Thursday, April 20, 2017

வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் !!!அந்த தந்தச் சிலையைப் பார்த்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது. “எவ்வளவு?”, என்று கேட்டேன். 200 டாலர் என்றார் அந்த வெள்ளைக்காரர். ‘ஆன்டிக்’ (Antique) என்று சொல்லப்படும் புராதன பொருட்கள் சேகரிப்பது என்னுடைய பொழுதுபோக்கு என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதில் பழைய காலத்து நாணயங்கள், பல நாட்டு கரன்சி தாள்கள், அழகிய போர்சலின்    உருவங்கள்  என்பவையும் அடங்கும். போன ஞாயிறன்று ஆலயம் முடிந்தபின்பு மெல்வில், லாங் ஐலண்டில் நடந்த ஒரு நாணயக்காட்சிக்குச் சென்றிருந்தேன் (Coin Show). மெல்வில்லில் உள்ள பிங்கோ ஹாலில் நடக்கும்.வீட்டிலிருந்து கிளம்பும்போது மணி 12 என்பதால் சாப்பிடவில்லை. மனைவி கொடுத்து அனுப்பிய சிறு வாழைப்பழங்களையும் பெர்சிமன் பழங்களையும் ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டே என்னுடைய வோல்க்ஸ் வேகன் வேனில் சென்றேன்.

Image result for melville coin show new york
என் வீட்டிலிருந்து சுமார் 1/2 மணி நேரம் டிரைவ். டிராஃபிக் அதிகமில்லை. எக்ஸ்பிரஸ் வேயைத் தொட்டபின் பிளேயரைத் தட்டியதில் “அரபிக்கடலோரம் கண்ட அழகை"  விவரித்துப்பாடினார் A.R. ரகுமான். நேர்த்தியான சாலையில் பழச்சுவையோடு இசைச்சுவையும் சேர்ந்து கொண்டு உற்சாகமாய் இருந்தது. அந்த ஷோ மதியம் 1 1/2 மணி வரைக்கும்தான். அதனால் தான்  ஆலயம் முடித்து அவசர அவசரமாக செல்ல வேண்டியிருந்தது. இதன் காரணத்தாலேயே நான் பலகாலமாக அங்கு போகவில்லை .அதனால் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
காய்ன் ஷோவில் பங்கு கொள்பவர் பலரும் யூதர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் (இரண்டாவது மற்றும் நான்காவது) இந்த ஷோ நடக்கிறது. காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை ஆனால் அதிகப்பேர் இல்லாவிட்டால் 1 1/2 மணிக்கெல்லாம் பெட்டியைக் கட்டிவிடுவார்கள். பொதுவாக பழைய புதிய தங்க, வெள்ளி நாணயங்கள், பல நாட்டு பணத்தாள்கள், அபூர்வ பழைய புதிய ஸ்டாம்புகள், ஒரு சில புராதன பொருட்கள் மற்றும் காயின் சப்ளை என்று சொல்லக்கூடிய ஆல்பங்கள்,  ஃபோல்டர்கள், நாணயங்களைப் பாதுகாக்க உதவும் வில்லைகள், பிளாஸ்டிக் குப்பிகள் என பல பொருட்களும் கிடைக்கும். இளவயது மக்கள் மிகவும் கொஞ்சப்பேர் வருவார்கள் என்னைபோல (?) ஆனால் அதிகம் வருவது நடுத்தர மற்றும் முதியவர்கள் தான். ஏனென்றால் இது அதிகச் செலவுள்ள  ஹாபி (Expensive Hobby).
நான் உள்ளே நுழைந்த போது 12 1/2 ஆகிவிட்டது. அங்கே அதிகம் பேர் இல்லை. எனக்குத் தேவையான எழுதி வைத்திருந்த லிஸ்ட்டை பார்த்தேன். அமெரிக்க நாட்டின் நேஷனல் பார்க் குவாட்டர்கள், ஒரு டாலர் அமெரிக்க அதிபர்களின் நாணயங்கள், அரை டாலர் மற்றும் விட்டுப்போன ஜெஃபர்சன் நிக்கல் ஆகியவற்றில் புதிதாக 2016-2017க்கான வெளியீடுகள் தான் எனக்குத் தேவைப்பட்டன.  
Image result for melville coin show new york

