Thursday, February 1, 2018

மாலிக்காபூர் நல்லவனா கெட்டவனா ?

Image result for மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்
படித்ததில் பிடித்தது
மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம்
          செ. திவான் - விகடன் பிரசுரம்.
பொறுப்புத் துறப்பு :
நான் ஒரு வரலாற்று நிபுணன் அல்ல. பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் சாராமச்சத்தைத் படிக்கத் தருவது மட்டுமே இந்தப் பரதேசியின் வேலை. ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டியது படிப்பவர்களின் பொறுப்பு.( ஏற்கனவே பத்மாவதி மற்றும் ஆண்டாள் பிரச்னைகள் திகட்டத் திகட்ட  இருக்கின்றன.)
Image result for செ. திவான்
செ. திவான்

          செ. திவான் என்னும் எழுத்தாளரின் “கான் சாகிப் மருதநாயகம்” மற்றும்  அவ்ரங்கசீப் ஆகிய சில புத்தகங்களை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் என்றாலும் அவர் வரலாற்று மாணவர் என்றோ வரலாற்று ஆராய்ச்சியாளர் என்பதோ எனக்குத் தெரியாது.
          இந்தப் புத்தகமும் பல ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றைப் படித்தபின் நன்கு சாட்சிக் குறிப்புகளுடன் எழுதப்பட்ட ஒரு ஆய்வுப் புத்தகம் என்றே சொல்ல வேண்டும்.  அவர் கொடுக்கும் சான்றுகளைப் படித்துப் பார்த்தால் வரலாறு வேண்டுமென்றே புரட்டி எழுதப்பட்டது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.
          முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த திவான் அவர்கள் ஒரு தேர்ந்த வக்கீல் போல தன் சான்றுகளைச் சொல்லி நம்மை திணறடிக்கிறார். மாருதியின் அட்டைப்படம் உண்மையான மாலிக்காபூரை புகைப்படம் எடுத்துப் போட்டது போல் அவ்வளவு தத்ரூபமாக இருந்ததை சொல்லியே ஆக வேண்டும்.

அதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய  சில விடயங்களைக் கீழே தொகுத்துள்ளேன்.
1.   ஸ்ரீரங்கத்தின் ஜீயரின் தற்கொலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடந்த தற்கொலைகள் ஆகியவை அரசியல் சார்ந்து நடக்கவில்லை என்று ஆதாரங்களுடன் விலக்குகிறார்.
2.   மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கத்தில் 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விடயம் எந்த வித ஆதாரமில்லாத ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார்.
3.   1878ல் லூயிஸ் மூர் எடுத்த கணக்கெடுப்பில் திருவரங்கத்தின் மக்கள் தொகை 11,217 என்று தெரிந்தது. இப்படியிருக்கையில் 1323ல் அதாவது கிட்டத்தட்ட ஐந்து நூற்ராண்டுகள் முன்னால் 13000 பேர் கொல்லப்பட்டனர் என்பது எப்படிச் சாத்தியமாகும் என்கிறார்.
4.   வியாசர் எழுதிய பாரதத்தில் அர்ச்சுனர் 10 கோடியே 50 லட்சத்து 16000 பேரை அஸ்தினாபுரம் அழைத்துச் சென்றான் என்று வருகிறது. அதில் கிருஷ்ணன் மனைவியர் 16000 பேர் யாதவ மனைவியர் 10 கோடி பேர் மற்றும் யாதவர் 5 லட்சம் பேர் என்று பிரித்துச் சொன்னது போல் இது மிகைப் படுத்திச்  சொல்லப்பட்ட ஒரு விடயமாகும் என்கிறார்.
5.   அதேபோல ராமேஸ்வரக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதற்கும் ஆதாரமில்லை என்கிறார்.
6.   ராவணன் ஆண்ட இலங்கை கூட மத்திய இந்தியாவில் இந்திரனா மலையுச்சியில் விந்திய மலையை அடுத்திருந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் அடித்துச் சொல்வதைக் குறிப்பிடுகிறார்.
7.   வைஷ்ணவ  சமயத்தின் பிரிவுகளான வடகலைக்கும் தென் கலைக்கும் உள்ள வித்தியாசத்தை  விளக்குகிறார்.       வடகலை என்பது மார்க்கட நெறி. இதில் இறைவனை நாம் தேடிச் செல்ல வேண்டும். குரங்குக் குட்டி தன் தாயை எப்போதும் இருகப் பற்றியிருப்பது போல.        தென்கலை என்பது மார்ஜால நெறி. அதாவது இறைவனே வந்து மக்களைக் காப்பது. உதாரணமாக பூனை தன குட்டியை எப்போதும் தூக்கிச் செல்வது போல. வடகலையில் பெண்களுக்கு மோட்சம் இல்லை. கணவனுக்குப்பின் அவர்களுக்கு வாழ்க்கை இல்லை. ஓம் என்று கூட சொல்லக் கூடாது அம்  என்றே சொல்ல வேண்டும் என்பது வடகலை வேதாந்த தேசிகரின் வழி.
8.   ஆனால் தென்கலையில் புரட்சியைக் கொண்டு வந்தவர் ராமானுஜர். வேதம் மற்றும் திவ்யப் பிரபந்தம் மூலம் அமைந்தவை அவரின் கொள்கைகள்.
Image result for ramanujar image
Ramnujar
9.   அப்படியானால்  மாலிக்காபூர் படையெடுப்பில் ஒருவரும் கொல்லப் படவில்லையா  என்று கேட்டால், சண்டை நடந்தால் இழப்பு கண்டிப்பாக ஏற்படும். அண்டை நாட்டின் மீது படையெடுத்து நாட்டையும் செல்வங்களையும் கவர்வது என்பது அப்போதைய ராஜதர்மமாகவே இருந்தது, எனவே இதனை இரண்டு மதத்திற்கிடையேயான சண்டை என்று பார்க்கக் கூடாது. இரண்டு மன்னர்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயான சண்டை என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறார்.

