Thursday, July 17, 2014

சிவந்த மண்ணும் சிவந்த புண்ணும் !!!!!!!!!!

"சேகர் நம்மூர் சிவராம் டாக்கீசில் சிவந்த மண் போட்டிருக்காய்ங்க, போலாம?" என்றான் மகேந்திரன்.
"சிவாஜி நடிச்ச படமா? வெளிநாட்டில எடுத்ததாச்சே" என்றேன்.
"ஆமாடா ஸ்விட்சர்லாந்தில எடுத்தது, உலகம் சுற்றும் வாலிபனுக்கு போட்டியா எடுத்ததுரா"
"சர்ரா எங்கப்பாட்ட கேக்கிறேன்".
“என்ன படம்பாக்க உங்கப்பாட்ட கேட்டா போவ ?”.
-ஆம் உண்மைதான், ஏதாவது படம் பார்க்கணும்னா எங்கப்பாவை கேக்கனும். ரெண்டு நாள் கழிச்சுதான் சரி இல்ல வேணாம்னு சொல்வாரு. அப்புறம் ரொம்ப நாளுக்கப்புறம்தான் கண்டு பிடிச்சேன், முதல்ல அவர் போய்ப்பார்த்துவிட்டு ஆபாசமில்லாத நல்ல படம்னா மட்டும் தான் எங்களைக் கூப்பிட்டு போவாரு. அதிலேயும்  இந்த எம்ஜியார் படம்னா நல்லா பார்த்துட்டுதான் எங்களை விடுவாரு. ஆனா சிவகவி, சரஸ்வதி சபதம், கணவனே கண்கண்ட தெய்வம், திருமால் பெருமை, சம்பூர்ண   ராமாயணம்  போன்ற படங்களுக்கு கேட்காமலேயே கூப்பிட்டுப்போவார்.
நான் பிளஸ் ஒன் வந்தப்புறம்தான், என்னைத்தனியாக விட ஆரம்பித்தார். ஆனாலும் என் தம்பிகளை அழைத்துக் கொண்டுதான் போக முடியும், அதுவும் மாலைக்காட்சி மட்டும்தான். வெள்ளிக்கிழமை மட்டும்தான். இரவுக்காட்சி ம்ஹீம் போனதே இல்லை.
எங்களை தனியாக விட ஆரம்பித்தபிறகு, அவர் படம் பார்க்குறதயே விட்டுட்டார். எங்களுக்காகத்தான் வேண்டா வெறுப்பா பாத்தார் போலருக்கு.  
"சிவந்த மண்ணுக்கு" ஓகே வாங்கி, உற்சாகமாய் கிளம்பினோம்.
போற வழியில் கீழத்தெரு பக்கத்துல ஒரு நாய் என்னை முறைச்சு ஓரத்தில் உள்ள ஊசிப்பல்லைக் காண்பித்தது. எனக்கும் நாய்களுக்கும் ஆவுறதே இல்லை. அதப்பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கேன். என்னவோ அது வச்சிருக்கிற எலும்புக்கு நான் போட்டிபோட்ட மாதிரி, ர்ருங்குது, குர்ருங்குது அதைபார்த்த எனக்கு டர்ருங்குது.
தம்பிக கையை உதறிட்டு ஒரே ஓட்டம். இதான் சாக்குன்னு அது துரத்த ஆரம்பிச்சிருச்சு. இந்த நாய்க மனசுல என்னதான் நெனைக்குதுன்னு புரியமாட்டேங்குது. விழுந்தடிச்சு ஓடினதில, ஒரு கல் தடுக்கி குப்புற விழுந்தேன். புல் தடுக்கினாலேயே விழுந்துடுவேன். கல்தடுக்கினா விழாம இருப்பேனா. முழங்கையில்  "சிவந்த மண் மேல நல்லா விழுந்து சிராய்ஞ்ச்சு, சிவந்த புண்" ஆயிப்போச்சு. என்னை ஒரு இளக்காரப்பார்வை பார்த்த நாய் திரும்பிப்போயிருச்சு. வாண்டு மாமாவின் பலே பாலு போல விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டலன்னு, எந்திரிச்சு நடந்தேன். அப்புறம்தான் ரொம்பதூரம் ஓடிவந்தது தெரிஞ்சதோடு, தம்பிகளையும் விட்டுட்டு வந்தது ஞாபகம் வந்திச்சு.    
நேரா வீட்டுக்குப்போனா, என் தம்பிக ரெண்டுபேரும் எப்படியோ வீட்டுக்குப் போயிட்டாய்ங்க. எங்கப்பா வழக்கம் போல் கோபமா தன்  பிரம்பை எடுத்து விளாசிட்டார். இரண்டு மூணு அடி சிவந்த புண் மேலேயே பட்டுச்சு. தம்பிகள நடுத்தெருவில விட்டுட்டு வந்துட்டேன்னு கோவம். வெந்த புண்ணுல வேலைப் பாச்சுறதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். இப்படி வெந்த புண்ணுல கோலப் பாச்சுறது, எங்கப்பாவுக்கே ஞாயமா, நாய் துரத்தினா நான் என்ன செய்யறது ?. பட்ட கால்ல  படும்னுதானே சொல்வாய்ங்க.  பட்ட கையிலும் படும்னு சொல்லவேயில்லை.
இதான் என் "சிவந்த மண்" படம்பார்க்க போயி,நாய்துரத்தி சிவந்த மண்ணில் (அதான் பாஸ் செம்மண்) விழுந்து "சிவந்தபுண்" வாங்கிய கதை.
அப்புறம் லீவு முடிஞ்சு காந்திகிராமம் தம்பித்தோட்டம் ஹாஸ்டலுக்கு திரும்பப்போனேன். ஒரு மாசம் கழிஞ்சிருக்கும் ஆறுமுகம் வந்து சொன்னான், டேய் ஆஃல்பி சின்னாபட்டி கோமதி தியேட்டர்ல “சிவந்த மண்” வந்துருக்குன்னு. "டேய் எங்கூர்ல பாக்கறதுக்கு மிஸ் ஆயிருச்சு, எப்படியாவது  போயிரனும்டா" என்றேன்.
நாங்க ரெண்டுபேரும் ரகசிய திட்டம் போட்டோம், சாயந்திரம் ஸ்டடி டைம் ஆரம்பிச்சவுடன் நைசா நழுவி பின்புறமுள்ள ஓடை வழியே நடந்து கோமதி தியேட்டர் போய்ட்டோம்.
இரவு உணவு சமயத்தில் சில நேரங்களில் வார்டன் அட்டென்டஸ் எடுப்பதுண்டு. எங்கள் துரதிருஷ்டம் அன்றைக்கு எடுத்தார். ஆறாவது முதல் +2 வரை எடுத்து முடிப்பதற்கு 1/2 மணி நேரமாகும் என்பதால் அட்டென்டஸ் எடுக்க ஆரம்பித்தவுடன் ஏற்கனவே செட்டப் செய்தபடி, ஆறாவது வகுப்பு பையன் ஒருவன் ஓடிவந்து, கோமதி தியேட்டரில் எப்பொழுதும் ஒரே இடத்தில் அமரும் எங்களை வந்து உலுக்கினான். "அண்ணே ஓடிவாங்க சீக்கிரம், வார்டன் அட்டென்டஸ் எடுக்கிறார்". படம் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்தது, வேண்டா வெறுப்பாக, எழுந்து ஓடி வந்தோம். லொங்கு லொங்கென்று ஓடி மூச்சு வாங்க ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.  
அட்டென்டஸ் எடுக்க ஆரம்பித்து இரவு 8 மணிக்கு. ஆறாவது படிக்கும் குமார் எங்களுக்குத் தகவல் சொன்னது 8.30 மணி. நாங்கள் ஹாஸ்டல் வந்து சேர்ந்தது 9.00 மணி. அப்போது தான் சாப்பாடு முடிந்திருந்தது.
வார்டன் ரூமுக்குச் சென்றோம் "அண்ணா கூப்பிட்டீங்களா?.( வார்டன் மற்றும் ஆசிரியர்களை அண்ணா என்றும் ஆசிரியைகளை அக்கா என்றும் அழைப்பது காந்திகிராம வழக்கம்)
"எந்தப் படத்துக்கு போனீங்க?", என்றார் வார்டன்.
"படமா என்ன சொல்றீங்க ? ", என்றேன் நான்.
"அண்ணா மணியைப் பாருங்க, எந்தப்படம் 9 மணிக்குள்ள முடிஞ்சிருது" என்றான் ஆறுமுகம்.
வார்டன் சந்தேகம் தெளிந்த தொனியில், "அப்ப எங்கதான் போனீங்க ?", என்றார்.
வயிற்றைப்  பிடித்த நான், "கடுமையான வயிற்று வலி அதான் ஓடைப் பக்கம் போனேன்".
"ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில வயித்தாலயா ?", என்றார் வார்டன்.
இவன் துணைக்குப் கூப்பிட்டான் அதான் நான் போனேன்" - இது ஆறுமுகம்.
"சரி சரி போங்க" என்றார் வார்டன்.
பாதிப்படம் பார்த்ததோடு, இரவு உணவு கிடைக்காத எரிச்சலில் ரெண்டு பேரும் போய்ப் படுத்தோம்.