அமெரிக்க ஈகிள் தங்க நாணயங்கள் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கலாம் என்று எண்ணமிருந்தது. எனக்குத் தெரிந்த பலர் என்னைப் பார்த்துக் கையசைத்து "லாங் டைம் நோ சி" என்றார்கள். "ஐ ஆம் ஸ்லோயிங் டவுன் ஆன் காயின்ஸ்" என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு, தங்க நாணயங்களை எப்போதும் விற்கும் மைக்கை நோக்கி நகர்ந்தேன்.  அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தச் சிற்பம். சிறிய அழகிய வடிவத்தில் ஒரு சீனன் குரங்கோடு இருந்த அந்த செதுக்கப்பட்ட சிற்பம் ஒரு சிறிய மரத்துண்டில் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அதனை விற்றுக் கொண்டிருந்த வெள்ளைக் காரனை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் எதையும் வாங்கியதில்லை. என்னை வரவேற்ற அவனிடத்தில் ஒரு புன்னகையை உதிரித்துவிட்டு, “அந்த தந்தச் சிலையைப் பார்க்கலாமா?”, என்றேன். ஆஃப்கோர்ஸ்  என்று சொல்லிவிட்டு அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து ஜாக்கிரதையாக அதனை எடுத்து என் கையில் கொடுத்தான். மிக அழகாக நுணுக்கமான  வேலைப்பாடுகளோடு அமைந்திருந்தது அந்தச்சிற்பம். அதிலேயே விலை 199.00 டாலர்கள் என்று போடப்பட்ட ஒரு விலைக்குறிப்பு தொங்கியது.             "பிடித்திருக்கிறதா ?"
"பிடித்திருக்கிறது ஆனால் விலை அதிகம் என்னால் அவ்வளவு கொடுக்கமுடியாது"
“சரி எவ்வளவு கொடுப்பாய்?”
“நீயே சொல்லு”,
“175 கொடுத்தால் போதும்”
“ பரவாயில்லை எனக்கு வேண்டாம்”, நகர்ந்தேன்.
“150 என்றால் கொடுத்துவிடுவேன், நான் கிளம்பும் நேரம்”.
“100 என்றால் வாங்கிக் கொள்கிறேன்”.
“100க்கு விற்றால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன்”.
“100க்கு மேல் கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்”
“ சரி கொடு”,, என்றதும் என் கைப்பையில் வைத்திருந்த சிறு பவுச்சில் இருந்து 2 நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன் அதை வாங்கிக் கொண்டு அவன் “என்ஜாய்”, என்று சொல்லி சிற்பத்தைக் கையில் கொடுத்தான். நன்றி சொல்லி வாங்கி நகர்ந்துவிட்டு மற்ற ஸ்டால்களை மேய்ந்தேன். ஒரு சிறு வெள்ளி பார் பிடித்ததால் விலை பேசி 20 டாலருக்கு  வாங்கி திரும்பவும் பவுச்சை திறந்தபோதுதான் கவனித்தேன். அதில் இருந்தவை முழுதும் 100 டாலர் பில்கள். சடக்கென நினைவு வந்தது, அடடே அவனிடம் 2 நோட்டு அதாவது 200 டாலர்கள் கொடுத்துவிட்டேனோ என்று நினைத்துப் பார்த்தால் அவன் ஸ்டாலில் இல்லை. அரங்கு முழுதும் தேடி அவனைக் கண்டுபிடித்து, தனியாக அழைத்துக் கேட்டேன்.
“நான் தவறுதலாக உன்னிடம் 200 கொடுத்துவிட்டேன். எனவே நூறைத் திருப்பிக் கொடு” ,என்றேன். இல்லை நீ ஒரு நோட்டுத்தான் கொடுத்தாய் என்று தன் பாக்கெட்டில் கொத்தாக இருந்த பணத்தில் இருந்த ஒரே ஒரு புதிய நூறு தாளைக் காண்பித்தான். குழம்பிப்போன நான் பரவாயில்லை என்று சொல்லி காருக்குச் சென்றேன். மொத்தப் பணத்தையும் எண்ணிப் பார்த்துவிட்டு நான் கொடுத்தது 200 தான் என்பதையும் கண்டுபிடித்துவிட்டு  மீண்டும் அவனிடம் சென்றேன்.
"இதோபார் நான் நன்கு கணக்குப் பார்த்துவிட்டேன். உன்னிடம் நான் கொடுத்தது 2 நூறு ரூபாய் நோட்டு"
“இல்லை இல்லவே இல்லை ஒன்றுதான் கொடுத்தாய்”.
“இதோபார் அது வங்கியில் எடுத்த புத்தம்புதிய நோட்டுகள், அதன் எண் வரிசை எனக்குத் தெரியும். நமக்குள் முடித்துக் கொண்டால் நல்லது இல்லாவிடில் நான் இந்த நடத்துனரிடம் புகார் கொடுத்து உன்னை உண்டு இல்லை எனப் பண்ணிவிடுவேன். நான் அந்த நூறை விடுவதாக இல்லை”, என்றேன்.
என்னையே சிறிது நேரம் பார்த்துவிட்டு, “உண்மைதான் நீ இரண்டு நோட்டு கொடுத்தாய். என்னை மன்னித்துவிடு, நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். யாரிடமும் சொல்லாதே”, என்று தழுதழுத்தான். யார்ட்ட என்னை ஏமாத்தமுடியாது என்று ஒரு பெருமிதம் வந்தது.வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்று யார் சொன்னது. ஒரு நிமிடம் அதனை அவனிடமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றினாலும் தவறுக்கு துணைபோகக் கூடாதென்று , “நமக்குள் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டு ஹிக்ஸ்வில்லில் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனைவியிடம் இதைச் சொன்னபோது அவள் என்னைத்தான் சத்தம்போட்டாள். “நீ சரியாகப் பார்க்காமல் கொடுத்துவிட்டு அவனை அழ  வைத்திருக்கிறாய். நீ அந்தப் பணத்தை அவனிடமே கொடுத்துவிடு. நூறு டாலரில் என்னவாகிப் போய்விடப்போகிறது”, என்றாள். நானும் திகைத்துவிட்டேன். ஆனால் நான் வாங்கி வந்தது ஐவரி இல்லை வெறும் பிளாஸ்டிக். 1 டாலர் கூடப் பெறாது என்பதை வரும் வழியில் தெரிந்து கொண்டேன் என்பதை என் மனைவியிடம் சொல்லவில்லை. ப்ளீஸ் நீங்களும் சொல்லிறாதீங்க.  