10.                அதே போல் ராமானுஜர் போய் சிலையை மீட்டு வந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. ஏனெனில் படையெடுப்புக்கு முன்னரே மூலவரும் உற்சவம் பத்திரப்படுத்தப் பட்டதாக கோயில் பிரபந்த வரலாறு சொல்வதைக் குறிப்பிடுகிறார்.
Image result for alauddin khilji real image
Alavudeen Kilji
11.                அலாவுதீன் கில்ஜிக்கு காம்பேயிலிருந்து வந்த அடிமைதான் மாலிக்காபூர். மாலிக்காபூரின் முதற் படையெடுப்பு தேவகிரி. மாபெரும் வெற்றி பெற்றதோடு அதன் மன்னர் ராமச்சந்திர தேவரும் அலாவுதீன் கில்ஜிக்கு நெருங்கிய நண்பரானார். ராமச்சந்திர தேவரின் மகன் மாலிக்காபூருக்கு நண்பர் ஆனான். அதன்பின் அவர்கள் உதவியோடு பல படையெடுப்புகள் நடத்தப்பட்டன. வாரங்கல் படையெடுப்பில் வென்று கோஹிநூர் வைரம், 20000 குதிரைகள், 100 யானைகள் மற்றும் பொன், மணி, கற்கள் ஆகியவை டெல்லிக்குச் சென்றன.
12.                துவார சமுத்திரம் படையெடுப்பில் தேவகிரி உதவி செய்ய மன்னன் பல்லாள தேவாவும் அடிபணிந்தார்.
13.                13ஆம் நூற்ராண்டில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் குலசேகரனுக்கு, சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் என இரு புதல்வர் இருந்தனர்.குலசேகரனுக்கு வீரபாண்டியர் பதவிக்கு வருவதில்தான் ஆசை.சுந்தரபாண்டியன் பட்டத்து ராணிக்கு பிறந்தவர்  . அதனால்  வீரபாண்டியன் பட்டத்துக்கு வருவது ராணிக்குப் பிடிக்கவில்லை. அதனால் குலசேகரனுக்குப்பின் பெரும் வாரிசுப் போட்டி துவங்கியது. சுந்தரபாண்டியன், மாலிக்காபூரின் உதவியை நாடிச் சென்றதால்தான் மாலிக்காபூரின் படை துவார சமுத்திரப் படையுடன் இணைந்து மதுரை வந்தது.
14.                ஆசிரியர் ஆதாரத்தோடு தெரிவிக்கும் செய்தி என்னவென்றால்  வீரபாண்டியன் படையில் 20000 முஸ்லீம்கள் மாலிக்காபூருக்கு எதிராக கடுமையாகப் போராடி உயிர் துறந்தனர். இதில் வீரபாண்டி தோற்று காட்டுக்குள் ஓடி பதுங்கினார் . எனவே இந்த உதாரணத்தின் மூலம் இது மதத்திற்கிடையேயான சண்டையில்லை. இரு மன்னருக்கும் வாரிசுப்பிரச்சனையால் நடந்த சண்டைதான் என்று சொல்லுகிறார்.
15.                மேலும் மாலிக்காபூரின் தேவநகரி ஆட்சியில் எதிர்த்துப் போரிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. அது தவிர மிகவும் நிர்வாகத்திறமையுடன் நடந்த மாலிக்காபூரின் ஆட்சியில் விவசாய வளம் பெருகி தேவநகரி மக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்தினர் என்பதற்கும் ஆதாரங்களைத் தருகிறார்.

அழைக்கிறேன் :

                   நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் பொங்கல் விழா வரும் சனிக்கிழமை ( Feb  3,2018) மாலை 2:30 மணி அளவில் நடக்க விருக்கிறது , பொங்கல் விருந்தும் உண்டு .
அடியேன் பங்கு கொள்ளும் "கவிதை பாடு குயிலே" என்ற   கவிதை அரங்கமும் இருக்கிறது .நண்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன். வாருங்கள் சந்திப்போம்.




4 comments:

  1. செ. திவான் இஸ்லாமியர் என்றே உறுதியாக நம்புகின்றேன்
    அந்த மதம் சார்ந்து கருத்துக்களை கூறியுள்ளார்
    அவ்வளவுதான்
    அவர் தன் மதம் சார்ந்து சாதகமாக கருத்துக்களை கூறியுள்ளார்

    ReplyDelete
  2. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு , நண்பரே.முடிந்தால் புத்தகத்தை படித்துப்பாருங்கள் .

    ReplyDelete
  3. கருத்து மாற்றுக்கருத்து ஆகிய இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவுக்கு வருவதுதான் நல்லது.இரண்டுக்கும் சான்றுகள் தருகிறார்கள். செ.திவானின் மாலிக்காஃபூர் நூல் பதிப்பாளர் பெயர் முகவரி விலை பக்கங்கள் ஆகிய தகவல்களைக் கொடுத்தால் பலருக்கும் பயன்படுமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. சரியாகைச்சொன்னீர்கள் முத்துச்சாமி .விகடன் பிரசுரம் வெளியிட்டது என்பதை மேலே கொடுத்திருக்கிறேன் .

      Delete