Tuesday, August 25, 2015

வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!!


'டேய் முருகா அழுவாதரா' என்று நான் சொல்லி எவ்வளவு தேத்தியும் முருகன் அழுவறத நிறுத்தல. தேம்பி தேம்பி விசும்பி விசும்பி ரொம்ப அழுதுட்டான். பக்கத்துல இருந்த மகேந்திரனும் சொல்லிப் பார்த்தான். ம்ஹீம் முருகன் அழுவறத நிறுத்தவேயில்லை.
ஆனா அவன் பக்கமிருந்து யோசிச்சா, அவன் அழுவறதுல ஒரு நியாயம் இருக்குன்னுதான் சொல்வேன். தன் சொந்த அப்பா வேற ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிச்சா எந்த மகனுக்குத்தான் கோபம் வராது ?. சின்ன வயசுப் பசங்களான எங்களுக்கு கோபம் வந்தா அழறதத்தவிர வேறென்ன செய்ய முடியும். கொஞ்சம் இருங்க என்ன நடந்ததுன்னு சொல்றேன். முப்பது வருஷம் முன்னால நடந்ததுன்னாலும்,இப்ப நினைச்சாலும் அப்படியே ஞாபகத்தில் இருக்குது.

எங்கூர் தேவதானப்பட்டி, கிருஷ்ணஜெயந்தி திருவிழாவுக்கு களை கட்டியிருந்துச்சு. ஏழு நாளுக்கு முன்னால பந்தல் கால் நட்டதிலிருந்து நாங்க அதுக்கு ரெடியாக ஆரம்பிச்சுடுவோம். எங்க பள்ளிக்கூடத்துக்கு  அந்த திருவிழா நடக்குற மூணு நாள் லீவு விட்டுருவாங்க. சனி ஞாயிறு சேர்த்து மொத்தம் அஞ்சு நாள் லீவு வந்துரும். மத்த பள்ளிக்கூடம்லாம் லீவு கிடையாது. எங்களுக்கு மட்டும்தான் லீவு. ஏன்னா எங்க பள்ளிக்கூட முகப்புதான் கோவில் ஆயிரும். கிருஷ்ணருக்கு தனியா கோவில் எதுவுமில்லை. எங்க இந்து நடுநிலைப்பள்ளி, போடி ஜமீந்தார்  மாளிகையிலதான் நடந்து வந்துச்சு. போடி ஜமீந்தார் மாளிகை, எங்க ஊர் பிள்ளைமார் சங்கப் பொறுப்பில இருந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் பிள்ளைமார் சங்கம்தான் கிருஷ்ணஜெயந்தி விழாவை நடத்துவாங்க.

பள்ளிக்கூட முன்னாடி உள்ள மைதானத்துல முழுசா பந்தல் போட்டு ஒரு திடீர் கோவில் உருவாகும். பள்ளிக்கூடம் உள்ளே இருக்கிற ஒரு இருட்டு ரூம்ல ஒரு பெரிய தகர டிரம்மில் நிறைய எண்ணெயை ஊத்தி, அதுக்குள்ள கிருஷ்ணரோட ஐம்பொன் விக்கிரகத்தை வச்சிருப்பாங்க. முன்னாடி கோவில் மண்டபம் ரெடியானவுடன், நல்ல நேரம் பார்த்து விக்கிரகத்தை எடுத்து நகையலங்காரம் செஞ்சு, பிரதிஸ்டை பண்ணவாங்க கிருஷ்ணன் அலங்காரத்தில் கொள்ளை அழகா இருப்பாரு. அவரு உதட்டோரத்துல ஒரு சின்ன குறும்புப் புன்னகை இருக்கும் பாருங்க அதை எப்படித்தான் வடித்தார்களோன்னு பிரமிப்பா இருக்கும்.
முத நாள் திருவிழாவில தன்னோட மயில் வாகனத்துல உலா வருவாரு. 2வது நாளும் அப்படியே. மூனாவது நாள் டெய்லர் சங்கம் ஜோடிக்கும் பூப்பல்லக்கில் வருவாரு. இதுல அதிசயம் என்னன்னா இந்த டெய்லர் சங்கத்தில நிறைய முஸ்லீம் சகோதரர்களும் இருந்தாங்க. அவங்கள்லாம் வந்து உதிரி செவ்வந்திப் பூவை கிழங்கு மாவில் பசை கிண்டி பல்லக்கு முழுசும் ஒட்டுவாங்க. வெளியே வரும்போது ராத்திரி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில தங்கப்பல்லக்கு மாறி ஜொலிக்கும். அதைக்கா கண்கோடி வேணும். கிருஷ்ணருக்கு மூலவரும் உற்சவரும் ஒரே விக்ரகம்தான்.  

