Thursday, September 11, 2014

திகிலூட்டும் செப்டம்பர் 11

    The Day of the Siege: September Eleven 1683 Poster

தி டே ஆஃப் தி சீஜ் (The Day of the Siege)

          நியூயார்க் நகரில்  செப்டம்பர் 11, 2001 -ல்  நடந்த சோக நிகழ்வை தியாகத் திருநாளாக (Patriot day) நினைவு கூறும் நாளில் செப்டம்பர் 11, 1683-ல் உலகை புரட்டிப்போட   நடந்த படையெடுப்பைப்பற்றிய படம் பற்றி இங்கே எழுதுகிறேன்.
அக்டோபர், 2012-ல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் சமீபத்தில் நெட்ஃபிலிக்சில் காணக்கிடைத்தது. ஆட்டமன் பேரரசு சம்பந்தப்பட்ட படம் என்றதும் உடனே வேர்க்கடலை, உப்புக்கடலை மற்றும் பட்டாணி சகிதம் ரெடியானேன்.
தூரக்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள், தெற்காசிய நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி ஆட்டமன் பேரரசு பரந்து விரிந்து கொண்டிருந்த நேரம்.

Battle of Vienna 
சுல்தானின் அரசு ஐரோப்பியா முழுவதுமாக பிடித்து இஸ்லாமிய உலகை விரிவடையத்துடித்துக் கொண்டிருந்தது. போப் தலைமையில் இருந்த ஐரோப்பியக் கத்தோலிக்க நாடுகள் தங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து ஆட்டமன் அரசின் நாடு பிடிக்கும் பேராசையை தடுத்த வண்ணம் இருந்தனர்.
'தங்க ஆப்பிள்' என்று அழைக்கப்படும் வியன்னாவைக் கைப்பற்றினால் அப்படியே உள்ளே நுழைந்து, இத்தாலி மற்றும் ரோமை பிடித்து விடலாம். பின்னர் வாடிகனில் நுழைந்து அங்குள்ள புனித பீட்டர் பேராலயத்தை,முஸ்லிம் மாஸ்க்காக ஆக்கிவிடலாம் என்ற கனவுடன் சுல்தானின் உத்தரவோடு சபதம் செய்து கிளம்பினான் கரா முஸ்தஃபா. இவன்தான் சுல்தானின் அப்போதைய பிரதம மந்திரி (Grand Vizier). சுமார் 3 லட்சம் படைகள் இவனுடன் சென்றதாம்.  
Kara Mustafa Pasha 
ஏற்கனவே ஒரு முறை முயன்று  தோல்வியடைந்து, அமைதி ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது. இந்தத்தடவை அதனை மீறி இரண்டாவது படையெடுப்பாக கடலைப்போன்ற பெரும் படையுடன் வியன்னா இரண்டாம் முறையாக முற்றுகையிடப்பட்டது.
Vienna Fortress
வியன்னாவின் பலமிகு கோட்டையைக் காவல் காக்க வெறும் 15 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருக்க, பயந்து போன வியன்னாவின் மன்னரும் அவர் குடும்பமும் ரகசியமாக வெளியேறுகின்றனர்.
King John Sobiesky
ஆனால் வாடிகனின் ஆணைப்படி பல அண்டை நாட்டுப் படைகள் ஐரோப்பியாவின் நுழைவாயிலான வியன்னாவைக் காக்க விரைந்தன. அதில் முன்னதாக வந்து சேர்ந்தது, அரசர் மூன்றாவது ஜான் சோபியஸ்கி தலைமையில் வந்த போலந்து படைகள். எல்லோரையும் ஒன்று சேர்த்தாலும் 80 ஆயிரத்தைத் தாண்டாத படை, மூன்று லட்சம் படைவீரர்களைக் கொண்ட ஆட்டமன் படைகளை எப்படி முறியடித்தன என்பதே இதன் மையக்கதை.
இதில் மார்க்கோ என்ற ஒரு கத்தோலிக்க துறவி எப்படி கிரியா ஊக்கியாக இருந்தார் என்பதும் ஆச்சரிய வரலாறு. 1683ல் மட்டும் 'கரா முஸ்தபா' இந்தப்போரில் ஜெயித்திருந்தால் ஐரோப்பியக் கிறிஸ்தவ வரலாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். செப்டம்பர் 11ஆம் தேதி இது நடந்தது என்பது ஒரு அதிசய ஒத்த நிகழ்வா அல்லது வேணுமென்றே இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பது அல்கைடாவுக்குத்தான் வெளிச்சம்.
படமெடுக்க முடிவு செய்து, மொத்த பட்ஜெட்டான 13 மில்லியன் டாலரைத்திரட்ட 10 வருடம் பிடித்ததாம். அதன் பின்னர் 13 வாரத்தில் 10 ஆயிரம் நடிகர்கள் மற்றும் 3000 குதிரைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலும் போலந்தில் நடந்தது.

Murray Abraham
இயக்கியவர் ரென்ஜோ மார்டிநெலி (Renzo Martinelli). கதாபாத்திரங்களான கத்தோலிக்க பாதிரியாக முரே ஆப்ரகாம் (Murray Abraham), கரா முஸ்தஃபாவாக நடித்த என்ரிகோ லோ வெர்சோ (Enrico Lo Verso) ஆகியோரின் உயிர்த்துடிப்பான நடிப்பில் தான் படம் நகர்கிறது.
Enrico Lo Verso
சோபியஸ்கி என்ற போலந்து மன்னனாக நடித்த ஜெர்சி ஸ்கோவிமோவ்ஸ்கி (Jerzy skolimowski: பேரில் உள்ள ஒற்றுமையைக் கவனிக்கவும்) நன்றாக நடித்திருந்தார்.

ஆட்டமன் பேரரசின் காலத்தில் நடந்த ஐரோப்பிய படையெடுப்புகளைப் பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் இதைப் பார்த்து மகிழலாம்.  

4 comments:

  1. பார்க்க முயற்சிக்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  2. பார்க்க முயல்கிறேன் நண்பரே..

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete