Monday, September 8, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி-17 துருக்கி மசாலாவும் யாளி வீடுகளும் !!!!!!!

Egyptian Spice Bazaar Istanbul Turkey
ஸ்பைஸ் பஜாரில் சில கடைகள், இஸ்தான்புல் நினைவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிப்போனாலும், பல கடைகள் பாரம்பரியமாக மசாலாப் பொருட்கள் விற்கும் கடைகளாக இருந்தன. ஓஸ் குறிப்பிட்ட ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான். முன்னரே சொல்லியிருப்பான் போல, அல்லது தினமும் நடக்கும் போல. எங்களை வாசலில் நின்று வரவேற்று அழைத்துச்சென்று கடைகளில் உள்ள மசாலாக்களை அறிமுகப்படுத்தினார்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு வேண்டுமென்றால் அது புதிதாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியில்லை என்று  நினைத்தேன். ஆனால் மல்லிப்பொடி மிளகாய்ப் பொடி தவிர மற்றவை என்னவென்றே தெரியவில்லை. எல்லாக் கலரிலும் பொடிகள்  இருந்தன. சிலவற்றை முகர்ந்து பார்க்கக் கொடுத்தான். நல்ல மணம் கொண்டு இருந்தன.

அது தவிர சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உலர்ந்த பழங்கள் இருந்தன. அதெல்லாம் தேநீர் வகைகள் என்று சொன்னார்கள். அதில் தெரிந்த தெரியாத பல வகைகள் தெரிந்தன. எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஆப்பிள் டி ஒரு கால் கிலோ வாங்கிக் கொண்டேன் ($10 டாலர்கள்). அதன் பின் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, சாப்பிடவும் சாம்பிள்கள் கொடுத்தனர். என் சர்க்கரை வியாதியை நொந்து கொண்டே ஜாக்கிரதையாக கையாண்டேன்.

குறிப்பாக 'டர்க்கி டிலைட்' என்று சொல்லப்பட்ட இனிப்பு வகைகள். விமானத்தில் கொடுத்ததாகச் சொன்னேனே, அதில் பல வகைகள் பல கலரில் இருந்தன. அது தவிர துருக்கியின் விசேஷமான இனிப்பு வகைகளான பாக்லவா என்ற ஒரு இனிப்பு ஒரு விள்ளலை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தால் அடிவயிறு தாண்டி உள்ளங்கால் வரை இனித்தது.
Turkish sweets
ஒவ்வொரு வகையிலும் சிறிய சிறிய பெட்டிகளை வாங்கிக் கொண்டேன். நியூயார்க் திரும்பினால் சிலருக்கு கொடுக்க வேண்டுமே.இறுதியில் ஒரு தேநீரும் கொடுத்தார்கள். சரியாகச் சாப்பிடாத லஞ்சுக்கு அது ஈடுகட்டியது.
அடுத்து பாஸ்ஃபரஸ் குருஸ் என்றான் ஓஸ், திரும்பவும் “பேஸிக்டஸ்” சென்று அங்கிருந்த படகில் ஏறினோம். இரண்டு அடுக்குகள் கொண்ட சுமார் 200 பேர் செல்லும் பெரிய படகு அது. அமெரிக்காவில் செல்வது போல் சேஃப்டி  அனொவ்ன்ஸ்மென்ட் ஒன்றும் இல்லை. படகு மெல்ல நகர்ந்தது.
பாஸ்ஃபரஸ் (Bosphorus) என்பது ஒரு strait. இது ஆசியப்பகுதியையும் ஐரோப்பியப் பகுதியையும் பிரிக்கும் ஒரு நீர்ப்பரப்பு. ஆளம் அவ்வளவு இருக்காது என்று நினைத்து ஓஸிடம் கேட்டால். இது குறைந்தது 43 அடி ஆழமும் அதிகபட்சம் 361அடி ஆழமும் உள்ள பகுதி என்றான். அய்யய்யோ, நம்ம அஞ்சரை அடி உடம்பு தவறி விழுந்தால் ஆறடி நிலம் கூட கிடைக்காம போய் ஜலசமாதிதான் என்று நினைத்து, ஓரத்தில் பிடித்த சீட்டை விட்டுக் கொடுத்தேன்.
இந்தக் கடல்வழிதான் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் செல்கிறது. எனவே இந்தப்பகுதிக்கு உரிமை கொண்டாடி சில கடற்போர்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக 1877-78ல் ரஷ்ய துருக்கிப் போர் (Russo-Turkish War) நடந்ததாம். அதன் பின்னர் 1915ல் நடந்த முதலாம் உலகப்போரில் நேசப்படைகள் இந்தவழிதான் நுழைந்தனவாம்.  