முற்றும்


16 comments:

 1. Replies
  1. தயவு செஞ்சு சொல்லாதீங்க எலிசபெத் அக்கா .

   Delete
 2. ஆல்ஃப்ரெட், விசு இதைப் படிக்கவில்லையே!!!??? எதுக்கும் கேட்டுக்கங்க...இல்ல அந்த லாஸ்ட் வரிக்காகத்தான்......ஹஹஹஹ்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா இடை நாம இப்ப்டி சும்மா விட்டுவிடக் கூடாது உடனே விசுவிற்க்கு சொல்லிடனும் அதுமட்டுமல்ல உடனே என் வீட்டில் இருக்கும் பூரிக்கட்டைகளையும் உடனடியாக் ஆல்பிரட் வீட்டீற்கு அனுப்ப ஏற்பாடு செய்யனும் எத்தனை நாளைக்கு நான் மட்டும் அடி வாங்கி கொண்டே இருப்பது

   Delete
  2. ஹலோ இப்படி எத்தனை பேர் அலையிறீங்க ?

   Delete
  3. ஹஹஹ மதுரை நல்ல ஐடியா கொடுத்துருக்கீங்க..சே...அன்னிக்கு இதை பாக்காம விட்டிட்டுப்புட்டேன்...கும்மி மிஸ்ட்...

   ஆல்fred...நங்கல்லாம் பாவம். சாமீ...

   கீதா

   Delete
  4. பூரிக்கட்டையா நான் என்ன உங்களை மாறி அவ்வளவு ஸ்ட்ராங்கா?எனக்கெல்லாம் விளக்குமாத்து குச்சி ஒன்னு போதுமே .

   Delete
 3. நீங்க இணைய பதிவர் மட்டுமில்லையா ? புதிய தகவல். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ பாஸ்கர் ஆல்பிரட் சகலகலா வல்லவர் என்பது உங்களுக்கு தெரியாதா?

   Delete
  2. இதுல ஏதோ உள்குத்தல் இருக்கிறது போல தெரியுதே ?

   Delete


 4. ஆன்டிக்’ என்பதை நான் வேகமாக படிக்கும் போது ஆண்டி என்று படித்து எதுக்குடா நாம்ம ஆல்பிரட் ஆண்டியை தேடி தேடி போய் வாங்குகிறார் என் நினைத்து குழம்பிவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஹல்லோ மதுரைத் தமிழா ஆன்ட்டியை தேடிப்போற அளவுக்கு நம்மக்கு என்ன அவ்வளவு வயசு ஆயிருச்சா என்ன ?

   Delete
  2. மதுரை...இங்க பாருங்க இதை விட்டுபுட்டீங்களே....ஹஹஹ...

   கீதா

   Delete
  3. இப்படி உசுப்பேத்தி பிழைக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பது >>>>>>>> என்ன சொல்ல ?

   Delete
 5. கவலைப்படாதீங்க நண்பரே, பொண்டாட்டின்னா பயந்துதான் ஆகணும். பெரியவங்க சொல்லியிருக்காங்க.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. அதாவது நீங்க சொல்றீங்க இல்லியா செல்லப்பா ?

   Delete