Monday, July 7, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி -8 அந்தப்புற ரகசியங்கள்
Harem Painting 
1299ல் பிறந்து 1923 வரை 623 வருடங்கள் கோலோச்சிய ஆட்டமன் பேரரசின் ஆட்சி முறையிலும் சமூக வழக்கத்திலும் முக்கிய பங்கு பெற்றது ஹேரம் (Harem) என்று அழைக்கப்பட்ட "அந்தப்பும்" ஆகும்.
அரபு மொழியில் 'ஹராம்' என்றால் முஸ்லீம்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது என்று பொருள். ஒவ்வாத பொருட்களையும், உணவையும், இடத்தையும் 'ஹராம்' என்று அவர்கள் சொல்வார்கள். அதே வார்த்தையிலிருந்து அதே அர்த்தத்தில் வந்த பெயர்தான் ஹேரம் என்பது. எல்லா அரசியல் அதிகாரங்களுக்கும் இது மையப்பகுதியாய் இருந்தது.
இங்கு சுல்தானின் மனைவிகள், பெண் உறவினர்கள், வயதான பழைய ராணிகள், வைப்பாட்டிகள், அடிமைப்பெண்கள், பெண் வேலைக்காரர்கள் மற்றும் அலிகள் மட்டுமே இருந்தனர்.
டொப்கப்பி அரண்மனையில் இருந்த அந்தப்பும் ஹேரம்-ஐ ஹூமாயுன் (The Imperial Harem) என்று அழைக்கப்பட்டது. இந்த அந்தப்புத்தில் மொத்தம் 400 அறைகள் இருக்கின்றன.
Apartment of Valide Sultan
இந்த அந்தப்புறத்தின் தலைவி, நாம் நினைப்பது போல் பட்டத்து அரசி இல்லை. மாறாக சுல்தானின் அம்மாதான். இவர் வாலிட் சுல்தான் (Queen Mother) என்று அழைக்கப்பட்டார். சுல்தானாக தன்னுடைய மகன் முடிசூட்டப்பட்டவுடன், இவருக்கு அந்தப்பட்டம் சூட்டப்படும். வாலிட் சுல்தான் பதவியேற்பு விழாவும் மிக விமரிசையாக நடக்குமாம். சுல்தானுக்கும் அவருடைய மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவைத் தீர்மானிப்பதும்  வாலிட் சுல்தான்தான். சில சமயம் சுல்தான் சிறுவயதில் பட்டத்துக்கு வந்தால், சுல்தானின் அம்மாவே முழு ஆட்சியையும் (Regent) பொறுப்பெடுத்து நடத்துவார். சுல்தான் போருக்குத்தலைமையேற்று வெளியே செல்லும்போதும் இவரே ஆட்சிக்கு பொறுப்பு.  
Eugénie; keizerin der Fransen (2).jpg
Empress Eugénie de Montijo
ஒரு முறை சுல்தான் அப்துல் அஜிஸ் தன் நாட்டுக்கு வருகை தந்த ஃபிரான்ஸ் நாட்டு பேரரசி யூஜினியை ( மூன்றாம் நெப்போலியனின்   மனைவி) ன் அந்தப்புறத்திற்கு அழைத்து வந்தாராம். அப்போது வாலிட் சுல்தானாக இருந்த பெர்டேனியல் சுல்தான், ஒரு வெளிநாட்டுப்பெண்  தன்னுடைய அந்தப்புறத்திற்கு வருவதைப் பிடிக்காமல் பேரரசியையே ஒரு அறை விட்டாராம்.  அது மிகப்பெரிய களேபரத்தை உண்டு பண்ணியதாம் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள் அம்மாவின் அதிகாரத்தை (நம்ம அம்மா இங்கிருந்துதான் கற்றுக் கொண்டார்களோ ?)
அந்தப்புறத்தில் ஏராளமான அடிமைப்பெண்களும் இருந்தனர். போரில் வெற்றி பெற்ற இடங்களிலிருந்து அழகான மற்றும் அறிவான பெண்கள் அடிமைகளாக கொண்டு வரப்பட்டனர். பெரும்பாலும் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளிலிருந்து இவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் பக்கத்து நாடுகளிலிருந்தும் இந்த வைப்பாட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப்புறத்தின் சட்ட திட்டங்களிலும் ஒழுக்கத்திலும் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களின் அறிவுத்திறனுக்கேற்ப வெவ்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர்.
சுல்தானின் படுக்கையறையை பகிர்ந்து கொள்வது எல்லோருக்கும் வாய்க்காது. அதற்காக காத்திருப்பார்களாம். பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் அதை பெரும் பாக்கியமாகவும் வாய்ப்பாகவும் நினைப்பார்களாம். ஏனென்றால் படுக்கையில் அவர்கள் நடந்து கொள்வதைப் பொறுத்துத்தான்  பதவி உயர்வு கிடைக்கும்.  
அவர்களுக்கு கிடைக்கும் முதல் பதவி "கோஸ்டி" (The Favorite) என்பது. சுல்தானுக்குப் பிரியமானவள் என்று பெயர் சூட்டப்படும் இவர்களுக்கு சுல்தானுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்.  
