ஒரு பையன் (?)
பக்கத்தில் உட்காரும் கூச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தாள்
நீ.தே.எனக்குத்தான் கூச்சமாக இருந்தது. புருவங்களை உயர்த்தி புன்னகை புரிந்ததற்கு
பதில் புன்னகை கூட சரியாக வரவில்லை எனக்கு. இந்த நேரம் பார்த்து ஜெர்மன் வரலாறு
ஒன்றும் ஞாபகம் வரவில்லை. இங்கிலாந்து
வரலாறு என்றால் இன்றைய நாள் முழுதும் பேசுவேன். ஹிட்லர் பற்றிப் பேசினால் அது
நெகடிவ்வாகப் போய்விடும். ஆ ஞாபகம் வந்துவிட்டது. மெக்ஸிகோவை ஆண்ட ஆஸ்திரியாவைச் சேர்ந்த பேரரசர்
மேக்சிமிலியன் ஜெர்மனியின் அரச வம்சத்தில்தானே பெண் எடுத்திருந்தார். அதைப்பற்றிப்
பேசலாமா? இல்லை கிழக்கு மேற்கு ஜெர்மன் பிரிவு அல்லது
இணைப்பு. இடிந்து விழுந்த ஜெர்மன் சுவர் ஆகியவை பற்றிப் பேசலாமா? என்று நினைத்தபோது ஒரு சத்தம் கேட்டது, "ஏலே
சேகரு ஏண்டா இப்படி மொக்கைத்தனமா யோசிக்கிற வேறெதாவது பேசு", என்று. வேற யாரு என் மனசு தான்.
"நிகழ்கால வரலாறு ஒன்றும்
எனக்குத் தெரியாதே"
“ஏண்டா இப்படி வரலாறு வரலாறுன்னு
அலையுற,
வேறேதுமே உனக்குப் பேசத்தெரியாதா?".
சரி இஸ்தான்புல்லைப்பற்றியே
பேசுவோமே என்று நினைத்துக் கொண்டே, "ஹாய்' என்றேன். அவளும் “ஹாய்” என்றாள்.
அதற்குள் ஜெர்மன் மொழியில் ஒருவர் பேசத்துவங்க, அப்போதுதான்
கவனித்தேன். ஒரு நடுத்தர வயதானவர் புதிதாக வந்திருக்கிறார். அப்புறம்தான் ஓஸ்
சொன்னான், அவர் ஜெர்மன் தெரிந்த கைடு, கேம்லிக்காவில் வந்துதான் ஜாயின் பண்ணார் என. அப்போதுதான் எனக்கு
விளங்கியது, அவருக்கு இடம்விட்டுத்தான் நீ.தே என்
பக்கத்தில் உட்கார்ந்தாள் என. அவர் தொணத்தொனவென்று பேசி முடிப்பதற்குள் அடுத்த
ஸ்டாப் வந்துவிட்டது.
ஒரு மணி நேரத்தில் 'ஹாய்' என்பதைத்தவிர ஒன்றும் பேசவில்லையே என
வருத்தத்துடன் கீழிறங்கினேன். இதுதான் "தங்கக்கொம்பு" என்றான் ஓஸ். தங்கப்பெண்
இறங்கிவிட்டதால் , தங்கக்கொம்பாவது பார்ப்போம்
என நினைத்துக்கொண்டேன்.
தங்கக்
கொம்பு (Golden Horn)
Golden Horn |
“கோல்டன் ஹார்ன்” என்பது இயற்கையில்
அமைந்த ஒரு துறைமுகம். பாஸ் ஃபரஸையும் மர்மரா கடலையும்
இணைக்கும் இடம் ஒரு தீபகற்பம் போல வளைந்து
இருக்கிறது. இந்த இடம் ஒரு கொம்பு போன்ற உருவத்தில் இருப்பதால், இந்தப்பெயர்
வந்திருக்கிறது. இந்த இடம் பழைய இஸ்தான்புல்லின் வரலாற்று இடத்திலிருந்து
இஸ்தான்புல்லின் மற்ற நகர்ப்புற பகுதிகளை இணைக்கிறது. இந்த கடல் வழிப்பாதையின்
இணைப்புதான், ஆயிரம் வருடங்களுக்கு மேலாக,
கிரேக்க, ரோம பைஜான்டியம் மற்றும் ஆட்டமன் பேரரசுகளின் வணிகக் கப்பல்களை பாதுகாத்ததாம்.
இந்த இடத்தில்தான் அலிபேகாய் (Alibeykoy)
மற்றும் (Kagithane) காகிதானே என்னும்
இரு ஆறுகள் கடலில் இணைகின்றன. கோல்டன் ஹார்ன், ஏழரை கிலோமீட்டர் நீளமும் 750மீட்டர்
அகலமும் 35 மீட்டர் ஆழமும் கொண்டது. தற்போது இதில் நான்கு பாலங்கள் இருக்கின்றன.
அவை ஹேலிக் பாலம், பழைய லாடா பாலம், அத்தாதுர்க் பாலம் மற்றும் புதிய கலாடா பாலம்.
சமீபத்தில் கட்டப்பட்ட ஐந்தாவது
பாலம் மெட்ரோவை இணைக்கிறது.
ஏற்கனவே சொன்னபடி ஆயிரம் வருடங்களாக
இருக்கும் இந்த துறைமுகம் பைஜான்டிய பேரரசின் கடற்படையின் தலைமையிடமாக விளங்கியது.
