Tuesday, December 1, 2015

நியூயார்க்கில் சூப்பர் சிங்கர் ஜெஸிக்கா!!!!!!!!!!!!!!!!


தீபாவளித்திருநாளைக்  கொண்டாடும் முகத்தான், நியூயார்க் தமிழ்ச்சங்கம், கடந்த 15ஆம் தேதி (நவம்பர் 15, 2005) ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியது. சூப்பர் சிங்கர்கள் திவாகர், சோனியா, தீபக் இவர்களோடு, ஈழத்து  இளங்குயில் ஜெஸிக்கா ஜூட் வந்தது ஹைலைட். கோபாலும் வந்திருந்தார், அதோடு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்ஸ், ஆனந்தி, அமுதவாணன் மற்றும் பிரியா வந்திருந்தார்கள்.


வழக்கம்போல் பரதேசி ஆஜர். பொருளாளர் ரங்கநாதன், அவர் மனைவி, நண்பர் சிவபாலன், அவர் மனைவி, செயலாளர் ராம்மோகன் அவர் மனைவி, முன்னாள் தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை, அவர் மனைவி ஆகியோர் வரவேற்றனர்.
ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்ப்பிள் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழர் கூட்டம் ஜிலுஜிலுவென திரண்டு வந்திருந்தது. குறிப்பாக ஜெஸிக்காவைப் பார்க்க இலங்கைத் தமிழரும் திரளாக வந்திருந்தனர்.

