இலங்கையில் பரதேசி -24
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/09/blog-post_18.html
![]() |
Galle Fort |
ஒரே நாளில் பல இடங்களை ஆடி ஓடி தேடிப்பார்த்து அலுப்புடன்
வந்த எனக்கு வெதுவெதுப்பான குளியல் ஆனந்தமாக இருந்தது. புத்துணர்ச்சி பெற்ற
குளியலறையை விட்டு வெளியே வந்தேன். வேறு எங்காவது போகலாம் என மனது நினைத்தது.
ஆனால் கால்கள் இன்றைக்குப் போதுமென்றது. வழக்கம்போல் முழங்காலில் நின்று
ஜெபித்துவிட்டு படுக்கையில் விழுந்தேன். படுத்துக் கொண்டே சிறிது நேரம் படிப்பது
வழக்கம் ஆனால் கனமான இமைகள் அழுத்த ஒரு சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குப்
போனேன். நல்ல தூக்கத்தில் இருந்த போது, “சார் சார்”, என்று ஒரு குரல் அதோடு கதவு
தட்டும் சத்தமும் கேட்டது. கனவா நனவா என்று தெரியாமல் மிகவும் முயன்று இமைகளைத்
திறந்து பார்த்தால், அது கனவல்ல. ஜன்னல் வழியே அம்ரி ஃபிரெஷ்ஷாக தெரிந்தான்.
மணியைப் பார்த்தால் மணி ஏழு. ஓ ஏழு மணிக்கு வருவேன் என்று அம்ரி சொன்னது
அப்போதுதான் ஞாபகம் வந்தது. கதவைத்திறந்துவிட்டு, "அம்ரி அசந்து தூங்கிட்டேன் போல,
1/2 மணி நேரம் கொடு
எல்லாவற்றையும் முடித்து வந்து விடுகிறேன்”,
என்றேன்.
![]() |
Xmas Tree in the church |
"பரவாயில்லை சார், வெயிட் பண்றேன்”, என்றான் அம்ரி. மடமடவென்று ரெடியாகி வெளியே வர மணி 7.30.
ரூம் சர்வீசில் காலை உணவு சாப்பிட்டு வெளியே வந்தோம். அன்று
ஞாயிற்றுக்கிழமையாதலால், "ஏதாவது ஒரு ஆலயத்தில் நிறுத்து",
என்றேன். போகிற வழியில் ஒரு அழகிய கத்தோலிக்க ஆலயம் வந்தது.
திறந்திருந்த ஆலயத்தில் யாருமே இல்லை. காலை ஆராதனை 10 மணி என்று போட்டிருந்தது. கோயில் பிள்ளை (Sexton)
அல்லது ஆலயப்பணியாளர்கள் காலையிலேயே வந்து திறந்து வைத்து
பெருக்கிக் கூட்டி வாசலில் கோலம் கூட போட்டிருந்தார்கள்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் மிச்சங்களை ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் பார்க்க முடிந்தது.
துணியாலான ஒரு வித்தியாசமான உயரமான கிறிஸ்மஸ்
மரமும் வளாகத்தில் இருந்தது. சிறுது நேரம் உள்ளே போய் ஜெபம் செய்துவிட்டு வெளியே
வந்தேன். நான் அங்கிருந்து கிளம்பும் வரை ஒருவரையும் பார்க்கவில்லை.
அங்கிருந்து
கிளம்பி கார் வேகமெடுத்தது. போகும் வழியில் நிறைய இடங்களில் ரோட்டோரங்களில்
பைனாப்பிள் கடைகள் இருந்தன. அளவில் சிறிய காய்களாக இருந்தன. ஆர்கானிக் என்று
நினைக்கிறேன். "ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி அம்ரி", என்றேன். ஒரு
ரெண்டு மூன்று கடைகள் கூட்டமாக இருந்த இடத்தில் அம்ரி நிறுத்தினான். அங்கே
பைனாப்பிள் கடையும் மாங்காய்கள் மற்றும் இளநீர் கடைகளும் இருந்தன. "எது
வேணும்", என்று கேட்ட அம்ரியிடம் எல்லாமே வேண்டும் என்றேன்.
பைனாப்பிளை அழகாக தோல் நீக்கி வெட்டிக் கொடுத்தார்கள்.
சிறியதாக இருந்ததால் விளையாத பிஞ்சுக் காயோ என்று நினைத்தேன். ஆனால் சுவை
அற்புதமாக இருந்தது. அடுத்த கடையில் மாங்காய் இருந்தது. மாம்பழமும் இருந்தது. அருகில் உருண்டையாக ஏதோ
இருந்தது. உற்றுப் பார்த்தால் அட நம்ப விளாம்பழம்.
விளாம்பழத்தை
ஆங்கிலத்தில் வுட் ஆப்பிள் என்று சொல்வார்கள். நல்ல பொருத்தமான பெயர்தான் . சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன
என்று அவற்றுள் சில பழங்களையும் வாங்கிக் கொண்டேன். மாங்காய்களை வெட்டி கொஞ்சம்
உப்பு மிளகாய்ப் பொடியும் வாங்கிக் கொண்டேன். அதற்கப்புறம் தேவாமிர்த இளநீரையும்
வழுக்கையையும் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டு விட்டு ஒரு சிறு ஏப்பத்துடன் வண்டியில்
ஏறினேன்.