பிற நாடுகளின் கடற்படை தாக்காமலிருக்க இதன் கரைப் பகுதிகளில் சுவர்
எழுப்பப்பட்டது. வேறெந்த அந்நியக் கப்பல்கள் இப்பகுதியில் நுழைந்து விடாமலிருக்க,
பழைய கலாடா பாலத்திற்கும், கான்ஸ்டான்டி
நோபில் நகரத்திற்கும் இணைப்பாக ஒரு பெரிய சங்கிலி கட்டப்பட்டது. கி.பி.1204-ல் நான்காவது சிலுவைப்போர்
நடக்கும்போது லத்தீன் படையால் இந்த கலாடா பாலம் அழிக்கப்பட்டது. ஆனால் 1348ல் ஜெனோசே காலத்தில் இது மீண்டும் கட்டப்பட்டு "கிறிஸ்துவின்
கோபுரம்" (Tower of Christ) என்று பெயரிடப்பட்டது.
மேலும் பலதடவை இந்த இடத்தில் சண்டை நடந்ததாம்.
கி.பி.1453ல் சுல்தான் மெஹ்மது II இந்த இடத்தைப்
பிடித்தபிறகு அங்கு வாழ்ந்து இடம்
பெயர்ந்த கிரேக்கர்களை மறுகுடியேற்றம் செய்தார். பாலட் என்ற
பகுதியில் பைஜான்டியம் காலத்திலிருந்து யூதர் வாழ்ந்து வந்தனர். சுல்தானின்
ஆக்ரமிப்புக்குப் பின்னர் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்தனர். ஆனால்
ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டபோது, சுல்தான்
பேயஜிட் II அவர்களுக்கு மீண்டும் அடைக்கலம் கொடுத்து இதே
பகுதியில் குடியேற்றம் செய்தார்.
இப்போது இருபுறமும் பூங்காக்கள்
அமைக்கப்பட்டு இருக்கிறது. இஸ்தான்புல்லின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இங்கு
இருக்கிறது. அதோடு பழைய கால முஸ்லிம், யூத மற்றும் கிறிஸ்தவ கல்லறைகளும் இங்கு இருக்கின்றன.
அதை முடித்துவிட்டு மீண்டும் வேனில்
ஏறினோம். இந்தச் சமயத்திலாவது எப்படியாவது நீ. தே விடம் பேசிவிட வேண்டும் என
நினைத்தேன். வேகமாக உள்ளே போய் ஏற என் பின்னால் வந்த ஓஸ் என்னருகே அமர்ந்தான்.
நானும் ஒண்ணும் சொல்ல முடியவில்லை. இப்போது ஓஸ் எனக்கு
மட்டுமே கைட் என்பதால் என் பக்கத்தில் வந்து உட்கார நீ.தே முன்புறம் சென்று புறமுதுகு
காட்டி உட்கார்ந்து விட்டாள்.ஆனால் இப்போது எனக்கென்று தனிப்பட்ட
ஒரு கைட் இருக்கிறான் என நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன்.
மதிய உணவை முடித்துவிட்டு வேனுக்கு
வர நீ. தே உள்பட்ட ஜெர்மன் குழுவைக் காணவில்லை. சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள்
என வருத்தமாய் இருந்தது.
Spice bazaar Bulding |
ஆனால் புதிதாக வயதான ஒரு
தம்பதியினர் வந்தனர், இங்கிலாந்திலிருந்து. யாருக்கு வேணும்.
மதியம் முதல் ஸ்டாப்பாக நாங்கள் சென்றது
எகிப்திய மார்க்கெட் என்று அழைக்கப்படும் “ஸ்பைஸ் பஜார்”. ஃபதிஹ் மாவட்டத்தில்
இருக்கும் இந்த மார்க்கெட் இஸ்தான்புல்லின் இரண்டாவது பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். முதலாவது பெரிய கிராண்ட் பஜாரைப்பற்றி நாம் ஏற்கனவே
பார்த்துவிட்டோம்.
இதன் பக்கத்தில் உள்ள
"நியூமாஸ்க்"கின் பெயரோடு இணைத்து முதலில் இது "நியூ பஜார்"
என்றழைக்கப்பட்டது. ஆட்டமன் அரசின் ஒரு அங்கமாக இருந்த எகிப்திலிருந்து வந்த
வருமானத்திலிருந்து கட்டப்பட்டதால் பின்னர் இது எகிப்திய "பஜார்"
என்றும் அழைக்கப்பட்டது.
சுல்தான் மெஹ்மது IV |
சுல்தான் மெஹ்மது IV
வின் தாயார் வாலிட் சுல்தான் சுல்தானா டர்ஹான் ஹேடிஸ் அவர்களின்
ஆணைப்படி 1660-ல் ஆரம்பித்து 1665-ல் கட்டி முடிக்கப்பட்டது இந்த
பஜார். அதிக கடைகளில் மசாலா சாமான்கள் விற்கப்படுவதால் ஸ்பைஸ் பஜார்
என்றழைக்கப்படும் இதில் இப்போது மொத்தம் 85 கடைகள்
இருக்கின்றன. மசாலா மணம் மூக்கைத்துளைக்கிறது வாருங்கள் உள்ளே
போய்ப்பார்க்கலாம்.
தொடரும்
>>>>>>>>>>>>>>>
விரைவில் எதிர்பாருங்கள் "எழுபதுகளில் இளையராஜா" என்ற புதிய தொடர் .
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் தொடர் படிக்கிறேன். மற்ற பகுதிகளையும் படிக்க வேண்டும்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி , வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ், வருகை தொடரும் என நம்புகிறேன்
ReplyDelete