இலங்கையில் பரதேசி - பகுதி -6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_7.html
Queen Victoria |
"அம்ரி
என்னப்பா கெஸ்ட் ஹவுஸ்னு போட்டிருந்த வொர்ஸ்ட் ஹவுசிலிருந்து இப்ப கோஸ்ட்
ஹவுசுக்கு கூட்டிட்டு வந்துட்ட" என்றேன். "சார் கொஞ்சம் பொறுமையா
இரிங்க", என்று சொல்லிவிட்டு அந்த
வீட்டையும் கடந்து இடது புறம் திரும்பினால் ஆஹா
நந்தவனம் எதிரில் தெரிந்தது. அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்தது ஒரு அழகிய தங்கும் விடுதி. போல்கோடா பார்க் என்பது அதன் பெயர்.
நடுவில் இருந்த சிறிய குடில்தான் வரவேற்பரை. அம்ரி போய் அங்கே போய் பேசிவிட்டு
என்னை அழைத்துச் சென்றான். அட்வான்ஸ் பணத்தை கட்டிவிட்டு வெளியே இடதுபுற மூலையில்
ஒரு அறை கொடுத்தனர். நல்ல அகலமான இரண்டு பெட் உள்ள அறை, பாத்ரூம் என சகல வசதிகளோடு
இருந்தது.
"சார்
நீங்க ரெடியாகி இருங்க, நான் வீட்டுக்குப்
போய் விட்டு வந்துவிடுகிறேன். இங்கே பக்கத்தில்தான் என் வீடு", என்றான்.
பரவாயில்லை அவனும் வந்து போவதற்கு
வசதிதான் என்று எண்ணிவிட்டு உள்ளே போனேன். அரை மணி நேரத்தில் குளித்து ரெடியாகி, ரூம் சர்வீசை அழைத்து சாண்ட்விச்
ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். இட்லி
தோசை அங்கு கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் மன வருத்தம்தான்.
நிர்மலமான நீல வானம் பளிச்சிட அது ஒரு அருமையான நாள். ரூமின் பின்புறம் அழகிய
நீச்சல் குளம் இருந்தது. முன்புறம் அழகிய பூந்தோட்டம். அதன் அருகில் பெரிய
திறந்தவெளி அரங்கம், மாலை நடக்கவிருக்கும் திருமண வரவேற்பு விழாவுக்காக
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
அதன்பின்
ஒரு அழகிய ஏரி இருந்தது. இயற்கை அழகு சூழ்ந்த அந்த இடத்தை தேர்வு செய்த அம்ரிக்கு
நன்றி சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அம்ரி வந்து சேர்ந்தான்.
"இன்றைக்கு எங்கே போகலாம்?”, என்ற போது மணி
11 ஆகிவிட்டது. “கொழும்பு நகரின் சில பகுதிகளைப் பார்க்கலாம்", என்றான்.
Fountain at Hotel |
"முதலில்
சிறிது தூரத்தில் இருக்கும் பார்லிமென்ட் பில்டிங்கைப் பார்க்கலாம்",
என்று அழைத்துச் சென்றான்.
நகருக்கு
வெளியே இருந்த கட்டிடத்திற்குச் செல்ல சிறிது நேரமானது. 'ஜெயவர்த்தனபுர கோட்டே' என்ற இடத்தில் இது அமைந்திருக்கிறது.
இதுவே தலைநகரம் என்றாலும் கொழும்பினருகிலேயே இருப்பதால் இதனை யாரும் தனி நகராகப்
பார்ப்பதில்லை.
Srilankan Parliament |
இந்த
இடம் கொழும்பிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தியாவன்னா ஓயா (Diyawanna Oya) என்ற ஏரியில் உள்ள தீவில் அமைந்துள்ளது. இங்குதான் மூன்றாவது விக்கிரமபாகு
என்ற மன்னனின் மந்திரியான நிசாகா அளகேஸ்வராவின் அரண்மனை இருந்ததாம்.
பாதுகாப்பான
இடம் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்து இலங்கையைச் சேர்ந்த தேஷமான்ய ஜாஃப்ரி பாவா (Geoffry
Bawa) என்ற ஆர்கிடெட்
வடிவமைக்க, ஜப்பானிய கம்பெனியான மிட்சுய் (Mitsui) குரூப்பால்
கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திட்டமிட்டபடி 26
மாதத்திற்குள் கட்டினார்களாம். கட்டி முடிக்கப்பட்டபோது இதன்
மொத்த மதிப்பீடு 25.4 மில்லியன் US டாலர்கள்.
Night view |
1979ல் பிரதம மந்திரியாக இருந்த ரத்னசிங்கே பிரேமதாசா முடிவெடுத்து, ஏப்ரல் 1982ல் அதிபர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனேவால் திறந்து வைக்கப்பட்டது.
