கோடைவிழாவை குதூகல இசையுடன் கொண்டாட விரும்பி, நியூயார்க் தமிழ்ச்சங்கம் “சூப்பர் சிங்கர்ஸ்” இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது ஃப்ளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்ப்பிள் ஆடிட்டோரியத்தில், ஜீலை 12,2014 மாலையில் நடைபெற்றது .
இந்தத்தடவை வந்தது கடந்த சீசனில் முதலிடம் பெற்ற
திவாகர் மற்றும் டாப் 5ல் வந்த சோனியா. இவர்களோடு போன சீசனில் கனடாவிலிருந்து வந்து
கலந்து கொண்ட மகிஷாவும் வந்திருந்தார். பிரபு என்ற ஒருவரும் வந்திருந்தார்.
மூன்றரை மணிக்கு
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என்று போட்டிருந்ததால் பரதேசி 3 மணிக்கே ஆஜர். முன்னறையில்
நண்பர் ரங்கா, அண்ணன் ஆல்பர்ட் செல்லதுரை ஆடிட்டர் கீதா ஆகியோர் வரவேற்றனர் . உள்ளே சென்றவுடன்,
சில தாவணிக்கனவுகள் வழிகாட்டி உட்கார வைத்தனர். அரங்கு பாதியளவே நிரம்பியிருந்தது.
நியூஜெர்சியில் கார்த்திக் நிகழ்ச்சிக்கு அலைமோதிய கூட்டத்தைப் போல் இங்கில்லையே என்று
ஆதங்கம் இருந்தாலும், நியூஜெர்சியில் நம் தமிழர் ஜனத்தொகை அதிகமல்லவா என்று மனதைத்
தேற்றிக் கொண்டேன். மணி மூன்றரை போய் நாலும் கடந்தது.
போன சூப்பர்சிங்கர்
நிகழ்ச்சியில் சில எலக்ரானிக் தொழில் நுட்ப பிரச்சனைகள் இருந்தன. இப்போது அது இல்லை,ஆனாலும்
ஏன் தாமதம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
4.30 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது. திரும்பிப் பார்த்தால்
அரங்கு நிரம்பி, பால்கனியிலும் நிரம்பியிருந்தது. அப்போதுதான் எனக்கு காரணம் விளங்கியது.
3.30 மணியென்று
போட்டால் தான் ஒரு நாலரைக்காவது ஆரம்பித்துவிடலாம், நம் மக்கள் தாமதமாகத்தானே
வருகிறார்கள் என்று தமிழ்ச் சங்கத்தலைவர்கள் நினைத்திருக்கலாம்.
ஆனால், நியூயார்க்
தமிழ்ச்சங்கம் ஒரு மணி நேரமாவது தாமதமாகத்தானே ஆரம்பிப்பார்கள். எனவே 3.30 என்று போட்டால்
4.30 மணிக்கு போனால் போதும் என்று மக்கள் நினைத்து வந்தது தலைவர்களுக்கு தெரியவில்லை.
இதிலே என்னைப்போன்ற
நேரத்துக்குப் போனவர்கள் எங்களை நாங்களே நொந்து கொண்டதுதான் மிச்சம்.
தமிழ்த்தாய்
வாழ்த்தை இரு லோக்கல் தமிழ்க் குயில்கள் மிக அழகாக பாடினர். அதற்குப்பின் அமெரிக்க
தேசிய கீதத்தை அதைவிட தெளிவாகப் பாடினாள் அந்த இருவரில் ஒருவரான நித்யா லாரன்ஸ்.
திவாகர் அறிமுகப்படுத்தப்பட்டு
உள்ளே வர, கைதட்டல் காதைப்பிளந்தது. திரைப்படத்தில் தான் இப்படி ஏழை வீட்டில் பிறந்த ஒருவன் முன்னேறி புகழடைய முடியும் . அந்த அதிசயத்தை நேரில் நடத்திக் காண்பித்த திவாகர்
பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் எந்த ஒரு இசைப் பயிற்சியும் இல்லாது.
இது உறுதியாக கடவுளின் கொடைதான்.
கணேஷ் கிருபாவின்
இசைக்குழுதான் மீண்டும் வந்திருந்தது. நான்கே பேர்தான். ஜோஸ்வா ஆர்ம்ஸ்ட்ராங், நவீன்
ஜுட் ஆகிய இருவரும் கீபோர்ட், விஜயகுமார் தபேலா மற்றும் பர்கஷன். கணேஷ் கிருபா ச்ச்சும்மா
கூட.