NVS  பட்டணம்பொடி கடைக்காரரும் TAS ரத்தினம் பட்டணம்பொடி கடைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு அலங்காரம் செய்வாங்க. ரெண்டுபேரும் பிள்ளைமார் சமூகம்தான். அதுல திருவிழாவுக்கு ரெண்டு நாள் முன்னால TAS கடைக்காரர் ஒரு பெரிய பொம்மையைக் கொண்டுவந்துருவாரு. ஒரு பெரிய உரலில் பொடியை அரைப்பது போன்ற பெரிய மீசை வச்ச பொம்மை. இதில அதிசயம் என்னன்னா, பொம்மை மின்சாரத்துல இயங்கும். தலையை ஆட்டும், கண்களை உருட்டும் கைகளால் உலக்கையை வைத்து ஆட்டும். அந்தக் காலத்தில அது எங்களுக்கெல்லாம் பெரிய அதிசயமாயிருக்கும்.
மண்டபம் மட்டுமில்லாம, தெருவெல்லாம் கொட்டகை போட்டு குழல்விளக்கு சீரியல் செட் போட்டு சூப்பரா இருக்கும். காலைல 6 மணியிலிருந்து ராத்திரி 11 வரை குழாய்கள் மூலை மூலைக்கு கட்டப்பட்டு பாட்டுகள் அதிரடியாக இருக்கும். சாஸ்திரத்துக்கு ரெண்டு மூணு சாமி பாட்டு போட்டுட்டு அப்புறம் முச்சூடும் சினிமாப் பாட்டுத்தான்.
2ஆவது நாள் திருவிழாவில நாடகம் நடக்கும். 3ஆவது நாள் வழுக்கு மரம் உரியடியோட திருவிழா முடிஞ்சிடும். ஆரம்பத்துல மதுரையிலிருந்து நாடகக்கம்பெனிகள் வந்து வள்ளிதிருமணம் போன்ற நாடகங்கள் நடக்கும். பள்ளிக்கூடத்து முன்னால ஒரு பெரிய பள்ளம் தோண்டி அந்த மண்ணை வச்சே பெரிய மேடை போட்டுருவாங்க.
எங்க பள்ளிக்கூடத்துல எங்க தமிழ் வாத்தியார் பேரு புலவர் தேவகுரு. எனக்கு தமிழ்ல நல்ல ஆர்வம் வந்ததுக்கு அவர் ஒரு முக்கிய காரணம். 'மானங்காத்த மன்னர்கள்னு' அவர் எழுதிய புத்தகம் ஒண்ணு ரொம்ப சூப்பரா இருக்கும். ஓரங்க நாடகங்களின் தொகுப்பு.
அதுக்கப்புறம் பிள்ளைமார் சங்கத்திலிருந்து ஒரு ஐடியா பண்ணி, தேவகுரு ஐயாட்ட சொன்னாங்க, நீங்களே நாடகம் எழுதினா என்னன்னு?. அப்புறம் வருஷாவருஷம் அவர்தான் சமூக நாடகங்கள் எழுதுவாரு. ஊரில நடிப்பு ஆசையோட  இருந்த நிறையபேர் அதுல நடிப்பாங்க. பெண் கதாபாத்திரங்களை மட்டும் மதுரையிலிருந்து வரவழைப்பாங்க. ஒரு மாச முன்னால பயிற்சி ஆரம்பிச்சுரும். ஆனா கதாநாயகி மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டும் ஒரு நாள் முன்னாடி வந்து பயிற்சி பண்ணிட்டு திறமையா நடிப்பாங்க. நாடகத்து சீன் செட்டிங்குகள், லைட்டுகள் இசைக்கருவி வாசிப்பவங்க எல்லாம் ஒரு நாள் முன்னாடி வந்து ஸ்கூல்ல தங்கி பயிற்சி செய்வாங்க. நாங்கெல்லாம் வாத்தியார் புள்ளைங்கனால எப்படியாவது உள்ளே போயிருவோம் . கதாநாயகிகளைப்பாக்க ஜன்னல் பூரா மூஞ்சியாய் தெரியும்.
நாடம் ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சுச்சு.
முதல்ல கோமாளி வந்து பாட்டுப் பாடுனான்.  