3 மணிக்கு ஆரம்பமாவதாக விளம்பரப்படுத்தியிருந்தும் வழக்கம்போல் நான்கு மணிக்கு ஆரம்பித்தது. திடீரென்று சில பெண்கள் மேடையில் தோன்றி எந்த அறிவிப்புமின்றி 'தமிழ்த்தாய் வாழ்த்து' 'நீராரும் கடலுடுத்த' பாட, ஒரு சிலர் மட்டும் எழுந்து நின்றனர். என் வரிசையில் நான் மட்டும்தான் எழுந்து நின்றேன்.மற்றவர் எழுவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது பாடல் முடிந்துவிட்டது. அடுத்து வந்த பெண், "ப்ளீஸ் ரைஸ் ஃபார் நேஷனல் ஆன்தெம் " என்று தெளிவாகச் சொல்ல இப்போது அனைவரும் எழுந்து நிற்க, அமெரிக்க தேசீய கீதத்தை மிக அருமையாக பாடினாள். அதன் பின்னர் தலைவர் விஜயகுமார் வந்து வணக்கம் கூறி  மறைந்த தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த வேண்டி, எல்லோரும் மீண்டும் எழுந்துநின்றோம்.
அதே ஆடிட்டோரியத்தில் கலாம் வந்து உரையாற்றியதை முன் வரிசையில் இருந்து பார்த்து அனுபவித்தது, கண்முன் வந்து போனது.
நியூஜெர்சியின் வசந்த் வசீகரனின் இசைக்குழு மேடைக்கு வந்தது. கீபோர்டில் வசீகரன், ஒரு புல்லாங்குழல் கலைஞர்டிரம்ஸ், ஒரு பேஸ் கிட்டார், ஒரு தபேலா இவ்வளவுதான் இசைக்குழு. லீட் கிட்டார் இல்லாதது மிகப்பெரிய குறையாகத் தெரிந்தது. புல்லாங்குழல் தவிர லீட் இன்ஸ்ருமென்ட்  எதுவும் இல்லாததால் எல்லாவற்றையும் கீபோர்டில் வாசிக்க வேண்டிய கட்டாயம். வசீகரன் மூன்று கீபோர்டுகளை வைத்துக் கொண்டு ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் நன்றாகவே வாசித்தார். ஆனால் ரிதம் வாசிக்க யாருமில்லாததால் பல பாடல்கள் டைட்டாக இல்லை.
வழக்கம்போல் சுரேஸ் கிருஷ்ணா, KS. ராஜா பாணியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Soniya
முதல் பாடலாக "ஹம்மா ஹம்மா" பாடலை தீபக் பாடினார். ஆரம்பத்தில் தனியாகச் செய்த ஆலாபனையில் இருந்த கச்சிதம் பாடலில் அமையவில்லை. இசையும் டைட்டாக இல்லை. அதன்பின் வந்த சோனியா "இது ஒரு நிலாக்காலம்" பாடினார். இந்தப் பாடல் இளையராஜாவின் வெஸ்டர்ன் ஜான்ராவில் ஒரு முக்கியமான பாடல். இசை, குரல் குறிப்பாக பேஸ் கிட்டார் அனைத்தும் அற்புதமாக இருந்தன.
குறிப்பாக செளண்ட் சிஸ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதனைக் குறை சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தத் தடவை சூப்பராக இருந்தது.  செளண்ட் சிஸ்டம் மிக முக்கியம் என்று வசீகரனுக்குத் தெரிந்திருப்பது ஒரு இசைக்கலைஞனுக்கு மிக முக்கியம். அதன் பின்னர் திவாகர் வந்து பாடிய 'சந்தனத் தென்றல்" பாடல் அவ்வளவாக எடுபடவில்லை. திவாகரின் தொண்டை சரியில்லையென்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அப்பாடலில் வரும் 'நியாயமா?' என்ற வரியில் உச்சஸ்தாயி போர்ஷனை ஒருதடவை கூடப் பாடாதது நியாயமா திவாகர்? ஆனால் பாடியிருந்தால் நிச்சயம் தொண்டை கிழிந்திருக்கும்.
அதன் பின்னர் கோபால் வந்து "செந்தமிழ் தேன் மொழியாளை" புகழ, அவள் பழையவள் என்றாலும் "பைந்தமிழ் இதழில் பழரசம் கொடுக்கும், பருகினால் தலைகுனியும்", அழகிதான்.
Jessica Jude
அதற்கடுத்து ஆவலுடன் எதிர்பார்த்த ஜெஸிக்கா வந்து, 'பாடவா உன் பாடலை ?' என்று கேட்டுப் பாடினார். பர்ஃபக்ட் சுதி, தாளம், இசை எல்லாம் கூடி அற்புதமாக இருந்தது. ஜெஸிக்காவின் குரலில் இனிமை கூடியிருந்தது.
Anandhi
ஜோடி நம்பர் 1 ஆனந்தி வந்து ஒரு பெல்லி டான்ஸ் ஆடி அசத்தினார். அசாத்தியமாக இருந்தது. ஆனந்தியின் திறமை வியக்க வைத்தது. அதன் பின்னர் பிரியா ஹிந்திப் பாடலுக்கு ஆடியதோ அல்லது ஆனந்தி பிரியா ஆடிய டூயட்டோ எடுபடவில்லை.
Amuthavanan
இடையில் வந்த அமுதவாணன் தனுஷின் பாடலுக்கு பல நடிகர்கள் ஆடினால் எப்படி இருக்கும் என்று ஆடியது ஹில்லரியஸ். அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அமுத வானனின் திறமை அசர வைத்தது.
கோபால் வந்து 'தகிட ததுமி' என்ற பாடலை விசிலடித்துப் பாடினார். சில ஹைபிச்களை லோ ஆக்டேவில் விசிலடித்தது எடுபடவில்லை. ஆனால் எந்த இடத்திலும் சுதி போகாதது ஒரு ஆச்சரியம்தான்.
திவாகர் சோனியா பாடிய “பூப்போட்ட தாவணி”, தீபக் சோனியா பாடிய வெண்ணிலவே பாடலை விட நன்றாக இருந்தது.
ஜெசிக்கா பாடிய 'என்னுள்ளே என்னுள்ளே', மாலையில் யாரோ, கொஞ்சம் நிலவு, புத்தம்புது காலை மற்றும் அவள் அப்பாவுடன் இணைந்து பாடிய பனி விழும் இரவு, ஆகிய அனைத்தும் நன்றாகவே இருந்தன. சோனியாவின் 'தீ தித்திக்கும் தீ' மிக அற்புதமாக அமைந்த மற்றொரு சோலோ.  
 ஜெசிக்காவின் 'விடைகொடு' பாடலில் பழைய உருக்கம் வரவில்லை. எத்தனையோ தடவை பாடியிருப்பாள் என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.
இடைவேளையில் மூன்று முக்கிய விருந்தினர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர்.
1.    ராஜ ராஜேஸ்வரி நியூயார்க்கின், முதல் இந்திய, பெண், தமிழ் நீதிபதி.
2.    Dr. ராமநாதன் ராஜீ, நியூயார்க் நகர சுகாதாரத் துறையின் தலைவர், 35000 பேர் இவர் கீழ்.
3.    பூஜா குமார்:- விஸ்வரூபம் மற்றும் சில படங்களின் கதாநாயகி, Miss India US.
Thalaivar Vijaykumar with Jessica:"இசைப்பூங்குயில்" பட்டம்
அதோடு ஜெஸிக்காவுக்கு, "இசைப்பூங்குயில்" பட்டம் கொடுத்து மகிழ்வித்தனர்.
மொத்தத்தில் மிக ரம்மியமான ஒரு மாலைப் பொழுதைக் கொடுத்த நியூயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்த்துக்கள்,நன்றிகள்.  

