Monday, April 24, 2017

அனாதை யானைகள் விடுதியில் பரதேசி !!!!


இலங்கையில் பரதேசி -10
Image result for pinnawala elephant orphanage sri lanka

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_18.html
“ யானைகளுக்கு அனாதை விடுதியா? என்னப்பா சொல்ற?”

          “ஆமாம் சார் வந்து பாருங்களேன்”.
“இங்கிருந்து எவ்வளவு தூரம்?”
          “ஒரு அரைமணி நேரம் தான் சார் சீக்கிரம் போய்விடலாம்”.
      அங்கு சென்று சேர்வதற்குள் அதனைப்பற்றிய சில தகவல்களைச் சொல்கிறேன். பின்னவாலா யானைகள் சரணாலயம் (Pinnawala Elephant Orphanage) என்பது இலங்கை அரசின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் மூலம் 1975ஆம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்டது (Department of wildlife conservation). இதன் நோக்கம் என்னவென்றால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவை, வழிதவறி வந்தவை, குழிகளில் மாட்டிக் கொண்டவை, அடிபட்டுவிட்டதால் கைவிடப்பட்டவை ஆகிய யானைக்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவைகள் வாழவும், வளரவும், பெருகவும் இடமளித்துக் காப்பது மற்றும் அவைகள் தன்னிச்சையாக இருக்க இயற்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது.


          இது பின்னவாலா என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர். இந்த ஊர் சபரகமுவா பிராவின்சில் இருக்கும் கெகாலே (Kegalle) என்ற நகரின் பக்கத்தில் இருக்கிறது.
          ஆரம்பத்தில் ஐந்து குட்டிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது நூற்றுக்கணக்கான யானைகள் இருக்கின்றன. இவைகள் இங்கேயே வாழ்ந்து குடும்பமைத்து இனப்பெருக்கமும் செய்கின்றன என்று சொன்னார்கள். மூன்று தலைமுறை யானைகள் இங்கு இருக்கின்றனவாம். இவைகளைப் பராமரிக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைப் பாகர்கள் இருக்கின்றார்கள். கார் பின்னவாலாவை அடைந்துவிட்டது மற்ற விவரங்களை பிறகு சொல்கிறேன்.          அந்த இடம் ஜேஜே என்று ஒரே கூட்டமாக இருந்தது. வெளிநாட்டுக் காரர்கள் அதிகமாக தென்பட்டனர். அதுதவிர உள்நாடு மற்றும் இந்தியர்களும் இருந்தனர். நுழைவுவாயிலில் எங்கேயும் பார்த்திராத விதமாக மூன்று வகை கட்டணங்கள் இருந்தன. உள்ளூர்காரர்களுக்கு ஒன்றும், வெளிநாட்டவர்களுக்கு ஒன்றும் அதுதவிர சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தனிப்பட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு உள்ளூர் கட்டணத்தை விட பலமடங்கு இருந்தது. இந்த வருமானம் இந்த இடத்தைப் பராமரிக்க செலவிடப்படுகிறதாம்.


          சாலையிலிருந்து சற்றே உயரமாக இருக்கும் இடத்தில் நுழைந்தேன். சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இடத்தில் யானைகள் சுதந்திரமாக உலவி வருகின்றன. பகல் நேரத்தில் பெண் யானைகளும் அதன் குட்டிகளும் கூட்டமாக இருக்கின்றன. இரவு நேரத்தில் பெண் யானைகளை தனித்தனி ஸ்டால்களில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருப்பார்களாம். ஆண் யானைகளையும் வேறு ஒரு இடத்தில் பிணைத்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே பிறந்த குட்டிகள் தங்கள் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மற்ற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் குட்டிகளுக்கு ஃபீடிங் பாட்டில் மூலம் பால் கொடுக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் உறிஞ்சிக் குடித்துவிடும் அழகைப் பார்த்து வியந்துவிட்டேன். 
Related image
Walking towards the River
          இவைகள் பகல் நேரத்தில் சுதந்திரமாக மேய்ந்தாலும் அங்கிருக்கும் புல் அவைகளுக்கு போதுமானதாக இருப்பதில்லையாம். அதனால் அவர்களுக்கு உணவு வெளியேயிருந்து கொண்டு வருகிறார்கள். அவைகள் சாப்பிடும் உணவைக் கேட்டால் அசந்து போவீர்கள். பலாப்பழங்கள், தேங்காய், பனை உணவு, புளி  மற்றும் புல் ஆகியவைகளைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள். ஒவ்வொரு வயது வந்த யானைக்கும் ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு கொடுக்கிறார்களாம். அது தவிர அரிசித் தவிடும் சோளமும் கொடுக்கிறார்கள்.
          யானைகள் ஒவ்வொன்றும் புஷ்டியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. அவை பாட்டுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது.
          ஒவ்வொரு யானைக்கும் பேர் வைத்து இருக்கிறார்கள். இங்கும் இனப்பெருக்கம் நடந்து பல குட்டியானைகள் பிறந்திருக்கின்றன. சில யானைகளை சில கோவில்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இங்கு விலைக்கு கூட கொடுக்கிறார்கள்.  எவ்வளவு என்று தெரியவில்லை.
          எனக்கும் ஒரு யானை வாங்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. விமானத்தில் அழைத்துச் செல்ல முடியாது என்பதாலும், அமெரிக்காவில் வீட்டில் யானை வளர்க்க அனுமதியில்லை என்பதாலும் தான் வாங்கவில்லை மக்களே.
Image result for pinnawala elephant orphanage sri lanka

