![]() |
முன்குறிப்பு:
எங்கப்பா என்னைத்
தண்டிக்கும் போதும் சரி, கண்டிக்கும்போதும் சரி அடிக்கடி ஒன்னு சொல்வாரு, "நீ
பொண்ணாப் பிறந்திருந்தா, படிக்கிறயோ இல்லையோ, எவன் கையிலாவது பிடிச்சுக் கொடுத்துட்டு
நிம்மதியா இருந்துருவேன். ஆனா பையனாப் பொறந்துட்ட, உன்னைப் படிக்க வைச்சி ஆளாக்கி குடும்பத்தை நடத்துற அளவுக்கு கொண்டுவரனும்னு தான்
பாடுபடுறேன்". - இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள்
அப்பா.
ஜூன்
மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள்.
"அத்தான்"
என்று கூப்பிட்டாள் என் மனைவி. ஐயோ நம்புங்கப்பு. அவள் அப்படித்தான் கூப்பிடுவாள், ஆனால் நீங்க நெனைக்கிற
மாறி,"அத்தான், என் அத்தான் அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி", என்ற அர்த்தத்தில் இல்ல. கல்யாணம் ஆன புதுசுல, உங்களை
எப்படிக் கூப்பிடருதுன்னு அவ கேட்டா. நான் சொன்னேன் "ஏன் ஆல்ஃபின்னே கூப்பிடுன்னு".
அதான் எல்லாரும் கூப்பிடுறாங்களே, "வேற எதுனா புதுசா வச்சுக்கலாம்னு" சொன்னா.
அப்ப நான் சொன்னேன். "எங்கம்மா, எங்கப்பாவை அத்தான்னு கூப்பிடுவாங்கன்னேன்."
"ஓ அத்தான், நல்லாருக்கே அப்படியே கூப்பிடுறேன்னு"
சொன்னா. அதுக்கு என்ன அர்த்தம், அப்படின்னா என்ன உறவு அதெல்லாம் அவளுக்கு இன்னக்கி
வரைக்கும் தெரியாது. ஏதோ கூப்பிட ஒரு பேர் அம்புட்டுதேன். ஆனா அவ கூட்டத்தில் என்னைக்
கூப்பிடும்போது பல பேர் கேலி பன்றாங்க, அது வேற விஷயம்.
சரி மேட்டருக்கு
வர்றேன். அத்தான்னு கூப்பிட்டதும் என்னான்னேன்.
" 9ஆம்
தேதி வருது ஞாபகமிருக்கா ?"
“மாசா மாசம்
தான் 9 வருது அதுக்கென்ன இப்போ?”
"வழக்கம்போல
மறந்துட்டீங்களா, நம்ம கல்யாண நாள்”.
"மகிழ்ச்சியை
மட்டும்தான் நெனவுல வைச்சிக்கனும், துக்கத்தை எல்லாம் மறந்துரனும்னு எங்கப்பாரு சொல்லியிருக்காரு".
(மறுபடியும் அப்பாவா?)
"ஆமா எங்களுக்கு
மட்டும் ரொம்ம்ம்ம்ப சந்தோஷம்"
“சரி சரி சண்டையை
ஆரம்பிக்காத என்ன செய்யனும்?”,
“கண்டிப்பாய்
டின்னர் போகனும், (ஐயையோ இவ குடும்பம் முழுசையும் பெருங்கூட்டமாய் கூட்டுவாளே எவ்வளவு
ஆவுமோன்னு நெனச்சு நெஞ்சுக்கூடு உள்ளே குறுகுறுத்தது
)
“அப்புறம் எல்லாம்
வழக்கம்போல”.
வழக்கம் போல்னு,
அவ சொல்றது அவளுக்கு தரவேண்டிய கிப்ட். தங்கத்தைத் தவிர அதுவும் 22 கேரட் தவிர எதையும்
ஏத்துக்கமாட்டா
என்னா வாத்யாரே
கல்யாண நாளுக்கு இதெல்லாம் செய்யணும்தானே இதுக்குப்போய் இவ்ளோ அலுத்துக்கிறன்னு நீங்க
கேக்கறது எனக்கு காதுல விழுது.
உங்களுக்கு
எல்லா விஷயத்தையும் சொல்றேன். அப்புறம் தெரியும் என் துக்கத்துக்கு என்ன காரணம்னு.
ஜனவரி 1,
2014 பிறந்து புதுவருடத்திற்கு ஏகப்பட்ட காசு செலவாகி போண்டியா இருக்கும்போது, கொஞ்சம்
மூச்சுவிட்டு ஆசுவாசம் செய்யறதுக்குள்ள வேலன்டைன்ஸ் தினம், அதான் பாஸ் காதலர் தினம்.