கணேஷ் கிருபா நெகிழ்ந்த குரலோ அல்லது மகிழ்ந்த குரலோ இல்லாமல்
வெற்றுக்குரலில் நன்றி சொல்லி அறிமுகம் செய்ய கச்சேரி ஆரம்பமானது.
முதலில்
நிறைகளைப் பார்ப்போம்.
பெரும்பாலான
பாடல்கள் திவாகரும் சோனியாவும் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியவை என்றாலும்
நேரில் பார்ப்பதற்கு நிச்சயமாய் நன்றாகவே இருந்தன.
திவாகரின் குரல்
வளம் இன்னும் சிறப்பாக ஆகி இருந்தது. பேஸ் வாய்ஸ், ஹைரேஞ்ச் என்று சரளமாக சிரமமின்றி
பாடி அசத்தினார். பாடியதில் சிறப்பாக அமைந்த பாடல்கள். 'வராக நதிக்கரை ஓரம்', 'சம்திங்
சம்திங்', 'அந்த அரபிக்கடலோரம்' மற்றும் திவாகருக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த 'நீயே
உனக்கு என்றும் நிகரானவன்' என்ற பாடல்கள்.
Prabu,Magisha, Diwakar and Soniya |
அதிலும் 'சம்திங்
சம்திங்' பாடலுக்கு திவாகர் பின்னாலிருந்து பாடிக்கொண்டுவந்து ஆடியன்ஸை உசுப்பேத்த
பலர் எழுந்து ஆடினர். அரபிக்கடலோரத்தில் வரும் “ஹம்மா ஹம்மா”, என்ற வரியை எல்லோரையும்
பாடவைத்து ஹிட்டாக்க, திவாகர் நல்ல ஒரு ஷோமேனாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சூப்பர் சிங்கரில்
முதலிடம் பெற்று, பின்னர் லண்டன், ஆஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் கச்சேரிகள்
முடித்து ஃபெட்னா (FETNA - Federation of Tamil Sangams of North America) விழா ஒன்றில்
கலந்து கொள்ள செயிண்ட் லூயிஸ், மிசெளரி வந்து இப்போது USல் பல கச்சேரிகள். ஆனாலும்
எந்தப்புகழையும் பணத்தையும் தலைக்கேத்தாமல் உண்மையான தன்னடக்கம் காட்டுவது தெளிவாகத்
தெரிந்தது. சென்ஸ் ஆஃப் ஹியூமரும் வளர்ந்திருக்கிறது, ஷோமென்ஷிப்பும் உயர்ந்திருக்கிறது.
இப்படியே எப்போதும் இருந்து மேலும் வளர வாழ்த்துக்கள்.
சோனியா பாடிய
பாடல்களில் ஹைலைட் என்று சொன்னால் 'கவிதை கேளுங்கள்' என்ற புன்னகை மன்னன் பாடல். 'சந்தத்தில்
காணாத கவிதை' என்ற பாடலை தமிழ், மலையாளம் மற்றும்
தெலுங்கில் மாற்றி மாற்றிப் பாடினார். திவாகரோடு இணைந்து டூயட் பாடிய முதல்வன் படத்தின்
"குறுக்குச் சிறுத்தவளே" என்ற பாடல் நன்றாக அமைந்தது. சூ.சி.யில் பாடி ஜானகியிடம்
பாராட்டுப் பெற்ற "அழகு மலராட" அந்த அளவுக்கு அமையவில்லை. ஆனால் திவாகரின்
ஜதி நன்றாக இருந்தது.
Magisha |
மகிஷா இன்னும்
வளர்ந்து அழகாக இருக்கிறார். பாட்டில் இன்னும் வளரவேண்டும். வெறும் மேடைக்கச்சேரி அளவு
பத்தாது. மக்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். திவாகரோடு பாடிய “தென்றல் வந்து என்னைத்தொடும்”,
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ஆகிய பாடல்கள் பரவாயில்லை ரகம்.
சங்கர நேத்ராலாயாவின்
டிரஸ்டி என்று அறிமுகப்படுத்தப்பட்ட பிரபு சில பாடல்களை இணைந்தும் தனித்தும் பாடினார்.
பெரிதும் சோபிக்கவில்லை.
