 |
Subiksha |
நண்பர்
செந்தமிழ்ச்செல்வன், பரிமளா தம்பதியினரின் மூத்த மகள் சுபிக் ஷாவின் பரதநாட்டிய
அரங்கேற்றத்திற்கு அழைப்பிதழ் மூன்று மாதம்
முன்னேரே எனக்கு வந்துவிட்டது. வந்தவுடனே
கண்டிப்பாகச் செல்ல முடிவெடுத்து நாளைக் குறித்து வைத்துக் கொண்டேன். அது கடந்த சனிக்கிழமை
(09.16.2017) அன்று ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பில்
கலையரங்கத்தில் இனிதே நடந்தேறியது. மாலை 4:30 மணியளவில் ஆரம்பித்து 9:00
மணியளவில் முடிந்து பின்னர் இரவு உணவுடன் நிறைவு பெற்றது.
 |
Add caption |
மாலை
4:00
மணிக்கெல்லாம் பரதேசி அங்கு ஆஜர். நண்பர்கள் தமிழ்ச் சங்கத் தலைவர்கள் சிவபாலன்
தம்பதியினர், ரங்கநாதன் தம்பதியினர், விஜயகுமார் தம்பதியினர் பாலா தம்பதியினர் ஆகியோர்
ஏற்கனவே வந்து வரவேற்க அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
தலைவர்கள் பக்கத்தில் அமர்ந்ததாலோ அல்லது என் புகழ் (?) பெருகியதாலோ என்னவோ, பலர்
வந்து எங்களை போட்டோ எடுத்தனர். இது சாப்பிடுவது வரை தொடர்ந்தது.
இந்த
அரங்கேற்றத்திற்கு எப்படியெல்லாம் திட்டமிட்டார்கள் என்பதைக் கண்டு வியப்பில்
ஆழ்ந்தேன். முதலாவதாக இதற்கென ஒரு வெப்சைட் இணையதளம் (http://subhiksha.net) உருவாக்கப்பட்டது. பிறகு நண்பர்களுக்கு ஒரு எலக்ரானிக் அழைப்பிதழ்
அனுப்பப்பட்டது. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே. அதன்பின்னர்
இரண்டு மாதம் முன் அழகிய அழைப்பிதழ் வந்து சேர்ந்தது. அழைப்பிதழுக்கென்று
தனிப்பட்ட ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டது, அதனைப் பார்க்கும்
போதே தெரிந்தது. பல வண்ண ஆஃப்செட்டில் சுபிக்ஷா பலவித உடைகளில் நடன முத்திரைகள்
பிடித்து நின்றிருந்தாள். அவ்வப்போது மறந்துவிடக் கூடாது என்றெண்ணி ஈமெயில் ரிமைன்டர்கள் வந்து
கொண்டேயிருந்தன.
 |
With Guru Sathya Pradeep |
அரங்கின்
முன் ஆங்காங்கே சுபிக்ஷாவின் சிறிய அளவு கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லா
போட்டோக்களிலும் சுபிக்ஷா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் புன்னகை ஆடும்போது
துவங்கி முடியும் வரை நிலைத்திருந்தது ஆச்சரியம்தான்.
 |
Dr.Aparna Sharma |
மேடையின்
திரைகள் உயர்ந்ததும், இடது புறத்தில் சுபிக்ஷாவின் குரு சத்யா பிரதீப் பெருமையுடன் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவர்
அருகில் பாடகர் டாக்டர் அபர்னா ஷர்மா, வலது புறம்
மிருதங்க வித்வான் B.V.கணேஷ், மறுபுறம் புல்லாங்குழல் C.K.பதஞ்சலி மற்றும் வயலின்
வித்வான் C.K.விஜயராகவன் இருந்தனர். குரு தவிர மற்ற எல்லோரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். அவரவர் துறைகளில்
விற்பன்னர்கள் என்று அறிமுகப் படுத்தியதோடு மட்டுமல்ல வாசிக்கும் போதும்
தெரிந்தது. குரு சத்யா பிரதீப், (www.satyapradeep.com)
லாங் ஐலண்டில் “நிருத்ய சாகரம் டான்ஸ்
அக்கெடெமி” என்று நடனப் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். பல நாட்டிய
நிகழ்ச்சிகளை நடத்தியவர். எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் .
