Thursday, February 8, 2018

பொங்கலும் செங்கலும் !!!!!


நியூயார்க்   தமிழ்ச்  சங்கத்தின் சார்பாக பொங்கல் விழா கடந்த பெப்ரவரி 3ஆம் தேதி  சிறப்பாக நடந்தேறியது .அதில் கவிஞர் சிவபாலன் தலைமையில்   நடந்த “கவிதை பாடு குயிலே” என்ற நிகழ்ச்சியில் அடியேன் தந்த கவிதையை(?) இங்கே உங்களுக்கு படிக்கத்தருகிறேன்

                                 Video Courtesy :  Mr Chinna Periasamy, NY
                                 Video Editing : Mr.Vish Cornelius , CA

பொங்கலும் செங்கலும் !!!!!
வணக்கம்
மூச்சுக் கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக்கொடுத்த தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும்
வணக்கங்கள் பலப்பல.

தலைவர் வணக்கம் (கவிஞர் சிவபாலன்)
தேசம் கட்டுவதில் இவர்  ராசபரம்பரை ;ஆனால்
நேசம் காட்டுவதில்  இவர் பாசப்பரம்பரை
நியூயார்க்கின் கவிமகன்
பெயரில் சிவமகன் ( சிவபாலன் )
தமிழ்ச்சங்கத்தில் எனக்கு தலைமகன்
(அவர் செயலாளர் நான் இணைச்செயலாளர்)
இலங்கையின் திருமகன், அதற்கும் மேல்
இவர் தமிழ்நாட்டின் மருமகன்!
வணக்கம்

இந்தியாவில்,
பட்டங்கள் பல பெற்றிருந்தும்; உயர்
பதவியில் நிலைத்திருந்தும்
பஞ்சம் பிழைக்க அமெரிக்கா வந்த
பரதேசி நான்!

கேட்டைத் திறக்கும் வாட்ச்மேன்
காரைத் திறக்கும் டிரைவர்
சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி
டிக்டேட் செய்ய செக்ரட்டரி  
அனைத்தையும் விட்டுவிட்டு
அமெரிக்கா வந்து என்னதான் கண்டேன்?

பண்டிகை வந்தால் ஒரு
பரவசம் இல்லை !




இந்தியாவில்
எந்த விழாவையும் என்
சொந்த விழாவாக கொண்டாடிய எனக்கு 
எந்த விழாவும் இங்கு
நொந்த விழாவாகத்தான் கழிந்தது.

தீபாவளிக்குப் பட்டாசில்லை
பட்சணமில்லை, பலகாரமுமில்லை
கொண்டாடுவதற்கு  லீவுமில்லை   

பட்சணமும் பட்டாசும் கேட்டால்  
வாட்சப்பில் அனுப்புகிறாள்  என்
வாழ்க்கைத்துணைவி
என்ன செய்ய?

தசராவுக்குக் கொலுவில்லை
தமிழுக்கும் மதிப்பில்லை
விஜயதசமியும் விட்டுப்போனது
சரஸ்வதி பூஜையும்
சடுதியில் மறந்தது.

அடுத்து வந்த
கிறிஸ்மசுக்கும் பலகாரமில்லை,
எங்கேடா அதிரசம்?
என்று கேட்டான்
என் நண்பன்

கொதிரசம் கூட கிடைக்காத இடத்தில்
அதிரசத்திற்கு எங்கே போவது  ?
என்றேன்
புத்தாடை கூட
புதைந்துபோனது
கொத்தாடைகளுக்குள் !!!! ( Layer dress due to cold weather)




நெய்முறுக்கு இல்லையென்றால்
கைமுறுக்காவது கொடு என்றால்
கையை முறுக்குகிறாள் என்
காதல் மனைவி !! 

அவள் கையை அல்ல
என் கையை
நெய்முருக்கும்
பொய்முருக்காய் போன
நிலைமை  என் தலைமை.

பொங்கலும் வந்தது
கரும்பு தேடி
கடையெல்லாம் அலைந்தும்
கடிக்க ஒரு துண்டு கூட
கண்ணில் படவில்லை.