நம்ம சிலோன்
K.S.ராஜா குரல், ரமேஷ் கிருஷ்ணா வழக்கம்போல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்தத்
தடவை பரவாயில்லை. த்த்தமிழ்ச்ச்சங்கம் என்று சொல்வது எங்களுக்கு பழகிவிட்டது. ஆனால்
திடீரென்று பாடகர் அவதாரம் எடுத்து "நந்தா என்ற நிலாவை, “நொந்தா என் நிலாவாக்கியதை" "வருத்தப்படும் வாலிபர் சங்கம்" சார்பாக
வன்மையாக கண்டிக்கிறோம். வருங்காலத்தில் இந்த மாதிரி விபரீத ஆசைகள் வராமல் அவர் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
PA சிஸ்டம்
சரியாக பயன்படுத்தப்படவில்லை. எவ்வளவோ டெக்னாலஜி முன்னேறியிருக்கும் வேளையில் அந்தக்கால
செளண்ட் சிஸ்டம் போல இருந்தது. தபேலாவுக்கு ஒரு மைக் வைத்தது மிகத்தவறு . கர்ணம் மட்டுமே
கேட்டது. பேஸ் கேட்கவேயில்லை. இருக்கிறதே ரெண்டு இன்ஸ்ட்ருமெண்ட் அதனை சரியாக செட் பண்ண வேண்டாமா?. இசை தெரியாதவர்
செளண்ட் சிஸ்டத்தில் உட்கார்ந்தால் இதுதான் பிரச்சனை.
பெரிய இசைக்குழுவின்
தலைவர் என்று சொல்லும் கணேஷ் கிருபா பிடிச்ச
பிள்ளையார் போல் உட்காராமல் கீழிறங்கி பின்னால் போய் பாடல்களை கேட்டுவிட்டு செளண்ட்
செக் செய்ய வேண்டும்.
திவாகர் இப்போது
ஒரு செலிபிரட்டி பாடகர். அவர் பெயருக்காக
மட்டும்தான் இவ்வளவு மக்கள் கூடுகிறார்கள் என நினைக்கும்போது அவரின் பொறுப்பு
கூடுகிறது. தனக்கென்று நன்கு டெஸ்ட் செய்த மைக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு
பாட்டுக்கும் வெவ்வேறு மைக்கை பயன்படுத்தியதால், சில சமயம் மைக்கில் ஜாரிங் செளண்ட் வந்தது. மேடையில் பாடகர்கள் நிழலாகவே
தெரிந்தனர். சரியான ஃபோகஸ் லைட் இல்லை.
ஆமாம் எனக்கு ஒரு உண்மை தெரியனும். தமிழ்ச்சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் ராம்மோகன் மற்றும் பொருளாளர் நண்பர் ரங்கா ஆகிய மூவரும் ஒரே அளவாக உயரத்திலும் சாடையிலும் அண்ணன் தம்பிபோல் இருந்தனர். இவர்கள் ஒரே மாதிரி இருந்ததால் ஒரே சமயத்தில் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை .ஆனால் இவர்கள் ஒரேமாதிரிதானே அன்றி ஒரு மாதிரி ஆட்கள் அல்ல என்று எனக்குத்தெரியும். ஒரே மாதிரி இருப்பதுடன் ஒரே மாதிரி சிந்தனையுடன் தமிழ்ச்சங்கத்தை முன்னேற்றுங்கள்.
இதுவரை சாதித்தது
அல்ல இனிமேல்தான் சாதிக்க நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்து
முயன்றால் திவாகருக்கு வானமும் வசப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு வருடத்திற்கு
மேல் சின்னத்திரையில் தொடர்ந்து பார்த்து மகிழ்ந்த சூப்பர் சிங்கர் திவாகர் ,சோனியாவை
நேரில் காண்பித்ததற்கு நியூயார்க் தமிழ்சங்கத்துக்கு நன்றி.
தமிழ்ச் சங்கத்தலைவர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்...!
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் திண்டுக்கல் தனபாலன்.தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி.
Deleteஎன்ன அண்ணே? நண்பர் ரங்கா மேல எதுவும் கோவமா? இல்ல பழைய பகையா? அவர் என்ன அழகு. அவரை போய் மற்ற ரெண்டு பேர் மாதிரி இருக்காருன்னு ....
ReplyDeleteஎதோ நம்மால முடிஞ்சத போட்டு வைப்போம்.
அருமையான பதிவு. அங்கேயே சென்று அமர்ந்து இருந்ததை போல் ஓர் உணர்வு. நன்றி.
தம்பி நீ என்ன சொல்ல வரேன்னு தெரியலியே .
Deleteரங்கா மட்டுந்தான் அழகுன்னா, அப்ப மற்ற ரெண்டு பெரும் அசிங்கமா ?
எதுக்கும் அவங்களயே கேட்டு சொல்லிறேன்