அதற்கு  அடுத்த பதவி "இக்பால்" (The Fortunate) அல்லது 'பேறு பெற்றவள்' என்பது. சுல்தானுக்கு இவளை மிகவும் பிடித்துவிட்டது என்று பொருள். இதற்கு அடுத்தபடியாக அவர்கள் ஆவது "கடின்" (Wife) என்பதாக. இதற்கு மனைவி என்று அர்த்தம். அவர்கள் மனைவி என்ற தகுதி பெறும்போதுதான், அடிமை என்ற நிலை முற்றிலுமாக மாறுகிறது. இந்த நிலைக்கு வந்தபின் இவர்கள் எப்படியாவது சுல்தானின் குழந்தையைப் பெற கடுமையாக  முயற்சி செய்வார்களாம். ஏனென்றால் தன் மகனுக்கு ஒரு வேளை பட்டம் கிடைத்தால் மிக உயர்ந்த அதிகாரமுள்ள பதவியான 'வாலிட் சுல்தான்' பதவி கிடைக்குமே. சுல்தானுக்கு அரசிகள் மூலமோ, மனைவிகள், வைப்பாட்டிகளாக மற்றும் அடிமைகள் என்ற யார் மூலம், மகன் பிறந்தாலும் அவனும் பட்டத்து உரியவனாகவே கருதப்படுவான்.   
வாலிட் சுல்தானின் அனுமதியின்றி எந்த ஒரு பெண்ணும் அந்தப்புறத்தைவிட்டு வெளியேற முடியாது. உள்ளே வரவும் முடியாது. இவருக்கு அடுத்தபடியாக கடின் என்று அழைக்கப்பட்ட மனைவிகளுக்கும், பட்டத்து இளவரசனையும் மற்ற இளவரசர்களைப் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை கிடைக்கும்.
Harem Courtyard
காவல் காக்கும் அலிகள் எல்லாம் வாலிட் சுல்தானின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள். இவர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். ஒன்று "சந்தாலி” என்றழைக்கப்பட்ட கறுப்பு அலிகள். ஆணுறுப்பு முற்றிலுமாக நீக்கப்பட்ட இவர்கள் சூடான் அல்லது அபிசீனியத்திலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள். இவர்கள் பெரும் பாலும் ஆளுநர்களால் பரிசளிக்கப்பட்டவர்கள். சுமார் 800 பேர்கள் இருந்தார்களாம். 
Chief Black Eunuch of the Ottoman court; Photo, 1912. ( Courtesy Wikipedia)
இவர்களுக்குத் தலைவன் 'கிஜ்லர் அகாசி' (Master of the Girls) என்று அழைக்கபட்டான். இவர்கள் பெண்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளே நுழையும் அதிகாரம் பெற்றவர்கள், குறிப்பாக தலைவனுக்கு நிறைய அதிகாரங்கள் இருந்தன.  
அதே போல் 'காப்பி அகாசி' என்று அழைக்கப்பட்ட வெள்ளை அலிகளின் தலைவனுக்கு அடியில் சுமார் ஆயிரம் அடிமைகள் இருந்தனர். பெரும்பாலும் நாட்டின் ஐரோப்பிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஆண் உறுப்புகள் இருந்தாலும் ஆண்மை நீக்கப்பட்டவர்கள். அந்தப்புறம் மற்றும் அரண்மனையின் மற்ற அலுவல்களை இவர்கள் பார்த்துக் கொள்வார்களாம்.
Add caption
இளவரசர்கள் தங்கும் பகுதி தங்கக் கூண்டு ( Golden gage) என்றழைக்கப்பட்டது. சுல்தான் அகமது III க்குப் பின் இளவரசர்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆளுநர்களாக  நியமிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு சுயமாக ஆளும்  பகுதியும், அதிகாரமும், ராணுவமும் கிடைக்கும் போது, சுல்தானாகும் ஆசை வந்துவிடுவதால் பெரிதும் குழப்பமும் உள்நாட்டு சண்டைகளும் ஏற்படுகிறது. இதனைத்தவிர்க்க, இளவரசர்கள் சகல வசதிகளும் நிறைந்த இடத்தில் ஆனால் வெளியே செல்லமுடியாமல் அடைக்கப்பட்டனர். 
Golden cage 
பட்டத்து இளவரசனுக்கும் இதே கதிதான். தந்தைக்கு எதிராக திரும்பி விடக் கூடாதல்லவா? அதன்பின் சுல்தானின் மரணத்திற்குப் பின்  பட்டத்து இளவரசன் ஆட்சியைப் பிடித்தபின் மற்ற இளவரசர்கள், ஒன்று விடுதலை செய்யப்பட்டனர் இல்லையெனில் கொல்லப்பட்டனர். ஆனால் இப்படி எந்த வெளி அனுபவம் இல்லாமல் வளர்க்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்களின் திறமையின்மையால் ஆட்சி தள்ளாடியதும் நடந்ததாம்.
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் தொழுகைக்கு அழைக்கும் 'பாங்கு' பாடல் கேட்டது. அல்லாஹூ  அக்பர், அல்லாஹூ  அக்பருல்லா, என்றபோது கோர்ட் யார்டின் நடுவிலிருந்து ஒரு நாய் ஊளையிட்டது. பாங்குப்  பாடலுக்கு எசப்பாட்டாக நாய் ஊளையிட ஒரு வேளை இது ரோமன் கத்தோலிக்க நாயாக இருக்குமோ என்று திடுக்கிட்டேன்.

தொடரும் >>>>>>>>>>>>

8 comments:

 1. "கோஸ்டி" "இக்பால்" "கடின்"......ம்ம்ம்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி விசுAWESOME.

   Delete
 2. ம்ம்ம்... எத்தனை தகவல்கள்.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete
 3. Historic novel madiri viruviruppa irukku anna.
  appuram...
  i am waiting for next part

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி Kalil.

   Delete
 4. இஸ்தான்புல்லின் தொடர் சுவாரசியமாக செல்கிறது! தொடருங்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோ!

   Delete