Thursday, November 19, 2015

என் மனைவியின் நாய்க்குட்டி - பகுதி 2

man brushing puppy

அன்று மாலை அலுவலகம் முடித்து வீட்டினுள்ளே நுழைந்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வி, "ஜீனோ எங்கே ?”. என் மனைவி என்னைக்கடுப்புடன் முறைத்தாள். பின்ன இருக்காதா காலையில் 8 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, மாலையில் 7 மணிக்கு திரும்ப வரும்போது,  எனக்கு என்ன பிடிக்குமென்று பார்த்துப் பார்த்து சமையல் செய்து முடித்துவிட்டு வீட்டில் போரடித்துக் கொண்டு வெகுநேரம் காத்திருந்து கணவன் வந்தவுடன் நாய்க்குட்டியைக் கேட்டால் மனைவிக்கு எப்படி இருக்கும்.
வீட்டில் பொழுது போக்க டிவி கூட இல்லை. வீட்டில் போனும் இல்லை, செல்போனும் இல்லை நடுவில் பேசக்கூட முடியாது.
ஜீனோவை அங்குமிங்கும் தேடினேன். எங்கும் இல்லை. மறுபடியும் வந்து என் மனைவியைப் பார்த்துக் கேட்டேன் "ஜீனோ எங்கே, பக்கத்தில் வீட்டில் இருக்கிறதா?”. அவள் ஒன்னும் பதில் சொல்லவில்லை.
ஜீனோ எங்கே போயிருக்கும்? சொல்லப்போனால் என் மனைவி அதை எடுத்துக்கொண்டு வந்தாலும், அது என்னிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டது. அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்தால் மேலும் கீழும் தவ்வி காலில் முட்டி மோதி நக்கும். படுக்கும்போது கூட இப்போதெல்லாம் கால்மாட்டில் படுத்தாலும், சிறிது நேரம் கழித்து எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் வந்து படுத்துவிடும். சில நாள் தயங்கினாலும், இப்போது நானும் அதைக் கையில் எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.
வீடே வெறிச்சென்றிருந்தது.  பக்கத்து வீட்டு அக்காவிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னார்கள். "ரூத் உங்கள்ட்ட சொல்லலியா, அந்த நாயைக் கொண்டு போய் பக்கத்து பார்க்கில விட்டுட்டு வந்துருச்சு" எனக்குக் கோபம் வர, வீட்டுக்கு வந்து, "ஏன்  குழந்தையைக் கொண்டுபோய் தெருவில விட்ட ?" என்று கேட்டேன்.