ஆனால் ஆட்டமன் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த 16 லிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை,  ரஷ்யக் கப்பல்கள் கறுப்புக் கடல் வரை இந்த வழியாக வர தடையும் இருந்தது. படகு நகர ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இடது புறம் ஒரு பிரம்மாண்டமான கட்டடம் வந்தது. இதுதான் "டால்மபாஷே அரண்மனை” என்றான். அப்ப நான் பார்த்தது வேறயா என்று குழம்பிய போதுதான் இது பக்கவாட்டுத்தோற்றம் என உணர்ந்தேன். முன்புறத்தை விட பக்கவாட்டுத்தோற்றம் மிகச் சிறப்பாகவும் கம்பீரமாகவும் இருந்தது.
அதன்பின் கரையோரத்தில்  நிறைய வீடுகள் தெரிந்தன. ஓஸ் சொன்னான், இவைகளின் பெயர் “யாளி" என்று. மொத்தம் 620 வீடுகள் இருக்கின்றன என்றும்   சொன்னான். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு வடிவங்கள் அமைப்பில் இருந்ததைப் பார்த்தேன். அது தவிர ஆட்டமன் பேரரசின் 11 அரண்மனைகளும் அங்கே இருக்கின்றன. மற்றும் இஸ்தான்புல்லின் பல முக்கிய கட்டடங்களும், பள்ளிவாசல்களும் தெரிந்தன. 
அப்போது பாஸ்ஃபரஸின் நடுவில் ஒரு சிறிய மணல் திட்டு வந்தது. அதனுள்ளே கலங்கரை விளக்கம் போல தெரிந்த ஒரு சிறிய டவர் இருந்தது. அது என்ன என்று ஓஸிடம் கேட்டேன். “பொறு சொல்கிறேன், அவசரப்படாதே”, என்று புன்சிரித்துவிட்டு சொல்ல ஆரம்பித்தான்.
அதன் பெயர் 'மெய்டன் டவர்' (The Maiden Tower) அதனை 'லியாண்டர் டவர்' (Leander's Tower) என்றும் அழைக்கிறார்கள். இது மிகப்பழையதாம்.

ஏதென்ஸ் நாட்டின் படைத்தளபதி தன்னுடைய கப்பற்படையின் வெற்றிக்குப் பின்னர், கறுப்புக் கடல் வழியாக வரும் பிறநாட்டு வணிகக் கப்பல்களுக்கு சுங்க வரி வசூலிக்கும் விதத்தில் இந்த இடத்தில் இந்த டவரைக்  கட்டினாராம்.  அதன் பின்னர் பைஜான்டிய பேரரசர் அலெக்ஸியஸ் காம்னேனஸ் 1110ல் இங்கே ஒரு மரக்கோபுரத்தை அமைத்து அதைச் சுற்றிலும் ஒரு கற்சுவரை எழுப்பினார். இதிலிருந்து ஐரோப்பிய பகுதியிலிருந்து மற்றொரு டவரை இணைத்து ஒரு பெரிய இரும்புச் சங்கிலி கட்டப்பட்டது. 1509ல் பூகம்பத்தால் ஒருமுறையும் 1721ல் நெருப்பினால் ஒருமுறையும் அழிந்து போன இந்த டவர் அதன் பின்னர் கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டது.
இப்போது இது ஒரு உணவகமாக மாற்றப்பட்டு மக்கள் படகு வழியாக இங்கு வந்து செல்கின்றனர்.
“ஆனால் இதனை எதற்கு மெய்டன் டவர் என்று அழைக்கிறார்கள்?”, என்று கேட்டதற்கு ஒரு கதை ஒன்று சொன்னான். அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.

அடுத்த வாரத்தில் இஸ்தான்புல் பயணக்கட்டுரை முடியும்.

விரைவில் எதிர்பாருங்கள் "எழுபதுகளில்  இளையராஜா" என்ற புதிய தொடர் .

6 comments:

  1. //அடிவயிறு தாண்டி உள்ளங்கால் வரை இனித்தது. //

    ஆஹா..... ப்டிக்கும் போதே எனக்கும் அச்சுவையை கற்பனையில் எண்ண வைக்கிறது!

    இனிய தொடர். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தரும் வெங்கட் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. அந்த காலத்திலேயே கடல்ல 'டோல் கேட் ' நடத்திருக்காங்க.. ஆச்சர்யம் தான் ...!

    ReplyDelete
    Replies
    1. துட்டு எந்த வழியிலாவது வரும்னா விடுவாங்களா. அதோட வேண்டாத விருந்தாளிகளையும் கட்டுப்படுத்தலாம்ல

      Delete
  3. ஹா ஹா ..உங்களால இப்போ 'ஆப்பிள் டீ' கான வேட்டைய ஆரம்பிச்சிட்டேன் ...!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் தேன் விட்டு சாப்பிட்டு பாருங்கள் தம்பி , அமிர்தம்

      Delete