Add caption
-முற்றும்.

Photos courtesy : NY Tamilsangam.


8 comments:

  1. பாத்து அண்ணே.. அங்கே மதராசில் மழை வெள்ளத்தில் இருக்குறவங்க உங்க இசை வெள்ளத்தை பார்த்து எரிஞ்சு விழ போறாங்க.

    ReplyDelete
    Replies
    1. புரியுது தம்பி , கொஞ்ச நாளைக்கு கம்முனு இருக்க வேண்டியதுதான் .

      Delete
  2. நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடாத்திய தீபாவளி நிகழ்சியை விலாவாரியாக எழுதிய தாங்கள் யெசிகா யூட் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது அவரை சிங்களத்து சின்னக்குயில் என குறிப்பிட்டு எழுதியது எமக்கு கவலை அளிக்கிறது. ஆங்கிலேயரால் 1833ஆம் ஆண்டு அவர்களின் நலன்களுக்காக சிங்களத்தோடு இணைக்கப்பட்ட தமிழர் தாயகம், காலணி ஆதிக்க முடிவின் போது மீண்டும் தமிழரிடம் ஒப்படைக்கப்படாது, சிங்களத்திடமே வழங்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் இன அழிப்பு செய்யப்பட்டு, அவர்களின் சொத்துகள் நாசமாக்கப்பட்டு, அவர்களின் வாழ்விடத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வரும் போது யெசிக்கா மட்டும் எப்படி சிங்களத்தின் சின்னக் குயில் ஆவார்? தனது முன்னோர் வாழ்ந்து வரும் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் எங்கள் யெசிக்கா நேசிப்பின் அடையாளமாக தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை வாழ வழியின்றித் தவிக்கும் தனது தொப்புள்கொடி உறவுகளுக்கு கொடுத்ததன் மூலம் தான் யார் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். பெருமைமிகுந்த தனது செயலின் மூலம் பெரும் கவுரவத்துக்கும், மரியாதைக்கும் உரிய எங்கள் பிள்ளையாக எங்கள் இதயமெல்லாம் அவர் நிறைந்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன். நன்றி .

    ReplyDelete
    Replies
    1. அதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கவில்லை .அவள் உங்கள் மனதில் மட்டுமில்லை நம் எல்லார் மனதிலும் இடம் பிடித்த தமிழ் மகள் .என்பதில் எனக்கும் பெருமைதான் .

      Delete
    2. ஈழத்து இளங்குயில் என்று மாற்றிவிட்டேன் நண்பரே சரிதானே?

      Delete
  3. விழா பற்றிய தொகுப்பு உங்கள் பார்வையில் அருமை...

    ReplyDelete
  4. விழா பற்றிய தொகுப்பு உங்கள் பார்வையில் அருமை...

    ReplyDelete