"ஆமா பொல்லாக் குழ்ந்தை, நாயைப்போய் குழந்தைன்னு சொல்லிட்டு"
"நான் வேணான்னுதான்னே சொன்னேன் நீதானே எடுத்துட்டு வந்த"
"ஆமா நாந்தான் எடுத்துட்டு வந்தேன். அதனால நானே கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டேன்".
" ஏன் என்ட்ட ஒரு வார்த்தை சொல்லலை ?"
"என்ன இது கொடுமையா இருக்கு, தெரு நாய்தானே அதான் தெருவில விட்டுட்டு வந்துட்டேன்"
"அதான் ஏன்னு கேக்கிறேன்"?
"அது அங்கங்க உச்சா போவுது, பேண்டு வைக்குது அதெல்லாம் யார் சுத்தம் செய்றது, நீங்க காலைல போனா சாயந்திரம்தா வர்றீங்க".
அவ சொல்றது உண்மைதான், அதைக் கொஞ்சம் பழக்கனும்.   ஆஃபிசில கூட இதைப்பத்தி மேடம்கிட்ட பேசினேன். அதைப்பழக்கறதுக்கு ஆள் இருக்கிறதைப் பத்தியும், புளுகிராஸ் அமைப்பு உதவி பண்ணுவதையும் பற்றி நிறைய தகவல்கள் சொன்னாங்க. அவங்க கிட்ட ஒரு டாபர்மேன் இருக்குது.
"அத வாக்கிங் கூப்பிட்டுப்போய் பழகனும்"
"அதெல்லாம் என்னால முடியாது"
"அப்ப எடுத்த இடத்திலேயே கொண்டுபோய் விட்டுருக்கலாம்ல"
பேசிக் கொண்டு இருக்கும்போது, கதவருகில் லேசாக முனகல் சத்தம் கேட்டது. ஓடிப்போய் திறந்தால் ஜீனோ. என்னைப்பார்த்ததும் காலில் விழுந்து குட்டிகரணம் போட்டு ஏற முயற்சி செய்தது. என் மனைவியைக் கண்டு கொள்ளவில்லை. என் மனைவி அதீத வெறுப்புடன் பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். என் பேண்ட் எல்லாம் சேறு ஆகிவிட்டதைக் கூட கண்டு கொள்ளாமல், அதனை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் போய் குளிப்பாட்டினேன். ஒரு நாயைக் குளிப்பாட்டியது அதுவே எனக்கு முதல் முறையும் கடைசி முறையாகவும் இருந்தது.
பசியால் துடித்துக் கொண்டிருந்த ஜீனோக்கு பாலை ஊட்டிவிட்டேன். என்ன இது, எப்படி இவள் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல் ஒரு சிறு குட்டியைத் தெருவில் கொண்டுபோய் விடுவாள். அவளைப்பற்றிச் சரியாகத் தெரியாமல் அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன்.
என் மனைவி பெட்ரூமை விட்டு வரவில்லை. நானும் கண்டுகொள்ளாமல் ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். 9 மணிக்கு பசியெடுத்து, என் மனைவியை ஓரிரு முறை கூப்பிட்டுப் பார்த்தேன். ம்ஹீம் வருவதாகத் தெரியவில்லை. பேசாமல் நானே சாப்பாட்டை எடுத்து, வைத்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சோஃபாவில் உட்கார்ந்தேன். எனக்குப்பிடித்த வெஜிடபிள் புலாவும், குருமாவும், முட்டைப் பொரியலும் இருந்தது. அதுதவிர வெள்ளை சாதமும், அவளுடைய சிக்நேச்சர் ரசமும் இருந்தன. நல்ல பசியில் ஒரு பிடிபிடித்து விட்டேன். பாவம் எனக்காக பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாள்.
ஜீனோ ஒரு பந்தை உருட்டி விளையாடுவதும் பின்னர் என் மேல் வந்து உரசுவதுமாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது.
மணி பத்தானது என் மனைவி வெளியே வருவது போல் தெரியவில்லை.
நான் உள்ளே போய் எழுப்பினேன். அவள் தூங்கியிருக்கவில்லை. ஆனால் லேசாக விசும்பிக் கொண்டு இருந்தாள். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன்.
அப்புறம் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. என்னை நம்பி வந்த சின்னப் பெண், எப்படி பட்டினியாய் விடமுடியும்.
பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கிவிட்டாள். எனக்கு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். காலடியில் ஜீனோ. கடைசியாக ஒரு முடிவெடுத்த பின் நல்ல தூக்கம் வந்தது.
காலையில் நான் எழுந்தபோது, சமையலறையில் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. என் மனைவி எனக்கு முன் எழுந்து அரைத்துக்  கொண்டிருக்கும் வெங்காய சட்னி  மணம் காற்றில் வந்தது.
நான் மடமடவென்று ரெடியாகி, ஜீனோவை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்று அந்தப் பெட்டிக் கடைப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு  விட்டு வந்தேன். ஒரு வாரம் மனதை ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது .அதன் பின் ஜீனோவைப் பார்க்கவேயில்லை. அதன்பின் எனக்கு ரெண்டு பெண்குழந்தைகள் பிறந்தும் என் மனைவி முன்னால் அவர்களை அதிகம் கொஞ்சுவதில்லை.
முற்றும்


6 comments:

  1. நாசமா போன உலகம் அண்ணே. ஒரு நாய்க்குட்டி வளக்குரதுல இருந்து நாசா போற வரைக்கும் ஒரு ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை..

    ReplyDelete
  2. நாசா போறதை விடு முதல மூச்சா போகமுடியுமா தனியா தம்பி ?

    ReplyDelete
  3. இப்படி செய்து விட்டீர்களே...

    ReplyDelete
  4. அடடா.... நல்ல வேளை எடுத்த இடத்திலேயே விட்டு விட்டீர்கள்..... நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பதற்கு நிறையவே பொறுமை வேண்டும்....

    ReplyDelete
  5. நானும் ஒரு நாய் வளக்கலாமின்னு கேட்டேங்க....
    ஒரு வீட்ல எதுக்கு ரெண்டு நாய்ன்னு சொல்லிட்டாங்க...இபா பாருங்க நீங்க எவ்ளோ பரவாயில்லன்னு....
    விடுங்க வீட்டுக்கு வீடு....

    ReplyDelete
    Replies
    1. இது கொஞ்சம் டூ மச் செல்வா ஹா ஹா ஹா

      Delete