என்னடா கொடுமை என்று
வெறும் கையுடன்
வீட்டுக்கு வந்து
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

மெல்லிய குரலில் கேட்டாலே, கோபத்தில்
துள்ளி எழுவாள்  என்
துணைவி
இதில்
வல்லிய குரலில் கேட்டால் என்
வாழ்க்கை முடிந்துவிடாதோ?
அதனால் தான்
சர்க்கரைப் பொங்கல் கிடைக்குமா? என்று
சன்னமாகக் கேட்டேன்

வெல்லம் இல்லை என்றாள்  
செய்வதற்கு உனக்கு
உள்ளம் இல்லை என்று சொல் என்று
சத்தமாக ஆனால்
உள்ளத்திற்குள் மறுகினேன்
இல்லத்திற்குள் குறுகினேன்

பின்ன வெளிப்படையாகவா சொல்ல முடியும் ?
பொங்கல் தராவிட்டால்
பரவாயில்லை கோபத்தில்
பொங்கி எழுந்து
செங்கல்லோ
கருங்கல்லோ
எடுத்துவிட்டால்?
என் செய்வான் இந்தப் பரதேசி. 

அதன் பின்
லேட்டாய் வந்தாலும்
லேட்டஸ்ட்டாய் வந்தது
தமிழ்ச்சங்கம் நடத்துகிற
தைப்பொங்கல் விழா.

ஆஹா
வீட்டுக்குள் வந்தபோதே தமிழ்
நாட்டுக்குள் வந்ததுபோல் ஒரு ஜொலிப்பு
அரங்கத்துள் வந்தபோதே
அருந்தமிழ்த் தேன் பாய்ந்த ஒரு களிப்பு

பட்டுகள் அணிந்த
சிட்டுகள் எங்கும் !
சிறகுகள் முளைக்காத
சிறு தேவதைகள் தங்கும்!
ஓடியும் ஆடியும் பாடியும்
இங்கு மகிழ்ச்சி பொங்கும்

எல்லாவற்றிக்கும் மேல்
சர்க்கரைப் பொங்கலும் கிடைத்தது புதுச்
சக்தியும் எனக்கிங்கு கிடைத்தது. 

ஓரமாய் கரும்பையும் பார்த்தேன் அதில்
ஒரு சிறு பகுதி கிடைக்குமா என வேர்த்தேன்.


கரும்பைக்
கண்டு மகிழ்ந்தேன், ஒரு
துண்டு கிடைத்தால் அதை
உண்டு மகிழ்வேன்

திருவிழாக்கள் கொண்டாட ஆசையா? நியூயார்க்
தமிழ்ச் சங்க விழாக்களுக்கு வாருங்கள்
தரமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள்
உடனே உறுப்பினராய்ச் சேருங்கள்

உங்கள்
உள்ளக்கிடக்கைகளை
ஆண்டவனிடம் சொல்லவேண்டாம்
அரங்க நாதனிடம் சொல்லுங்கள்
ஏனெனில்
ஆண்டவனுக்கு முந்தி
அருள் பாலிப்பார் எம் தலைவன்
அரங்க நாதன். ஏனெனில்
அவர் புருஷர்களின் உத்தமன் ( அரங்கநாதன் புருஷோத்தமன் நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)
  
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆயிரம் மைல்கள்கடந்து வந்தாலும்  
அன்னைத்தமிழ் நம்மில் குறைவதில்லை.

தமிழால் இணைவோம்
தமிழால் மகிழ்வோம்.
பொங்கல் வாழ்த்துக்கள்
மீண்டும்
முத்தமிழ் விழாவாக  
முத்திரை பதிக்கும்
சித்திரை விழாவில் மீண்டும்
சந்திப்போம்
நன்றி
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய  பாரத மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்

நன்றி வணக்கம் . 

13 comments:

  1. அண்ணே.. என் பேருஇங்க எப்படி வந்தது.. ?

    அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்~

    ReplyDelete
    Replies
    1. நன்றி விசு, நீங்கள் செய்ததைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்

      Delete
  2. Enjoyable reading. But why mix it up with so many non Tamil words?

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்டர் இது இலக்கியக்கவிதை இல்லை வெறும் நகைச்சுவைக்கவிதை என்றுதான் பார்க்கவேண்டும்

      Delete
  3. அருமை மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி வையாபதி அவர்களே

      Delete
  4. பிடித்த கவிதைவரிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி முத்துசாமி அவர்களே.

      Delete
  5. அருமை.. நகைச்சுவை - நண்பர் பரதேசிக்கு கை/வாய் வந்த கலை :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா பார்த்து ரொம்ப நாளாச்சு

      Delete
  6. Alfi, u r fortunate to have a wife like yours!
    I would have made sure the chengal is strong enough to break your skull!!
    By the way, my birthplace is Chingleput, kindling a warmth always...30 miles away from Madras?

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை நான் தப்பித்தேன் சாமி .

      Delete
  7. நகைச்(சுவை) பொங்கல், அருமை!!

    ReplyDelete