          அதோடு யானைகளை வாங்கியவர்கள் அதனைச் சரியாக பராமரிக்கவில்லை என்று கம்பிளைன்ட் வந்ததால் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பின்னவாலாவுக்கு கொண்டு வரப்பட்டன.
          இங்கே இருக்கும் யானைகளில் ஒன்று, நடந்த சண்டையில் கன்னி வெடியில் கால் வைத்து முன்னங்காலில் பாதியை இழந்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் அந்த யானையைப் பார்க்க முடியவில்லை.
          சிறிது நேரத்தில் யானைகளை அணிவகுத்தனர். ஆஹா ஏதோ ஊர்வலம் போலிருக்கு என்று நினைத்து அவர்களைப் பின் தொடந்தேன். கிட்டத்தட்ட 30 யானைகள் தங்கள் குட்டிகளுடன் வெளியே கிளம்பின. காப்பகத்தின் எதிர்ப்புறம் இருந்த தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க நானும் பின்னால் நடந்தேன்.
          கொஞ்ச தூரம் அந்தச் சரிவில் நடந்து நடந்து போனால், எதிரே பள்ளமான இடத்தில் அழகிய ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆறு முழுவதும் நீர் நிரம்பி ஓடவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தண்ணீர் நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆறின் பெயர் மகா ஓயா. தண்ணீர் ஓயாது ஓடுவதால்  இந்தப் பெயரோ என்று தெரிவில்லை.
          தண்ணீரைக் கண்டதும் யானைகள் விரைவாக நடந்து உள்ளே இறங்கி கும்மாளம் போட ஆரம்பித்தன. தண்ணீரை பிறயானைகளின் மேல் தெளிப்பதும், தன்மேல்  தெளித்துக் கொள்வதும், குட்டிகளின் மேல் தெளித்து  தடவுவதும் ஜோராக இருந்தது. அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
          எனக்கும் கீழே இறங்கி தண்ணீரில் விளையாட வேண்டும் போல் இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. யானை, குழந்தை, கடலலை மற்றும் அருவி இவற்றையெல்லாம் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது என்று சொல்வார்கள்.

          மேலே ஒரு மேடையிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு வெள்ளைக் கார தம்பதியினர் இருந்தனர். அந்தச் சமயத்தில் கீழேயிருந்து ஒரு யானை ஆற்றின் கரையின் சுவரின் மேல் ஏறி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

-தொடரும்.

8 comments:

 1. நீங்கள் எனக்கு வந்தது பெருமை.

  ReplyDelete
 2. ஆமாம். சிறியவர்,பெரியவர் வித்தியாசமின்றி அனைவரையும் கவர்வன யானைகள். இவை இயற்கையோடு இணைந்திருந்தால் மேலும் சிறப்பு..


  ReplyDelete
  Replies
  1. இதுல என்னை யாருன்னு சொல்றீங்கன்னு புரியலையே பாஸ்கர் ?

   Delete
 3. நல்லதொரு அனுபவம். இந்த இடம் பற்றி இணையத்தில் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete
 4. பின்னவல பற்றி வாசித்திருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவின் மூலம் நேரில் கண்டது போல இருக்கிறது....இயற்கை, விலங்குகள் எல்லாம் எப்போதுமே இன்பம் தருபவை, சலிக்காது....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நன்றி கீதா

   Delete