"சார் எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க வயிறு கெட்டுப்
போச்சுன்னா எதுவும் பண்ண முடியாது".அவன் சொன்னபோதுதான் வயிற்றை எதோ செய்கிற மாதிரி தெரிந்தது.
கார் வேகமெடுத்து ஹைவேயில் நுழைந்தது. அருமையான டிரங்க்
ரோடு. உலக வங்கித்திட்டத்தில் கட்டப்பட்டது என்று அம்ரி சொன்னான் என்று ஞாபகம்.
கார் அப்படியே வழுக்கிக் கொண்டு சென்றது.
விரைவிலேயே கால் வந்து சேர்ந்தோம். கால் அல்லது காலே என்பது
டச்சுக் காரர்களின் பகுதியாக இருந்தது. அதன் மிச்ச சொச்சங்கள் நிறையவே இருந்தன.
![]() |
Galle City |
கோட்டை, கொத்தளங்கள், பழைய கட்டடங்கள், ஆலயங்கள் என அந்த ஊர் முழுதும் அவை
பரவிக்கிடந்தன. அதோடு ஒரு ஐரோப்பிய நகரத்துள் வந்தது போல எங்கெங்கு நோக்கினும்
வெள்ளைக் காரர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இங்கு வந்து இந்த சீசனில் மாதக்
கணக்கில் தங்கிவிடுவார்களாம்.
ஒரு வளைவில் திரும்பியதும் காலே கோட்டை பிரம்மாண்டமாக
முன்னால் தெரிந்தது. வழக்கம்போல் சிறுகுறிப்பு பார்த்துவிடுவோமா?
காலே என்ற வளைகுடாப்பகுதி இலங்கையின் தென்மேற்கு
கடற்கரையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டை டச்சுக் கோட்டை என்று சொன்னேன்
அல்லவா. ஆனால் இதனை முதலில் காட்டியது போர்த்துக்கீசியர், ஆண்டு 1588ல். அதன்பின் 17ஆவது நூற்றாண்டில்
டச்சுக் காரர் ஆக்கிரமித்து ஆண்டு 1649ல் இன்னும் விஸ்தாரமாக விரிவு படுத்திக்கட்டினராம்.
கிட்டத்தட்ட 500 வருடங்கள் ஆகியும் அதன் அழகும் கம்பீரமும் கண்ணைக்கவர்ந்தன. இலங்கையின்
தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இருக்கும் இந்தக் கோட்டையை மிகுந்த பொருட் செலவில் அவர்கள்
பராமரித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது யுனெஸ்கோ சும்மா விட்டுவிடுவார்களா?.
வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்டாக அங்கீகாரம் கொடுத்தார்கள். காலே பகுதி சுனாமியின் தாக்குதலால் பெரிதும் அழிவு
கண்டது. ஆனாலும் சுனாமியை எதிர்த்து நின்ற இந்தக் கோட்டை பெரும்பாலும் தன்னை தற்காத்துக்
கொண்டது. ஒரு சில பகுதிகள் சிதில மடைந்தாலும் அதனை மீண்டும் கட்டிவிட்டனர். நான் செல்லுகையில்
பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன.
![]() |
Galle City |
இதன் உள்ளே உள்ள சில பகுதிகளுக்கு இன்னமும் டச்சுக்காரர் சிலர்கள்
உரிமையாளர்கள் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி.
காலே என்பது டச்சு மொழியின் காலஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம்
என்பது சிலருடைய வாதம் இதன் அர்த்தம் "கோழி" என்பது.இன்னும் சிலர் இது காலா
என்ற சிங்கள மொழியிலிருந்து வந்திருக்கிறது என்கிறார்கள். அதன் அர்த்தம் கால்நடை மந்தை
என்பது. பின்னதற்கு லாஜிக் இருக்கிறது.
ஆனால் இந்த நகரம் என்னவோ போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்களால்
மட்டும் புகழ் பெறவில்லை. கி.பி.125-150-ல் தாலமியின் உலக வரைபடத்திலேயே இது முக்கிய
துறைமுகமாகக் குறிக்கப்பட்டிருக்கிறதாம். கிரீஸ், அரேபியா சைனா மற்றும் பல நாடுகளோடு
நேரடி வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது.
இப்படி வரலாற்றுப் புகழ் பெற்ற இந்தத் துறைமுகத்தில் போர்த்துக்
கீசியர் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று பார்க்கலாம்.
-தொடரும்.
Very interesting
ReplyDeleteThank you.
DeleteWOW. இடம் அருமையா இருக்குது சார். அப்றம் விளாம்பழத்துக்கு wood apple ஆ ? :)
ReplyDeleteசென்னைக்கு வெகு அருகில் இருப்பதால் கண்டிப்பாய் போகலாம் பாஸ்கர் .
Delete