Monday, November 2, 2015

கங்கை  அமரனின் காதல் பாடல் !!!!!!!!!!!!!!!!!!!!!!
www.tamiltvcinema.com

எழுபதுகளில் இளையராஜா
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே. பாடல் எண் 27
1979ல் வெளிவந்த அகல்விளக்கு என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல் இது.

AgalVilakkufilm.png

பாடலின் சூழல்:
வேறென்ன காதல்தான், இந்தப்பாடலின் மூலம் மிக மென்மையா வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இசையமைப்பு:

அந்தக் கால கட்டத்தில் இளையராஜாவின் நவீன இசையமைப்புக்கு சாம்பிளாக நவீன இசைக்கருவிகளோடு இசையமைத்த பாடல் இது. ஆனாலும் இசைக்கருவிகள் பாடலுக்கும் மெட்டுக்கும் இனிமை சேர்க்கிறதே தவிர குரலுக்கும் மெலடிக்கும் இடைஞ்சலாக இல்லை. பின்வந்த காலத்தில் அது சற்றே மாறிப்போனது.
பாடலின் பல்லவியின் மெட்டின் அதே ஹம்மிங் ஆண்குரலில் தனியாக ஒழிக்க, பின்னர் ஆர்கனும் மற்ற இசைக்கருவிகளும் இசைத்து கட்டியம் கூறியபின், கம்பீர ஆண்குரலில் "ஏதோ நினைவுகள் கவுகள்" என்று பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி முழுதும் ஆண்குரலால் பாடப்பட்டு முடிப்பதற்கு சற்றுமுன், 'ஏதோ' என்ற வரியில் இணைந்து பெண்குரலில் பல்லவியின் அதே வரிகள் வருகின்றன.
இளையராஜாவின் BGMகளில் சற்றே நீண்ட இப்பாடலின் BGM இடையில் வருகிறது. கிடார், டிரம்ஸ், புல்லாங்குழல், வயலின் ஆகிய கருவிகளின் இசை பின்னிப்பிணைந்து ஒலித்து முடிய, முதல் சரணம் கணீர் எனும் பெண்குரலில் "மார்பினில் நானும்" என்று ஆரம்பிக்கிறது. முதல் சரணம் முழுவதும் பெண்குரலிலும் 2-ஆவது  சரணம் ஆண்குரலிலும் ஒலிக்கும் பாடல், இறுதியில் வரும் பல்லவியில் மட்டும் மாறி மாறி ஒலிக்க பாடல் முடிகிறது. 2-ஆவது BGM -ல் லீட் கிடாரும் பேஸ் கிடாரும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இசையைத் தருகின்றன. அதிகமாக கிடார் பயன்படுத்தப்பட்ட பாடல் இது என்று சொல்லலாம்.
பாடல் வரிகள்:
Gangai Amaran with Ilayaraja
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
(ஏதோ நினைவுகள்..)
பாடலை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். "ஏதோ நினைவுகள், கனவுகள் மனதிலே மலருதே", என்ற வரிகளில் “ காதல் பூ” நினைவிலும் கனவிலும் புறப்பட்டு மனதில் மலர்கிறது, அது காவேரி ஊற்றாகவும் காற்றோடு காற்றாகவும் பெருக்கெடுத்து தினமும் காண்பது", என்று சொல்லி அம்சமான காதலை வெளிப்படுத்துகிறார். கங்கை அமரனும் காதல் கல்யாணம் செய்தவர்தான் .காதலை உணர்ந்து ரசித்து , அனுபவித்து எழுதியிருக்கிறார் .பல்லவியில் முத்திரை பதிக்கும் வரிகள், சரணத்தில் சுமாராகவே வருகின்றன. முதல் சரணத்தில், " தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்" என்ற வரிகள் பெண் மனதின் விரகத்தை மென்மையாக வெளிப்படுத்துகிறது. பாடலாசிரியரும் இசை தெரிந்தவர் என்பதால் வரிகள் இசையோடும் மெட்டோடும் கச்சிதமாகப் பொருந்துகின்றன.
பாடலின் குரல்கள்:
Sp Sailaja.
இது KJ. யேசுதாஸ் SP.ஷைலஜா பாடியது. யேசுதாசைபற்றிச் சொல்லவே வேண்டாம். அந்தக் கானக்குரலில் குறிப்பாக இந்தக் காலக்கட்டத்தில் இளமை துள்ளி விளையாடுகிறது. மலையாளிகளுக்கே உரிய அந்த பேஸ் குரல் மிகவும் இனிமையாக ஒலிக்கிறது. அதோடு எந்த உச்சரிப்புப் பிழையும் இல்லாமல் ரம்மியமாக ஒலிக்கிறது.
S.P.ஷைலஜாவின் குரல் கணீரென்று ஒலிக்கும் குரல். குறிப்பாக உச்சஸ்தாயில் பளிச்சென்று ஒலிக்கக்கூடிய குரல். உச்சரிப்பும் சுத்தமாகவே இருக்கிறது. இசை, பாடல், நடனம், நடிப்பு என்று பலதுறைகளில் திறமையான இவர் ஏதோ காரணத்திற்காக முன்னேற முடியவில்லை. இவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை
1) சோலைக்குயிலே (பொண்ணு ஊருக்குப்புதுசு)
2) சின்னஞ்சிறு வயதில் (மீண்டும் கோகிலா)
3) மாமன் மச்சான்
மொத்தத்தில் எப்போது கேட்டாலும் சுகமாக இருக்கும் இந்தப்பாடல் நீண்ட நாள் நிலைக்கும்.

மீண்டும் வரும்  >>>>>>>>>>>>>>>>>>

1 comment:

  1. அருமையான பாடல்....அப்போது இந்தப் பாடலை பல முறைகள் சிலோன் வானொலியில் ஒலிபரப்பிக் கொண்டே இருப்பார்கள். அப்போதைய காலக்கட்டத்தில் இந்த சிலோன் வானொலி ஒன்றுதான் பொழுதுபோக்கு + அருமையான ஒலிபரப்புகள்...ரசித்த பாடல் பற்றி இங்குச் சொன்னது......."ஏதோ நினைவுகள் ..மனதிலே மலருதே...."

    ReplyDelete