அன்றிலிருந்து இன்று வரை சிவந்த மண் பார்த்து முடிக்கவே இல்லை. யார்ட்டயாவது DVD கிடைக்குமா?.

10 comments:

  1. சிவந்த மண் இல்ல அண்ணே,,, கீழ் வானம் சிவக்கும் இருக்கு. அதுவும் சிவாஜி தான். பாக்கறீங்களா?

    ReplyDelete
    Replies
    1. வேணாம் அது சரி வராது .முதல்ல சிவாஜியை இளைஞனாய்
      பார்த்து முடிப்போம் அப்புறம் வயசாகி பார்க்கலாம் .

      Delete
  2. ரொம்பத் தான் அடிப்பட்டு இருக்கீங்க...!

    ReplyDelete
    Replies
    1. இன்னும்கூட அப்ப அடிபட்ட இடத்தில வலிக்குது திண்டுக்கல் தனபாலன்.தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி.

      Delete
  3. ஒருபடத்தை பார்ப்பதற்க்கு இத்தனை கஸ்டமா ? ச்சே மனசுக்கு கஸ்டமா இருக்கு நண்பா...
    சும்மா இருந்தீங்கன்னா ? என்னோட ஏரியாபக்கம் வந்து போங்களேன்..
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. என்னத்தை சொல்றது போங்க ? கண்டிப்பாய் வர்றேன் .
      வருகைக்கு ஓட்டு நன்றி.

      Delete
  4. தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

    ReplyDelete
    Replies
    1. மைதிலி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
      இது எனக்கு நிச்சயமாய் ஒரு உற்சாக டானிக்.

      Delete
  5. அடடா, இப்படி விழுப்புண் பின்னர் அடி வாங்கியும் பொய் சொல்லியும் இன்னும் முழுசா படம் பாக்கலையா... டோரன்ட் இருக்கே, பாருங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சத்தியமாக நிச்சயமாக உறுதியிட்டு கூறுகிறேன் இன்னும் பார்க்கவில்லை தம்பி .
      ஆமா டோராண்டோ தான் தெரியும் அதென்ன டோரன்ட் ?

      Delete