சிறப்பு
விருந்தினர்களாக பிரபல நடன ஆசிரியர் கலைமாமணி ஜெயந்தி சுப்ரமணியமும் பேரூர் ஆதீனம்
தவத்திரு மருதாச்சல அடிகளாரும் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள்.
ஜெயந்தி
சுப்ரமணியம் ஆங்கிலத்தில் ஒரு அற்புத உரையாற்றினார். சுபிக்ஷாவின் நடனத்தின்
சிறப்புகளை எடுத்துக் காட்டியதோடு பரதக் கலையின் பெருமைகளையும் விளக்கினார்.
பேரூர்
மருதாசல அடிகளார் தமிழில் தொடங்கி ஆங்கிலத்திற்குத் தாவினார். அவரின் உரையின்
சாராம்சத்தை தமிழிலேயே சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மேடையின்
மறுபுறம் கலையரசன் தில்லையம்பல நடராஜனின் நடன விக்கிரகம் அமைக்கப்பட்டு
அலங்கரிக்கப் பட்டிருந்தது.
நிகழ்ச்சி
பரதக்கலை பிறந்த தஞ்சை வழுவூரில் இருக்கும் ஸ்தல விக்கிரகங்களுக்கு ஜெபப் பாடலுடன்
துவங்கியது. அடுத்து நாட்டை ராகத்தில் மிஸ்ரஜம்ப தாளத்தில் ஜம்ப் செய்து சுபிக்ஷா
உள்ளே வந்து பஞ்சமூர்த்தி அஞ்சலியில் தெய்வங்களுக்கும், குருவுக்கும், இசைக்குழுவுக்கும் வந்திருந்த
அனைவருக்கும் வணங்கி வரவேற்ற விதத்தில் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்தது.
அதற்கு
அடுத்து வந்த “அலரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், பதம், திருப்புகழ், தில்லானா ஆகிய அரங்கேற்ற
வரிசைகளைத் தொடர்ந்து ஆடி பிறகு மங்களம் பாடி முடிந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும்
ஒவ்வொரு உடையில் மொத்தம் ஏழு உடைகளில் சுபிக்ஷா ஆடியபோது சில சமயங்களில்
நியூயார்க்கில் இருக்கிறோமா? இல்லை ஏதோ இந்திரலோகத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம்
எழுந்தது.
குறிப்பாக
நடனத்தின் சிறப்பு அம்சமாக 40 நிமிடம் ஆடிய வர்ணத்தில் தசாவதாரத்தின் பத்து
அவதாரங்களை சுபிக்ஷா தன் முத்திரைகள், முக
உணர்ச்சிகள் மூலம் வெளிப்படுத்திய விதம் பிரமிக்க வைத்தது. கூர்மத்தில் ஆரம்பித்து
கல்கிவரை பார்த்த எல்லோராலும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது
மிகவும் பாராட்டத்தக்கது.
அதோடு
பாடப்பட்ட பாடல்கள் எல்லாமே தமிழ்ப்பாடல்களாக ஒலித்தது மிகவும் பாராட்டப்படக்
கூடிய ஒன்று. தமிழகத்தில் அதுவும் தஞ்சைத் தரணியில் தோன்றிய கலையை ஆட, ஏன் புரியாத தெலுங்கு கீர்த்தனைகளைப் பயன்படுத்த
வேண்டும். இதனை செந்தமிழ்ச் செல்வன் செய்யாமல் வேறு யார் செய்யமுடியும்? .
குறிப்பாக பதத்திற்கு பாடிய பாபநாசம் சிவன் பாடலான “தேவி நீயே துணை”. பிரபல
கர்நாடகப் பாடகி அருணா சாய்ராம் பாடிப்புகழ் பெற்ற “மாடு மேய்க்கும் கண்ணே” ஆகிய
பாடல்கள். அதோடு TMS-ன் கம்பீரமான குரலில் ஒலித்த “முத்தைத்திரு” என்ற
அருணகிரிநாதரின் பாடல் அபர்ணா ஷர்மாவின் அருமையான குரலில் ஒலிக்க சுபிக்ஷா அபிநயம்
பிடித்தது நடன நிகழ்ச்சியின் ஹைலைட் என்று சொல்லலாம். தொடர்ந்து வந்த காவடி
ஆட்டமும் மிகச்சிறப்பாக அமைந்தது.
