவைகளை மாற்ற முடியுமா என்ன ?
வீட்டில் உள்ளே நுழைந்தோம்.
“தாத்தா தாத்தா யார் வந்திருக்கார்னு பாருங்க”.
முன்ஹாலில் இருந்த
கட்டிலில் முடங்கிப் படுத்திருந்தார்.அடையாளமே தெரியவில்லை.
“ஐயா நான் சேகர் வந்திருக்கேன்”
“கொஞ்சம்
சத்தமாகப்பேசுங்கள்” சொன்னது ராஜேந்திரனின் பையன்
“ஐயா நான் சேகர் வந்திருக்கேன்”
“எந்த சேகர்ப்பா எனக்குத் தெரியவில்லை”.
“தியாகு வாத்தியார்
மகன் சேகர்”.
என் அப்பாவின்
பெயரைக் அப்படியே பொலபொலவென்று அழ ஆரம்பித்தார்.
தொடரும்
முக்கியமான தருணத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்கள் அருமையான எழுத்து நடை
ReplyDeleteநன்றி அன்பு அப்பத்தான ஒரு விறு விறுப்பு இருக்கும்
Deleteவாசிப்பவருக்கும் அவரவர் பழைய நினைவுகளை மீடடெடுக்கும் அருமையான பதிவு
ReplyDeleteநன்றி புதிய மாதவி , ஒரு எழுத்தாளரிடமிருந்து பாராட்டு வாங்குவது , வசிஷ்டரிடம் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிவந்து போல.
Deleteவாசிப்பவருக்கும் அவரவர் பழைய நினைவுகளை மீடடெடுக்கும் அருமையான பதிவு அதே அதே ஐரோப்பா வந்தா ஹொலன்டுக்கும் வாங்க காரோட டைவர் ரெடி nithiy1999@gmail.com
ReplyDeleteமிக்க நன்றி , அடுத்த மாதம் கனடாவுக்கும், ஏப்ரல் மேயில் தாய்லாந்து , சென்னை, திருவனந்தபுரம், ராமநாதபுரம், மதுரை செல்கிறேன் .அடுத்த பயணம் ஐரோப்பாதான் .நிச்சயம் சந்திக்கலாம் நித்தி.
Delete//அப்பாவின் பெயரைக் அப்படியே பொலபொலவென்று அழ ஆரம்பித்தார்.//
ReplyDeleteவாசிப்பவர்களும் தான். தொடர்ந்து எழுதுங்கள் சார்.
தகவலுக்கு நன்றி ஸ்ரீராம் .
Deleteநெகிழ்ச்சியான தருணங்கள். என்னுடைய இளமைக்கால நினைவுகளை அசை போட வைத்தது.
ReplyDeleteநன்றி முத்துச்சாமி
Delete