பழமையும்
புதுமையும் சேர்ந்து கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தூரத்திலிருந்து பார்த்தாலும் மிக
அழகாக இருந்தது. ஏரிக்குள் இருக்கும் இந்தத்தீவின் உள்ளே 12 ஏக்கர் பரப்பளவில் இது கட்டப்பட்டு மதிய
வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
என்ன,
பிரேமதாசா, ஜெயவர்த்தனே என்ற பெயர்கள்தான்
கோபத்தைக் கிளறின. அந்தச் சமயத்தில் நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் பொது
ஜெயவர்த்தனேவிற்கு எதிராக ஊர்வலம் போனது ஞாபகத்தில் வந்தது.
சிங்களப்
பெயர்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் வித்தியாசம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது
சுலபமாய் இருந்தது. முற்றுப்பெற்று ஒலித்தால் தமிழ்ப்பெயர், முற்றுபெறாமல் தொக்கி நின்று விளித்தால் அது சிங்களப் பெயர்.
உதாரணத்திற்கு ரத்ன சிங்கம் என்றால் அது தமிழ்ப் பெயர், ரத்ன
சிங்கே என்றால் அது சிங்களப் பெயர் எப்பூடி?
"இரவில் விளக்குகளுடன் பார்க்கும்போது அதன் பிம்பம் நீரில் விழுந்து மிக
அழகாக இருக்கும்”, என்றான் அம்ரி.
“அடுத்து
எங்கே என்று கேட்டதற்கு "விகாரமகா தேவி பார்க்" என்றான் அம்ரி.
அதுசரி
"விக்டோரியா பார்க் எங்கு இருக்கிறது?” என்றேன். விக்டோரியா பார்க் தான்
விகாரமகா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது". என்றான் அம்ரி.
“பார்க்கெல்லாம் அப்புறம்
பார்க்கலாம். ஏதாவது முக்கிய இடங்களுக்கு போகலாம்”
"சரிசார்,
ஆனால் இதனைச்சுற்றி சில முக்கிய இடங்கள் இருக்கின்றன. அதனையெல்லாம் பார்த்துவிடலாம்".
அம்ரி சொன்னபடி
ஒரு விசாலமான பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பூங்காவை அமைத்து அதனை கொழும்புவிற்குக்
கொடுத்தவர் பெயர் சார்லஸ் ஹென்றி டிசோசா. இது
நடந்தது பிரிட்டிஷ் ஆட்சியின் போது. இரண்டாவது உலகப்போர் நடக்கும்போது ஆஸ்திரேலியாவின்
17ஆவது படைப்பிரிவு இங்கு வந்து முகாமிட்டிருந்ததாம். உலகப்போர் முடிவுக்கு வந்தபின்
இது புனரமைக்கப்பட்டு 1951ல் தான் பொதுமக்களுக்கென திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில்
விக்டோரியா மகாராணியின் பேரில் அழைக்கப்பட்ட இது சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின்
மன்னன் துட்டகாமனுவின் மனைவியான ராணி விகார மகா தேவியின் பெயர் சூட்டப்பட்டது.
Viharamahadevi Park |
“அவளைப்போய்
ஏன் இந்த மன்னன் திருமணம் செய்தான்?
“ஏன் சார்?”
“பேரே விகாரமா
இருக்கே?. ஒருவேளை மூஞ்சியும் அப்படி இருந்திருக்குமோ?”. “தெரியாது சார் நான் பார்த்ததில்லை”. என்று சொன்னானே பார்க்கலாம். நான் அதன்பின் வாயை மூடிக்கொண்டேன்,
Add caption |
கொழும்பு பகுதியில்
இது தான் பழமையான பெரிய ஒரே பார்க். 1927 முதல் 1995 வரை இங்குதான் கிரிக்கெட் விளையாடுவார்களாம்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டீம்கள் இங்கு வந்து விளையாடி இருக்கின்றன.
Park |
உள்ளே ஒரு மிகப்பெரிய புத்தர் சிலை, சிறிய மிருகக்காட்சி
சாலை, ஒரு சிறுவர் பூங்கா தவிர நிறைய நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பூங்காவின்
ஒருபுறம் நேஷனல் மியூசியமும், மறுபுறம் டவுன் ஹால் பில்டிங்கும் இருக்கின்றன. ஒருபுறம்
நின்று பார்க்கும்போது வாஷிங்டன் DC -யின் மினியேச்சர் போலத் தெரிந்த டவுன் ஹாலை நோக்கிச்
சென்றோம்.
- தொடரும்.
அழகு தமிழில் எழுதியிருக்காகங்களே ! ;)
ReplyDeleteஅழகு படிப்பவரின் பார்வையிலும் உள்ளது பாஸ்கர் .
Delete