ஃபெப்ருவரியில் வந்துரும். பட்ஜெட் கம்மியாயிருக்கு இந்த வருஷம் ஒண்ணும் முடியாதுன்னு
சொன்னேன். அதுக்கு அவ கேட்டா, அப்ப வேற யாருக்காவது இந்த வருஷம் தரப்போறியான்னு. நான்
அலறி அடிச்சுட்டு, இல்லம்மா ராசாத்தி எப்பவும் எல்லா வருஷமும் நீதான் எனக்கு வேலன்டைன்னு
சொல்லி வாங்கிக்கொடுக்க வேண்டியதாயிருச்சு.
அப்புறம் ஏப்ரல்
1 என் பொறந்த நாள் வந்துருச்சு, நீங்களே சொல்லுங்க, என் பொறந்த நாளுக்கு மத்தவங்கதானே
ஏதாவது செய்யணும், ம்ஹீம் அந்த கொடுப்பிணையெல்லாம் எனக்கு இல்ல. நாந்தேன் அம்புட்டு
பேரையும் கூப்பிட்டுப்போய் வாங்கிக் கொடுக்கனும். ஏன்னா நாந்தேன் குடும்பத்தலைவராம்.
எப்படி இருக்கு கதை. தலைவரு கிரடிட் கார்டு
கடனில் மூழ்கிப்போய் தலைவேறு கால்வேறாய் இருக்கிறது இவர்களுக்கு எப்படி தெரியும்?
அப்புறம் மே
மாதம் மதர்ஸ் டே வந்துருது.
“ஏங்க ஒங்க பிள்ளைகளை பெத்து வளத்தவளுக்கு நீங்கதான் செய்யனும்னு
(இதே டயலாக்கை எத்தனை தபா சொல்வாளோ ?) சொல்லி தாலி அந்து போச்சு.
அதுக்குள்ள
ஃபாதர்ஸ் டே வந்துறுச்சு. மதர்ஸ்
டே நான் செய்யனும் ஆனா, ஃபாதர்ஸ் டேயும் நானேதானா. எவன் இந்த நாளையெல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்கன்னு
கோபம் ஒருபக்கம் அழுகை ஒருபக்கம் . பில்லை பார்த்ததும் ஈரக்குலை அந்து விழுந்துரிச்சு.
அதன்பின் என்
மனைவி ஒரு நாள் சொன்னா.
"ஏங்க
எங்கப்பா அம்மா வந்துருக்காங்கல்ல"
"ஆமா அதுக்கென்ன
?"
அவங்களோட
50-ஆவது திருமண நாள் வருது"
"அது செப்டம்பர்லதான
வருதுன்னு சொன்ன
"
ஆமா, ஆனா அவுங்க
ஜூலைல ஊருக்குத்திரும்பி போயிராங்கள்ள அதனாலதான்
இப்பவே கொண்டாடிரனும்னு சொல்றேன். சரியென்று போனவாரம் சர்ச்சுல பெரிய விழாவெடுத்தோம்.
எல்லாத்தையும்
முடிச்சுட்டு கம்முனு உதட்டுக்கு பசைபோட்ட மாதிரி சோபாவின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன்.எந்தம்பி
போன் பண்ணான். போன வாரம்தான் அவங்க குடும்பம்
வந்துருக்கு. என் அம்மாவும் வந்திருக்காங்க.
"அண்ணே
ஜூலை 26ல் அம்மாவுக்கு 75 வயசு ஆகுது ஏதாவது பண்ணுங்கண்ணே.
அதுக்கு ஒரு
விழா எடுத்தேன் .அப்புறம் பிள்ளைகளுக்கு செமஸ்டர் ஃபீஸ் கட்டிட்டு நாக்குத்தள்ளி உட்கார்ந்திருக்கும்போது
நெனவு வந்துச்சு. ஐயையோ வரிசையாய் பிறந்த நாளா வருமேன்னு. அக்டோபர் 9 சின்னவ, நவம்பர்
6 மாகாப் பெரியவ (அதான் என் பாரியாள்) நவம்பர் 11 பெரியவ, அப்புறம் ஏசுகிறிஸ்து டிசம்பர்
25. நெனச்சா இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு யோசிச்சு யோசிச்சு உட்கார்ந்திருந்த போது அத்தான்
என்றாள் என் மனைவி. அய்யய்யோ
புதுசா எதுக்கோ அடி போடுறாளேன்னு அடி வயிறு
கலங்குச்சு.
ரொம்ப நாளாச்
சொல்லிட்டிருக்கேன், இந்த ரூபி, எமரால்ட் முத்து செட்டெல்லாம் வச்சிருக்கேன். இந்த
வைர செட்தான் இல்லை.... அத்தான்
ஐயையோ செத்தேன்டா
சேகரு.
இப்போது மறுபடியும் முன்குறிப்பை படிக்கவும் .
இப்போது மறுபடியும் முன்குறிப்பை படிக்கவும் .