Tuesday, March 7, 2017

கெஸ்ட் ஹவுசும், வொர்ஸ்ட் ஹவுசும், கோஸ்ட் ஹவுசும் !!!!!!!


இலங்கையில் பரதேசி பகுதி -5

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/465.html
Chamanka Guest house
அந்த அம்மாவின் பதிலைக்கேட்ட எனக்கு, இரவு விமானப் பயணத்தின் 'ஜெட்லேக்' என்று சொல்லப்படும் மலைப்பு, இரவு முழுவதும் சரியாக துங்காதலால் ஏற்பட்ட களைப்பு இரண்டும் பலமடங்கு பெருகி தலை கிர்ரென்று சுற்றத்துவங்கியது. அதற்குள் உள்ளேயிருந்து வெளிப்பட்ட நடுத்தர வயது ஆண் ஒருவர். "என்ன வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். அவரிடம், “தவறுதலாக வந்துவிட்டோம்.  ஒரு ஹோட்டலைத் தேடிக் கொண்டிருக்கிறோம்”, என்றோம். அட்ரஸை வாங்கிப் பார்த்த அவர் சிறிது கலவரத்துடன் "இதுதான் நீங்கள் தேடும் சமன்கா ஹெஸ்ட் ஹவுஸ்” , என்றார். அது ஒரு வீடு மாதிரி இருந்தது. அதன் பின்னர், “எக்ஸ்பீடியா மூலம் நான்கு நாட்களுக்கு புக் பண்ணியிருக்கிறேன்”, என்றேன். "அப்படி ஒன்னும் தகவல் இல்லையே", என்று சொன்னவுடன் மேலும் கலவரமானேன்.
No Board
புக்கிங் கன்ஃபர்மேஷனை எடுத்துக் காண்பித்தவுடன் ஆச்சரியப் பட்டார். "ரூம் இருக்கிறது, ஆனால் அதனை ரெடி பண்ண கொஞ்சம் நேரம் ஆகும்", என்றார். அம்ரி சொன்னான், “உள்ளே பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்யலாம்”, என்று. அவரிடம் அதனை நான் சொல்ல, அம்ரி குறுக்கிட்டு  சிங்களத்தில் அவருக்கு விளக்க அவர் ஓகே என்று சொல்லி கதவை விரியத்திறந்தார்.

நானும் அம்ரியும் காலணிகளை கழற்றிவிட்டு, உள்ளே  நுழைந்தோம். அது ஒரு சிறிய லிவ்விங் ரூம், டிவியில் ஏதோ சிங்கள சானல், பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சிறு பையன் அம்மணமாய் ஓடிவந்து சமையல் செய்து கொண்டிருந்த அம்மாவை எதற்கோ அழைத்தான். அம்மாவின் இடுப்பில் ஒரு பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. லிவ்விங் ரூம் தரை முழுதும் ஏராளமான பொருட்கள் இறைந்து கிடந்தன. பொம்மைகள், கைத்துண்டுகள், துணிமணிகள், உணவுப்பண்டங்கள், எலும்புகள்  ஆகியவை தரையில் காலை வைக்க இடமில்லாமல் கிடந்தன. அந்த ரூமின் ஓரமாய் இருந்த ஒரு வட்ட வடிவ டைனிங் டேபிளில் மூடி வைத்திருந்த மாமிச பண்டத்தை, மூடியைத் தள்ளிவிட்டுவிட்டு ஒரு பூனை கவ்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எதற்கு ஷூவைக் கழற்றச் சொன்னார், தரை அழுக்காகிவிடுமென்றா இல்லை ஷூ அழுக்காகிவிடுமென்றா என்று யோசித்துக் கொண்டு நின்றேன். சரி கெஸ்ட் ஹவுஸ் எங்கப்பா என்று கேட்க வாய் திறக்கும்போது, “மேலே வாருங்கள்”, என  வெற்றுடம்புக்காரர் அழைக்க,. அப்படியே மேலேறிச் சென்றால் அங்கே இரண்டு பெட் ரூம்கள் இருந்தன. ஒன்றைக் கடந்து செல்லும்போது அது உள்ளே களேபரமாய்த் தெரிந்தது. அதனைத் தாண்டியதும் வந்த இன்னொரு பெட் ரூமைத்  துருப்பிடித்த சாவியை வைத்து கரகரவென்று  திறந்து விட்டுவிட்டு இதுதான் உங்கள் ரூம் என்றார். எவ்வளவு தூசியடைய முடியுமோ அவ்வளவு தூசி இருந்தது. 'உள்ளே போய்ப் பாருங்கள்' என்றபோது ,அந்தத் தற்கொலை முயற்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை என்பதால், “பரவாயில்லை இருக்கட்டும்”, என்றேன். “உள்ளேயே பாத்ரூம் இருக்கிறது”. (ஐயையோ கொழும்பில் மூச்சுத் திணறி இறக்க நான் விரும்பவில்லை)
"சுடுதண்ணீர் தேவையென்றால் எங்கள் பாத்ரூமிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" (இதில சுடுநீர் வேற வராதா ?).
“வேண்டுமென்றால் காலை உணவு உங்களுக்கு இங்கேயே தருவோம்”. (எது பூனை சாப்பிட்ட மிச்சமா? )
“ஒரு அரை மணிநேரம் கொடுத்தால் இதனை சுத்தம் செய்து விடுவேன்”, (இதையா அரை மாதம் கொடுத்தால் கூட சுத்தம் செய்ய கண்டிப்பாய் முடியாது).
“எத்தனை நாள் இருக்கப்போகிறீர்கள்?”.
நான் அம்ரியைப் பார்க்க அம்ரி திருதிருவென்று முழித்தது வேண்டாம் என்பது போல இருந்தது.
அதற்குள் அவர் மனைவி கீழேயிருந்து கத்த இவர் மேலேயிருந்து கத்திவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டு, “பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போக வேண்டும்”, என்றார்.
“சரி அம்ரியின் வீட்டுக்குப்போய் விட்டு இங்கு  வருகிறோம். எதற்கும் உங்கள் அலைபேசி எண்ணை கொடுங்கள்”, என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். கேட்டை திறந்துவிட்ட கிழவியின்  முகம் கடுகடுவென்று இருந்தது. ஒரு வேளை அந்தம்மா படுக்கும் அறைதான் அதுவோ. குசினியில் இருந்த மனைவி எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இடுப்பில் இருந்த பெண் எழுந்து இப்போது கர்ணகடூரமாய் அழுது கொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் கையில் மகனின் யூனிபார்முடன் சுற்றிச்சுற்றி வர அந்தப் பையன் அம்மணத்துடன் அங்குமிங்கும் ஓடி அவருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தான். 