குரு
சத்யா ப்பிரதீப்பின் கைத்தாளமும். சுபிக்ஷாவின் கால் சலங்கையும் ஏதோ ரிமோட்
கன்ட்ரோல் போல ஒருமுறை கூட அச்சுப்பிரளாமல் ஒன்றாக ஒலித்தது. சத்யா ப்பிரதீப்பின்
கொன்னக் கோலும் பி.வி. கணேஷின் மிருதங்கமும் அச்சரம் கூட மாறாமல் இருந்தது. அதே
மாதிரி அபர்ணா ஷர்மாவின் பாடலும் விஜயராகவனின் வயலினும் ஒன்றோடு ஒன்று
இழைந்து உறவாடி, குரல் எது வயலின் ஓசை
என்று தெரியாத வண்ணம் இனிமையாக ஒலித்தது.
சுபிக்ஷா
வைப்பற்றிய குறும்படம் (?) பிக்பாஸ் குறும்படம் போலன்றி மிகவும் சுவாரஷ்யமாக
இருந்தது நல்ல ஒரு தொகுப்பு. மற்ற பெற்றோர்களும் இதனைப் பின்பற்றலாம்
பரத
நாட்டியம் ஒன்றுக்கே நேரம் பத்தாது என்று நினைத்தால் சுபிக்ஷா பியானோ மற்றும்
வயலின் வாசிப்பதிலும் அதோடு கர்நாடக சங்கீதத்தைப் பாடுவதிலும் சிறந்தவள் என்று
கேள்விப்பட்டேன். அப்ப படிப்பு எப்படி? என்று கேட்டால் அவுட்ஸ்டான்டிங் அவார்டு,
கோல்டன் ஸ்டுடன்ட் அவார்டு வாங்கிய
சுபிக்ஷா விளையாட்டையும் விட்டு வைக்க வில்லை .அவள் பள்ளியின் டென்னிஸ் பிளேயராம்.
சுபிக்ஷா
நிச்சயமாக கடவுளின் ஆசிர்வதிக்கப்பட்ட
குழந்தை என்பது மட்டுமல்லாமல் அவளை ஒன்றில்
சிறக்க மற்றொன்றை விடவேண்டியதில்லை என்று மற்ற மாணவர்களுக்கு உணர்த்தும் உதாரண
மாணவியாகவே பார்க்கிறேன். செந்தமிழ்ச் செல்வனும் பரிமளாவும் கொடுத்து வைத்தவர்கள்
தான்.
 |
With the Proud Family |
மற்ற
எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்கள் குறிப்பாக இரவு உணவு.
அலங்கரிக்கப்பட்ட வட்ட மேஜைகளில் உட்கார்ந்து சாப்பிட அறுசுவை விருந்து இருந்தது.
எங்கெங்கு எதுவெல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்று ஆய்ந்து கோதாவரி, தோசா ஹட்
போன்ற பல உணவகங்களிலிருந்து பதார்த்தங்கள் வரவழைக்கப்பப்படிருந்தன.
நன்றிப் பரிசாக மாட விளக்கையும் தேடித்தேடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனர்.
ஒரு
திருமண விழாவுக்கும் மேலாக இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.
செந்தமிழ்ச்
செல்வனின் மொத்த சேமிப்பையும் தன் மகள் சுபிக்ஷாவின் அரங்கேற்றத்திற்கே செலவழித்து
விட்டாரோ என்று எண்ணத்தோன்றியது.
சத்யா
பிரதீப்பின் மகள் மாஸ்டர் ஆஃப் செரிமணி
பண்ணியதும் சிறப்பாக இருந்தது.
புலம்
பெயர்ந்த தமிழ்மக்கள் தம் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றை மறந்தும் துறந்தும்
விடாமல் தங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து
ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நாட்டிய அரங்கேற்றம் ஒரு சிறந்த
உதாரணம்.
-முற்றும்.