வாங்க இருங்க உட்காருங்க
வந்த காலில நிக்காதீங்க
வம்பு வழக்கு பேசாதீங்க - இப்படிப்போகும் அந்தப் பாடல்.
 நானு, மகேந்திரன், முருகன், சிராஜ்னு எங்க கூட்டாளிக எல்லாரும் முன்னாடி உட்கார்ந்திருந்தோம். அப்புறம் கதாநாயகி அறிமுகத்தில "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கென்ன சொந்த வீடு" - அப்படின்னு பாட்டுக்கு வாயசைச்சு ஆடிக்கிட்டு வந்த கதாநாயகி ஒல்லியா சிவப்பா ரொம்ப அழகா இருந்துச்சு. பாட்டும் இசையும் நடனமும் சூப்பர்.
அதுல கதாநாயகன் யாருன்னா நம்ம இந்திரன் வாத்தியார்தான். மேக்கப் போட்டு மேடையில வந்தாரு அடையாளமே தெரியல, சும்மா கைதட்டும் விசிலும் பறந்துச்சு. முருகனோட அப்பாதான் அவர். இந்திரன் வாத்தியார் எங்க ஸ்கூல்ல ரொம்ப ஃபேமசு. சிவப்பா, உயரமா பார்க்க ஒரு ஹீரோ மாதிரி இருப்பார். அவர்தான் எங்க ஸ்கூலுக்கு ஸ்கவுட் மாஸ்டர் வேற. அந்த யூனிஃபார்ம்  போட்டு அவர் டிரில் பண்ணும் போது கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
முருகனுக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. அவனுக்கு பெருமை தாங்கல. அப்புறம் கதை சுவாரஸ்யமா போச்சு. கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் முதலில் வழக்கம் போல் சண்டை வந்து அப்புறம் காதல் வந்துச்சு.  இந்திர வாத்தியார் உள்ளே வந்து கதாநாயகியைக் கையைப்பிடித்து இழுக்க, கதாநாயகி வெட்கப்பட பாட்டு ஆரம்பிச்சுச்சு. "வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே, மாயமெல்லாம் நான் அறிவேனே, வா வா ஓடிவா", இருவரும் ஓடிப்பிடித்து பாடி ஆட, முருகன் லைட்டாய் அழ ஆரம்பித்தான். எங்களுக்கும் கொஞ்சம் திக்குன்னு இருந்துச்சு. வேகம் கூட கூட, ஒரு கட்டத்துல ந்திர வாத்தியார் கதாநாயகியை அலேக்கா தூக்கிவிட, எங்க முருகனுக்கும் வேகம் கூடி ஓன்னு அழுதான். எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல, சார் உங்க மகன் அழுறான்னு இந்திரன் சாரைக் கூப்பிடலாம்னு ஆயிருச்சு. அப்புறம் அவனைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு நாங்களும் வீட்டுக்குப் போனோம். ஏன்னா   எங்களுக்கும் ரொம்ப கோபம் வந்துரிச்சு. வாத்தியார் அப்படி செஞ்சது தப்புன்னு நினைச்சோம்.

 அதெல்லாம் வெறும் நடிப்புனு அப்ப எங்களுக்குத் தெரியாத வயசு. இப்ப நினைச்சா சிரிப்புதான் வருது . ஆனா இந்திரன் வாத்தியார் மட்டும் சினிமாவில் நடிக்க வந்திருந்தார்னா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுருப்பாரு.

முற்றும்

6 comments:

  1. ஏன் அண்ணே.. இதுக்கு போயா "விசு"ம்பி "விசு"ம்பி அழுவீங்க...

    ReplyDelete
    Replies
    1. யோவ் விசு குசும்பு குசும்பு , முருகன் என்ன என் போன பிறவி பெயரா ?

      Delete
  2. Replies
    1. அழகு, பார்க்கும் படிக்கும் கண்களிலும் இருக்கிறது ஆரூர் பாஸ்கர்.

      Delete
  3. very very super sekar palaya natkal en kan munnadi vanthuruchu antha photos epdi kidachathu it is unbelievable

    ReplyDelete