ஷூவைப்போட்டுக் கொண்டு வெளியே வந்தோம். அந்த சாக்ஸ் நனைந்து அழுக்காகி மறுபடியும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், இரண்டையும் கழற்றி விட்டெறிந்துவிட்டு வெறும் காலில் ஷூவை மாட்டிக் கொண்டு வெளியே வந்தோம்.

அம்ரி கேட்டான், “சார் இதுவா கெஸ்ட் ஹவுஸ்?”.
“இல்லை அம்ரி இது வொர்ஸ்ட் ஹவுஸ்”.
“என்ன சார் இது நியூயார்க்கிலிருந்து வருகிறீர்கள், ஒரு நல்ல இடம் புக் செய்ய வேண்டாமா? என்னிடமாவது சொல்லியிருக்கலாமே”.
எக்ஸ்பீடியாவுக்கு அங்கிருந்து போன் செய்தேன். சிக்னல் கிடைக்காது பலமுறை முயற்சி செய்து பேசியவுடன், ஒரு மாதம் முன்னால் புக் செய்ததால் இப்போது கேன்சல் செய்ய முடியாது என்கிறார்கள்.
என்ன செய்வது நான் எப்போது சிக்கனமாக இருக்க முயன்றாலும் செலவு இருமடங்காகி  விடுகிறது. என் ராசி அப்படி.
Image result for ghost house
Ghost house
அம்ரி சொன்னான், “கவலைப் படாதீங்க விட்டுத்தள்ளுங்க உங்களை நல்ல இடத்தில் சேர்க்கிறேன்”, என்று சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரத்தூரத்தில் ‘போல்கோடா’ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
மெயின் ரோட்டிலிருந்து ஒரு பெரிய பள்ளத்தில் வண்டியை விட்டான். அந்தப் பாதை கரடுமுரடாக வெறும் சல்லிக் கற்களால் போட்ட ரோடு போல இருந்தது கார் குலுங்க குலுங்க ஒரு பெரிய ஜல்லடையில் உட்கார்ந்து என்னை யாரோ ஜலிப்பது போல இருந்தது.

அஅஅம்ம்மிரி எஎஎங்ங்கேக்கே போபோகிகிறாறாய்? என்றேன். உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை குலுங்கிய குலுங்கலில், என் வயிறு நெஞ்சுக்கு வந்து எனக்கு உடனடியாக பாத்ரூம் போகனும் போல இருந்தது.

உடனே அம்ரி நிறுத்திய இடத்தில் எனக்கு இடதுபுறத்தில் ஒரு பாழடைந்த பேய் பங்களா ஒன்று இருந்தது. அம்ரி நோ...ன்னு கத்தினேன்.

-தொடரும்.   

4 comments: