![]() |
அக்டோபர்
மாசம் பிறந்துருச்சு. கோடை முடிஞ்சு இலையுதிர் காலம் மெதுவாக ஆரம்பிச்சிருச்சு. மரங்களெல்லாம்
உருமாறி நிறம்மாறி பழுப்பா இருக்கு. நடைபாதைகள் எங்கிலும் ஒரே இலை
மயம்.
இந்த
மாசத்தில இருந்து அதிக செலவு ஆரம்பிச்சுரும். என்னோட சின்னப் பெண்ணோட பிறந்த நாள்
அக்டோபர் 9, என் பெரிய பொண்ணு நவம்பர் 11, என் பெரிய்ய்ய பொண்ணு அதான் பாஸ் என்
மனைவி நவம்பர் 6 (ன்னு நினைக்கிறேன்)
அப்புறம் இயேசு கிறிஸ்து பிறந்த நாள் வந்துரும்.
அக்டோபரில்
ஜெர்மனி வேற போறோம். அதுக்கு வேற நெறைய செலவாகும். எப்பவும் தனியாகப் போற நான்
இப்ப முழுக்குடும்பத்தோட போறேன். எவ்வளவு செலவாகும்னு ஒரு ஐடியா இல்ல.
அக்டோபரில்
வேறு எதுனா லீவு வருதான்னு பார்த்தேன்.
அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள், அக்டோபர் 9 கொலம்பஸ் டே. ஆஹா 2 நாள் வருதே.
ரெண்டும் திங்கள் கிழமை வர்றதால லாங் வீக்கெண்ட் கிடைக்கும் ஆஹா சூப்பர்.
பரதேசி: ஏலேய் HR
அக்டோபர் 2 லீவுதானே?
HR: எதுக்கு?
அன்னைக்கு என்ன விஷேசம்?
பரதேசி: அடப்பாவி
அக்டோபர் 2 என்னன்னு தெரியாதா?
HR: தெரியலையேப்பா
நீதான் சொல்லு.
பரதேசி: நம்ம
தேசப்பிதா?
HR: எந்த தேசத்தை
சொல்ற?
பரதேசி: எந்த தேசமா?
HR: ஆமா நாம
பிறந்து வளர்ந்தது இந்தியா, இப்ப இருந்து பிழைக்கிறது அமெரிக்கா. இதுல எந்த
தேசத்தை சொல்ற.
பரதேசி: அமெரிக்க
குடிமகன் ஆனாலும், நம்ம தேசம் எப்பவும் இந்தியாதான். நம்ம மாநிலம் தமிழ்நாடு தான்,
நம்ம மொழி தமிழ்தான், நம்ம ஊரு மதுரைதான். அத மாத்த முடியாது.
HR: எங்க போய்
வந்தாலும் இந்த மதுரையை விடமாட்டியே.சரி சரி மேல சொல்லு?
பரதேசி: நம்ம
தேசப்பிதாவை சொன்னேன்?
HR: யாரு நரேந்திர
மோடியா?
பரதேசி: என்னடா
கிண்டலா? அதுக்கு முந்தி ?
HR: அப்ப
வாஜ்பேய்?
பரதேசி: அடேய் இம்சை
பண்ணாதடா பேயும்
இல்லை பிசாசும் இல்லை.
HR: அப்ப சர்தார்
வல்லபாய் படேல்?
பரதேசி: டேய்
கொன்னுருவேன், மகாத்மா காந்திடா?
HR: ஓ அவரா? அவரத்தான்
எல்லாரும் மறந்துட்டாங்களே? காந்தியைத் தெரியும் ஆனா ஜெயந்தியைத் தெரியாது.அதுக்கென்ன
இப்ப?
பரதேசி: சீரியஸ்லி?!
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தானே.
HR: சரி அதுக்கு
என்ன இப்ப?
பரதேசி: அது பொது
விடுமுறையல்லவா?
HR: ஆமா அதுக்கு?
பரதேசி: அப்ப லீவுதானே?
HR: என்ன பரதேசி விளையாடுறியா, இது அமெரிக்கா. இங்க
காந்தியும் கிடையாது பூந்தியும் கிடையாது, லீவும் கிடையாது?.
பரதேசி: அமெரிக்கால
இருந்தாலும் நம்ம கம்பெனி இந்தியக் கம்பெனிதானே, நம்ம பாரதப் பிதாவுக்கென்னு ஒரு
நாள் லீவு விடக்கூடாதா?
HR: நாம இந்தியக்கம்பெனியா இருந்தாலும் அமெரிக்கால
இருக்கிறோம். அதனால அக்டோபர் 2க்கு நமக்கு லீவு கிடையாது, போய் வேலையைப் பாரு.
பரதேசி: அது சரி,
நம்ம நாட்டிலேயே அவரை மறந்துட்டாய்ங்க, அவரைக் கொன்ன கோட்சேவுக்கு சிலை
வைக்கிறாய்ங்க, கொஞ்ச நாள்ள முழுசும் மறந்துருவாய்ங்க.
![]() |
Christopher Columbus |
மறுபடியும் அக்டோபர்
6 அன்று,கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ( பாடிக்கொண்டே )
பரதேசி: வணக்கம் பா.
HR: நீ வந்தாலே
ஏதோ விவகாரமா இருக்குமே?
பரதேசி: அதெல்லாம்
ஒண்ணுமில்லை. போனவாரம் நம்ம, அமெரிக்காவில் இருக்கிற கம்பெனி, அக்டோபர் 2 காந்தி
ஜெயந்திக்கு லீவு கிடையாதுன்னு சொன்னில
HR: ஆமாம்.
பரதேசி: அக்டோபர் 9
ஆம் தேதி வர்ற திங்கள் கிழமை லீவுதான?.
HR: அன்னிக்கு என்ன விசேஷம்?
பரதேசி: என்னப்பா
தெரியாத மாதிரி கேக்கற அன்னிக்கு கொலம்பஸ் டே.
HR: அவர் யாரு?
பரதேசி: ஐயோடா சாமி,
கொலம்பஸ்தான் அமெரிக்காவை கண்டுபிடிச்சவரு.
HR: அப்ப ஜார்ஜ் வாஷிங்டன் இல்லையா?
பரதேசி: அவரு முதல்
அதிபர்.
HR: சரி அதுக்கு
என்ன?
பரதேசி: அதுக்கு
அமெரிக்கா முழுதும் லீவு.
HR: சரி அதுக்கு என்ன?
பரதேசி: நமக்கு லீவு
இல்லையா?
HR: அட எத்தனை வாட்டி சொல்றது நாம அமெரிக்காவில
இருந்தாலும் நாம இந்தியக்கம்பெனி, கொலம்பஸுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமுமில்லை
அதனால லீவு கிடையாது.
பரதேசி:
???????????????
-முற்றும்
பின்குறிப்பு: இதில்
வேடிக்கை என்னன்னா பரதேசியும் நாந்தேன், HRம்
நாந்தேன்.
No comments:
Post a Comment